under review

வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்

From Tamil Wiki

பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்களுள் ஒன்று திருவிளையாடல் புராணம். இது மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திரு ஆலவாய்க் காண்டம் என மூன்று காணடங்களைக் கொண்டது. மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் என 64 படலங்கள் இந்நூலில் அமைந்துள்ளன. மதுரைக் காண்டத்தின் இரண்டாவது படலம், வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்.

சிவனின் ஆடல்/ தொன்மம்

உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் பணிவுடன் இருக்க வேண்டும். செருக்கால், ஆணவத்துடன் நடந்துகொண்டால் என்ன ஆகும் என்பதை விளக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட ஆடலே வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்.

படலத்தின் விளக்கம்

வெள்ளையானை சாபம் தீர்த்த படலம், இந்திரன் பழிதீர்த்த படலத்தின் தொடர்ச்சி. இந்திரனின் வாகனமான ஐராவதம் ஆணவத்தால் துர்வாசரின் சாபத்தைப் பெற்றதையும், சிவனின் அருளால் அது நீங்கியதையும் இப்படலம் விளக்குகிறது.

கதைச் சுருக்கம்

இந்திரனின் தேவலோக வருகை

சிவபெருமானின் அருளால் சாபம் நீங்கப் பெற்ற இந்திரன், தேவலோகம் வந்தான். இந்திரனை தேவர்கள் துதித்து பல்வேறு பரிசுகளை வழங்கி வரவேற்றனர். இந்திரனின் வாகனமான ஐராவதமும் மகிழ்ச்சியுடன் தன் தலைவனை வரவேற்றது.

துர்வாசரின் பரிசு

காசி மாநகரில் துர்வாச மாமுனிவர் தன் பெயரால் லிங்கத்திருமேனியை நிறுவி அதனை தினந்தோறும் வழிபட்டு வந்தார். அன்றும் அவ்வாறே துர்வாசர் சிவபெருமானை மலர் தூவி வணங்கி வழிபட்டார். அவரது பக்திக்கு மகிழ்ந்த சிவபெருமான், தன் ஜடையில் இருந்த பொற்றாமரை ஒன்றைக் கீழே விழும்படி செய்தார். இறைவன் தந்த அந்தப் பிரசாதத்தை எடுத்து துர்வாச முனிவர் தன் கமண்டலத்தில் வைத்துக் கொண்டார்.

பின்னர் அதனை தேவர்களின் தலைவனான இந்திரனுக்குப் பரிசளிக்க எண்ணி தேவலோகம் விரைந்தார். துர்வாச முனிவர், சீற்றத்துக்குப் பெயர் பெற்றவர். அதீத சினத்தால் யார், எது என்றெல்லாம் பாராமல் சபித்து விடுவார்.

தேவேந்திரன், தனது வாகனமான ஐராவதத்தின் மீதேறி உலா வந்துகொண்டிருந்தான். தன் வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்கள் பெற்றும் இந்திரனின் அலட்சிய குணம் மட்டும் மாறவில்லை. வெண்மை நிறத்தில் இருந்த ஐராவதத்திற்குத் தன்னைக் குறித்தும், தனது நிறம் மற்றும் இந்திரனுக்கு வாகனமாக இருப்பது குறித்தும் மிகுந்த பெருமை இருந்தது. அது மகிழ்ச்சியுடனும், கர்வத்துடனும் தனது தலைவனைச் சுமந்துகொண்டு வந்தது.

இந்திரன் எதிரே வந்து கொண்டிருந்த துர்வாச முனிவர், அவன் நீடுழி வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் கமண்டலத்தில் இருந்த, சிவபெருமான் தனக்காக அளித்த பொற்றாமரையை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார்.

யானையின் ஆணவச் செயல்

இந்திரன் சற்றும் பணிவின்றி, அந்தத் தாமரையின் மதிப்பை அறியாது மிகவும் அலட்சியமாக அதனை வாங்கி, அதைத் தன் யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். வெள்ளை யானையோ, அதன் புனிதம் அறியாது அந்தப் பொற்றாமரை மலரைத் தன் தும்பிக்கையால் எடுத்துத் தன் கால்களின் கீழே போட்டு மிதித்தது.

