under review

காந்தி

From Tamil Wiki
காந்தி
காந்தி

காந்தி (மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி) (அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948) சிந்தனையாளர், சேவையாளர், வழக்கறிஞர். ஆங்கிலேய அரசுக்கு எதிராக தென்னாப்பிரிக்க மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தைத் துவக்கியவர். இந்திய சுதந்திரப்போராட்டம் காந்தியின் வருகைக்குப் பின் தீவிரமானது. சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் ஆகிய அகிம்சை முறைகளை இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வெற்றிகரமான உத்திகளாக வளர்த்தெடுத்தார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கிராம சுயராஜ்யம், எளிய வாழ்வு, இயற்கையுடன் இயைந்த வாழ்வு, தற்சார்பு ஆகியவற்றை தன் வாழ்நாளில் பரிசோதனை முறையில் கடைபிடித்து இந்தியாவிற்கான லட்சியக் கனவை உருவாக்கியவர். அவரின் சிந்தனைகளைத் தன் வாழ்வியல் முறையாகக் கொண்டவர்கள் காந்தியவாதிகள் என்றழைக்கப்பட்டனர்.

பிறப்பு, கல்வி

காந்தியின் இயற்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி, புத்லிபாய் இணையருக்கு மகனாக அக்டோபர் 2, 1869-ல் பிறந்தார். போர்பந்தரில் ஆரம்பக்கல்வி பயின்றார். தந்தையில் வேலை காரணமாக குடும்பம் ராஜ்கோட்டிற்கு இடம்பெயர்ந்தது. அங்கு ஆல்ஃப்ரட் ஆண்கள் உயர் நிலைப்பள்ளியில் காந்தி தன் பள்ளிக்கல்வியைத் தொடர்ந்தார். சுதந்திரத்திற்குப்பின் இப்பள்ளி காந்தியின் பெயரால் அழைக்கப்பட்டது. 2017-ல் இப்பள்ளி மூடப்பட்டு அருங்காட்சியகமாக ஆக்கப்பட்டது. தன் பதினாறாவது வயதில் தந்தையை இழந்தார். சமல்தாஸ் கலைக்கல்லூரியில் இணைந்து படித்தார். ஆனால் கல்லூரியைத் தொடர முடியாமல் இடைநின்று போர்பந்தருக்குத் திரும்பினார். தனது பதினெட்டாம் வயதில் பள்ளிப்படிப்பை முடித்தார். லண்டன் யுனிவர்சிட்டி காலேஜில் சட்டம் பயில இங்கிலாந்து சென்றார். பாரிஸ்டர் பட்டம் பெற்றார். காந்தி இந்தியா வருவதற்குள் அவரது அன்னை இறந்தார்.

காந்தி, கஸ்தூரி பாய்

தனிவாழ்க்கை

காந்தி பதின்மூன்று வயதில் கஸ்தூரிபாயை மணந்தார். மகன்கள் ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ். பிப்ரவரி 22, 1944-ல் கஸ்தூரிபாய் மாரடைப்பால் காலமானார்.

வழக்கறிஞர் பணி

பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்றார். அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணிகளில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் வேலையை இழந்தார். ஏப்ரல் 1893 -ல் தாதா அப்துல்லாஹ் கம்பெனி எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தென்னாப்பிரிக்காவிற்கு வழக்கறிஞர் பணிக்காகச் சென்றார்.

தென்னாப்பிரிக்காவில் காந்தி

காந்தி தென் ஆப்பிரிக்காவில் அஹிம்சை போராளிகளுடன்
நேடால் இந்தியன் காங்கிரஸ் (NIA)

காந்தி தாதா அப்துல்லா ஜாவேரி வழக்கு என்று பெயரிடப்பட்ட வழக்கில் வாதாடுவதற்காக மே 24, 1893-ல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரத்திற்குச் சென்றார். அந்த வழக்கில் வாதாடுவதற்காக ப்ரிடொரியா செல்லும் வழியில் ரயிலில் நிறப்பாகுபாடு காரணமாக முதல் வகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டார். வணிகர்களின் வழக்குகளைத் தாண்டி எளிய தொழிலாளர்களின் வழக்குகளுக்கும் காந்தி வாதாடினார். காந்தியின் ஆங்கில அறிவும், நேடாலில் இருந்த ஒரே இந்தியர் என்பதும் கரணமாக, வேலைகள் அதிகம் இருந்தன. 1899-ல் ரஹிம் கரிம்கான் வரும் வரை இந்த பணிச்சுமை நீடித்தது.

1894-ல் நேடால் இந்தியன் காங்கிரஸை நிறுவினார். அதன் முதல் தலைவராக ஆனார். இந்தியர்களின் வாக்குரிமைக்காகப் போராடினார். 1896-ல் இந்தியா திரும்பினார். நேடால் இந்தியன் காங்கிரஸின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் தென்னாப்பிரிக்காவிற்கு குடும்பத்துடன் வந்தார். இந்தியர்களின் உரிமைக்காக சத்தியாகிரகம், ஒத்துழையாமை ஆகியவற்றைப் பயன்படுத்தினார்.

இக்காலகட்டத்தில் காந்தியை பாதித்த ஆளுமைகளும் அவர்கள் எழுதிய நூல்களும்: ஹென்றி டேவிட் தோரோ(Henry David Thoreau) 'Concept of Civil Disobedience'; ஜான் ரஸ்கின்( 'Unto his last'); ரால்ஃப் வால்டோ எமர்சன்( 'Concept of Individualism';) டால்ஸ்டாய் ('The kingdom of God is within you').

