under review

பார்ப்பன முல்லை

From Tamil Wiki

பார்ப்பன முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று.போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன் முதலானோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது. அந்தணர்களின் சிறப்பைக் கூறுவது அரச முல்லை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மணம் மிக்க மாலையையும் வீரக்கழலையும் அணிந்த அரசர்கள் இருவரின் பகையை ஒழித்து அவர்கள் நண்பராகும் வண்ணம் நடுவுநிலையில் சமாதானம் பேசும் பார்ப்பனது இயல்பைக் கூறுவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

கான்மலியும் நறும்தெரியல் கழல்வேந்தர் இகல் அவிக்கும்
நான்மறையோன் நலம்பெருகு நடுவுநிலை உரைத்தன்று (கொளு 8.18)

வெண்பா

ஒல்என்நீர் ஞாலத்து உணர்வோ விழுமிதே
நல்லிசை முச்செந்தீ நால்மறையோன் - செல்லவும்
வென்றன்றி மீளா விறல் வேந்தர் வெம்பகை
என்றன்றி மீண்டது இலர் (172)

பொருள்: நல்ல புகழும் முத்தீ வளர்த்தலும் நான்மறை ஓதலும் உடைய அந்தணன், சந்து(சமாதானம்) செய்விக்கச் சென்ற அளவில், படையெடுத்தால் வெற்றி பெறாமல் நாடு திரும்பாத கொள்கையை உடைய வேந்தர் இருவரும் போரினை நிறுத்தித் தத்தம் நாடுகளுக்குத் திரும்பினர் என்று கண்டோர் கூறும் வகையில் சந்து செய்விக்க வேண்டும்.

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jul-2025, 10:47:09 IST