கூதிர்ப் பாசறை
கூதிர்ப் பாசறை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. போர் மேற்கொண்டு போர்க்களத்திற்குச் செல்லும் அரசன் கூதிர்காலத்திலும், வாடைக் காலத்திலும் தலைவிமேல் காதல் இன்றிப் (போகத்தில் பற்று இல்லாமல்) போரின் மேல் காதல் கொண்டு பாசறையில் இருத்தலும் ஒருவகை வெற்றியாகக் கருதப்படுகிறது.
கூதிர்காலத்தில் அரசன் பாசறையில் இருத்தலைக் கூறுவது கூதிர்ப் பாசறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கூற்றை ஒத்த அரசனின் அகன்ற பாசறையில், கூதிர்காலத்து மேகம் மழைத்துளியைப் பெய்யப் பிரிவாற்றாமை மேன்மேல் பெருகினாலும் கூரிய வேலைய தலைவன் தலைவியிடம் கருணை கொள்ளாது கடமை செய்தது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
கூற்று அனையான் வியன்கட்டூர்க் கூதிர்வான் துளிவழங்க
ஆற்றாமை நனிபெருகவும் அயில் வேலோன் அளிதுறந்தன்று(கொளு 8.15)
வெண்பா
கவலை மறுகில் கடுங்கண் மறவர்
உவலைசெய் கூரை ஒடுங்கத் - துவலைசெய்
கூதிர் நலிபவும் உள்ளான் கொடித்தேரான்
முதின் மடவாள் முயக்கு (169)
பொருள்: வீரர்கள் சிறுதுளியைப் பெய்யும் கூதிர்காலம் வருத்த, பாசறையில் தழையால் செய்த குடியிருப்பில் ஒடுங்குவர். கொடி ஆடுகின்ற தேரினையுடைய அரசர்கள் அத்தகைய காலத்தில் தனது இல்லத்தில் இருக்கும் தன் மனைவியைத் தழுவுதலைக் கருதாமல் இருக்கிறான். போரை கருதிப் பாசறையில் இருக்கிறான்
உசாத்துணை
வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Jul-2025, 10:34:57 IST