சங்கரலிங்கம் ஜெகந்நாதன்
- ஜெகந்நாதன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஜெகந்நாதன் (பெயர் பட்டியல்)
சங்கரலிங்கம் ஜெகந்நாதன் (1914 - பிப்ரவரி 12, 2013) காந்தியவாதி, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். சமூகச் செயற்பாட்டாளர். சமூக நீதிக்காகவும், மானுடத்தின் நீடித்த நிலையான வளர்ச்சிக்காகவும் தன் மனைவி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன் இணைந்து செயலாற்றியவர். லாப்டி (LAFTI: Land for Tillers’ Freedom) இயக்கத்தின் மூலம் நிலமற்ற விவசாயிகளுக்கு, மக்களுக்கு நிலக்கிழார்களிடமிருந்து நிலங்கள் கிடைக்க வகை செய்தவர்.
பிறப்பு, கல்வி
ஜெகந்நாதன் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூருக்குச் செல்லும் சாலையில் செங்கற்பட்டை என்ற கிராமத்தில் 1914-ல் பிறந்தார். இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். கல்லூரிப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார்.
தனிவாழ்க்கை
காந்தியவாதியும், விடுதலைப் போராட்ட வீரருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் -ஐ ஜூலை 6, 1950-ல் மணந்தார். காந்தி, விவேகானந்தர், பரமஹம்சரின் கருத்துக்களால் பாதிக்கப்பட்டு சமூகசேவைகளில் ஈடுபட்டார். திருமணத்திற்குப் பின் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன் இணைந்து பல சமூகப்பணிகளில் ஈடுபாட்டார். மகன் பூமிகுமார். மகள் சத்யா. இருவரும் மருத்துவர்கள்.
சுதந்திரத்துக்கு முன்
ஜெகந்நாதன் 1928ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவராக இருந்தபோது சுதந்திரப்போராட்டத்தில் மாணவர்களை திரட்டி ஈடுபடுத்தினார். அதன்பொருட்டு கல்வியை விடநேர்ந்தது. ஓராண்டுக்காலம் ரிஷிகேஷில் சிவானந்தர் ஆசிரமத்தில் இருந்தபோது சம்ஸ்கிருதம், யோகம் ஆகியவற்றில் பயிற்சி எடுத்துக்கொண்டார் .
காந்தியை சந்தித்தல்
சங்கரலிங்கம் ஜெகந்நாதன் 1934-ல் கழுகுமலையில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றலானார். அப்போதுதான் ஹரிஜனசேவா நிதிக்காக பயணம் செய்த காந்தியை மதுரையில் சந்தித்து தன் தந்தை அளித்த நகைகளை கொடையளித்தார். 1936-ல் காந்தி திருப்பத்தூர் கிறிஸ்தவ ஆசிரமத்துக்கு வருகைதந்தார். அங்கே அவர் இரண்டு நாட்கள் தங்கினார். ஜெகந்நாதன் காந்தியைச் சந்திக்க அங்கே சென்றார். காந்தி ஓய்வெடுப்பதனால் சந்திக்கமுடியாது என்று கஸ்தூர்பா சொன்னார். தன் உள்ளத்தில் தீவிரமான வினா உள்ளது என்றும் அதை கேட்கவிரும்புவதாகவும் ஜெகந்நாதன் சொன்னார். அதை எழுதி காந்தியிடம் கொடுக்கும்படி கஸ்தூர்பா சொன்னார். ஜெகந்நாதன் ‘நீங்கள் அகிம்சையை ராமரின் பெயரால் முன்வைக்கிறீர்கள். ராமர் ஆயுதமேந்தியவர் அல்லவா?” என்ற வினாவை எழுதி அளித்தார்.
மறுநாள் காந்தி ஜெகந்நாதனை அருகே அழைத்து ”ஒவ்வொரு அவதாரபுருஷர்களும் ஒவ்வொரு குடியைச் சேர்ந்தவர்கள். ஏசு குடிசையில் பிறாந்தார். ராமர் அரசகுடியில் பிறந்தார். ஆகவே ஆயுதம் வைத்திருக்கிறார். ராமரின் ஆயுதம் இக்காலகட்டத்திற்கு ஒரு குறியீடு மட்டுமே” என்று விளக்கினார்.
