எஸ். ராஜம்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(; Added info on Finalised date) |
||
| Line 89: | Line 89: | ||
*[https://www.indian-heritage.org/music/mus4.htm Musings on Music by S. Rajam] | *[https://www.indian-heritage.org/music/mus4.htm Musings on Music by S. Rajam] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|27-Jan-2026, 15:11:23 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 03:44, 28 January 2026
எஸ். ராஜம் (சு. ராஜம்; சுந்தரம் ஐயர் ராஜம்) (பிப்ரவரி 10, 1919 - ஜனவரி 29, 2010) ஓவியர், நடிகர், கர்நாடக இசைப் பாடகர். புகைப்படக் கலைஞர்.
பிறப்பு, கல்வி
எஸ். ராஜம், பிப்ரவரி 10, 1919-ல், சென்னை மயிலாப்பூரில் சுந்தரம் அய்யர் - பார்வதி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். எழும்பூர் அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் கற்றார். கர்நாடக இசை கற்றார்.
தனி வாழ்க்கை
ராஜம், அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். மணமானவர். மனைவி: ஆனந்தா. இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்.
திரை வாழ்க்கை
ராஜம், 1933-ல் வெளியான சீதா கல்யாணம் படத்தில் ராமராக நடித்து தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். ராஜத்தின் தங்கை ஜெயலட்சுமி சீதையாகவும், தந்தை சுந்தரமய்யர் ஜனகராகவும், தம்பி பாலசந்தர் ராவணன் தர்பாரில் கஞ்சிரா வாசிப்பவராகவும் அப்படத்தில் நடித்திருந்தனர். அப்படம்தான் பாபநாசம் சிவன் இசை அமைத்த முதல் படம். தொடர்ந்து சிவகவி படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதருடன் இணைந்து நடித்த ராஜம், ராதா கல்யாணம், ருக்மணி கல்யாணம் போன்ற சில படங்களிலும் நடித்தார். என்றாலும் தொடந்து நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்து விட்டு இசை மற்றும் ஓவியத்தில் கவனம் செலுத்தினார்.
வானொலி
சென்னையில் அகில இந்திய வானொலி ஆரம்பித்த இரண்டாவது நாளிலேயே ராஜம் ஓர் இசைக் கச்சேரி செய்தார். பல்வேறு ராகங்களில் சிலப்பதிகாரக் கதையை இசை நாடகமாக ஒலிபரப்ப உதவினார். அதனால் அவருக்கு வானொலியிலேயே பணி வாய்ப்பு அமைந்தது. ராஜம், அகில இந்திய வானொலியில் பணியாளராகவும் இசை மேற்பார்வையாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். நிகழ்ச்சிகளில் பல புதுமைகளைப் புகுத்தியதுடன், பல பரீட்சார்த்த முயற்சிகளிலும் ஈடுபட்டார்.
அக்காலத்தில், விவாதி ராகங்கள் அனைத்தும் தோஷ ராகங்கள், அவற்றைப் பாடினால் கேடு விளையும் என்ற கருத்து பரவலாக இருந்தது. மேளகர்த்தா ராகங்கள் 72-ல், 40 ராகங்கள் விவாதி ராகங்கள் என்ற போதிலும், இந்தக் கருத்து ஓங்கி இருந்தது. இந்த எண்ணத்தை மாற்றியமைக்க எண்ணிய ராஜம், இசைக் கலைஞர் டி. சங்கரனின் உறுதுணையுடன் அக்கீர்த்தனைகளை வானொலியில் ஒலிபரப்ப முனைந்தார். ராஜமும், பாடகி ஜி.வைதேகியும், கோடீஸ்வர ஐயரிடம் நேரில் கற்றுக் கொண்ட ஆர்.எம். சுந்தரத்திடம் 72 கீர்த்தனைகளையும் பயின்று, அவற்றைப் பாடி வானொலியில் ஒலிபரப்பினர். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுமுதல் கோடீஸ்வர ஐயரின் கிருதிகளையும், விவாதி ராகங்களையும் பரப்புவதையே தனது வாழ்நாளின் முக்கிய லட்சியமாகக் கொண்டார் ராஜம். அத்துடன் முத்துசாமி தீக்ஷிதரின் அரிய கிருதிகளையும் வானொலியில் ஒலிபரப்பி அவற்ரைப் பலரும் அறியும்படி செய்தார்.
