under review

குமாரன் ஆசான்

From Tamil Wiki
குமாரன் ஆசான்
குமாரன் ஆசான்

குமாரன் ஆசான் (என். குமாரன்) (ஏப்ரல் 12, 1873 - ஜனவரி 16, 1924) மலையாளக் கவிஞர், சிந்தனையாளர், இதழாசிரியர், சமூக நீதிக்காகப் போராடினார். நாராயணகுருவின் முதன்மைச் சீடர்களுள் ஒருவர். மலையாள இலக்கிய மறுமலர்ச்சியின் முதல்மூவரில் (உள்ளூர் பரமேசுவர அய்யர், வள்ளத்தோல் நாராயண மேனன்) ஒருவர். ஈழவ சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், சாதிப்பாகுபாட்டிற்கும் எதிராகப் போராடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

குமாரன் ஆசான் கேரளாவில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காயிக்கரை எனுமிடத்தில் ஏப்ரல் 12, 1873-ல் நாராயணன் பெருங்ஙாடி, காளியம்மை இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். ஈழவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். தந்தை மலையாளத்திலும் தமிழிலும் புலமை பெற்றவர். உடன்பிறந்தவர்கள் எட்டு பேர்.

துண்டத்தில் பெருமாளாசானிடம் சமஸ்கிருதப் பாடங்களை பயின்றார். ஏழு வயதில் பள்ளியில் சேர்ந்து பதினான்காவது வயதில் தனது தொடக்கக் கல்வியை முடித்தார். அதே பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினார். சில காலம், கடைகளில் கணக்கெழுதினார். இவரது அறிவுத் திறனை உணர்ந்த இவரது முதலாளி கொச்சார்யன் வைத்யன் இவரை மேலும் கல்வி கற்குமாறு தூண்டினார். குமாரன் மணம்பூர் கோவிந்தனாசான் என்ற பெரிய புலவரிடம் கல்வி கற்றார்.

குமாரன் மங்களூரில், பிராமண மாணவர்கள் மட்டுமே பயின்ற ‘ஸ்ரீ ஜய சாம ராஜேந்திரர் சமஸ்கிருத கலா சாலை’யில் சேர்ந்தார். அப்போது, வேதியரல்லாதவர் வடமொழியையும் அதிலுள்ள வேத சாத்திரங்களையும் பயிலக்கூடாது என உயர்வகுப்பு பிராமண மாணவர்கள் குமாரன் ஆசானுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதனால் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. குமாரன் ஆசானை கலாசாலையிலிருந்து வெளியேற்றினர்.

குமாரன் ஆசான் கல்வி மீது கொண்ட ஆர்வத்தினால் கல்கத்தாவிற்குச் சென்று ஒரு வடமொழிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு, இலக்கணம், கவிதை என இரண்டையும் பயின்றார். ஆனால், கல்கத்தா நகரில் ‘பிளேக்’ நோய் ஏற்பட்டு, கல்லூரி மூடப்பட்டதால் தேர்வு எழுத முடியாத நிலை, மறுபடியும் ஏற்பட்டது. குமாரன் ஆசான் படிப்பில் ஒரு பட்டமும் பெற முடிய வில்லை. ஆனால், கன்னடம், வங்காளம், சமஸ்கிருதம், மலையாளம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். பிறமொழியில் உள்ள காவியங்களையும், நூல்களையும் கற்றார்.

தனி வாழ்க்கை

குமாரன் ஆசான் பானுமதியை 1917-ல் திருமணம் செய்து கொண்டார்.

குமாரன் ஆசான் நாராயண குரு

ஆன்மிகம்

குமாரன் ஆசான் நாராயணகுருவின் முதல் சீடர். ஈழவர்களின் உரிமைகளுக்காகப் போராடச் செய்யவும், சமூக நீதி கிடைக்கவும், நாராயண குருவால், ‘ஸ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம்’ என்ற அமைப்பு 1903-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அந்த அமைப்பின் பொதுச் செயலாளராக குமாரன் ஆசான் தேர்ந்தெடுக்கப்பட்டு நெடுங்காலம் பணியாற்றினார்.

