under review

பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம்

From Tamil Wiki
திருவிளையாடல் புராணம்
திருவிளையாடல் புராணம்: ஆறுமுகநாவலர் பதிப்பு
திருவிளையாடல் - 1894 பதிப்பு
திருவிளையாடல் புராணம்: ரா. சீனிவாசன்

இறைவன், உயிர்கள் மீது கொண்ட அன்பு மற்றும் கருணையின் காரணமாக நிகழ்த்தும் ஆடல்களே திருவிளையாடல்கள் எனப்படுகின்றன. சிவபெருமான், பாண்டியர்களின் தலைநகரான மதுரையில், 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார். இத்திருவிளையாடல்களின் தொகுப்பே 'திருவிளையாடல் புராணம்' (திருவிளையாடற் புராணம்) என அழைக்கப்படுகிறது. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம் விரிவான செய்திகளைக் கொண்டது. மதுரையின் தலபுராணமாகக் கருதப்படுகிறது. இந்நூலின் காலம், பொ.யு. 16 -ஆம் நூற்றாண்டு.

பதிப்பு, வரலாறு

திருவிளையாடல் புராணத்தின் மூல நூலை, ஆறுமுக நாவலர் முதன் முதலில் பதிப்பித்தார். தொடர்ந்து சோடஷாவதானம் சுப்பராயச் செட்டியார் இந்நூலுக்கு ஓர் உரை அமைத்துப் பதிப்பித்தார். 1894-ல், இரத்தினவேலு முதலியார் இதனை உரை விளக்கத்துடன் அச்சிட்டார். ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையுடன் இந்நூலை திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1927-ல் பதிப்பித்தது. காசி மடத்தினரின் பதிப்பு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பதிப்பு உள்ளிட்ட பல பதிப்புகள் வெளியாகின.

ரத்தின நாயக்கர் & சன்ஸ், கலா ரத்னாகர அச்சுக்கூடம் தொடங்கி, வர்த்தமானன் பதிப்பகம், நர்மதா பதிப்பகம் வரை பலர் இந்நூலை உரைகளுடன் பதிப்பித்துள்ளனர்.

திருவிளையாடல் புராண வரலாறு

தமிழில் ஐந்து திருவிளையாடல் புராண நூல்கள் உள்ளன. அவை

1. கல்லாடர் இயற்றிய கல்லாடம்.

2. பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் என்னும் நம்பி திருவிளையாடல் புராணம்.

3. தொண்டைநாட்டு இலம்பூர் வீமநாதபண்டிதர் இயற்றிய கடம்பவன புராணம்.

4. தொண்டைநாட்டு வாயற்பதி அனதாரியப்பன் இயற்றிய சுந்தர பாண்டியம் .

5. பரஞ்சோதியார் இயற்றிய திருவிளையாடல் புராணம் .

கல்லாடத்தில் 30 திருவிளையாடல்கள் இடம் பெற்றுள்ளன.

மதுரைக்குக் ‘கடம்ப வனம்’ என்ற பெயரும் உண்டு. கடம்பவன புராணத்தில் உள்ள ‘லீலா சங்கிரக அத்தியாயம்' என்ற பகுதியில், மதுரைத் திருவிளையாடல்கள் அனைத்தும் சுருக்கமான முறையில் இடம் பெற்றுள்ளன.

‘சுந்தர பாண்டியம்' நூல், மதுரையில் நிகழ்ந்த திருவிளையாடல்களின் திரட்டாக அமைந்துள்ளது.

பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், ‘வேம்பத்தூரார் திருவிளையாடல் புராணம்’, என்றும், ‘நம்பி திருவிளையாடல்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதில் 64 திருவிளையாடல்கள், சுருக்கமான முறையில் இடம் பெற்றுள்ளன.

பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடல் புராணம், காலத்தால் பிந்தியது. நம்பி திருவிளையாடல் புராணத்தை விட, ஏறத்தாழ இரண்டு மடங்கு விரிவானது.

நூல் வரலாறு

பரஞ்சோதி முனிவர், வேதாரண்யத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே துறவியானார். இவரது தந்தை மீனாட்சி சுந்தர தேசிகரே இவருக்குக் குருவாக இருந்தார். அவரிடமிருந்து வடமொழி, திருமுறைகள், சித்தாந்த சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்றார். தல யாத்திரை செய்து வந்த பரஞ்சோதி முனிவர், சொக்கநாதரை வழிபடுவதற்காக மதுரைக்கு வந்தார். அவரது கனவில் தோன்றிய அன்னை மீனாட்சி, சிவபெருமானின் திருவிளையாடல்களைத் தமிழில் பாடும்படிக் கூறி மறைந்தார்.

