under review

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

From Tamil Wiki
கிருஷ்ணம்மாள்
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
கிருஷ்ண்ணம்மாள்- ஜெகந்நாதன்
கிருஷ்ணம்மாள்
மாற்று நோபல்
புரோபஸ் விருது
பத்மவிபூஷன்

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் (பிறப்பு: ஜூன் 16, 1926) காந்தியவாதி, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். சமூக செயற்பாட்டாளர். சமூக நீதிக்காகவும், மானுடத்தின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கும் தன் கணவர் சங்கரலிங்கம் ஜெகந்நாதனுடன் இணைந்து செயலாற்றியவர். லாப்டி (LAFTI: Land for Tillers’ Freedom) இயக்கத்தின் மூலம் நிலமற்ற விவசாயிகளுக்கு, மக்களுக்கு நிலக்கிழார்களிடமிருந்து நிலங்கள் கிடைக்க வகை செய்தவர்.

பிறப்பு, கல்வி

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஜூன் 16, 1926 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி கிராமத்தில் ராமசாமி, நாகம்மாள் இணையருக்குப் பிறந்தார். பதினொரு உடன்பிறந்தவர்கள்.

கிருஷ்ணம்மாள் பட்டிவீரன்பட்டி அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தார். மதுரையில் பள்ளிப்படிப்பை ஆங்கில வழியில் பயின்றார். டி.எஸ். செளந்தரம் நடத்தி வந்த மீனாட்சி விடுதியில் சேர்ந்து அவரின் உதவியுடன் படித்தார். அதன் பிறகு அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். மதுரை மாவட்டத்தின் முதல் பெண் பட்டதாரியாக ஆனார். கிருஷ்ணம்மாள் தனது ஆசிரியர் பயிற்சியினைச் சென்னையில் முடித்தார்.

கிருஷ்ணம்மாள், சங்கரலிங்கம் ஜெகந்நாதன் தம்பதியினர்

தனி வாழ்க்கை

வார்தா ஆசிரமத்தில் சந்தித்த சங்கரலிங்கம் ஜெகந்நாதனை காந்தியின் ஆணைப்படி இந்திய விடுதலைக்குப்பின் 6, ஜூலை1950-ல் மணந்தார். ஜே.சி.குமரப்பாவின் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

மகன் பூமிகுமார். மகள் சத்யா. இருவரும் மருத்துவர்கள்.

பிப்ரவரி 2013-ல் சங்கரலிங்கம் ஜெகந்நாதன் காலமானார்.

கிருஷ்ணம்மாள், சங்கரலிங்கம், மகன் பூமிக்குமார், மகள் சத்யா

பொதுவாழ்க்கை

காந்திய ஈடுபாடு

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கிருஷ்ணமமாள் படித்துக்கொண்டிருந்த போது 'காந்தியப் படிப்பு வட்டம்' என்ற அமைப்பை நடத்தி வந்தார். 2 பிப்ரவரி 1946ல் காந்தி மதுரை வந்திருந்தபோது அவரை மூன்று நாட்கள் அருகிலிருந்து கவனிப்பதற்காக சௌந்திரம் கிருஷ்ணம்மாளை நியமித்தார். அவ்வாறு காந்தி மீதும் காந்தியம் மீதும் ஈடுபாடு கொண்டார்.

விடுதலைப்போராட்டம்

காந்தி கிராமம் பல்கலை நிறுவனரான டி.எஸ் செளந்தரம் விடுதலைப்போரில் ஈடுபட்டபோது கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனும் உடன்பணியாற்றினார்.

கிருஷ்ணம்மாள் வார்தா ஆசிரமத்தில் சந்தித்த ஜெகந்நாதனுடன் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றார். காந்தியின் வழிகாட்டலுக்கேற்ப வட இந்தியாவில் பல இடங்களில் கிராமநிர்மாணப் பணியில் ஈடுபட்டார்.

2006-ல் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகத்தின் பவள விழாவிற்குத் தலைமை தாங்கினார்

காந்தி கிராம ஆசிரமம்

1948-ல் உருவான காந்தி கிராம ஆசிரமத்தின் செயலாளர் ஆனார். காந்தி கிராம ஆசிரமத்தில் இணைந்த பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பை ஏற்றார்.

1950 முதல் சர்வோதயா இயக்கத்தினருடன் இணைந்து சமூகப்பணிகளை மேற்கொண்டார்.

