being created

தி. ஜ. ரங்கநாதன்

From Tamil Wiki
Revision as of 00:15, 14 December 2022 by ASN (talk | contribs) (Para Added: Images Added)
தி.ஜ. ரங்கநாதன்

தி.ஜ. ரங்கநாதன் (திங்களூர் ஜகத்ரட்சகன் ரங்கநாதன்; தி.ஜ.ர.) (ஏப்ரல் 1, 1901-அக்டோபர் 19, 1974) எழுத்தாளராகவும் இதழாசிரியராகவும் செயல்பட்டார். சக்தி, மஞ்சரி போன்ற இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். குழந்தை இலக்கிய முன்னோடிகளில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

திங்களூர் ஜக்த்ரட்சகன் ரங்கநாதன் என்னும் தி.ஜ. ரங்கநாதன், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திங்களூரில், ஏப்ரல் 1, 1901 அன்று பிறந்தார். குடும்பச் சூழல்களால் ஓரத்தநாடு பாடசாலையில் நான்காம் வகுப்புவரை படித்தார். தொடர்ந்து சுயமாகப் பயின்று அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களை அறிந்துகொண்டார். ஆங்கிலப் புத்தகங்களை அகராதிகளின் துணைகொண்டு படித்தார். பல்வேறு நூல்களை வாசித்து இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். சதுரங்க விளையாட்டில் தேர்ச்சி பெற்றவர்.

தனி வாழ்க்கை

தி.ஜ. ரங்கநாதன், சுந்தரவல்லியை 1914-ல் திருமணம் செய்துகொண்டார். தி.ஜ.ர.வின் தாய் 1922-ல் காலமானார். தந்தை பார்த்துவந்த கர்ணம் வேலையைச் சிறிது காலம் தி.ஜ. ர. பார்த்து வந்தார். நில அளவைக்கானப் பயிற்சி பெற்றார். திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். வழக்குரைஞரின் அலுவலக உதவியாளராகச் சில மாதங்கள் பணிபுரிந்தார். மளிகைக் கடைச் சிற்றாள் உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.

இவர்களுக்கு சீனிவாச வரதன், பார்த்தசாரதி, சேஷாத்திரி என மூன்று மகன்கள். பங்கஜம், பாப்பா, மஞ்சரி என மூன்று மகள்கள். ‘மஞ்சரி’ இதழில் பணியாற்றிய காலத்தில் பிறந்ததால் மகளுக்கு ‘மஞ்சரி’ என்று பெயரிட்டார்.

இலக்கிய வாழ்க்கை

தி.ஜ. ரங்கநாதன், திருக்காராயல் என்ற கிராமத்தில் வசித்து வந்த காலத்தில்  “ஐரோப்பிய யுத்த சரித்திரம்” என்ற நூலைப் படித்தார். இந்த நூல் அவருள் பல தாக்கங்களை ஏற்படுத்தியது. எழுத்தார்வத்தால் இதழ்களுக்குக் கதை, கட்டுரைகளை எழுதி அனுப்பினார். தி.ஜ. ரங்கநாதனின் முதல் கட்டுரை 1916-ல், ‘ஆனந்த போதினி'யில் வெளியானது. கவிதை அதே ஆண்டில் ‘ஸ்வராஜ்யா' இதழில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து சுதேசமித்திரன் இதழில் இவரது படைப்புகள் வெளியாகின.

விடுதலைப் போராட்டம்

தி.ஜ. ரங்கநாதன், 1920-ல், சுதேசி இயக்கத்தின் சார்பில் நிகழ்ந்த அந்நியத் துணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் சிவகங்கையில் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் சிறையில் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் மீதும் காந்தியின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

இதழியல் வாழ்க்கை

தஞ்சாவூரில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த 'சமரச போதினி' இதழில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார் தி.ஜ.ரங்கநாதன். அதனை அடுத்து காரைக்குடியில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த 'ஊழியன்' இதழில் பணிக்குச் சேர்ந்தார். இலக்கிய இதழாக வெளிவந்து கொண்டிருந்த ஊழியன் மூலம் இதழியல் நுட்பங்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். தொடர்ந்து சுதந்திரச் சங்கு, ஜய பாரதி, ஹனுமான், ஹிந்துஸ்தான், நவமணி போன்ற இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். ஆசிரியர், துணை ஆசிரியர், நிர்வாக ஆசிரியர், உதவி ஆசிரியர், கூட்டாசிரியர் எனப் பல பொறுப்புகளில் செயல்பட்டார்.