துர்வாசரின் சாபம்

அதைக் கண்ட துர்வாச முனிவருக்கு மிகுந்த சீற்றம் உண்டானது. விழிகள் சிவந்த அவர், “இந்திரா, சிவபெருமானின் பிரசாதத்தை நீ அலட்சியம் செய்து விட்டாய்! அதன் மதிப்புத் தெரியாமல் இந்த யானையிடம் கொடுத்தாய். அதுவோ அந்த மலரின்புனிதம் அறியாமல் தன் காலில் போட்டு மிதித்து விட்டது. அதனால், தேவேந்திரனாகிய நீ பூலோகத்தில் பாண்டிய மன்னன் ஒருவனிடம் தோற்றுப் போவாய். அவனுடைய சக்கரப்படை உன் தலையைக் கொய்து விடும்” என்று சாபமிட்டார்.

பின் ஐராவதத்தை நோக்கி, “இந்திரன் உன் மீது வைத்த, இறைவனின் கருணையால் கிடைத்த தாமரை மலரை, அதன் பெருமை அறியாமல் உன் கால்களால் நசுக்கினாய். அதனால், உன் நான்கு கொம்புகளுடன் வெள்ளை நிறமும் நீங்கி, கருமை நிறம் கொண்ட காட்டு யானையாக மாறுவாய். தேவலோக யானையான நீ, பூலோகம் சென்று காட்டுக்குள் நூறாண்டு காலம் திரிவாய்” என்று சாபமிட்டார்.

சாபம் நீங்க இந்திரன், துர்வாச முனிவரை வேண்டுதல்

துர்வாச முனிவரின் சாபம் கேட்டு நடுநடுங்கிய இந்திரன் முனிவரின் கால்களில் விழுந்து கதறினான். தன் தவறுகளையும், யானையின் தவறையும் மன்னிக்கும்படி வேண்டினான். தேவர்கள் அனைவரும் துர்வாச முனிவரைப் பணிந்து வணங்கினர்.

துர்வாசர் அதுகண்டு சற்றே தன் சீற்றம் குறைந்தார். பின் இந்திரனிடம், “இந்திரா! கொடுத்த சாபத்தை திரும்பப் பெற இயலாது. ஆயினும், பாண்டிய மன்னனின் சக்ராயுதம் உன் தலையைக் கொய்ய வரும்போது, அது உன் கிரீடத்தை மட்டும் பறித்துச் செல்லும். தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும்” என்று ஆறுதல் கூறினார். பின் “ஆணவச்செருக்கினை உடைய வெள்ளை யானை, காட்டு யானையாகி நூறாண்டு கழிந்தபின் இறைவனின் கருணையால் மீண்டும் வெள்ளை யானையாக மாறும்” என்று கூறினார்.

யானையின் பூவுலக வாழ்க்கை

வெள்ளை யானை தன் ஆணவச் செயலுக்காகக் கண்ணீர் வடித்தது. பின்னர் அது பூலோகம் வந்து, காட்டு யானையாகிப் பல இடங்களிலும் சுற்றித் திரிந்தது. பல வனங்களில் அலைந்து திரிந்தது. இப்படியே நூறாண்டுகள் கடந்தன.

யானையின் சாபம் நீங்குதல்

ஒரு சமயம், வெள்ளை யானை, கடம்ப வனத்துக்குள் புகுந்தது. அங்கிருந்த சொக்கலிங்கத்துக்கு, பொற்றாமரைக் குளத்தில் இருந்து, தும்பிக்கையில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தது. தங்கத் தாமரைகளைப் பறித்து வந்து வழிபட்டது. சிவன் அதன் பூஜைக்கு இரங்கினார். அதன் முன் தோன்றினார். “ஐராவதமே! நீ செய்த சிவஅபச்சாரம் நீங்கியது. நீ இந்திரலோகம் திரும்பலாம்” என்று கூறி ஆசிர்வதித்தார்.