அன்னையின் ஆணையை ஏற்ற பரஞ்சோதி முனிவர், வடமொழி நூலான ஸ்காந்த புராணத்தின் ஒரு பகுதியான, ‘ஹாலாஸ்ய மகாத்மியத்’தில் காணப்படும் சிவபெருமானின் திருவிளையாடல்களை அடிப்படையாகக் கொண்டு தமிழில் ‘திருவிளையாடற் புராணம்’ நூலை இயற்றினார். இதனை மதுரை சொக்கநாதர் சன்னிதியில், புகழ் வாய்ந்த புலவர்கள் முன் அரங்கேற்றம் செய்தார். இந்நூல் ‘பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்நூல் மதுரையின் தலபுராணமாகக் கருதப்படுகிறது. இதன் காலம் 16-ம் நூற்றாண்டு.

பரஞ்சோதி முனிவர், ’திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா’, ‘மதுரை பதிற்றுப்பத்தந்தாதி’, ‘வேதாரண்ய புராணம்’ போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். இவர், வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள ‘மடப்புரம்’ என்ற ஊரில் சமாதி அடைந்தார். இவ்வூருக்கு அருகில் உள்ள ‘பரஞ்சோதிபுரம்’ என்ற சிற்றூரில் அமைந்துள்ள சிவாலயத்தில், பரஞ்சோதி முனிவரின் உருவச்சிலை உள்ளது.

நூல் அமைப்பு

’திருவிளையாடல் புராணம்’, 3363 செய்யுள்களால் ஆனது. மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் காண்டமான மதுரைக் காண்டம் தொடங்குவதற்கு முன்பே, 343 செய்யுள்களில், கீழ்காணும் தலைப்புகளில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன

  • காப்பு
  • வாழ்த்து
  • நூற்பயன்
  • கடவுள் வாழ்த்து
  • பாயிரம்
  • அவையடக்கம்
  • திருநாட்டுச்சிறப்பு
  • திருநகரச்சிறப்பு
  • திருக்கையிலாயச்சிறப்பு
  • புராணவரலாறு
  • தலச் சிறப்பு
  • தீர்த்தச் சிறப்பு
  • மூர்த்திச் சிறப்பு
  • பதிகம்

344-வது செய்யுள் முதல் சிவபெருமானின் திருவிளையாடல்கள் தொடங்குகின்றன.

மீனாட்சி திருமணம்

காண்டங்கள்

மதுரைக் காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் என 64 படலங்கள் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது.

மதுரைக் காண்டம்
  1. இந்திரன் பழிதீர்த்த படலம்
  2. வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்
  3. திருநகரங்கண்ட படலம்
  4. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்
  5. தடாதகையாரின் திருமணப் படலம்
  6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்
  7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்
  8. அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்
  9. ஏழுகடல் அழைத்த படலம்
  10. மலயத்துவசனை அழைத்த படலம்
  11. உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்
  12. உக்கிர குமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்
  13. கடல் சுவற வேல்விட்ட படலம்
  14. இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்
  15. மேருவைச் செண்டாலடித்த படலம்
  16. வேதத்துக்குப் பொருள்அருளிச் செய்த படலம்
  17. மாணிக்கம் விற்ற படலம்
  18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்
கூடற் காண்டம்
  1. நான் மாடக்கூடலான படலம்
  2. எல்லாம் வல்ல சித்தரான படலம்
  3. கல் யானைக்குக் கரும்பு தந்த படலம்
  4. யானை எய்த படலம்
  5. விருத்த குமார பாலரான படலம்
  6. கால் மாறி ஆடிய படலம்
  7. பழியஞ்சின படலம்
  8. மாபாதகம் தீர்த்த படலம்
  9. அங்கம் வெட்டின படலம்
  10. நாகமேய்த படலம்
  11. மாயப்பசுவை வதைத்த படலம்
  12. மெய் காட்டிட்ட படலம்
  13. உலவாக்கிழி அருளிய படலம்
  14. வளையல் விற்ற படலம்
  15. அட்டமாசித்தி உபதேசித்த படலம்
  16. விடையிலச்சினை இட்ட படலம்
  17. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்
  18. இரசவாதம் செய்த படலம்
  19. சோழனை மடுவில் வீட்டிய படலம்
  20. உலவாக் கோட்டை அருளிய படலம்
  21. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்
  22. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்
  23. விறகு விற்ற படலம்
  24. திருமுகம் கொடுத்த படலம்
  25. பலகை இட்ட படலம்
  26. இசைவாது வென்ற படலம்
  27. பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்
  28. பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்
  29. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
  30. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்
திருஆலவாய்க் காண்டம்
  1. திருவாலவாயான் படலம்
  2. சுந்தரப்பேரம் செய்த படலம்
  3. சங்கப்பலகை கொடுத்த படலம்
  4. தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்
  5. கீரனைக் கரையேற்றிய படலம்
  6. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்
  7. சங்கத்தார் கலகந்தீர்த்த படலம்
  8. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்
  9. வலை வீசின படலம்
  10. வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்
  11. நரி பரியாக்கிய படலம்
  12. பரி நரியாக்கிய படலம்
  13. மண் சுமந்த படலம்
  14. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்
  15. சமணரைக் கழுவேற்றிய படலம்
  16. வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்
அருச்சனைப் படலம்