காந்தி ஜோகன்ஸ்பெர்கில்
போயர் போர்

காந்தி 1899-ல் போயர் போரில் (Boer War) பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகப் போராடினார். தென் ஆப்பிரிக்காவின் தங்க வளம் மிக்க ட்ரான்ஸ்வால் மற்றும் ஆரஞ்ச் பகுதிளைக் கைப்பற்றும் பொருட்டு டச்சு போயர் அரசுடன் பிரிட்டிஷ் அரசு போர்புரிந்தது. இதில் பிரிட்டிஷ் அரசு வெற்றிபெற்றது. காந்தி போயர் போருக்கான பதக்கம் பெற்றார். "போர் அறிவிக்கப்பட்டபோது, எனது தனிப்பட்ட அனுதாபங்கள் அனைத்தும் போயர்களுடன் இருந்தன, ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் மீதான எனது விசுவாசம் அந்தப் போரில் ஆங்கிலேயர்களுடன் பங்கேற்க என்னைத் தூண்டியது. ஒரு பிரிட்டிஷ் குடிமகனாக நான் உரிமைகளைக் கோரினால், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பில் பங்கேற்பதும் எனது கடமை என்று உணர்ந்தேன். அதனால் நான் முடிந்தவரை பல தோழர்களை ஒன்று திரட்டினேன், மிகவும் சிரமப்பட்டு அவர்களின் சேவைகளை-ம்புலன்ஸ் கார்ப்ஸாக ஏற்றுக்கொண்டேன்." என போயர் போரில் கலந்து கொண்டதற்கான விளக்கத்தை தன் சுயசரிதையில் எழுதினார்.

ஃபீனிக்ஸ் பண்ணை

காந்தி 1904-ல் டால்ஸ்டாயால் ஈர்க்கப்பட்டு, பீனிக்ஸ் பண்ணையை அமைத்தார். அங்கு அவர் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதோடு, சுகாதாரம், சுகாதாரம், நல்ல உணவுமுறை, இயற்கையான சிகிச்சைகள் மற்றும் பாலுறவு தவிர்ப்பு பற்றி பிரசங்கிக்கவும் எழுதவும் தொடங்கினார். 1904-ல் தனது பண்ணையில் இருந்து ’இந்தியன் ஒபினியன்’ என்ற செய்தித்தாளைத் தொடங்கினார்.

ஜூலு கிளர்ச்சி

1906-ல் ஆங்கிலேயர்கள் ஜூலு இன மக்களைத் தாக்கி தென்னாப்பிரிக்கா முழுவதும் உள்ள வைரச் சுரங்கங்களில் தொழிலாளர்களாக பணியாற்றச் செய்தனர். 1906-ல், தென்னாப்பிரிக்காவின் நடால் மாகாணத்தில் ஜூலு கலகம் வெடித்தது. ஜூலுக்கள் நில உரிமையை மீட்கவும், அதிக வரிகளை ஒழிக்கவும் போராடினர். வெள்ளையர்கள் ஜூலுக்களுக்கு எதிராக போரை அறிவித்தனர். இந்த ஜூலு கிளர்ச்சியிலும் காந்தி பிரிட்டிஷ் தரப்பில் இருந்து இந்திய தன்னார்வ-ம்புலன்ஸ் கார்ப்ஸின் பொறுப்பாளராக பணியாற்றினார். அவரது சேவைகளுக்காக ஜூலு போர் பதக்கத்தைப் பெற்றார்.

டிரான்ஸ்வால் மார்ச்

தென் ஆப்பிரிக்காவில் காந்தி இந்தியர்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டங்களை எதிர்த்து மிதமான பிரார்த்தனைகளையும், மனுக்களையுமே (Prayers and petitions) ஆங்கிலேயர்களிடம் முயற்சித்தார். அதில் பெரும்பாலும் தோல்வியடைந்தார். 1906-ல் டிரான்ஸ்வாலில் இந்தியர்கள் தங்களைப் பதிவுசெய்து பதிவுச் சான்றிதழ்களை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சட்டத்தை ஆங்கிலேயர்கள் அமல்படுத்தினர். இதற்கு எதிராக காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னடத்தினார். இப்போராட்டத்தில் இந்தியர்களைத் தம் அடையாள சான்றிதழ்களை பொதுவில் எரிக்க அழைத்தார்.

இதனால் ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் மாகாணங்களுக்கு இடையேயான நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்தனர், மேலும் அவர்களின் இந்து திருமணங்களை சட்டப்பூர்வமாக செல்லாதவை என்று அறிவித்தனர். தொடர் போராட்டங்களுக்குப் பின் இறுதியாக 1913-ல் காந்தி நடால் முதல் டிரான்ஸ்வால் வரை ஒரு அணிவகுப்பைத் தொடங்கினார். சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டினார். இந்த ஊர்வலக்காரர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டு கொடூரமாக நடத்தப்பட்டனர். ஆனால் போராட்டம் பலனளித்தது. ஜெனரல் ஸ்மட்-காந்தி ஒப்பந்தத்தின் கீழ் போரட்டத்தின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கரும்பு போராட்டங்கள்

