under review

மறக்களவழி

From Tamil Wiki

மறக்களவழி வாகைத் திணையின் துறைகளின் ஒன்று. மறக்களவழி என்றால் போர்க்களத்தைச் சிறப்பித்தல் என்பது பொருள். வெற்றி பெற்ற அரசனின் போர்க்களத்தைப் பாடுவது மறக்களவழி.

விளக்கம்

வாகைத் திணை வெற்றியைச் சிறப்பிப்பது. வாகைத் திணையின் துறைகளில் ஒன்றான மறக்களவழி போர்க்களத்தில் நிகழ்பவற்றை, அதன் காட்சிகளைக் கூறி அரசனைச் சிறப்பிப்பது. களவழி என்றால் களத்தில் நிகழும் செயல்கள் என்று பொருள். களவழி நாற்பது என்னும் இலக்கியம் இத்தன்மையில் அமைந்தது.

களம் என்பது ஏர்க்களத்தையும்(வயல்) குறிக்கும். புறப்பொருள் வெண்பாமாலை போர்க்களத்தை ஏர்க்களம் என்று உருவகித்து அரசனின் வெற்றியைக் கூறுதல், முழவு போன்று திரண்ட தோளினை உடைய அரசனை, உழும் வேளாளனாகப் புகழ்ந்து பேசுதல் என இலக்கணம் வகுக்கிறது.

கொளு

முழவு உறழ் திணிதோளானை
உழவனாக உரைமலிந்தன்று - (கொளு-5)

வெண்பா,அரசனையும் உழவனையும் ஒப்பிட்டுச் சிறப்பிக்கிறது.

அஞ்சுவரு தானை அமர்என்னும் நீள்வயலுள்
வெஞ்சினம் வித்திப் புகழ்விளைக்கும்-செஞ்சுடர்வேல்
பைங்கண் பணைத்தாள் பகட்டுழவன் நல்கலான்
எங்கட்கு அடையா இடர்.

எடுத்துக்காட்டு

புறநானூறு 370

...............................................................................................................ளி,
நாரும் போழும் செய்து உண்டு, ஒராங்குப்
பசி தினத் திரங்கிய இரு பேர் ஒக்கற்கு
ஆர் பதம் கண்ணென மாதிரம் துழைஇ,

வேர் உழந்து உலறி, மருங்கு செத்து ஒழிய வந்து,
அத்தக் குடிஞைத் துடி மருள் தீம் குரல்,
உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின்
பெடை பயிர் குரலோடு, இசைக்கும் ஆங்கண்,
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை,

வரி மரல் திரங்கிய கானம் பிற்பட,
பழுமரம் உள்ளிய பறவை போல,
ஒண் படை மாரி வீழ் கனி பெய்தென,
துவைத்து எழு குருதி நிலமிசைப் பரப்ப,
விளைந்த செழுங் குரல் அரிந்து, கால் குவித்து,

படு பிணப் பல் போர்பு அழிய வாங்கி,
எருது களிறு ஆக, வாள் மடல் ஓச்சி,
அதரி திரித்த ஆள் உகு கடாவின்,
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி,
'வெந் திறல் வியன் களம் பொலிக!' என்று ஏத்தி,

இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின்
வரை மருள் முகவைக்கு வந்தனென்; பெரும!
வடி நவில் எஃகம் பாய்ந்தென, கிடந்த
தொடியுடைத் தடக் கை ஓச்சி, வெருவார்
இனத் தடி விராய வரிக் குடர் அடைச்சி,

அழு குரல் பேய்மகள் அயர, கழுகொடு
செஞ் செவி எருவை திரிதரும்,
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே!

ஓளி பொருந்திய படைக் கருவிகள், பெருமழையில் விழும் கனிகள் போல், பகைவரின் தலைகளை வெட்டி வீழ்த்தியதால், வெள்ளம்போல் ஒலியுடன் குருதி ஒடியது. விளைந்த செழுமையான கதிர்களைப் போன்ற பகைவரின் கழுத்தை அறுத்து, காலோடு சேர்த்துக் குவித்து, இறந்த பிணங்களாகிய பல குவியல்கள் அழியும்படி வளைத்து, யானையை எருதாகவும், வாளைத் தார்க்கோலாகவும், கொண்டு செலுத்தி, போரடிக்கும் நெற்களத்தைப் போலப் பகைவர் வீழந்து கிடக்கும் பெரிய போர்க்களம்- என்று போர்க்களத்தைப் பாடி அதை வயலாக உருவகித்ததால் இப்பாடல் மறக்களவழி மற்றும் ஏர்க்கள உருவகம் என்ற துறையச் சார்ந்தது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 16:12:06 IST