சேவைப்பணிகள்
ஜெகந்நாதன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது காந்தியவாதியான டாக்டர் பாஸ்டரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஆங்கிலேய ஆடைகளை தவிர்த்து கதராடைக்கு மாறினார். அவர் பெங்களூரில் நடத்திக் கொண்டு வந்த 'கிறிஸ்து குலம்' என்ற ஆசிரமத்தைப் பற்றி கேள்விப்பட்டார். கல்லூரிப்படிப்பை விட்டுவிட்டு காந்தி ஆசிரமத்தில் சேர்ந்து கொள்ள அனுமதி கேட்டு காந்திக்குக் கடிதம் எழுதினார். தமிழ்நாட்டில் ராஜாஜி ஆரம்பிக்கப்போகும் ஆசிரமத்திற்கு தன் மகன் தேவதாஸ் வரவிருப்பதாகவும் அங்கு இணைந்து கொள்ளும்படியும் காந்தி அறிவுறுத்தியதால் ராஜகோபாலாச்சாரியாருக்கு கடிதம் எழுதினார். அங்கிருந்து மறுமொழி வரவில்லை. எனவே டாக்டர் பாஸ்டரின் ஆசிரமத்தில் சென்று சேர்ந்தார். பெங்களூரின் சேரிப்பகுதி மக்களுக்கு ஆசிரமம் வழியாகச் சேவை செய்தார். ஆசிரமத்தின் சார்பில் மாணவர்களுக்கு மாலையில் கல்வி கற்பித்தார். மது விலக்கு பிரச்சாரம் செய்தார். 1936-ல் நடைபெற்ற மதுவிலக்கு மாநாட்டில் கலந்து கொண்டார். அதன் பின் இந்தியா முழுவது நடந்து பயணம் செய்தார்.
ஜப்பானிய காந்தி என்று அழைக்கப்பட்ட கட்வா (Toyohiko Kagawa) சேரிக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்ட தீர்மானித்திருந்ததால் மீண்டும் பெங்களூர் ஆசிரமம் வந்தார்
1939 ல் அமெரிக்க மிஷனரியில் பணிபுரிந்தவரான ஆர்.ஆர். கெய்தான் ஆரம்பித்த ‘தீன சர்வ சேவா சங்கம் என்னும் அமைப்பில் பணிபுரிந்தார். 1940ல் மதுரைக்குத் திரும்பிவந்தார். என்.எம்.ஆர். சுப்பராமன் நடத்திவந்த தலித் மாணவர்களுக்கான விடுதியில் தங்கியிருந்தார். அம்மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார்.
போராட்டம், சிறை
1942-ல் 'வெள்ளயனே வெளியேறு' இயக்கத்தின்போது மதுரையில் ஊரடங்கு உத்தரவை மீறி ஊர்வலம் சென்றதால் பதினைந்து மாதச் சிறைத்தண்டனை பெற்று ஆந்திராவில் அலிபூர் சிறையில் இருந்தார். விடுதலையாகி வெளியே வந்து ரகசியமாக நடைபெற்ற அனைத்து இந்திய சத்தியாகிரகி மாநாட்டில் கலந்து கொண்டார். கிராமம் கிராமமாகச் சென்று ரகசிய கூட்டங்களை நடத்தி சுதந்திரப் போராட்டத்திற்கான ஆட்களைத் திரட்டினார். மாவட்ட அளவிலான கூட்டங்கள் முற்றுப் பெற்ற பின் மாநில அளவிலான கூட்டத்திற்கான பொறுப்பு சங்கரலிங்கம் ஜெகந்நாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. 1944-ல் ஆங்கிலேய போலீசாரின் கடுமையான கண்காணிப்பையும் மீறி மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஏற்றி கோஷமிட்டார். இதற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சுதந்திரத்திற்குப் பின்
ஜெகந்நாதன் சுதந்திரத்திற்கு முன்னரே கிராமியப் பொருளியல் மற்றும் காந்திய கிராமசுயராஜ்யம் ஆகியவற்றை ஒட்டிய செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
காந்திய அமைப்புகள்
ஜெகந்நாதன் சுதந்திரத்திற்குப் பின் கெய்தானுடன் காந்தியின் டால்ஸ்டாய் பண்ணை போல மாதிரி தன்னிறைவு அமைப்பு ஒன்றை உருவாக்கச் செயல்பட்டார்.
