under review

வாகைத் திணை

From Tamil Wiki

வாகைத்திணை வெற்றியைக் குறிக்கும். போர் நிகழ்வுகளை அடுத்து வெற்றியைக் கொண்டாடுவதைக் கூறுவது வாகைப்படலம். வெற்றி பெற்ற மன்னனும், வீரர்களும் வாகை மாலை சூடிக் கொண்டாடுவார்கள் என புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. வாகைப்படலம், அரசனது வெற்றி பற்றி (போர் வெற்றி) மட்டுமன்றிப் பிறரது வெற்றி குறித்தும் பேசுகிறது.

விளக்கம்

போர் நிகழ்த்துகையில் வெட்சி முதல் தும்பை வரையிலான பூமாலைகளை அணிந்து போர் செய்வதைப் போல, அரசர் வாகை மாலை சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணை. இத்திணையில் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், பொருநர், அறிவர், தாபதர், அவையர், கணிவர், மறமகளிர், வீரர்கள் சான்றோர் முதலானோர் உறழ்ந்து பெறும் வெற்றியும் இயல்பாக அடையும் வெற்றியும் விளக்கப்பட்டுள்ளன. அரசரது கடமையும் செயல்களும் செங்கோன்மையும் அவனது முரசு, குடை ஆகியவற்றின் சிறப்பும் கடமை முடித்து உறக்கம் கொள்வதும் விளக்கப்பட்டுள்ளன. அந்தணருடைய தூதுச் செயலும், வணிகருடைய கொடைப் பண்பும், வேளாளருடைய ஒப்புரவும், அறிவருடைய முக்கால உணர்வும், தாபதரின் செயல்களும், சான்றோரின் நடுநிலை தவறாத தன்மையும், கணிவரின் ஆராய்ச்சித் திறனும், மறமகளிரின் வீரச்சிறப்பும், மறவர்களின் செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் தன்மையும் விளக்கப்பட்டுள்ளன. இறுதியாகப் புவி மீதுள்ள பற்றை ஒழித்து மெய்ம்மையை விரும்புதலும், உலகின் துயரை எண்ணிப் பற்று நீங்குதலும் உண்மையான வெற்றிகள் என வாகைப்படலம் உணர்த்துகிறது.

வாகைப் படலம் (புறப்பொருள் வெண்பா மாலை)

வாகைப் படலத்திற்குரிய விளக்கம் முதல் கொளுவில் தரப்பட்டுள்ளது.

இலைபுனை வாகை சூடி இகல்மலைந்(து)அலைகடல் தானை அரசுஅட்டு ஆர்த்தன்று - (கொளு-1)

(இகல் = பகை, அட்டு = அழித்து) 'கடல் போன்ற பெரிய படையையுடைய பகைஅரசனை அழித்துப் போரில் வெற்றி பெற்ற அரசன், இலைகள் சேர்த்துத் தொடுத்த வாகை மாலையைச் சூடி ஆரவாரித்தல்' என்பது இதன் பொருள். பகையரசனைக் கொன்று வாகை சூடி ஆரவார்த்த வெற்றியை அறிவுடைய புலவர் பலரும் போற்றினார் என வெண்பா விளக்குகிறது. இதனை,

சூடினான் வாகைச் சுடர்த்தெரியல் - சூடுதலும்பாடினார் வெல்புகழைப் பல்புலவர்...

என்கிறது வெண்பா.

துறைகள்

பிறருடன் போட்டியிட்டுப் பெறும் வெற்றியை வாகை என்று கூறுவதும் போட்டியின்றி இயல்பாக ஒழுக்கத்தால் பெற்ற மேம்பாடான வெற்றியை முல்லை என்று கூறுவதும் மரபு. எடுத்துக் காட்டாக அரச வாகை என்பது உறழ்ந்து பெறும் வெற்றியையும் அரச முல்லை என்பது இயல்பாகப் பெற்ற மேம்பாட்டையும் குறிக்கின்றன.

உறழ்ச்சி வெற்றி-1
  • மறக்களவழி- போர்க்களத்தைச் சிறப்பித்தல்
  • களவேள்வி- போர்க்களத்தில் வேள்வி செய்தல் என்பது இதன் பொருள் (வெற்றி பெற்ற மன்னன் பேய்களுக்கு ஊன் விருந்தளித்தல்)
  • முன்தேர்க் குரவை- வென்ற அரசனது தேரின் முன் குரவையாடுதல்
  • பின்தேர்க் குரவை - வென்ற அரசனின் தேரின் பின் குரவையாடுதல்
உறழ்ச்சி வெற்றி-2

பார்ப்பனர், வணிகர், வேளாளர், பொருநர் (ஒப்பு நோக்குபவர்), அறிவர், தாபதர் ஆகியோரது வெற்றிச் சிறப்புகள் குறித்து புறப்பொருள் வெண்பா மாலை குறிப்பிடும் துறைகள்

பாசறை இருப்பு

போர் மேற்கொண்டு போர்க்களத்திற்குச் செல்லும் அரசன் கூதிர்காலத்திலும், வாடைக் காலத்திலும் தலைவிமேல் காதல் இன்றிப் (போகத்தில் பற்று இல்லாமல்) போரின் மேல் காதல் கொண்டு பாசறையில் இருத்தல் ஒருவகை வெற்றியாகும். பிரிதல் வன்மை பற்றி இது வெற்றியாயிற்று என்பர்.

இயல்பு வெற்றி

போட்டியிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாட்டையும் வெற்றி எனலாம். இவ்வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன் முதலானோர் பெறும் மேம்பாட்டினை இப்பகுதியிலுள்ள துறைகள் காட்டுகின்றன.

பிற

தொல்காப்பியர் சுட்டாத வாகை அரவம், முரச வாகை, களவேள்வி, அரச முல்லை, பார்ப்பன முல்லை, கணிவன் முல்லை, மூதின் முல்லை, ஏறாண் முல்லை, காவல் முல்லை, பேராண் முல்லை, மற முல்லை, குடை முல்லை, கண்படை நிலை, கிணை நிலை என்னுமிவை புறப்பொருள் வெண்பா மாலையில் மிகுதியாகக் கூறப்பட்டுள்ளமை வாகைத் திணை வளர்ச்சியைக் காட்டுகிறது.

உசாத்துணை

வாகைத் திணை-தமிழ் இணைய கல்விக்கழகப் பாடம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 18:13:35 IST