நவம்பர் 1913-ல் நடால் சர்க்கரைத் தோட்டங்களின் கரையோரப் பகுதிகளிலிருந்த இந்தியத் தொழிலாளர்கள் காந்தியின் கைதுக்குப் பிறகு வேலைநிறுத்தம் செய்து நகரங்களை நோக்கி அணிவகுத்தனர். இந்த போராட்டம் முழுவதுமாக சுயமாக தொழிலாளர்களால் ஒழுங்கமைக்கப்பட்டது. அவர்கள் டிரான்ஸ்வால் மார்ச் மற்றும் காந்தி கைது செய்யப்பட்ட செய்திகளால் ஈர்க்கப்பட்டு இதைச் செய்தனர். தோட்டங்களை எரிப்பது, போலீஸ்காரர்களை கத்திகள், தடிகள், கற்களால் தாக்குவது போன்ற செயல்களால் பலர் காயமடைந்து இறந்தனர். டர்பனில் உள்ள இந்தியத் தொழிலாளர்களும் இதேபோன்ற போராட்டங்களைத் தொடங்கினர். தேர்தல் வரியை ரத்து செய்யவும், அனுமதியின்றி இலவச பயணத்திற்கான உரிமை, வாக்குரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி இப்போராட்டங்கள் நிகழ்ந்தன. காந்தியை சிறையிலிருந்து விடுவித்து, ஜெனரல் ஸ்மட்ஸ் மக்களுக்கு எதிராக இராணுவத்தை அழைத்தார்.

டிசம்பர் விசாரணை

ஆங்கிலேயர்களுக்கு எதிரான இப்போராட்டங்கள் பற்றிய செய்தி இந்தியாவில் பரவியது. இந்தியாவிலிருந்து பெரும் தொகையாக நன்கொடை பெறப்பட்டது. இந்தியாவின் வைசிராய் ஹார்டிங் கூட தென்னாப்பிரிக்க அரசாங்கத்தை விமர்சித்தார். இவை தந்த அழுத்தத்தினால் டிசம்பர் 1913-ல் ஜெனரல் ஸ்மட்ஸ் ஒரு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டார். மார்ச் 1914 கமிஷன் அறிக்கையில் ”தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரத்திற்கு இந்தியத் தொழிலாளர்கள் முக்கியமானவர்கள்; அவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் (ஒவ்வொரு வருடமும் அதைப் புதுப்பிக்கச் சொல்வதற்குப் பதிலாக); அனைத்து இந்திய திருமணங்களும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும்; மூன்று பவுண்ட் வாக்கெடுப்பு வரியை ஒழிக்கப்படும்” ஆகிய தீர்மானங்கள் முன் மொழியப்பட்டன. ஜூன் 1914-ல் இந்த அறிக்கையை செயல்படுத்த அரசாங்கம் சட்டம் இயற்றியது. ஜூலை 1914 -ல் காந்தி இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். அங்கிருந்து 1915-ல் இந்தியா திரும்பினார். தென்னாப்பிரிக்காவின்-ம்புலன்ஸ் கார்ப்ஸில் தனது சேவைகளுக்காக ஹார்டிங் பிரபு கேசர்-இ-ஹிந்த் பதக்கத்தை வழங்கினார் (1920-ல் கிலாஃபத் இயக்கத்தின் போது, காந்தி இந்தப் பதக்கங்களை வைஸ்ராய் செம்ஸ்ஃபோர்டிடம் திருப்பிக் கொடுத்தார்).

காந்தி தென்னாப்பிரிக்கவில் கற்றவை
  • டால்ஸ்டாய் பண்ணை மற்றும் ஃபீனிக்ஸ் பண்ணை ஆகியவை இந்தியாவில் காந்தியின் ஆசிரமங்களுக்கு முன்னோடியாக இருந்தன.
  • ஒத்துழையாமை, செயலற்ற எதிர்ப்பு ஆகியவை பாரம்பரிய மிதமான பிரார்த்தனை மற்றும் மனுக்களை (Prayers and petitions) விட மிகவும் பயனுள்ளவை என்பதை அறிந்தார்.
  • எதிரிகள் மற்றும் பின்பற்றுபவர்கள் இருவரிடமிருந்தும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் போது இரு பாலினங்கள், வெவ்வேறு மதங்கள், சாதி மற்றும் சமூக வகுப்புகளைச் சேர்ந்த மக்களை வழிநடத்தும் அனுபவத்தைப் பெற்றார்.
  • பெண்ணியவாதி மில்லி பொலாக்கின் தாக்கத்தால் பெண்களைப் போராட்டங்கள் மற்றும் நீதிமன்றக் கைதுகளில் சேருமாறு கேட்டுக் கொண்டார். அது வெற்றியடைந்தது. அரசியல் எதிர்ப்புகள் மற்றும் சுதந்திரப் போராட்டங்களில் இந்தியப் பெண்களின் நுழைவில் காந்தி ஒரு ஊக்கியாக அதன்பின் இருந்தார்.
  • தென்னாப்பிரிக்க போராட்டத்தின் போது, காந்தி இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், தமிழர்கள், பார்சிகள் மற்றும் சீனாவிலிருந்து குடியேறியவர்களின் உதவியைப் பெற்றார். யாவரும் இணைந்து ஒற்றை நோக்கத்திற்காகச் செயல்பட முடியும் என அறிந்தார்.
விவாதம்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல புரட்சியாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூட காந்திய முறைகளை முழுமையாக அங்கீகரிக்கவில்லை. இதேபோல் ஆப்பிரிக்காவில் கூட காந்தி தன் போராட்ட முறைகளுக்கான விமர்சனங்களை எதிர்கொண்டார். அவர்களில் முதன்மையானவர் தமிழ் பத்திரிக்கையாளர் பி.எஸ்.ஐயர். ”டிரான்ஸ்வால் பகுதிக்குள் எந்த அனுமதியும் தேவையில்லாமல் சுதந்திரமாக நடமாடும் உரிமை இந்தியருக்கு வழங்கப்பட வேண்டும்” என காந்தி போராடினார். ஆனால் பி.எஸ்.ஐயர், “டிரான்ஸ்வால் மட்டுமல்ல, தென்னாப்பிரிக்கா முழுவதும் சுதந்திரமாக நடமாடும் உரிமையை இந்தியர்கள் பெற வேண்டும்” என்பதை முன்னெடுத்திருக்க வேண்டும் என்றார். இந்திய தொழிலாளர்கள் மீதான மூன்று பவுண்ட் தேர்தல் வரிக்கு எதிரானது தான். ஆனால் காந்தி முதலில் அரசுக்கு மனு அனுப்புகிறோம், பின்னர் வெகுஜன கூட்டம், பின்னர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் மனு, இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், இந்த வரியை செலுத்த மறுக்கிறோம் என "படிப்படியான நிலைகளில்" எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினார் காந்தி. ஆனால் பி.எஸ். ஐயர் ”வரியை ஒழிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வெகுஜன இயக்கத்தை உடனடியாக தொடங்க வேண்டும். குறைவாக பேசுதல் மற்றும் அதிக செயல்” என்பவற்றை வலியுறுத்தினார்.

