under review

அய்யன்காளி

From Tamil Wiki
அய்யன்காளி

அய்யன்காளி (ஆகஸ்ட் 28, 1863 - ஜூன் 18, 1941) சிந்தனையாளர், அத்வைதி, சமூகநீதிப்போராளி, சமூக சீர்திருத்தவாதி, அரசியல்வாதி. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பட்டியல் இன மக்களின் விடுதலைக்காகப் போராடியவர். நாராயணகுருவுடன் இணைந்து செயல்பட்டார். 'சாதுஜன பரிபாலன சங்கம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். முப்பது வருடங்களாக திருவிதாங்கூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சமூகநீதிக்காகப் போராடினார். அரசியல்விடுதலை, சமூகவிடுதலையைத் தாண்டி முழுமையான விடுதலையை நோக்கிப்பேசிய மெய்யியலாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

அய்யன்காளி கேரளத்தின் திருவிதாங்கூருக்கு உட்பட்ட பெருங்காட்டுவிளா என்ற ஊரில் ஆகஸ்ட் 28, 1863-ல் புலையர் சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளிக்கு ஏழு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். நிலங்களைச் சீர் படுத்தியதற்காக அய்யன் காளியின் தந்தைக்கு ஒரு சிறிய நிலத்தை அவரது நாயர் முதலாளி கோவிந்தபிள்ளை வழங்கினார். இது அன்றைய நாயர் சமுதாயத்தில் சலசலப்பான எதிர்ப்பை ஏற்படுத்தியது.

அய்யன்காளி முறையாகக் கல்வி கற்றவரல்ல. ஆனால் தன் சாதிக்குரிய அடிமுறைகளைக் கற்றிருந்தார். திருவனந்தபுரத்தில் அன்று இருந்த தைக்காடு அய்யாவு சாமிகள் என்ற ஹடயோகியிடம் அடிமுறைகளையும் சில யோக முறைகளையும் கற்றார். அய்யாவுவிடம் சட்டம்பி சுவாமிகள், நாராயணகுரு ஆகியோர் மாணவர்களாக இருந்தனர். இவர்களிடம் அய்யன்காளிக்கு கடைசிவரை நெருக்கமான தொடர்பு இருந்தது. அய்யன்காளி இளமையில் நாயர் இளைஞர்களுடன் கால்பந்து விளையாடியதற்காக கண்டிக்கப்பட்டது அவரிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

தனி வாழ்க்கை

அய்யன்காளி 1888-ல் செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏழு குழந்தைகள். தங்கம்மா என்ற ஒரே மகள் கேசவன் சாத்திரி என்பவரை மணந்தார். கேசவன் சாத்திரி பின்பு கேரள சட்டசபையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அய்யன்காளி

சமூகநீதிப் போராளி

தொடக்ககாலம்

அக்காலகட்டத்தில் பட்டியல் சாதியினர் மீது நாயர் மற்றும் நம்பூதிரி சாதி மக்களால் கல்வி உரிமை மறுப்பு, பொதுத் தெருவில் நடமாடும் சுதந்திரம் இல்லாமை, செருப்பு போட, தலைப்பாகை கட்ட அனுமதியில்லாமை, பெண்கள் மேலாடை அணிய அனுமதிக்கப்படாமை போன்ற கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன.

1883-ல் அய்யன்காளி புலையர்கள் நடுவே சேவை செய்வதற்காக வந்த அத்வைதியான சதானந்த சுவாமிகளை சந்தித்தார். அவரது மாணவரானார். அவரின் தலைமையில் அய்யன்காளி புலையர் மக்களுக்கு வழிநடக்கும் உரிமை, கல்விகற்கும் உரிமை ஆகியவற்றைப் பெற்றுத்தர போராட ஆரம்பித்தார்.

