under review

காதல் (பல்சுவை இதழ்)

From Tamil Wiki
காதல் - பல்சுவை இதழ்


காதல் (1947), தமிழகத்திலிருந்து வெளிவந்த இதழ். இதன் ஆசிரியர் அரு. ராமநாதன். காதல் குறித்த செய்திகளை, கட்டுரைகளை, உரையாடல்களைத் தாங்கி வெளிவந்த இவ்விதழ், அரு. ராமநாதனின் மறைவுக்குப் பின்னும் (1974) சில ஆண்டுகள் வெளிவந்து, 1980-ல் நின்று போனது,

வெளியீடு

காதல் குறித்த செய்திகளை, கட்டுரைகளை, உரையாடல்களை நிகழ்த்த வேண்டும்; காதலர்களுக்கு வழிகாட்டும், வழிநடத்தும் இதழாக ஓர் இதழை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில், நவம்பர், 1947-ல், திருச்சியில், அரு. ராமநாதன் காதல் இதழைத் தோற்றுவித்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விதழ் வெளிவந்தது.

முதல் இதழின் முகப்பில்,

“காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவு
பட்டதே இன்பம்”

- என்னும் பாரதிதாசனின் கவிதை வரிகள் இடம் பெற்றிருந்தன. 80 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழின் விலை, உள்நாடு மற்றும் இலங்கைக்கு 8 அணா. வெளிநாடுகளுக்கு 10 அணா. காதலின் முதல் இதழ் தொடங்கி அதன் இறுதி இதழ் வரை பெரும்பாலும் அதன் முகப்புப் படத்தில் காதலர்கள் இருவரது ஓவியங்களே இடம் பெற்றன. அதில் காந்தி மற்றும் கஸ்தூரிபாயின் ஒளிப்படங்களும் அடக்கம். ஒரு சில இதழ்களில் மட்டும் காதலர்களுடன் வேறு சிலரும் இடம் பெற்றனர்.

இதழின் நோக்கம்

காதல் இதழின் நோக்கம் குறித்து அரு. ராமநாதன், காதல் இதழின் முதல் இதழில், ‘எங்கள் நோக்கம்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். அதில், “பாலர்களுக்கென்றும், பக்தர்களுக்கென்றும், ஜோசியத்திற்கென்றும், சினிமாவுக்கென்றும் பத்திரிகை உண்டு. போட்டிப் புதிர்களை விடுவிப்பதற்கென்றும் பத்திரிகை உண்டு. ஆனால், காதலர்களிடையே ஏற்படும் புதிர்களை விடுவிக்கப் பத்திரிகை இல்லை. ஆண், பெண் தூய்மையாக, மனமொத்து வாழ, வழிகாட்ட காதலர்களுக்கென்று ஒரு தனி பத்திரிகை தமிழ்நாட்டில் இதுவரை தோன்றவில்லை. அந்தக் குறையை பூர்த்தி செய்யும் ஆவலுடன் முன் வந்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

உள்ளடக்கம்

காதல் இதழில், சமூகக் கதைகள், வரலாற்றுக் கதைகள், நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள், பொன்மொழிகள், கேலிச்சித்திரங்கள் போன்றவை இடம் பெற்றன. காதலின் முதல் இதழில், ‘பாரதியாரின் காதலின் புகழ்’, ‘ஷெல்லியின் காதல் கனவு’ எனும் இரு கவிதைகளும், ‘முதற் காதல்’ என்னும் அரு. ராமநாதனின் சிறுகதையும், ‘காதலும் கல்யாணமும்’, ‘காதல் கதை எழுதுவது எப்படி’, ‘காதல், காதலி’ என்ற தலைப்பில் கட்டுரைகளும் கொண்டதாக, பலவகைகளிலும் காதலைப் பற்றிய செய்திகள் அடங்கியதாக வெளிவந்தது. சினிமா விமர்சனத்தில் 'ராமராஜ்யம்' பட விமர்சனம் இடம் இடம்பெற்றது.

காதல் தொடர்பான கதைகள், கட்டுரைகள் இதழ் தோறும் வெளிவந்தன. காதல் என்பது குறித்து கட்டுரை ஒன்றில் அரு. ராமநாதன், “இன்ப நிலவில், இனிய வேளையில், இளம் உள்ளங்கள் கண்ணீர் சிந்துகின்றன. சிலர் வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகள் இல்லாமல் தவிக்கிறார்கள். சிலர் வாழ்க்கை வசதிகள் இருந்தும் வாழத் தெரியாமல் தவிக்கிறார்கள். காரணம் காதலால் ஏற்படும் சிக்கல்தான். அச்சிக்கல்களை அகற்றக் ’காதல்’ முயலும். அன்பர்களும் அறிஞர்களும் துணை புரிவோர்களாக” என்று குறிப்பிட்டிருந்தார். காதலுக்கு முக்கியத்துவம் அளித்தே காதல் இதழின் பல படைப்புகள் வெளியாகின.