காந்தி - பிரிட்டிஷ் அபிமானி

  • 1920 வரை காந்தி ஒரு தீவிர பிரிட்டிஷ் அபிமானியாக இருந்தார். அவர் நம்பிய சமத்துவம் மற்றும் சுதந்திரத்தின் கொள்கைகளை பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உள்ளடக்கியதாக நினைத்தார். தென்னாப்பிரிக்காவில் ஜெனரல் ஸ்மட்ஸின் இனவெறிக் கொள்கைகளை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அடக்குமுறையாகக் காணாமல் தனிமனிதப் பிறழ்வு என்று கருதினார்.
  • காந்தி பிரிட்டிஷ் அரசு கருணையுள்ளதெனவும், அதில் குறைபாடுகள் இருந்தபோதிலும் இந்தியாவின் முடியாட்சி மன்னர்களின் ஆட்சியுடன் ஒப்பிடும்போது நல்லது எனக் கண்டார். பிரிட்டிஷ் அரசியலமைப்பின் இலட்சியங்கள் உலகெங்கிலும் உள்ள வெள்ளை, கருப்பு, இந்தியர் என அனைத்து பிரிட்டிஷ் குடிமக்களின் விசுவாசத்திற்கு தகுதியானவை என்று நம்பினார்.
  • இந்தியர்களும் ஆசியர்களும் உண்மையில் பிரிட்டிஷ்க்கு விசுவாசமான குடிமக்கள் என்பதை நிரூபிக்கவும், இதன் மூலம் அவர்கள் தென்னாப்பிரிக்காவில் சமமாக நடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையிலும் காந்தி போயர் மற்றும் ஜூலு போர்களில் பங்கேற்றதாக வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கருதினர்.
காந்தி, நேரு

இந்தியாவில் காந்தி

ஜனவரி 9, 1915-ல் காந்தி கோபால கிருஷ்ண கோகலேவின் வேண்டுகோளை சி.எஃப். ஆண்ட்ரூஸ் (தீனபந்து) தெரிவித்ததன் பேரில் இந்திய சுதந்திரப் போரில் உதவ இந்தியா திரும்பினார். இந்நாள் இன்றும் வெளிநாடுவாழ் இந்தியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். கோபால கிருஷ்ண கோகலேவை அரசியல் குருவாக ஏற்றார். இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். 1916-ல் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார். தான் நம்பிய சித்தாங்களை பரிசோதிக்கும் இடமாகத் தன் கொள்கைகள் மேல் நம்பிக்கை உடையவர்களுடன் அங்கு தங்கியிருந்தார்.

காந்தி
சம்பாரண் சத்தியாகிரகம்(1917)

சம்பாரண் சத்தியாகிரகம் இந்தியாவில் காந்தியின் முதல் சட்ட மறுப்பு இயக்கம். ராஜ்குமார் சுக்லா பீகாரில் உள்ள இண்டிகோ (அவுரி) தோட்டக்காரர்களின் பிரச்சனைகளைப் பார்க்குமாறு காந்தியைக் கேட்டுக் கொண்டார். ஆங்கிலோ இந்திய தோட்ட உரிமையாளர்கள் விவசாயிகளை மொத்த நிலத்தில் 3/20 நிலத்தில் இண்டிகோ பயிரிடுமாறும் அதை குறைந்த விலைக்கு விற்குமாறும் வற்புறுத்தினார். அதற்கு எதிராக காந்தி செயலற்ற எதிர்ப்பு அல்லது கீழ்ப்படியாமையைத் (Civil Disobedience) தொடங்கினார். ராஜேந்திர பிரசாத், அனுக்ரஹ் நாராயண் சின்ஹா போன்ற முக்கிய தலைவர்கள் இண்டிகோ விவசாயிகளுக்காக காந்தியுடன் இணைந்து போராட முன்வந்தனர். போராட்டம் வெற்றியடைந்தது

கேதா சத்தியாகிரகம்(1918)

கேதா சத்தியாகிரகம் இந்தியாவில் காந்தியின் முதல் ஒத்துழையாமை இயக்கம். 1918-ல் குஜராத் கேதாவில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக பயிர்கள் விளைச்சலின்மையாலும், பிளேக் தொற்றுநோயாலும் கேதா மக்கள் ஆங்கிலேயர்களால் விதிக்கப்பட்ட அதிக வரியைச் செலுத்த முடியவில்லை. இதை எதிர்த்த போராட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல், இந்துலால் யாக்னிக் போன்ற இளம் தலைவர்கள் மகாத்மா காந்தியின் சீடர்களாக மாறினர். அரசாங்கம் இறுதியாக விவசாயிகளுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க ஒப்புக்கொண்டது. 1919, 1920 ஆண்டுகளில் வரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சொத்துகளும் திரும்ப அளிக்கப்பட்டன.