அய்யன்காளிப்படை

அய்யன்காளி கட்டுடலும் நல்ல உயரமும் கொண்டு மிகுந்த வலிமையுடன் இருந்தார். தூய்மையான ஆடை, தலைப்பாகை அணிந்து கம்பீரமாக வலம் வந்தார். ஒரு வில்வண்டி வாங்கி காளைகளைப் பூட்டி, அனுமதி மறுக்கப்பட்ட தெருக்களில் சென்றார். எதிர்த்தவர்களைத் தன் வலிமையால் அடக்கினார். எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழிவும் துன்பமும் நிகழ்ந்ததோ அங்கெல்லாம் அய்யன்காளி தன்னைப் போன்ற வலிமையானவர்களை ஒன்றிணைத்து ஒரு படையுடன் வில்வண்டியில் கழிகளுடனும் வாள்களுடனும் வந்து தாக்கினார். இக்காலகட்டத்தில் சதானந்த சுவாமிகளிடம் இருந்து விலகினார். ஆனால் பின்னர் அய்யன்காளி வன்முறையைக் கைவிட்டு அமைதியான மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்க ஆரம்பித்தார்.

நாடகங்கள்

அய்யன்காளி புராணங்களிலிருந்து சமுதாய விடுதலையைத் தூண்டும் கருக்களைக் கொண்ட நாடகங்களை அரங்காற்றுகை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 'கக்கல ரிஷி நாடகம்,' 'அரிச்சந்திர நாடகம்,' 'வள்ளி சுப்பிரமணியர் திருமணம்' ஆகிய நாடகங்கள் இவரால் மேடையேற்றப்பட்டவை.

பொதுவழி உரிமை

அய்யன்காளி 1889 முதல் பொதுவழி உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தார். 1889-ல் அவர் வெங்ஙானூர் முதல் பாலராமபுரம் வரை நடத்திய புலையர் ஊர்வலம் பெரிய சமூக அசைவை உருவாக்கியது. 1890-ல் அவரது குழு ராஜபாதைவழியாக வெங்ஙானூரில் இருந்து ஆறன்முளை வரை ஒரு நீண்ட பயணத்தை நிகழ்த்தியது. அன்றைய முக்கியமான தலைவர்கள் அதற்கு ஆதரவளித்தனர். அய்யன்காளி ஒரு மக்கள்தலைவராக அறியப்படலானார்.

ஓய்வு இல்லாத கட்டாய உழைப்பு முறை

அய்யன்காளி ஓய்வு இல்லாத கட்டாய உழைப்பு முறையை ஒழித்துக்கட்டும் போராட்டத்தை 1904-ல் தொடங்கினார். கேரளத்தில் முதன்முதலாக நடந்த விவசாயத் தொழிலாளர் போராட்டம் இது. இதன்மூலம் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு உள்ளிட்ட பல உரிமைகளைத் தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தந்தார்.

கல்மாலை அறுப்புப் போர்

அய்யன்காளி தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடை அணிய விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து அக்டோபர் 14, 1915-ல் போராட்டத்தைத் தொடங்கினார். பெரிநாடு சந்தையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை கூட்டினார். 1915-16 காலகட்டத்தில் இப்போராட்டம் வெகுவாகப் பரவியது. பிற சாதியினர் அதை எதிர்த்தபோது சற்றும் பின்வாங்காமல் டிசம்பர் 19, 1915 அன்று அதே இடத்தில் இரண்டாவது மாநாட்டைக்கூட்டி அந்த வெற்றியை அறிவித்தார். இது ‘கல்மாலை அறுப்புப் போர்’ என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்பட்டது. தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்கள் தங்கள் கல்மாலைகளை அறுத்தெறிந்துவிட்டு மேலாடை அணியத் தொடங்கினர்.

வைக்கம் போராட்டம்

1924-ல் நாராயணகுருவின் இயக்கமும் காங்கிரஸும் இணைந்து டி.கெ மாதவன் தலைமையில் நிகழ்த்திய வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்குபெற அய்யன்காளி ஆரம்பத்தில் தயக்கம் காட்டினாலும் பின்னர் முக்கியமான பங்கு வகித்தார். வைக்கம் போராட்டத்தின் இறுதிவெற்றியாக 1936-ல் ஆலயப்பிரவேச சட்டம் அமலானபோது வெற்றிவிழாவில் காந்தியுடன் அய்யன்காளியும் கலந்துகொண்டார்.