ஓவிய வாழ்க்கை
தொடக்கம்
எஸ். ராஜம், ஓவியர் மணியத்தின் சித்தப்பாவான லிங்கையா மூலம் ஓவிய ஆர்வம் பெற்றார். எழும்பூர் அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் கற்றார். முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதுடன், தங்கப்பதக்கமும் வென்றார். தான் கற்ற மேற்கத்திய பாணி ஓவியங்களை வரைவதை விட, இந்திய பாணி ஓவியங்கள் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஓவிய நுணுக்கங்களை மேலும் விரிவாக அறிவதற்காக தஞ்சாவூர், மகாபலிபுரம், அஜந்தா, எல்லோரா என்று நாடெங்கும் பல பயணங்களை மேற்கொண்டார்.
இதழ்களில் ஓவியங்கள்
இலக்கியங்கள், புராணங்கள் தொடர்பாகப் பல ஓவியங்கள் வரைய ராஜத்திற்கு பயணங்கள் நல்ல வாய்ப்பாக அமைந்தன. அஜந்தா ஓவியங்களைக் கண்டு அதன் பால் ஈர்க்கப்பட்ட ராஜம், அதே பாணியைக் கையாண்டு தனது ஓவியங்களை வரைந்தார். ரமண மகரிஷியின் ஆசிரமத்தில் வாழ்ந்த கவிஞர் லூயிஸ் தாம்சன் மூலம் சில ஓவியப் புரிதல்களைப் பெற்றார் ராஜம். நீர் வண்ண ஓவியங்கள் வரைவதில் தேர்ந்தவராக இருந்தார். பல்வேறு இதழ்களின் தீபாவளி மலர்களுக்குப் பல ஓவியங்களை வரைந்தார். தனி ஓவியங்களை வரைந்தார். கலைமகள் இதழின் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன், தொடர்ந்து கலைமகளில் ராஜத்தின் ஓவியங்களை வெளியிட்டு ஊக்குவித்தார். ஆனந்த விகடன், கல்கி, ஓம் சக்தி போன்ற இதழ்களுக்காகவும் பல ஓவியங்களை வரைந்தார், ராஜம்.
இசையில் இருந்த தேர்ச்சியால், இசை சம்பந்தமான பல ஓவியங்களை ராஜத்தால் வரைய முடிந்தது. வாக்கேயக்காரர்கள், கீர்த்தனங்கள், ஸப்தஸ்வரங்கள் என்று இசை சம்பந்தமாக எண்ணற்ற ஓவியங்களை பத்திரிக்கைகளுக்காகவும் தனது தனிப்பட்ட நிறைவுக்காகவும் வரைந்தார்.
நூல்களில் ஓவியங்கள்
ராஜத்தின் ஓவியங்களால் பொள்ளாச்சி எஸ். மகாலிங்கம் ஈர்க்கப்பட்டார். அவரது உறுதுணையுடன், ராஜத்தின் முழு ஓவியங்களைக் கொண்டதாகச் 'சித்திரப் பெரிய புராணம்' நூல் உருவாயிற்று. அதில் 63 நாயன்மார்களின் ஓவியங்களை மாறுபட்ட வகையில் ராஜம் வரைந்திருந்தார். சேக்கிழார் அருளிய பெரிய புராணக் கதைகள், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் விளக்கவுரையுடனும், ராஜத்தின் ஓவியங்களுடனும் அந்நூலில் இடம்பெற்றிருந்தன.
1941-ல் மும்மூர்த்திகளைப் படமாக வரைய வேண்டுமென ராஜத்தின் குடும்ப நண்பர் சந்திரசேகர் பணித்தபோது, தீட்சிதர், தியாகையர், ஷ்யாமா சாஸ்த்ரி முகங்கள் மட்டும் கிடைத்ததைக் கொண்டு முழு உருவங்களை வரைந்தார். ராஜம் வரைந்த நவக்கிரக ஓவியங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. முத்துசாமி தீட்சிதரின் நவாவர்ண கிருதிகளுக்கும், திருவிளையாடற் புராணச் சம்பவங்களுக்கும் ஓவியங்கள் வரைந்தார். சங்கீத விற்பன்னர்கள், புராண நிகழ்வுகள், சம்பவங்கள் என நூற்றிற்கும் மேற்பட்ட ஓவியங்களை பிரபல இதழ்களுக்காக வரைந்தார்.