யானையின் வேண்டுதல்

ஐராவதம் சிவபெருமானிடம், “ஐயனே! இந்த வனத்தின் அழகில் நான் மெய்மறந்து விட்டேன். தங்களைப் பிரிய எனக்கு மனமில்லை. நான் இந்த வனத்திலேயே தங்கி விடுகிறேன்! தங்கள் விமானத்தைத் தாங்கும் யானைகளில் ஒன்றாக என்னை ஆட்கொள்ள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டது.

சிவபெருமான் அதனிடம், “ஐராவதமே! இந்திரன் எனது பக்தன். அவனைச் சுமப்பது என்னையே சுமப்பது போல்தான். நீ இந்திரலோகத்திற்குச் செல்” என்று ஆணையிட்டார். அதற்குச் சுயவடிவத்தையும் தந்தார்.

ஆனால், யானையோ அவ்விடம் விட்டு நீங்காமல், கடம்பவனத்தின் ஒரு பகுதியில் இருந்த லிங்கத்திற்குப் பூஜை செய்துகொண்டு அங்கேயே தங்கி விட்டது. வெள்ளை யானை வந்து தங்கிய அந்த இடம், நாளடைவில் ஐராவதநல்லூர் என்று அழைக்கப்பட்டது.

இந்திரனின் கோரிக்கை

இந்திரன், ஐராவதம் அங்கிருப்பது பற்றி அறிந்து, அதை அழைக்க அங்கு வந்தான். சிவபெருமானிடம் யானையின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தான் எழுப்பிய விமானம் தன் பெயரால் இந்திர விமானம் என அழைக்கப்பட வேண்டும் என்றும், வெள்ளை யானை தன்னைத் தாங்குவது போல், அந்த விமானத்தையும் ஐராவதமே எட்டு வடிவங்களில் தாங்குவது போன்ற தோற்றம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதன்படியே, சிவபெருமானும் அதற்கு உத்தரவளித்தார்.

சாபம் நீங்கிய ஐராவத யானை தேவலோகம் திரும்பி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது.

பாடல் நடை

துர்வாச முனிவருக்குச் சிவபெருமான் பொற்றாமரை மலரை அளித்தது

இன்புற் றருச்சனைசெய் தேத்துவா னவ்வேலை
அன்புக் கெளிய னருளாற் றிருமுடிமேன்
மின்பொற் கடிக்கமலப் போதொன்று வீழ்த்திடலுந்
தன்பொற் கரகமலப் போதலர்த்தித் தாங்கினான்

யானையின் ஆணவச் செயல்

கீறிக் கிடந்த மதியனைய கிம்புரிக்கோட்
டூறிக் கடங்கவிழ்க்கு மால்யானை யுச்சியின்மேல்
நாறிக் கிடந்த நறுமலரை வீழ்த்தியுரற்
சீறிக் கிடந்தநெடுந் தாளாற் சிதைத்தன்றே

துர்வாச முனிவரின் சாபம்

சேட்டானை வானவநின் சென்னி செழியரிலோர்
வாட்டானை வீரன் வளையாற் சிதறுகநின்
கோட்டான நாற்கோட்டு வெண்ணிறத்த குஞ்சரமுங்
காட்டானை யாகவென விட்டான் கடுஞ்சாபம்

யானையின் சிவ வழிபாடு

தூம்புடைக் கையான் மொண்டு மஞ்சனத் தூநீ ராட்டித்
தேம்புடை யொழுகப் பள்ளித் தாமமுந் தெரிந்து சாத்திப்
பாம்புடைத் தாய வேணிப் பரனையர்ச் சக்க வுள்ளத்
தாம்புடை யறிந்த வெந்தை யானையை நோக்கிக் கூறும்

யானை சாபம் நீங்கி தேவலோகம் அடைந்தது

மனத்தினுங் கடிய தூதரை விடுப்ப
  வானடைந் திறைவனை வணங்கிப்
புனத்தினுங் கடிய கல்லினும் பன்னாட்
  புன்கணோ யுறவரு சாபங்
கனத்தினுங் கரிய கண்டனைக் கண்டு
  களைந்ததுங் கிளந்துதிக் கயத்தின்
இனத்தினுங் கழிந்த தெய்வத வேழ
  மினிதுவீற் றிருந்தது மாதோ

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Nov-2023, 09:51:19 IST