பிற போராட்டங்கள்
  • 1904-ல் பட்டியல் வகுப்பு மக்களுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை வெங்ஙானூரில் ஆரம்பித்தார். இந்த பள்ளிக்கு எதிராகவும் அவரது ஊர்வலங்களுக்கு எதிராகவும் வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. அவற்றை அய்யன்காளி வன்முறை மூலம் எதிர்கொண்டார்.
  • 1904-ல் புலையர்களுக்கு அடிப்படைக்கூலி நிச்சயிக்கப்படுவதற்காக திருவிதாங்கூர் முழுக்க ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்தை அய்யன்காளி ஆரம்பித்தார். 1905-ல் இந்தபோராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.
  • 1912-ல் பட்டியல் வகுப்பு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நெடுமங்காடு சந்தையில் அய்யன்காளி நுழைந்தார். போராட்டத்திற்குப் பிறகு அனைவரும் சந்தையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
  • ஜாதிபேதமற்று எல்லா குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளிக்கும், தென்னிந்தியாவின் முதல் அரசுப் பள்ளிக்கூடம் இவரது முனைப்பால் தொடங்கப்பட்டது.
  • கல்வி, அரசு வேலைவாய்ப்பு, நிலம், சமூக மரியாதை, கோயில்களில் வழிபாட்டு உரிமை ஆகியவற்றுக்காகவும் ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றி பெற்றார்.

அமைப்புப்பணிகள்

1905-ல் அய்யன்காளி சதானந்த சாமிகளின் உதவியுடன் 'சாதுஜன பரிபாலன சங்கம்' என்ற பேரில் ஓர் அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் தன் மக்களுக்கான கல்வி முயற்சிகளை ஒருங்கிணைத்தார். இதில் அன்றைய முக்கியமான அறிவுஜீவிகளின் ஆதரவைப் பெற்றார். இதில் நாராயணகுருவின் பேரியக்கம் அவருக்கு பக்கபலமாக இருந்தது. கிறிஸ்தவ புலையர்களையும் இந்து புலையர்களையும் ஒன்று சேர்க்க இந்த அமைப்பு உதவியது. 1907-ல் புலையர்களுக்கு பொதுக்கல்விக்கான உரிமையை அளித்து திருவிதாங்கூர் அரசு ஆணையிட்டது. ஆனால் அந்த உத்தரவு 1910 வரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதை அமல்படுத்த தொடர்போராட்டம் தேவைப்பட்டது. நடைமுறையில் பிள்ளைகள் பொதுக்கல்விச்சாலைகளில் தடையில்லாமல் சேர்க்கப்பட 1915 வரை போராட வேண்டியிருந்தது.

அரசுப்பணிகளில் புலையர்களுக்கான ஒதுக்கீடுக்காக 1916-ல் அய்யன்காளி குரலெழுப்பினார். 1916-ல் இதற்காக 'சாதுஜனபரிபாலினி' என்ற மாத இதழை வெளியிட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இவரை சாதிய நோக்கில் மிகக்கடுமையாக விமர்சனம் செய்த தேசாபிமானி ராமகிருஷ்ணபிள்ளை என்ற எழுத்தாளர் பின்னாளில் அய்யன்காளியின் முக்கியமான ஆதரவாளராக ஆனார். கேசவன் வைத்தியர், வி.ஜெ.தாமஸ் ஆகியோருடன் இணைந்து அய்யன்காளி இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டார்.

அரசியல் வாழ்க்கை

அய்யன்காளி காந்தியைச் சந்தித்தபின் அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டார். ஜனநாயகப் பாதையை தெரிவு செய்தார். 1910-ல் திருவிதாங்கூர் மன்னருக்கு அளிக்கப்பட்ட 'மலையாளி மெம்மோரியல்' என்ற மிகப்பெரிய கூட்டு மனு முக்கியமான ஒரு சமூக நிகழ்வு. இதில் புலையர்களுக்காக அய்யன்காளி கையெழுத்திட்டிருந்தார். முற்போக்கு எண்ணமுள்ள மலையாளிகள், ஒடுக்கப்பட்டோர் அனைவரும் இணைந்து உருவாக்கி அளித்த இந்த மனு முதலில் நிராகரிக்கப்பட்டாலும் மெல்ல மெல்ல அதை அமலாக்காமலிருக்க முடியாது என்ற நிலை வந்தது. மலையாளி மெம்மோரியல் அளித்த கோரிக்கையின்படி திருவிதாங்கூர் சட்ட சபையான ஸ்ரீமூலம் பிரஜா சபையில் ஈழவர், புலையர் போன்றோருக்கு இடமளிக்கப்பட்டது. டிசம்பர் 5, 1911 அன்று அய்யன்காளி பிரஜாசபை என்ற அன்றைய திருவிதாங்கூர் சட்டமன்றத்தின் உறுப்பினராக ஆனார். இது ஒரு பெரும் சமூகநிகழ்வாகக் கருதப்படுகிறது. 1941-ல் இறப்பது வரை அங்கே அவர் உறுப்பினராகப் பணியாற்றினார். 1913, 1914 -ஆம் ஆண்டுகளில் அய்யன் காளியைத் தவிர சரதன் சாலமன், வெள்ளிக்கர சோதி ஆகியோரும் அய்யன்காளியின் முயற்சியால் புலையர்களின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர்.