மூர்த்தி, தலம், சிறப்பு ஆகிய மூன்றுடன் 64 திருவிளையாடல்கள் மற்றும் அருச்சனைப் பாட்டு ஆகியவற்றோடு சேர்த்து 68 பகுதிகள் கொண்டதாக இந்த நூலை அமைத்துள்ளார் பரஞ்சோதி முனிவர்.

பாடல்கள் மூலம் அறிய வரும் வரலாற்றுச் செய்திகள்

பரஞ்சோதி முனவரின் ‘திருவிளையாடல் புராணம்’ மூலம் பாண்டிய மன்னர்கள் பற்றிய பல்வேறு வரலாற்றுச் செய்திகளையும், மாணிக்கவாசகரது வாழ்க்கை நிகழ்வுகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. மேலும், எந்தெந்தப் பாண்டிய மன்னனின் காலத்தில் என்னென்ன திருவிளையாடல்கள் நிகழ்ந்தன என்பதையும் பரஞ்சோதி முனிவர் விரிவாக விளக்கியுள்ளார்.

அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மாணிக்கவாசகர் காலத்தில் நிகழ்ந்ததை 27-30 வரையிலான படலங்களிலும், ஞானசம்பந்தப் பெருமானின் வாழ்க்கையில் நிகழ்ந்தனவற்றை 37, 38-ம் படலங்களிலும் அமைத்துள்ளார், பரஞ்சோதி முனிவர்.

தொண்டர் நாதனைத் தூதிடை
 விடுத்தது முதலை
உண்ட பாலனை அழைத்தது
 எலும்பு பெண் உருவாகக்
கண்டதும், மறைக் கதவினைத்
 திறந்ததும், கன்னித்
தண்டமிழ்ச் சொலோ மறுபுலச்
 சொற்களோ சாற்றீர்

- என்ற பாடலில் சுந்தரர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளார் பரஞ்சோதி முனிவர்.

நூலின் சிறப்புகள்

வடமொழி நூலை மூல நூலாகக் கொண்டு இயற்றப்பட்டிருந்தாலும், தமிழ் இலக்கியத்திற்கே உரியதான சொற்சுவை, பொருட்சுவை , தொன்மை , வனப்பு ஆகிய தன்மைகளுடன் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டின் சிறப்பு, மதுரையின் பெருமை, மன்னர்களின் வரலாறு, மாணிக்கவாசகரின் வரலாறு போன்றவற்றைப் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் நூல் விரிவாகக் கூறியுள்ளது. சேக்கிழாரின் பெரியபுராணம் சிவனின் வலக்கண்ணாகவும், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் இடது கண்ணாகவும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணம் சிவனின் நெற்றிக் கண்ணாகவும் கருதப்படுகிறது. திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம், தொண்டர்களின் பெருமையை, அவர்களுக்கு அருள்புரிந்த இறைவனின் தன்மையைக் கூறுகிறது. திருவிளையாடல் புராணம், உயிர்களின் மீது கொண்ட கருணையால், அன்பால், இறைவனே இரங்கி வந்து நிகழ்த்திய ஆடல்களைக் கூறுகிறது.