‘உலகிலுள்ள பல நாட்டு அறிஞர்களும் காதல் பற்றி உயர்வாக எழுதியிருப்பவை எல்லாம் பொன்மொழிகளாகத் தொகுக்கப்பட்டு 'முத்துக் குவியல்' என்ற பெயரில் மாதம்தோறும் வெளியாகின. சிறுகதைகளும், கவிதைகளும் காதலை மையமாகக் கொண்டே அமைந்தன. 'வெளிநாட்டு காதல் கதைகள்' என்ற தலைப்பின் கீழ் அயல்நாட்டு எழுத்தாளர்களின் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின. ‘அந்தரங்கக் கடிதங்கள்’, ‘என் வாழ்க்கையில் நடந்தது’ போன்ற தொடர்கள் வெளிவந்தன.

காதல் மூன்றாவது இதழில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை காதலுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்யுள் இடம் பெற்றது.

சுந்தரனுக்காக முன்னம் தூது வழி நடந்த
சந்திரசேகரன் செய் தண்ணருளால் - வந்துநம்
கண்ணெதிரில் நின்று களிப்பூட்டும் காதலிது
மண்ணுலகில் வாழ்க வளர்ந்து.

மருத்துவ ஆலோசனைகளாக மருத்துவர்களின் கட்டுரைகள், ‘கண் நோயும், தாம்பத்ய உறவும்’, ‘குழந்தை வளர்ப்பு’, ‘வெள்ளை நோயும், தாம்பத்ய உறவும்’ போன்ற தலைப்புகளில் வெளிவந்தன. 'வெளிநாடுகளில் காதல்' என்ற தலைப்பில் சோம.லெ கட்டுரை எழுதினார். தஞ்சை ராமையா தாஸ், திருக்குறள் காமத்துப் பாலில் உள்ள குறள்களை அடிப்படையாக வைத்து எழுதிய கீர்த்தனைகள் சில காதல் இதழில் இடம்பெற்றன. ‘காளிதாசன் தரும் காதல் காட்சிகள்’ என்ற தலைப்பில் சமஸ்கிருதப் பேராசிரியர் ந. சாம்பசிவ சாஸ்திரிகள் கட்டுரை ஒன்றை எழுதினார். அரு. ராமநாதன் தனது இயற்பெயரிலும் ரதிப்பிரியா, கு.ந. ராமையா என்ற புனை பெயரிலும் எழுதினார். நாட்டு நடப்புகளைக் குறித்து 'ஆசிரியர் பேச்சு’ என்ற தலைப்பில் தனது கருத்துக்களை வெளியிட்டார். ’நாயனம் சௌந்தர வடிவு’, ‘வீரபாண்டியன் மனைவி’ போன்ற தொடர்களையும், சிறுகதை, கட்டுரை, நாவல் தொடர்களையும் எழுதினார்.

’குடும்பத்தில் நடப்பவை' என்னும் தலைப்பின் கீழ் கணவனும் மனைவியும் உரையாடுவது போன்ற ஒரு பகுதி இதழின் இறுதிக் காலம் வரை இடம் பெற்றது. இல்லற வாழ்க்கையின் அந்தரங்கமான விஷயங்கள் அனைத்தும் காதல் இதழில் விவாதிக்கப்பட்டன. காதல் ஆண்டுதோறும் பொங்கலைச் சிறப்பிக்கும் வகையில் ‘வஸந்த மலர்’ என்ற தலைப்பில் சிறப்பு மலர்களை வெளியிட்டது.

பங்களிப்பாளர்கள்

இதழ் நிறுத்தம்

1974-ல், அரு. ராமநாதன் மறைந்த பின்பும் காதல் இதழ் அவரது வாரிசுகளால் நடத்தப்பட்டது. 1980-ல் நின்று போனது.

மதிப்பீடு

”ஒவ்வொரு ஆத்மாவின் பாதியும் தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட மற்றொரு சரிபாதியைத் தேடி யுகங்கள்தோறும் அலைகிறது. தனக்குப் பொருத்தமான அந்தச் சரிபாதியைக் கண்டதும் அப்படியே இணை சேர வேண்டும் என்று தவிக்கிறது. அந்த உன்னதமான உணர்ச்சியின் தவிப்புதான் ‘காதல்’” என்பது அரு. ராமநாதனின் கருத்து. காதலை மையப்படுத்தியே ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க முழுக்கக் ‘காதல்’ இதழ் வெளிவந்தது. காதலர்களுக்கு வழிகாட்டும், வழிநடத்தும் இதழாகக் ‘காதல்’ வெளியானது. காதல் இதழின் தோற்றமும், அதில் இடம் பெற்ற உள்ளடக்கங்களும், இதழியல் உலகில் ஒரு புதுமையான முயற்சியாக மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page