அய்யன்காளி சிலை (திருவனந்தபுரம்)

சிந்தனையாளர்

”அய்யன்காளியின் வாழ்க்கை பல செய்திகளை உள்ளடக்கியது. எதிர்ப்பு என்பது ஆக்கபூர்வமானதாக இருக்க முடியும் என்றும், மீட்பு என்பது தன்னை மேம்படுத்திக்கொள்வதனூடாகவே நிறைவடைய முடியும் என்பதும் அவருடைய செய்தி. மரபை நிராகரிப்பது அல்ல அதை உள்வாங்கி வென்று மேல் செல்வது, அதை உரிமைகொள்வதுதான் மெய்யான விடுதலை என்றும் காட்டுவது. ஒரு காலகட்டத்திற்கான விடுதலையை மட்டும் பேசியவர் அல்ல அய்யன்காளி. அரசியல்விடுதலையை, சமூகவிடுதலையை மட்டும் முன்வைத்தவர் அல்ல. முழுமையான விடுதலையை நோக்கிப்பேசிய மெய்யியலாளரும்கூட. ஆகவே அவரை ஓர் அரசியல்வாதியாக, சமூகசீர்திருத்தவாதியாக மட்டுமல்ல, ஒரு மெய்யியலாளராகவும் கருத்தில்கொண்டாகவேண்டும். இந்திய தலித் தலைவர்களில் அய்யன்காளியின் தனித்துவமும் அதுதான்.

அய்யன்காளி தனது மானுட விடுதலைக்கான குரலை இந்திய மரபின் அத்வைத சிந்தனைகளிலிருந்தே பெற்றார் என்பது வரலாறு. ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் சட்டம்பி சுவாமிகள், நாராயண குரு, அய்யன் காளி ஆகியோர் உருவாயினர். அவர்களின் உருவாக்கத்தில் தைக்காடு அய்யாவு சுவாமிகள் என்னும் அத்வைதியின் இடம் முக்கியமானது. உண்மையில் இந்தக்கோணத்தில் இவர்களின் வரலாறு இன்னமும்கூட முழுமையாக ஆய்வுசெய்யப்படவில்லை." என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிட்டார்.

சிறப்புகள்

காந்தி 1937-ல் வெங்ஙானூர் சென்று அய்யன்காளியைச் சந்தித்தார். இவரது தொண்டுகளைப் பாராட்டி ஆசி வழங்கினார். அய்யன்காளி தாகூர், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பல தலைவர்களுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். 1937 ல் வெங்ஙானூரில் அய்யன்காளியை கௌரவிப்பதற்காக நாராயணகுருவின் இயக்கமும் காங்கிரஸும் சேர்ந்து அமைத்த மாபெரும் கூட்டத்தில் காந்தி அய்யன்காளியைப் பாராட்டிப் பேசினார். அவரை ஒரு சமூகப்போராளி மட்டுமல்ல ஆன்மஞானியும்கூட என்று சொன்னார்.

மறைவு

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அய்யன்காளி தன் 78-வது வயதில் ஜூன் 18, 1941 அன்று காலமானார். அவரது சமாதி வெங்ஙானூரில் உள்ளது

வாழ்க்கை வரலாறு

  • அய்யன் காளி குறித்த முதல் வாழ்க்கைக்குறிப்பு அய்யன்காளியின் பேரன் வெங்ஙானூர் சுரேந்திரனால் எழுதப்பட்டது. அய்யன்காளியின் மகள் வயிற்றுப்பேரன் அபிமன்யூ அதையொட்டி நூலை விரிவாக்கினார். இது கேரள அரசால் வெளியிடப்பட்டது.
  • கேரளத்தின் முதல் தலித் போராளி: அய்யன் காளி - (நிர்மால்யா, தமிழினி)

உசாத்துணை


✅Finalised Page