அகமதாபாத் மில் வேலைநிறுத்தம்(1918)

இந்தியாவில் காந்தியின் முதல் உண்ணாவிரதப் போராட்டம். பிளேக் நோயால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்கு ஈடாகக் கொடுக்கப்பட்ட ப்ளேக் ஊக்கத்தொகை(போனஸ்) நிறுத்தத்துக்கு எதிராக அகமதாபாத்தைச் சேர்ந்த மில் உரிமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. தொழிலாளர்களின் தேவை அவர்களின் ஊதியத்தில் ஐம்பது சதவீதம் ஊக்கத்தொகையாக இருந்தது. உரிமையாளரகள் இருபது சதவீதம் போனஸை மட்டுமே வழங்கத் தயாராக இருந்தனர். அனுசுயா சாராபாய் தலைமையில் தொழிலாளர்கள் மகாத்மா காந்திஜியிடம் ஆதரவு கேட்டனர். அவர் தொழிலாளர்களை வன்முறை செய்யாமல் வேலைநிறுத்தம் செய்யுமாறு சொன்னார். காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஆலை உரிமையாளர்கள் இறுதியாக தீர்ப்பாயத்தில் பிரச்சினையை சமர்பிக்க ஒப்புக்கொண்டனர். முப்பத்தியைந்து சதவீதம் ஊதிய உயர்வுடன் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

காந்தி
கிலாபத் இயக்கம்(1919

முதலாம் உலகப் போரின் போது, காந்தி உலகப் போரில் தோற்கடிக்கப்பட்ட ஒட்டோமான் பேரரசுக்கு ஆதரவாக ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனது போராட்டத்தில் முஸ்லிம்களின் ஒத்துழைப்பை நாடினார். இந்திய தேசியவாதிகளின் இயக்கத்தைத் தடுக்க ஆங்கிலேயர்கள் ரவுலட் சட்டத்தை இயற்றினர். இச்சட்டத்திற்கு எதிராக மகாத்மா காந்தி நாடு தழுவிய சத்தியாக்கிரகத்திற்கு அழைப்பு விடுத்தார். ரவுலட் சத்தியாகிரகம்தான் காந்திக்கு தேசியத் தலைவர் என்ற அங்கீகாரத்தைக் கொடுத்தது. ஜாலியாவாலா பாக் படுகொலை ஏப்ரல் 13, 1919 அன்று நடந்தது. வன்முறை பரவுவதைக் கண்டு காந்தி ஏப்ரல் 18-ம் தேதி ரவுலட் சத்தியாகிரகத்தை ரத்து செய்தார்.

ஒத்துழையாமை இயக்கம் 1920

கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவாக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குமாறு காங்கிரஸ் தலைவர்களுக்கு மகாத்மா காந்தி அறிவுறுத்தினார். 1920-ல் நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1922-ல் சௌரி சௌராவில் நிகழ்ந்த வன்முறை(மக்கள் காவல் நிலையத்தை தீயிட்டு அழித்தனர்) மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிடக் காரணமாக அமைந்தது. ஒத்துழையாமை இயக்கம் முடிவுக்கு வந்த பிறகு, காந்தி தனது சமூக சீர்திருத்தப் பணிகளில் கவனம் செலுத்தினார். அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதிலிருந்து விலகிக் கொண்டார்.

தண்டி அணிவகுப்பு
உப்பு அணிவகுப்பு, கீழ்ப்படியாமை இயக்கம் (1930)

உப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் அரசுக்கு ஏகபோக உரிமையை சட்டம் வழங்கியதால், உப்புச் சட்டத்தை மீறுவதற்கான அணிவகுப்புக்கு தலைமை தாங்குவதாக காந்தி அறிவித்தார். காந்தி தனது 78 சீடர்களுடன் சபர்மதியில் உள்ள அவரது ஆசிரமத்தில் இருந்து குஜராத்தில் உள்ள கடலோர நகரமான தண்டி வரை தனது அணிவகுப்பு ஊர்வலத்தைத் தொடங்கி, கால்நடையாகச் சென்றார். அங்கு அவர்கள் அரசாங்கத்தின் உப்பு சட்டத்தை மீறி இயற்கை உப்பையும், கடல்நீரையும் சேகரித்து உப்பைத் தயாரித்தனர். இது கீழ்ப்படியாமை இயக்கத்தின் தொடக்கம்.

வட்டமேசை மாநாடுகள்
  • காந்தி இர்வின் ஒப்பந்தம்(1931): காந்தி இர்வின் பிரபு வழங்கிய போர்நிறுத்தத்தை ஏற்று, கீழ்படியாமை இயக்கத்தை கைவிட்டு, லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸின் பிரதிநிதியாக கலந்து கொள்ள ஒப்புக்கொண்டார். லண்டனில் இருந்து திரும்பிய பிறகு, அவர் சட்ட மறுப்பு இயக்கத்தை மீண்டும் தொடங்கினார்.
  • பூனா ஒப்பந்தம் 1932: இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்தி கலந்து கொள்ளவில்லை. இதில் ஏற்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் வகுப்புவாத சலுகைகள் தொடர்பாக அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்(1942)