சமூகப்பணி

ஈழவ மக்களுக்கும், பிற ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கும், பொதுச் சாலைகளில் செல்ல உரிமை வேண்டும், அரசால் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் அனைவருக்கும் கல்வி பெற உரிமை வேண்டும், கோயிலுக்குள் சென்று வழிபட உரிமை வேண்டும், தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் போன்ற சமூகக் கோரிக்கைகளை முன்னிறுத்தி, நாராயண குருவும், குமாரன் ஆசானும் தீவிரமான போராட்டங்களை நடத்தினர்.

இதழியல்

குமாரன் ஆசான் ஈழவ மக்கள் விழிப்புணர்வுக்காகவும் அறிவு வெளிச்சம் பெறவும் ‘விவேகோதயம்’ என்ற இதழைத் தொடங்கினார். அதன் ஆசிரியராகவும் செயல்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

குமாரன் ஆசான் இளம்வயதிலேயே மலையாளத்திலும் வடமொழியிலும், கவிதை எழுதினார். கோவிந்தனாசானிடம் படித்தபோது பாட்டுகளும் சுலோகங்களும் எழுதினார். பரவூரில் கேசவனாசான் என்பவர் நடத்திய 'சுஜனாநந்தினி' என்ற இதழில் இவரது கவிதைகள் வெளியாயின. 'குமாரு', 'என். குமாரன்', 'காயிக்கரை என். குமாரன்' என்ற பெயர்களில் கவிதைகள் எழுதினார். “வள்ளி விவாகம்”, 'அம்மானைப்பாட்டு', 'உஷாகல்யாணம்' ஆகியவற்றை எழுதினார். 'சுப்ரமண்ய சதகம்' என்ற நூலையும் எழுதினார்.

‘உதிர்ந்த மலர்’ (வீணபூவு) என்னும் தனது கவிதை நூலை 1908-ல் முதன் முதலில் வெளியிட்டார். அதன் மூலம் மலையாளக் கவிதை உலகில் நுழைந்தார். ‘புஷ்பவாடி’, ‘மணிமாலை’, ‘வனமாலை’ போன்ற அவரது கவிதைகள் கருத்திலும், வடிவத்திலும் மலையாளக் கவிதை இலக்கியத்தின் முக்கியமாக உள்ளன. ஜேம்ஸ் ஆலன் எழுதிய ஆங்கில நூலை 'மனம் போல மாங்கல்யம்' என்ற பெயரில் மலையாளத்தில் வெளியிட்டார்.

‘கருணை’ என்ற கவிதை நூல் குமாரன் ஆசானின் முக்கியமான படைப்பு. அக்கவிதை, பின்பு திரைப்படமாக எடுக்கப்பட்டது. குமாரன் ஆசான் ‘துரவஸ்தை’ என்ற சமுதாயப் புரட்சி சார்ந்த கவிதைகளை எழுதினார். சமூக அநீதிகளை ஒழிப்பதற்கான ஆயுதமாகக் கவிதையைக் கையாண்டார். ‘ப்ரமீராதனம்’, ‘ஸீதா’ என்ற இரு மகா காவியங்களை இயற்றினார். எட்வின் அர்னால்டின்(Edwin Arnold) லைட் ஆஃப் ஏசியா (Light of Asia)விலிருந்து உத்வேகம் பெற்று 'புத்த சரிதா' என்ற காவியக் கவிதையை எழுதினார். துராவஸ்தாவில் இருந்தபோது, சாதி வேறுபாடுகளை எதிர்த்துப் போராடுவதற்கான தனது புரட்சிகர ஆர்வத்தை வெளிப்படுத்தினார். ஆசானின் வேறு சில கவிதைப் படைப்புகள் தனித்துவமான இந்து/பௌத்த சாய்வைக் கொண்டிருந்தன.

விருதுகள்

  • வேல்ஸ் இளவரசர் 1922-ல் சென்னை நகருக்கு வருகை புரிந்தபோது குமாரன் ஆசானுக்கு பட்டாடையும், தோடாவும் அளித்துச் சிறப்பித்தார்.