கட்டுமானத்தொழிலாளர் கூட்டமைப்பு
1947-ல் மதுரை மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் கூட்டமைப்பு (Workers home என அறியப்பட்டது) என்னும் அமைப்பை என்.எம்.ஆர்.சுப்பராமனுடன் இணைந்து தொடங்கினார். கெய்த்தான் அவருடன் இணைந்து செயல்பட்டார்.
காந்திகிராம்
ஜே.சி. குமரப்பா மற்றும் சௌந்தரம் ராமச்சந்திரன் ஆகியோரின் ஆதரவுடன் காந்தியத் கிராமத் தொழில் பயிற்சிக்காக ஒரு மையத்தை ஜெகந்நாதன் உருவாக்கினார். அது காந்திகிராமம் என அழைக்கப்பட்டது. அங்கே தொழில்பயிற்சிகள் அளிக்கப்பட்டன. சௌந்தரம் ராமச்சந்திரன் மற்றும் ஜி. ராமச்சந்திரன் ஆகியோரின் பெருமுயற்சியால் காந்திகிராமம் திண்டுக்கல் காந்திகிராமம் என்னும் காந்தியப் பயிற்சி நிலையமாக ஆகியது. காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து காந்திகிராமம் நிகர்நிலைப் பல்கலையாக உள்ளது.
காந்தி சேவா சங்கம்
ஜெகந்நாதன் ஒட்டன்சந்திரம் அருகே சத்ராப்பட்டி என்னும் ஊரில் காந்தி சேவா சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். ஆர். சுப்ரமணியன், வி.ஜி.சிவானந்தம், பி.முத்தையன் போன்றவர்கள் இச்செயல்களில் துணையாக நின்றனர். பின்னர் அவர்கள் வேறு காந்திய அமைப்புகளை உருவாக்கினார்கள்.
சர்வோதய இயக்கம்
1956-ல் தமிழ்நாடு சர்வோதய இயக்கம் தொடங்கப்பட்டது .ஜெகந்நாதன் தமிழக சர்வோதய இயக்கத்தின் தலைவராகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டார். ‘அசோஷியேஷன் ஆஃப் சர்வோதயா ஃபார்ம்ஸ்’ என்ற அமைப்பின் தலைவராக 1993 வரை சங்கரலிங்கம் ஜெகந்நாதன் இருந்தார்.
1962-ல் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த உலக சாந்தி சேனா மாநாட்டில் சர்வோதயா அமைப்பு சார்பில் பங்கெடுத்தார்.
அகில இந்திய சர்வசேவா சங்
அகில இந்திய சர்வசேவா சங் அமைப்பில் ஜெகந்நாதன் தொடர்சியாகப் பணியாற்றினார். அதன் தேசியமாநாடு 1956-ல் காஞ்சீபுரத்தில் நடைபெற்றபோது அதற்கு தலைமை வகித்தார். உத்தரப்பிரதேசம் பாலியாவில் அதன் தேசிய மாநாடு 1966-ல் நிகழ்ந்தபோதும் தலைமைவகித்தார். 23 ஏப்ரல் 1969-ல் அவ்வமைப்பின் தேசியத்தலைவராக தேர்வுசெய்யப்பட்டார்.