1939-ல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. காங்கிரஸின் அனுமதியின்றி இதில் இந்தியா இங்கிலாந்துடன் போரில் இணைத்துக் கொள்ளப்பட்டது. 1942-ல் காங்கிரஸுடனான பேச்சுவார்த்தையில் கிரிப்ஸ் குழு தோல்வியடைந்தபின் ஆகஸ்ட் 8, 1942-ல் இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பம்பாய் அமர்வில் காந்தி 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தைத் தொடங்கினார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கோரினார். காந்தி உட்பட காங்கிரஸின் பெரும்பாலான முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விவாதங்கள்
  • சுபாஷ்சந்திரபோஸ் போன்ற தீவிரச் சிந்தனையாளர்கள் காந்தியின் வழிமுறைகள் மேல் நம்பிக்கை இழந்தனர். சுபாஷ்சந்திரபோஸ் தன் ஆதரவாளர்களுடன் இந்திய தேசிய ராணுவம் என்ற அமைப்பை நிறுவி வன்முறை வழியில் சுதந்திரத்திற்குப் போராடினர்.
  • முகமது அலி ஜின்னா போன்ற மதம் சார்ந்த தீவிர முனைப்பாடு கொண்டவர்கள் காந்தியின் ஒற்றுமையான இந்தியாவின் மீது நம்பிக்கையின்மையுடன் இருந்தனர். காங்கிரஸிலிருந்து பிரிந்து முஸ்லீம் லீக் என்ற அமைப்பு உருவாகி அது சுதந்திரத்தின் போது பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாகக் காரணமாக அமைந்தது.
  • அம்பேத்கர் காந்தியின் சாதியம் சார்ந்த சிந்தனைகளில் நம்பிக்கையின்மை கொண்டிருந்தார். அனைத்திந்திய பட்டியல் இன மக்கள் கூட்டமைப்பை உருவாக்கினார்.
  • மாநிலங்களில் சாதி சார்ந்து, இனவாதம் சார்ந்து தீவிர முனைப்பாடு இருந்தவர்கள் காந்தியின் கொள்கைகள் மீது அதிருப்தியுடன் இருந்தனர்.
  • தொழில்நுட்பத்தின் மூலமான கட்டற்ற வளர்ச்சியின் மீது பற்று கொண்டவர்கள் காந்தியின் தற்சார்பு பொருளாதாரக் கொள்கைகள் மீது நம்பிக்கையின்றி இருந்தனர். தொழில்புரட்சி என ஆரம்பித்த இந்தியாவின் ஐந்தாண்டுத்திட்டங்கள் மெல்ல தற்சார்பு பொருளாதாரம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி நோக்கி வந்தமைந்திருப்பதைக் காணலாம். உலகம் முழுமையும் அரசியல், பொருளாதாரம், சமூக முன்னேற்றம், சூழலியல் என எல்லாத் தளங்களிலும் செல்லுபடியாகக் கூடிய ஒன்றாக இன்று காந்தியின் பொருளாதாரச் சிந்தனைகள் உள்ளன.
காந்தி

சுதந்திரத்திற்குப் பின் காந்தி

  • சுதந்திரத்தின் போது இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிந்ததை காந்தி விரும்பவில்லை. ஆகஸ்ட் 9, 1947-ல் காந்தி கல்கத்தா சென்றார். மதஒற்றுமைக்காக ஆகஸ்ட் 13 முதல் உண்ணாவிரதம் இருந்தார்.
  • செப்டம்பர் 9, 1947 முதல் இறக்கும் வரை காந்தி டெல்லியிலுள்ள பிர்லா ஹவுஸில் (தற்போது காந்தி ஸ்மிருதி) இருந்தார். இது பிர்லாவால் காந்திக்கு அளிக்கப்பட்ட தங்கும் இடம். 1973-ல் இந்திய அரசு இதை விலைக்கு வாங்கி காந்தி நினைவிடமாக ஆக்கியது.

எழுத்து

காந்தி தன் சிந்தனைகளை 1909-ல் 'ஹிந்து ஸ்வராஜ்யா' என்ற நூலாக எழுதினார். அரசியல், சமூக, சூழல், வாழ்வுமுறை சார்ந்த தன் சிந்தனைகளைக் கடத்தும் ஊடகமாக எழுத்தைப் பயன்படுத்தினார். கடிதங்கள், கட்டுரைகள் என அவர் எழுதிக் கொண்டே இருந்தார்.

தமிழ்நாடு - காந்தி

காந்தி தென்னாப்பிரிக்கப் போராட்டத்தில் தன்னை ஈர்த்தவராக 16 வயதான தில்லையாடி வள்ளியம்மையைக் குறிப்பிட்டார். 1915-ல் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் அவரைச் சந்தித்தார். செப்டம்பர் 22, 1921-ல் காந்தி மதுரை வந்தபோது தன் மேலாடையைக் கழற்றிவிட்டு இன்று அவரை நாம் நினைகூறும் அரை நிர்வாண உடைக்கு மாறினார். மதுரையில் அவர் அவ்வாறு தோன்றிய இடத்தை 'காந்தி பொட்டல்' என்று அழைக்கின்றனர். பிப்ரவரி 6, 1946-ல் காந்தி தலித்துகளுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தார். காந்தி தன் வாழ்நாளில் ஐந்து முறை மதுரைக்கு வந்தார். ஆகஸ்டில் கதர் யாத்திரையின் போது தமிழ் நாட்டிற்கு வந்தார். 1927-ல் மெட்ராஸில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சென்னை வந்தார்.

நினைவுச் சின்னங்கள்
  • மகாத்மா காந்தி அருங்காட்சியகம்-மதுரை
  • தமிழ்நாடு அரசு சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்தது.
  • மதுரையில் ராணி மங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்ட கட்டடத்தில் 1959 முதல் காந்தி அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காந்தியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது.
  • கன்னியாகுமரிக் கரையில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு காந்தியடிகளின் மார்பளவு சிலை ஒன்று வளாகத்திலும், மற்றொன்று அருங்காட்சியகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் பேர்கள் அமரக்கூடிய அளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காந்தியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமும் நூலகமும் இங்குள்ளது.