மதிப்பீடு

”துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனை நாட்டாரழகியல் மரபின் முதல்புள்ளியாகக் கொண்டால் குமாரன் ஆசான், சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ள, இடச்சேரி கோவிந்தன் நாயர், பி.குஞ்ஞிராமன் நாயர் போன்றவர்களை அம்மரபின் தொடர்ச்சியாகச் சொல்லலாம். சமஸ்கிருதத்தை விட்டு விலகி மக்கள் மொழியில் எழுதியவர். அவரது கருக்களும் புதிய ஜனநாயக உலகுக்கான அறைகூவல்களாக ஒலித்தவை. அவரது பாடல்கள் நாட்டுப்புறப்பாடல்கள் அளவுக்கே புகழ்பெற்றிருந்தன.” என ஜெயமோகன் மதிப்பிட்டார்.

மறைவு

குமாரன் ஆசான், ஆல்வாய் நகரத்திலிருந்து ஆலப்புழைக்குச் செல்லும் போது படகு மூழ்கி ஜனவரி 16, 1924-ல் காலமானார்.

நினைவு

  • குமாரன் ஆசான் பிறந்த ஊரில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது.
  • கேரள அரசு தோன்னைக்கல்லில் நினைவு மாளிகையும், நூலகமும் நிறுவியுள்ளது.
  • குமாரன் ஆசான் பெயரில் கேரள மாநிலத்திலும், பிற இந்திய மாநிலங்களிலும் கல்வி நிலையங்கள் பல உள்ளன.
  • குமாரன் ஆசான் இலக்கியச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. தலைநகர் சென்னையில் ஆசான் நினைவுப் பள்ளி ஒன்று நடைபெற்று உள்ளது.

நூல்கள் பட்டியல்

கவிதை
  • ஸ்தோத்திரக் கிருதிகள் (1901)
  • செளந்தர்ய லஹரி (1901)
  • வீணபூவு
  • ஒரு சிம்ஹப்பிரசவம் (1909)
  • நளினி (அல்லங்கில் ஒரு ஸ்நேகம்) (1911)
  • லீலா (1914)
  • ஸ்ரீபுத்தசரிதம் (1915)
  • பாலராமாயணம்
  • கிராமவ்ரிக்‌ஷத்திலே குயில் (1918)
  • ப்ரரோதனம் (1919)
  • புஷ்பவாடி (1922)
  • துரவஷ்தா (1922)
  • சந்தாலபிக்‌ஷுகி (1922)
  • கருணா (1923)
  • மணிமாலா (1924)
  • வனமாலா (1925)
  • சுப்ரமண்ய சதகம்
பிற கவிதைகள்
  • சடாசார சதகம்
  • சரியாய பரிஷ்கரனம்
  • பாஷாபோஷினிசபாயோடு
  • சாமான்யதர்மங்கள்
  • சுப்ரமண்யபஞ்சகம்
  • ம்ருத்யன்ஜெயம்
  • ப்ரவாசகாலத்து நாட்டிலே ஓர்மகல்
காவியம்
  • ப்ரமீராதனம்
  • ஸீதா
மொழிபெயர்ப்பு
  • மனம் போல மாங்கல்யம் (ஜேம்ஸ் ஆலன்)
குமாரன் ஆசான் பற்றிய நூல்கள்
  • Suryathejas — Studies on Asan Poetry - E.K.Purushothaman (2002)
  • Poetry and Renaissance: Kumaran Asan birth centenary volume - M. Govindan (1974)
  • Evolution of the poetic life of Kumaran Asan: A psychu-philosiphical enquiry - Pavitran P (1994)
  • Kumaranasan - Nithyachaithanya Yathi (1994)
  • Asan vimarsanathinte aadya rasmikal - Kumaran, Murkoth; Madhavan K.G (1966)
  • Sreenivasan, K. (1981). Kumaran Asan: Profile of a poets vision. Thiruvananthapuram:
  • Kumaran Asan - George K.M. (1972)
  • Asante Seethakavyam - Sukumar Azhikode

உசாத்துணை


✅Finalised Page