நூற்றிற்கும் மேற்பட்ட கீர்த்தனைகளைக் கோட்டோவியமாய் வரைந்து விளக்கவுரையுடன் வெளியிட்டார். எழுபத்திரண்டு மேள கர்த்தா ராகங்களுக்கும் வடிவம் கொடுத்து ராஜம் தீட்டிய ஓவியங்கள் எல் அண்ட் டி நிறுவன மாத நாள்காட்டியில் இடம்பெற்றன. தீட்சிதரின் பூலோக பஞ்சலிங்க கிருதியின் முழு சாராம்சத்தையும் உள்ளடக்கிய ஓவியத்தை வரைந்தார். திருக்குறளுக்கு ஓவியங்கள் வரைந்திருப்பதுடன், அதற்கு இசை வடிவமும் அளித்தார்.
ஆலய ஓவியங்கள்
ஹவாய் தீவில் உள்ள சுப்ரமண்யா ஆலயத்திற்கு ராஜம் பல்வேறு ஓவியங்களை வரைந்தளித்தார். அங்கு எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட்ட படைப்புகளில், எஸ்.ராஜத்தின் 500-க்கும் மேற்பட்ட ஓவியங்களும் உள்ளன.
ஓவிய நூல்கள்
எஸ். ராஜம், சிவாய சுப்பிரமுனிய சுவாமி எழுதிய ஆங்கில நூல்களான 'டான்சிங் வித் சிவா', 'லிவிங் வித் சிவா', 'மெர்ஜிங் வித் சிவா', 'லவ்விங் விநாயகர்' மற்றும் 'ஹவ் டு பிகம் எ ஹிந்து' போன்ற நூல்களின் அட்டைப் படங்களை வரைந்தார். மேலும் பல்வேறு ஓவியங்களையும் அந்நூல்களுக்காக வரைந்தார். பல ஓவியப் புத்தகங்களை வெளியிட்டார். அவற்றுள் 'Musings on Music' என்ற இசைக்குறிப்புகள் அடங்கிய நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அறியப்படுகிறது.
இசை வாழ்க்கை
தொடக்கம்
எஸ். ராஜம், பாபநாசம் சிவனிடம் இசை பயின்றார். முத்துசாமி தீட்சிதரின் பரம்பரையில் வந்த அம்பி தீட்சிதரிடம் இசை கற்றார். மயிலாப்பூர் சங்கீத சபா மூலம் நிகழ்ந்த அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், சௌந்தரம், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், மதுரை மணி ஐயர், மயிலை கௌரி அம்மாள் போன்ற பல இசைக் கலைஞர்களின் கச்சேரிகளைக் கேட்டு இசையார்வத்தை வளர்த்துக் கொண்டார். அவர்களில் சிலரிடம் இசை நுணுக்கங்களைக் கற்றார். மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை, வீணை தனம்மாள், திருவாலங்காடு சுந்தரேச ஐயர், பிடாரம் கிருஷ்ணப்பா, காஞ்சிபுரம் நயினாப் பிள்ளை, பாலக்காடு ராம பாகவதர் போன்ற ஜாம்பவான்களின் இசையைக் கேட்டும், வாய்ப்புக் கிடைக்கும் போது அவர்களில் சிலரிடம் பயின்றும் தனது இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டார்.
முதல் கச்சேரி
ராஜத்தின் முதல் கச்சேரி 13 வயதில், சித்தூரில் தங்கியிருந்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் முன் நிகழ்ந்தது. அதற்கு தம்புரா வாசித்தவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். தொடர்ந்து பல கச்சேரிகளிலும், ராதா கல்யாணம், சீதா, மீனாட்சி கல்யாணம் போன்ற இசை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார். ராஜத்தின் கச்சேரிகளுக்கு பக்கவாத்தியமாக ஹார்மோனியம், தபலா, கஞ்சிரா வாசித்த சகோதரர் பாலுதான், பிற்காலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞராகவும், நடிகராகவும் இயக்குநராகவும் பரிணமித்த வீணை எஸ்.பாலசந்தர்.