சக்தி இதழ் ஆசிரியராக தி.ஜ. ரங்கநாதன்
சக்தி இதழ் பணி

வை. கோவிந்தன், 1939, ஆகஸ்ட்டில், புதுக்கோட்டை ராமச்சந்திரபுரத்தில், ‘சக்தி’ இதழைத் தொடங்கினார். ஆரம்பத்தில் வை. கோவிந்தன் நிர்வாக ஆசிரியராகவும், அ. கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராகவும் பணியாற்றினர். பின்னர் தி.ஜ. ரங்கநாதன் ஆசிரியர் பொறுப்பேற்றார். அதுமுதல் ‘சக்தி’ மாறுபட்ட இதழாக வெளிவரத் தொடங்கியது. மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த ரங்கநாதன், தானே பல கட்டுரைகளை, சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.

இதழில் பல சிறுகதைகளை, கட்டுரைகளை, குழந்தைகளுக்கான பல படைப்புகளை ரங்கநாதன் எழுதினார். 1940 முதல் 1946 வரை சக்தியின் ஆசிரியராக தி.ஜ.ரங்கநாதன் பணியாற்றினார். மஞ்சேரி எஸ். ஈஸ்வரன் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளை மொழிபெயர்த்துச் சக்தி இதழில் வெளியிட்டார்.

மஞ்சரி இதழ்ப் பணி

நவம்பர் 1947=ல் தொடங்கப்பட்ட மஞ்சரி இதழுக்கு முதல் ஆசிரியராக நியமிக்கப்பட்டவர் தி.ஜ.ரங்கநாதன். இவரது பெயரை இதற்குப் பரிந்துரைத்தவர் கா. ஸ்ரீ. ஸ்ரீ.  மஞ்சரியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பெருமை தி.ஜ. ரங்கநாதனுக்கு உண்டு. ஆங்கில இலக்கியங்கள் பலவற்றின் சுருக்கத்தை, தமிழில், ‘புத்தகச் சுருக்கம்’ என்ற பகுதியில் வெளியிட்டார். பொது அறிவுச் செய்திகளுக்கும், உலக நிகழ்வுகளுக்கும், மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். இவருக்கு உதவியாசிரியராக, தமிழிலும் வங்காளி மொழியிலும் புலமை பெற்றிருந்த த.நா.சேனாபதி செயல்பட்டார்.

திரைப்பட விளம்பரங்கள், நகைச்சுவைத் துணுக்குகள், கவர்ச்சிப் படங்கள் இவை போன்றவை இடம்பெறாமல் முழுக்க முழுக்க அறிவைப் பரப்புதல் என்பதை நோக்கமாகக் கொண்டே மஞ்சரி இதழ் வெளிவந்தது.

இலக்கியச் செயல்பாடுகள்

தி.ஜ. ரங்கநாதனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘சந்தனக் காவடி’ 1938-ல் வெளிவந்தது. தொடர்ந்து ‘நொண்டிக்கிளி, ‘வீடும் வண்டியும்’, ‘மஞ்சள் துணி’, ‘காளி தரிசனம்’ போன்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன. வங்க எழுத்தாளர் ஹரீந்திரபாத் சட்டோபாத்யாயாவின் நாடகங்கள் மற்றும் ராஜாஜியின் ஆங்கிலச் சொற்பொழிவுகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். லெனின் சரித்திரக் கதைகள், ருஷ்ய எழுத்தாளர் ஷென்கோவின் நாவல், நேருவின் உரைகள் என இருபதிற்கும் மேற்பட்ட மொழி பெயர்ப்பு நூல்களைத் தந்திருக்கும், தி.ஜ.ரங்கநாதன், தன் வாழ்நாளில் நாவல் முயற்சிகள் எதிலும் ஈடுபடவில்லை.

ஜெயகாந்தனும், கண்ணதாசனும் மிகவும் மதித்த எழுத்தாளர் தி.ஜ. ரங்கநாதன். ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியது தி.ஜ. ரங்கநாதன் தான். கண்ணதாசன், வனவாசம் கட்டுரை நூலில், தன்னுடைய உரைநடைக்கு முன்னோடி என்று தி.ஜ. ரங்கநாதனையும் அவரது ’ஆஹா ஊஹு’ கட்டுரையையும் குறிப்பிட்டுள்ளார்.   தி.ஜ. ரங்கநாதன் சிறுகதைகள் சிலவற்றை மஞ்சேரி எஸ். ஈஸ்வரன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

சிறார் இலக்கியப் பணிகள்

தி. ஜ. ரங்கநாதன் ‘பாப்பா’ என்ற  சிறார் இதழில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். ‘தியாகபாரதி’ என்ற குழந்தைகள் இதழுக்கு ஆலோசகராகப் பணிபுரிந்தார். ‘சக்தி’ இதழில் ‘பாலன்’, ‘நீலா’ போன்ற புனை பெயர்களில் சிறார்களுக்கான பாடல்கள், சிறுகதைகளை எழுதினார். டால்ஸ்டாயின் ‘குழந்தைகள் அறிவு’ என்ற நூலினைத் தமிழில் மொழிபெயர்த்துத் தொடராக வெளியிட்டார்.