பாடல் சிறப்பு

அன்னை மீனாட்சி கனவில் தோன்றி ஆணையிட்டதால் இயற்றப்பட்ட நூல் என்பதால், பரஞ்சோதி முனிவர், நூலின் காப்புச் செய்யுளில்,

“சத்தியாய் சிவமாகி தனிப்பர
முத்தியான முதலைத்துதி செய
சுத்தியாகிய சொற்பொருள் நல்குவ
சித்தியானை தன் செய்யபொற் பாதமே”

- என்று அன்னையை முதன்மைப்படுத்தி விநாயகர் வணக்கத்துடன் நூலைத் தொடங்கியுள்ளார். பாயிரத்தில் அன்னையை முதன்மைப்படுத்தி சக்தித் துதியாகவும், அங்கயற்கண்ணி அம்மை மற்றும் தடாதகைப் பிராட்டித் துதியாகவும் மூன்று பாடல்களில் அன்னையின் சிறப்பைப் போற்றி வணங்குகிறார். திருவிளையாடல் புராண நூலை வாசிப்பதால், கேட்பதால் விளையுன் பயன் பற்றி நூலின் தொடக்கத்திலேயே,

திங்கள் அணி திரு ஆலவாய் எம் அண்ணல் திரு
விளையாட்டு இவை அன்பு செய்து கேட்போர்
சங்க நிதி பதுமநிதிச் செல்வம் ஓங்கித் தகைமை தரு
மகப் பெறுவர் பகையை வெல்வர்
மங்கல நல் மணம் பெறுவர் பிணி வந்து எய்தார் வாழ்
நாளும் நனி பெறுவர் வான் நாடு எய்திப்
புங்கவர் ஆய் அங்கு உள்ள போக மூழ்கிப் புண்ணியர்
ஆய்ச் சிவன் அடிக்கீழ் நண்ணி வாழ்வர்.

- என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழியின் பெருமையைப் பற்றிக் கூறும்போது, கடவுளாகிய சிவபெருமானே, தமிழ்ச் சங்கத்தில் தலைமைப் புலவராக இருந்து தமிழாய்ந்தார் என்றும், இலக்கண எல்லைகள் அற்றச் சில மொழிகளோடு இதனை ஒப்புநோக்கக் கூடாது என்றும் குறிப்பிடுகிறார்.

கண்ணுதற் பெருங் கடவுளும்
 கழகமோடு அமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த
 இப்பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண
 வரம்பிலா மொழி போல்
எண்ணிடைப் படக்கிடந்ததா
 எண்ணவும் படுமோ?

என்பது அப்பாடல் (திருவிளையாடல் புராணம், பாடல்: 57)

நம்பி திருவிளையாடல் - பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம் - வேறுபாடுகள்

நம்பி திருவிளையாடல் புராணத்திலுள்ள மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடல், காரியார் நாரியார் பாப்பகுத்த திருவிளையாடல், புலிமுலை புல்வாய்க்கு அருளின திருவிளையாடல் முதலிய மூன்று ஆடல்கள் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தில் இல்லை.

பரஞ்சோதி நூலில் உள்ள ’வருணன் கடலை வற்றச்செய்த படலம்’ , நம்பி நூலில் ‘நான்மாடக் கூடலான திருவிளையாடல்’ என்ற தலைப்பிலும் , நாகமெய்த படலம் , மாயப்பசு வதைத்த படலம் ஆகியன ‘மதுரையான திருவிளையாடல்’ என்ற பெயரிலும் , ’திருநகரங்கண்ட படலம்’, நம்பியில் ’புலிமுலை புல்வாய்க்கு அருளின திருவிளையாடல்’ என்ற தலைப்பிலும் இடம் பெற்றுள்ளன .

இரண்டு நூல்களுக்கும் கதைகளில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. திருநகரங்கண்ட படலம் தொடங்கி, உக்கிர குமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம் வரையுள்ள பதினொரு திருவிளையாடல்களும் பரஞ்சோதி மற்றும் நம்பி என இரு நூல்களிலும் ஒரே முறையில் அமைந்துள்ளன. மற்றவை வரிசை முறை மாறி அமைந்துள்ளன.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Aug-2023, 08:35:08 IST