காந்தியின் சித்தாந்தங்கள்

காந்தி தனக்கான சித்தாங்களை கீதை, பெளத்தம், சமணம், உலக, இந்திய இலக்கியங்களிலிருந்து எடுத்துக் கொண்டு அதை பரிசோதனை முயற்சியில் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார். அவருடைய சித்தாங்கள் என்பவை பெரும்பாலும் அவரது வாழ்க்கை முறையே.

  • உண்மை - முழுமையான உண்மை, இறுதி உண்மையை காந்தி வலியுறுத்தினார். சொல், செயலின் தூய்மை
  • அகிம்சை, வன்முறையின்மை - வன்முறைக்கு எதிரான மனநிலை. அன்பை ஆயுதமாகக் கொண்டது
  • சத்தியாகிரகம் - இதன் தோற்றத்தை உபநிடதங்களிலும், புத்தர், மகாவீரர், டால்ஸ்டாய், ரஸ்கின் ஆகியோரிலிருந்து காணலாம். அனைத்து அநீதி, அடக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிராக தூய்மையான ஆன்மா சக்தியின் உடற்பயிற்சி அல்லது பயிற்சியைக் குறிக்கிறது.
  • சர்வோதயா - ஜான் ரஸ்கினின் அன்டு தி லாஸ்ட்(இறுதி வரை) என்ற புத்தகத்தின் மொழிபெயர்ப்பின் தலைப்பாக இது முதலில் காந்திஜியால் அறிமுகப்படுத்தப்பட்டது. எல்லோருக்குமான முன்னேற்றம் அல்லது அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றம் என்பதை இதன் பொருளாகக் கொள்ளலாம்.
  • ராட்டை (charkha): காந்தி ராட்டை சுற்றும் புகைப்படம் அவரின் அடையாளமாக உள்ளது. ராட்டையை சுதேசி, தன்னிறைவு, சுதந்திரம் ஆகியவற்றின் குறியீடாகக் கண்டார்.
  • தூய்மை - காந்தி சுகாதாரத்தை வலியுறுத்தும் பொருட்டு ஆசிரமத்தில் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டார்.
  • சைவ உணவுமுறை - உடலின் நன்மைக்கும், உலக நன்மைக்கும் காந்தி சைவ உணவுமுறையே சிறந்தது என்று கருதினார்.
  • காம ஒறுக்கம், புலனடக்கம் - சேவைப்பணியில் புலனடக்கம் முக்கியம் என்பதை காந்தி நம்பினார். அதற்கான தீவிரமான காம ஒறுக்க முறைகளைக் கடைபிடித்தார்.

விருது

  • காந்தியின் நீண்டகால நண்பரான பிரஞ்சிவன் மேத்தா கோபால கிருஷ்ண .கோகலேவுக்கு எழுதிய கடிதத்தில் (1912) 'மகாத்மா' என்ற பட்டத்தைப் பயன்படுத்தினார். 'மகாத்மா காந்தி' என்றே காந்தி குறிப்பிடப்பட்டர்
  • கெய்சர் இ ஹிந்த் - 1915
  • அமைதிக்கான நோபல் பரிசுக்கான பட்டியலில் ஐந்து முறை (1937, 1938, 1939, 1947) அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ஒருமுறையும் விருதுக்காக தேர்வு பெறவில்லை.

காந்தியவாதிகள்

காந்தியின் சித்தாங்கள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் காந்தியவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். அரசியல், சமூக சார்ந்து காந்தியக் கொள்கைகளை தம் வாழ்நாளில் கடைபிடித்து ஒழுகினர்.

  • நெல்சன் மண்டேலா (தென் ஆப்பிரிக்கா)
  • மார்டின் லூதர் கிங் (ஜுனியர்) (அமெரிக்கா)
  • ஹோ சி மின்ஹ் (வியட்னாம்)
  • ஆங் சன் சூகி (பர்மா)
  • தலாய் லாமா
  • வினோபா பாவே
  • மணிலால் காந்தி
  • கான் அப்துக் காஃபர் கான்
  • மீரா பென்
  • சுஷிலா நாயர்
  • ஜம்னாலால் பஜாஜ் (காந்தியின் ஐந்தாவது மகன் என்று அழைக்கப்பட்டார்)
  • மங்களம்மாள் மாசிலாமணி
  • அண்ணா ஹசாரே
  • காகா காலேல்கர்
  • லாரி பேகர்
  • மசானபு புக்குவோக்கா
  • ஐரோம் ஷர்மிளா
  • தரம்பால்
  • ராம் மனோகர் லோகியா
  • கோரா
  • இ.எப்.ஷூமாக்கர்
  • டாக்டர்.பிராங்க்ளின் ஆசாத் காந்தி
  • ஜீன் ஷார்ப்
  • ஜெயப்ரகாஷ் நாராயண்
  • ஜர்ணா தாரா சௌத்ரி
  • டெஸ்மாண்ட் டூட்டு
  • சி.எப்.ஆண்ட்ரூஸ்
  • மது தண்டவதே
  • நாராயண் தேசாய்
  • அருண் காந்தி
  • கிருபளானி, சுசேதா கிருபளானி
  • ஜெயராம்தாஸ்
  • மலாலா
  • கல்யாணம்
  • பி.என். ஸ்ரீனிவாசன்
தமிழ்நாடு
காந்தி மறைவு

மறைவு

காந்தி ஜனவரி 30, 1948 அன்று மாலை (5:17 மணி) 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸேவால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 அன்று, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக, தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