அமைதிப்பணிகள்

1957-ல் முதுகுளத்தோர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிருஷ்ணம்மாள் சேவை செய்தார். மக்கள் மீள்குடியேறவும், நிவாரணம் பெறவும் உதவினார்.

கிராம சுயராஜ்ஜியம்

1958-1962-களில் அரசு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அலுவலகம் அமைத்து அங்கே கிராம சேவகர் - கிராம சேவிகா என்னும் பணியாளர்களை நியமித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் குழு சார்பில் பல அலுவலகங்களின் பொறுப்பை டி.எஸ். செளந்தரம் ஏற்றார். அதன் தலைவராக கிருஷ்ணம்மாளை நியமித்தார். அதன் வழி பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம், சுகாதாரம், சிறுவர் பள்ளிகள் ஆகிய முன்னெடுப்புகள் செய்தார். காந்தி கிராமம் வழியாக பல்லாயிரம் கிராம சேவிகாக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.காந்திகிராமம் பல்கலை அருகிலேயே கிருஷ்ணம்மாள்- ஜெகன்னாதன் இணையர் உருவாக்கிய ஊழியரகம் செயல்பட்டுவருகிறது

பூதான இயக்கம்
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

1950-1952 ஆண்டுகளில் வினோபா பாவே பூதான இயக்கத்தை தொடங்கியபோது சங்கரலிங்கம் ஜெகன்னாதன் உத்திரபிரதேசத்தில் பூதான் இயக்கத்திற்காக தங்கள் நிலத்தில் ஆறில் ஒரு பங்கினை நிலமற்றவர்களுக்கு நிலக் கொடையாக வழங்க நிலப்பிரபுக்களைக் கேட்டுக்கொண்டு வினோபாபாவேவுடன் பாத யாத்திரையாக சென்றார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனும் உடன் சென்றார். பின் தமிழ்நாட்டில் அவ்வியக்கத்தை தனியாக முன்னெடுத்தார்.

வலிவலம் கிராமத்தில் பெருநிலக்கிழார் ஒருவரால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை கிராம மக்கள் மூலமே மீட்டுக் கொடுத்தார்.

கோணியம்பட்டியில் கடன் கொடுத்து நிலத்தை கையகப்படுத்திக் கொண்ட நிலக்கிழாரிடமிருந்து மக்களுக்கு நிலத்தை மீட்டுக் கொடுத்தார்.

உழுபவருக்கு நிலம் இயக்கம்

டிசம்பர் 25, 1968-ல் நாகைமாவட்டம் கீழ்வெண்மணியில் நாற்பத்தியிரண்டு விவசாயிகள் கொளுத்தப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு சர்வோதையா அமைப்பிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறினார். கீழ்வெண்மணியில் மக்களுக்கு ஆதரவாகப் போராடி சிறைசென்றார்

கீழ்வெண்மணி அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்டு "உழுபவனின் நில உரிமை இயக்கம்"(லாப்டி) (LAFTI: Land for Tillers’ Freedom) என்னும் அமைப்பை 1981-ல் தொடங்கினர்.

நிலக்கொடை இயக்கத்தால் போதிய அளவில் நல்ல நிலங்கள் கிடைப்பதில்லை என்பதனால் வங்கிக்கடன் வழியாக நிதி திரட்டி குறைந்த விலையில் நிலங்களை வாங்கி அவற்றை தேவையான உழவர்களுக்குப் பிரித்துக்கொடுப்பது லாப்டியின் பணிமுறை. உழுபவர் மிகக்குறைந்த வட்டியுடன் நிலத்திற்கான விலையை வங்கியில் செலுத்தி நிலத்தை சொந்தமாக்கிக்கொள்ளலாம். இந்தமுறையில், 1982 முதல் 1986 வரை ஏறத்தாழ 175 நிலச்சுவான்தார்களிடம் இருந்து 5,000 ஏக்கர் நிலங்களை வாங்கி 5,000 குடும்பங்களுக்கு லாப்டி அளித்தது

1981ல் நாகப்பட்டினம் மாவட்டத்தில், கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 19 கிராமங்களில், 1,112 ஏக்கர் நிலத்தை, வங்கிக்கடனில் பெற்று, 1,112 குடும்பங்களுக்குப் பிரித்துக்கொடுத்தது லாப்டி.

