under review

காப்பியங்கள்

From Tamil Wiki

வடமொழியில் 'காவ்யா’ என்றால் ’பாடல்’ என்பது பொருள். தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியம், காப்பியக் குடி, வெள்ளூர்த் தொல்காப்பியர், காப்பியஞ் சேந்தனார், காப்பியாற்றுக் காப்பியனார் முதலான பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால், காப்பியத்திற்கான இலக்கணங்கள் எதுவும் சங்க நூலான தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படவில்லை. பொது சகாப்தம் 12-ம் நூற்றாண்டில் தோன்றிய தண்டியலங்காரமே காப்பியத்திற்குரிய இலக்கணத்தைக் கூறுகின்றது.

தண்டி கூறும் காப்பிய இலக்கணம்

பெருங்காப்பிய நிலை பேசுங்காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றில் ஒன்று
ஏற்புடைத்தாகி முன்வர இயன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்னிகர் இல்லாத் தலைவனை உடைத்தாய்...

- என்று குறிப்பிடுகிறது தண்டி. பன்னிரு பாட்டியல், நவநீதப் பாட்டியல், வச்சணந்தி மாலை, மாறனலங்காரம் முதலான பாட்டியல் நூல்களும் காப்பிய இலக்கணம் பற்றிக் கூறியுள்ளன. நல்வினை, தீவினைப் பலன்களை உலக வாழ்க்கையில் அனுபவித்து, நல்வினையாற்றி, இறுதியில் இறவா இன்பமாகிய இறைநிலை எய்துதலைப் பற்றிக் கூறுகின்றவையே பொதுவாகக் காப்பியங்கள் எனப்படுகின்றன.

பெருங்காப்பியங்கள்

பெருங்காப்பியங்கள் என்பவை தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனைப் பற்றிய கதையாக அமைய வேண்டும் என்று தண்டியலங்காரம் கூறுகிறது.

சிறு காப்பியங்கள்

சிறு காப்பியங்களுக்கான தனி இலக்கணம் மேற்கூறிய இலக்கண நூல்களில் இடம் பெறவில்லை. பெருங்காப்பியம் தரும் நாற்பொருளில் சில குறைந்து வருவது சிறு காப்பியம் எனப்படுகிறது. பெருங்காப்பியச் சுருக்கமும் சிறுகாப்பியமாகவே கருதப்படுகிறது. பெருங்காப்பியங்களுக்கு உள்ள உயர்ந்த, பரந்துபட்ட, நாடு தழுவிய ஓர் உன்னதத் தன்மை சிறுகாப்பியங்களுக்கு இல்லை.

தமிழில் காப்பியங்கள்

தமிழில் காப்பியப் படைப்பு, இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கியது எனலாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன பெருங்காப்பியங்கள் என்றும்; உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி ஆகியன சிறு காப்பியங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும், சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும் தமிழில் தோன்றிய முதல் காப்பியங்களாகப் கருதப்படுகின்றன

காப்பியங்களின் பட்டியல்

காப்பியத்தின் பெயர் ஆசிரியர் சமயம்
பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் சமணம்
மணிமேகலை சீத்தலைச் சாத்தனார் பௌத்தம்
சீவகசிந்தாமணி திருத்தக்கதேவர் சமணம்
வளையாபதி ஆசிரியர் பெயர் தெரியவில்லை சமணம்
குண்டலகேசி நாதகுத்தனார் பௌத்தம்
சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம் கொங்குவேளிர் சமணம்
நாககுமார காவியம் ஆசிரியர் பெயர் தெரியவில்லை சமணம்
யசோதர காவியம் ஆசிரியர் பெயர் தெரியவில்லை சமணம்
நீலகேசி ஆசிரியர் பெயர் தெரியவில்லை சமணம்
சூளாமணி தோலாமொழித்தேவர் சமணம்

பிற காப்பிய நூல்கள்

காப்பியம் என்ற பெயரில் இல்லாவிட்டாலும் கம்ப ராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம், திருவிளையாடற்புராணம், பெரிய புராணம், சீறாப்புராணம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம் போன்றவையும் காப்பியத்திற்கு இணையாகக் கருதப்படுகின்றன. புராண, இதிகாசங்களிலிருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, அதனை விரிவாகக் காப்பிய வடிவில் தருவதை 'கண்ட காவியம்’ என்று வடமொழியில் குறிப்பிடுவர். தமிழில், அதிவீரராம பாண்டியனின் 'நைடதம்’, புகழேந்தியின் 'நளவெண்பா’, வல்லூர் தேவராசப் பிள்ளையின் 'குசேலோபாக்கியானம்’ , நல்லூர் வீரைக் கவிராயரின் 'அரிச்சந்திர புராணம்’ போன்றவை அதற்கு உதாரணங்களாகும்.

உசாத்துணை


✅Finalised Page