திரைப்படங்கள்

  • Mahatma: Life of Gandhi, 1869–1948 - வித்தால்பாய் ஜாவேரி
  • Gandhi - 1982 - ரிச்சர்ட் அட்டன்பர்ரோ
  • The Making of the Mahatma - 1996 - ஷியாம் பெனிகல்
  • ஹே ராம் - 2000 - கமல்ஹாசன் (தமிழ்)
  • Gandhi, My Father - 2007 - ஃபெரோஜ் அப்பாஸ் கான்

நூல் பட்டியல்

  • Hind Swarajya (1909)
  • Mangalaprabhata (1930)
  • Indian Home Rule (1910)
  • India’s Case for Swaraj (1931)
  • Sermon on the Sea (1924 – the American edition of Hind Swaraj)
  • Songs from Prison: Translations of Indian Lyrics Made in Jail (1934)
  • Dakshina Africana Satyagrahano Itihasa / Satyagraha in South Africa (1924-25)
  • The Indian States Problem (1941)
  • Satyana Prayogo Athava Atmakatha / An Autobiography: The Story of My Experiments with Truth (1924-25) * Self-restraint v. Self-Indulgence (1947)
  • Gandhi Against Fascism (1944)
  • From Yeravda Mandir: Ashram Observances (1945)
  • Conquest of Self (1946) Women and Social Injustice (1947)
காந்தி பற்றிய நூல்கள்
  • India after Gandhi (Ramchandra Guha)
  • Using and Abusing Gandhi (Ramchandra Guha)
  • How Mahatma Gandhi's martyrdom saved India (Ramchandra Guha)
  • How the suffragattes influenced Mahatma Gandhi (Ramchandra Guha)
  • Gandhi Before India (Penguin) (2013)
  • Gandhi: The Years that Changed the World, 1914-1948 (2018)
  • Reflections on Gandhi (George Orwell)
  • Mahatma Gandhi (Bertrand Russel)
  • The Sacred Warrior (Nelson Mandela)
  • Gandhi The Prisoner- A Comparison (Nelson Mandela)
  • Who is Mahatma? (Rabindranath Tagore)
  • Gandhi - The Practical Idealist (Sarvepalli Radhakrishnan)
  • Gandhiji & the World (Amartya Sen)
  • Gandhi in Global Village (P.V. Narsimha Rao)
  • The Best Advice I Ever Had (Vijaya Lakshmi Pandit)
  • Gandhi, Globalization, and Quality of Life: A Study in the Ethics of Development (Rajendra Prasad)
தமிழில்
  • தமிழ்நாட்டில் காந்தி - அ. இராமசாமி
  • இந்தியசுயராஜ்யம் - மகாத்மாகாந்தி (சர்வோதய இலக்கியப்பண்ணை)
  • காந்தி காவியம் - அரங்க சீனிவாசன்
  • இன்றைய காந்தி (ஜெயமோகன்)
  • உரையாடும் காந்தி (ஜெயமோகன்)
  • அண்ணா ஹஸாரே - ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம் - ஜெயமோகன் (கிழக்குவெளியீடு)
  • வாழ்க நீ எம்மான் - ஜெயகாந்தன் (மொழிபெயர்ப்பு)
  • ஆயிரம் காந்திகள் (சுனில் கிருஷ்ணன்)
  • காந்தி எல்லைகளுக்கு அப்பால்- சுனில் கிருஷ்ணன் (சொல்புதிது பதிப்பகம்)
  • காந்தியும் அவரது சீடர்களும் (சாகித்தியா அகாடெமி)
  • காந்தியும் தமிழ் சனாதனிகளும் - அ. மார்க்ஸ் (எதிர்)
  • மகாத்மாவும் அவரது இசமும் - இ.எம்.எஸ் (பாரதி புத்தகாலயம்)
  • ராம் மனோகர் லோகியா : வாழ்வும் போராட்டமும் (விடியல் பதிப்பகம்)
  • காந்தியின் கடைசி இருநூறு நாட்கள் - வி. இராமமூர்த்தி (தமிழில் : கி.இலக்குவன்) (பாரதி புத்தகாலயம்)
  • காந்தி வாழ்க்கை - லூயி ஃபிஷர்
  • காந்தி மகான் கதை - கல்கி
  • காந்தியை அறிதல் - தரம்பால்
  • தண்டி யாத்திரை - முருகானந்தம் (விகடன் வெளியீடு)
  • பியாரிலால் உன்னதநோன்பு (நவஜீவன் டிரஸ்ட் வெளியீடு)
  • காந்தியார் சாந்தியடைய - தென் திசை
  • சாவர்க்கரும் இந்துத்துவமும் மகாத்மா காந்தி படுகொலையும் - பாரதி புத்தகாலயம்
  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - திருவிக - பாரி நிலையம்
  • நாட்டுக்குழைத்த நல்லவர் - மகாத்மா காந்தி - எம்.வி. வெங்கட்ராம்
  • தண்டி யாத்திரை - ஏ.கோபண்ணா (நவ இந்தியா பதிப்பகம்)
  • காந்தியின் ஆடை தந்த விடுதலை - பீட்டர் கோன்சலாவ்ஸ் (விகடன் பிரசுரம்)
  • மகாத்மா காந்தி - சரிதை - வின்சென்ட் ஷீன் (வ.வு.சி நூலகம்)
  • தமிழகத்தில் காந்தி- தி.செ.சௌ.ராஜன் (சந்தியா பதிப்பகம்)
  • நவகாளி யாத்திரை..
  • ‘உய்விக்க வந்த காந்தி’
  • தென்னாப்பிரிக்காவில் காந்தி
  • காந்தியின் உடலரசியல்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page