கண்ணன் சிறுவர் இதழில் தி.ஜ.ரங்கநாதன்  முயல், ஆவாரங்காடு, புறா, கிளி, சந்திரனில் தமிழன், பூனை, சோம்பேறி சொக்கன், அணில், காட்டுவீடு  எனப் பல சிறுவர் சிறுகதைகளை எழுதியுள்ளார். சிறார்களுக்காக அறிவியல் நூல்கள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்றுக் கதைகள், பாடல்கள் எனப் பல படைப்புகளைத் தந்துள்ளார். டாக்டர் பூவண்ணன், தி.ஜ.ரங்கநாதனின் குழந்தை இலக்கியப் படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

விருதுகள்

  • தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு - சிறுகதைத் தொகுப்புக்காக.
  • தமிழக அரசின் பரிசு : குழந்தை இலக்கிய வளர்ச்சிக்காக.
  • குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் கேடயம் : குழந்தை இலக்கியப் பணிகளுக்காக.

இறுதிக்காலம்

தி.ஜ.ர., தன் இறுதிக் காலத்தில் மிக வறுமையான சூழலில் வாழ்ந்தார். 1971-ல், அரங்கண்ணல் முயற்சியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மந்தைவெளியில் அவருக்கு வீடு ஒதுக்கப்ப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர் என்ற முறையில் தியாகிகளுக்கான மானியத்தொகை கிடைக்க அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தார். முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.3000/- தி.ஜ.ர.வுக்கு வழங்கப்பட்டது. முதுமையிலும் உழைத்தாக வேண்டும் என்ற குடும்பச் சூழ்நிலை, அவரது உடலையும், உள்ளத்தையும் பாதித்தது. நெய்வேலியில் தனது மகன்களின் வீட்டில் மாறி மாறி வசித்தார். மறதி நோயாலும் பாதிக்கப்பட்டார்.

மறைவு

தி.ஜ. ரங்கநாதன், அக்டோபர் 19, 1974 அன்று காலமானார்.

நாட்டுடைமை

மணிக்கொடி எழுத்தாளர்களில் மூத்த மற்றும் முன்னோடி எழுத்தாளர் தி.ஜ. ரங்கநாதன். இவரது படைப்புக்களை, இவரது மறைவிற்குப் பின் 2008-ல், தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது. அல்லயன்ஸ் பதிப்பகம் தி. ஜ. ரங்கநாதனின் நூல்கள் சிலவற்றை மறுபதிப்புச் செய்துள்ளது. ‘தி.ஜ.ர.வின் எழுத்தும் தேசிய உணர்வும்’ என்ற தலைப்பில் விட்டல் ராவ் நூல் ஒன்றை எழுதியுள்ளார். தி.ஜ.ரங்கநாதன் படைப்புகளில் சில தமிழ் இணைய மின்னூலகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.

இலக்கிய இடம்

தமிழில் கட்டுரை இலக்கியத்தை வளர்த்தெடுத்த முன்னோடிகளில் ஒருவர் தி.ஜ.ரங்கநாதன். குழந்தை இலக்கிய முன்னோடியும் கூட. வ.ரா.வைத் தனது குருவாகக் கொண்டு செயல்பட்டார். எளிமையான நடையிலேயே தனது கட்டுரைகளை எழுதினார். அலங்காரப் பூச்சுக்களைத் தவிர்த்தார். இவர் எழுத்தைப் பற்றி சி.சு.செல்லப்பா, ‘கட்டுரைக்கும் கதைக்கும் தி.ஜ.ர. நடை அலாதியானது. உயர்தரமானது’ என்கிறார்.(தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது)

சிட்டி-சோ. சிவபாதசுந்தரம் இணையர், “எந்த விஷயத்தையும்  எளிய வசனத்தில் எழுதுவதில்  வ.ரா.வின் வாரிசாகக் கருதப்படும் இவர், வடிவ உணர்வுடன் பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார்” என்கின்றனர். மேலும் அவர்கள், “தி.ஜ. ரங்கநாதன், நல்ல சிறுகதைகளை எழுதியவர் மாத்திரமல்ல, சிறுகதைப் பொருளைப் பற்றியும், அமைப்பைப் பற்றியும் எழுதியிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளனர் (தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்)






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.