கீழ்வெண்மணியில் பாதிக்கப்பட்ட எழுபத்து நான்கு குடும்பங்களுக்கு எழுபத்து நான்கு ஏக்கர் நிலத்தை அரசின் மூலம் அளிக்கும் வரை போராடினார்.

வத்தலகுண்டுவில் போராட்டம் நடத்தி உழுபவர்களுக்கான நிலத்தைப் பெற்றுத் தந்தார். லாப்டி மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை மீட்டு உழுபவருக்குக் கொடுத்தார். தனக்கு தானமாகக் கிடைத்த பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை ஏழைகளுக்கு பிரித்துக் கொடுத்தார்.

கணவருடன், கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் பீஹாரில் நிலக்கிழார்களுடன் போராடி கையகப்படுத்தப்பட்ட 23,000 ஏக்கர் நிலத்தை மீட்டார்.

இறால் பண்ணை ஒழிப்பு

1986 ல் கீழத்தஞ்சை கடலோரத்தில் சூழ்நிலை சீர்கேட்டை ஏற்படுத்தும் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டபோது அவற்றை மூடுவதற்கான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தார். சட்டத்தின் உதவியுடனும், மக்கள் அமைப்புகளின் பின்புலத்துடனும் அவற்றை மூடுவதில் வெற்றிபெற்றார்.

ஆவணப்படம்

கிருஷ்ணம்மாள், ஜெகந்நாதன் இணையரின் சேவையை மையக் கருத்தாகக் கொன்டு, அரவிந்த் மாக் இயக்கத்தில் சைய்யது யாஸ்மீனால் தயாரிக்கப்பட்ட 'தட் பையர்டு ஸோல்' ('That Fired Soul') என்ற குறும்படம் 2014-ல் சென்னை சர்வதேச குறும்பட விழாவில் திரையிடப்பட்டது.

நூல்கள்

  • 'The color of Freedom’ - இத்தாலியைச் சேர்ந்த லாரா கோப்பா கிருஷ்ணம்மாள், சங்கரலிங்கம் ஜெகந்நாதனுடன் உரையாடியதை நூலாக வெளியிட்டார்.
  • ’சுதந்திரத்தின் நிறம்’ - கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு (The Color of Freedom-ன் மொழிபெயர்ப்பு: B.R.மகாதேவன்)

விருதுகள்

  • சுவாமி பிரணவானந்தா அமைதி விருது (1987)
  • ஜம்னலால் பஜாஜ் விருது (1988)
  • பத்மஸ்ரீ விருது (1989)
  • பகவான் மகாவீர் விருது (1996)
  • சம்மிட் பௌன்டேசன் விருது: சுவிட்சர்லாந்து (1999)
  • புரோப்ஸ் பரிசு: சியாட்டில் பல்கலைக்கழகம் (2008)
  • மாற்று நோபல் பரிசு: ஸ்வீடன்: வாழ்வுரிமை விருது
  • 2008-ல் ரைட் லைவ்லிஹூட் (Right Livelihood Award) விருது
  • 2020-ல் இந்திய அரசு வழங்கும் பத்மபூஷன் விருதைப் பெற்றார்.

பங்களிப்பு

கிருஷ்ணம்மாள் தமிழக காந்திய இயக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின் காந்தியின் ஆணைப்படி கிராம புத்துருவாக்கப் பணிகளில் பங்களிப்பாற்றினார். நிலக்கொடை இயக்கம் வழியாகவும் தானே முன்னெடுத்த உழுபவருக்கே நிலம் என்னும் இயக்கம் வழியாகவும் ஏராளமான மக்களுக்கு நிலம் கிடைக்க வழிவகுத்தார். காந்திய வழியில் சமூக அமைதிக்காபவும் பணியாற்றினார்.

இரண்டாம் காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தாக்குப்பிடிக்கும் பொருளியல் ஆகியவற்றுக்காக காந்திய வழியில் போராடினார். மக்களை ஒருங்கிணைத்து வன்முறையற்ற நீடித்த போராட்டங்களை நிகழ்த்துவதும், அதற்கு முடிந்தவரை சட்டத்தை துணைகொள்வதும் அவர் வழிகள். பெரும்பாலான போராட்டங்களில் நீண்டகால அளவில் வெற்றியை அடைந்தவர் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்.

வெளி இணைப்புகள்

உசாத்துணை


✅Finalised Page