வாகை அரவம்
வாகை அரவம் வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. வெற்றி பெற்ற மன்னனைச் சார்ந்தோர் வாகை மாலை சூடி ஆரவாரித்தலைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வெண்ணிற வாகை மாலையையும் வலிய கழலையும் சிவந்த கச்சினையும் அழகுற அணிதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
வெண்கண்ணியும் கருங்கழலும்
செங்கச்சும் தகை புனைந்தன்று(கொளு 8.2)
வெண்பா
அனைய அமருள் அயில்போழ் விழுப்புண்
இனைய இனிக் கவலை இல்லை - புனைக
அழலோடு இமைக்கும் அணங்குடை வாள்மைந்தர்
கழலொடு பூங்கண்ணிக் கச்சு (156)
பொருள் : போரினிடத்தே நம் மறவர்கள் பெற்ற வேல்பிளந்த விழுப்புண்கள் இத்தகைய ஆயின; இனிமேல் நமக்கொரு கவலையும் இல்லை; அதனால், நெருப்போடு இமைக்கும், பகைவர்க்கு துன்பம் செய்தலையுடைய வாளாற் சிறந்த மறவர்கள் எல்லாரும், வீரக்கழலோடே பொலிந்த வாகை மாலையினையும் கச்சினையும் இனிப் புனைவாராக!
உசாத்துணை
வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Jul-2025, 18:59:38 IST