இசைப் பேருரைகள், கச்சேரிகள்
ராஜம், பாடகராக இருந்ததோடு பல்வேறு இசைக் கருவிகள் வாசிக்க அறிந்திருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் குரலிசை வகுப்பு ஆசிரியராகப்பணியாற்றினார். சபாக்களில் நடைபெற்ற இசை நிபுணர்கள் பலர் பங்கேற்ற கருத்தரங்குகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாணவர்கள் பலருக்கு இசைப் பயிற்சி அளித்தார். இந்தியாவின் பல இடங்களிலும், அமெரிக்கா உட்பட பல வெளிநாடுகளுக்கும் சென்று கச்சேரிகள் செய்தார்.
இசை நூல்கள்
ராஜம், 'ஸ்ருதி' இசை இதழின் இதழின் கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். தனது 72-ம் வயதில், 72 கிருதிகளை, ராகம் நிரவல் கல்பனை ஸ்வரங்களுடன் பாடி குறுந்தகடுகளாக வெளியிட்டார். கோடீஸ்வர ஐயருடைய படைப்புகளைப் புத்தக வடிவில் வெளியிட்டார்.
திரைப்பட இசை
ராஜத்திடம் இசை பயின்ற கெம்பராஜ் அர்ஸ் என்ற கன்னட நடிகர், 'ராஜா விக்கிரமா' என்ற படத்தை இயக்கினார். தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே சமயத்தில் வெளியான அத்திரைப்படத்திற்கு எஸ். ராஜம் இசையமைத்தார்.
புகைப்படம்
ராஜம் புகைப்படக் கலையிலும் ஆர்வம் கொண்டிருந்தார். பல புகைப்படக் கருவிகளை வாங்கி, தாம் செல்லும் இடங்களில் உள்ள சிற்பங்களை, கலைக் கோயில்களை படம் பிடித்தார். பகவான் ரமணரைச் சில முறை சந்தித்திருக்கும் ராஜம், அவரைப் புகைப்படம் எடுத்தவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.
விருதுகள்
- சங்கீத நாடக அகாடமி விருது
- ஞான பாரதி விருது
- சங்கீத கலா ஆச்சாரியா விருது
- ஸ்ருதி அறக்கட்டளை அளித்த வேலூர் கோபாலாச்சாரியார் விருது
- இசைக்கடல்
- நாதக்கனல்
மறைவு
எஸ். ராஜம், ஜனவரி 29, 2010 அன்று, தனது 91-ம் வயதில், சென்னையில் காலமானார்.
மதிப்பீடு
ராஜம் பரவலாக ஓவியராக அறியப்பட்டாலும், அடிப்படையில் இசைக் கலைஞர். 87 வயதிலும் வானொலிகளில் கச்சேரிகள் செய்தார். அவ்வயதிலும், தளர்ச்சியில்லாத இனிமையான குரல் வளத்தைக் கொண்டிருந்ததாக சக கலைஞர்களால் பாராட்டப்பட்டார். வானொலி மூலமும், தனது பிற இசைப் பணிகளின் மூலம் கர்நாடக சங்கீத வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார். பல மாணவர்களுக்கு இசைப் பயிற்சி அளித்து ஊக்குவித்தார். இசை சார்ந்தும், ஓவியம் சார்ந்தும் பல புதிய முயற்சிகளை முன்னெடுத்தார். பாரம்பரிய இசைக் கலைஞர், ஓவியக் கலைஞர், கலை சார்ந்த முன்னோடி ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.
உசாத்துணை
- எஸ். ராஜம் சிறப்பிதழ், வரலாறு தளம்
- எஸ். ராஜம் கட்டுரைகள், லலிதா ராம், கமகம் தளம்
- சொல்வனம் கட்டுரை, சேதுபதி அருணாசலம்
- கந்தகானாமுதம், லலிதாராம் கட்டுரை
- எஸ். ராஜம், அஞ்சலிக் கட்டுரை, தென்றல் இதழ்
- எஸ். ராஜம் ஆவணப்பட விமர்சனம், ரா. கிரிதரன், சொல்வனம் கட்டுரை
- எஸ். ராஜம், இந்து தமிழ் திசை கட்டுரை
- மகா கலைஞன் - எஸ்.ராஜம் 100, விகடன் இதழ் கட்டுரை
- சகல கலா ஆச்சார்யா ஆவணப்பட அறிமுகம், யூ ட்யூப் தளம்,
- Musings on Music by S. Rajam
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Jan-2026, 15:11:23 IST