ஊழியரகம்
ஜெகந்நாதன் தன் நண்பர் கெய்த்தானுடன் இணைந்து காந்திய ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும்பொருட்டு ஊழியரகம் என்னும் அமைப்பை திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்கு அருகே 1949-ல் தொடங்கினார். இன்றும் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் மற்றும் அவர்களின் மகள் சத்யா ஆகியோரின் செயல்பாடுகளின் மையமாக அந்த இடம் உள்ளது.
நிலப்போராட்டங்கள்
ஜெகந்நாதன் சுதந்திரத்திற்குப் பின்னர் ஏழைமக்களின் நில உரிமைக்காக தொடர்ச்சியாகப் போராடினார். அதன்பொருட்டுச் சிறைசென்றார். அவர் நடத்திய போராட்டங்கள்
முத்திருளாண்டிப்பட்டி போராட்டம் (1948)
மதுரை மேலூர் அருகே முத்திருளாண்டிப்பட்டி என்னும் ஊரில் காமாட்சி நாயக்கர் என்பவர் பெரும்பாலான நிலங்களை வைத்திருந்தார். அவர் அந்நிலங்களில் வாழ்ந்த மக்களை வெளியேற்றச் செய்த முயற்சிக்கு எதிராகப் போராடிய ஜெகந்நாதன் அதன்பொருட்டு கைதானார். அவரைக் கைது செய்ய ஆணையிட்டவர் மதுரை உதவி ஆட்சியராக அன்று பணியாற்றிய அவருடைய சொந்த தம்பியான எஸ்.ஆர்.பூபதி.
கரும்பு போராட்டம் (1949)
1949-ல் தமிழக அரசு வெளியிட்ட ஒரு சட்டம் கரும்பு விவசாயிகள் தங்கள் வயல்களில் வெல்லம் தயாரிப்பதை தடைசெய்தது. அதற்கு எதிராக ஜெகந்நாதன் போராடினார்.
விளாம்பட்டி சத்யாக்கிரகம் (1964)
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்குச் சொந்தமான 37 ஏக்கர் நிலத்தை மணிப்பிள்ளை என்பவர் கையகப்படுத்தி வைத்திருந்ததற்கு அரசு அங்கீகாரம் கொடுக்க முற்பட்டதை எதிர்த்துப் போராடி அந்நிலங்களை மீட்டு விவசாயிகளுக்கு அளித்தார்.
கீழைத்தஞ்சை கோயில் நிலமீட்பு போராட்டம் (1970)
கீழ்வெண்மணி படுகொலை 1968ல் நிகழ்ந்தது. அதை ஒட்டி கீழைத்தஞ்சைக்குச் சென்ற ஜெகந்நாதன் அங்கிருந்த நிலமில்லா விவசாயிகளுக்கு உபரிநிலங்கள் அளிக்கப்படவேண்டும் என்று கோரி தொடர் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் ஈடுபட்டார். ஆலயநிலங்களும் உபரிநிலங்களும் ஏழைகளுக்குக் கிடைக்கும்படிச் செய்தார்
பிகார் நிலப்போராட்டம் (1975)
1975-ல் கிருஷ்ணம்மாளும் ஜெகந்நாதனும் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் கோரிக்கையை ஏற்று பிகாரில் புரி சங்கராச்சாரியாரின் கட்டுப்பாட்டில் இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அளவுள்ள நிலங்களை விவசாயிகளுக்கு அளிக்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இருபதாயிரம் ஏக்கர் நிலங்கள் அவ்வண்ணம் மடத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு முப்பது கிராமங்களைச் சேர்ந்த நிலமில்லா விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இப்போராட்டத்தில் கைதுசெய்யப்பட்ட ஜெகந்நாதன் பக்ஸர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது நெருக்கடிநிலை அமலில் இருந்தமையால் ஜெகந்நாதன் சிறையில் நீடிக்கவேண்டியிருந்தது. ஜனதாக்கட்சி அரசு வந்தபோதுதான் அவர் விடுவிக்கப்பட்டார். நிலப் பங்கீடும் வெற்றிகரமாக நிகழ்ந்தது.
பூதான் இயக்கம்
ஜெகந்நாதன் 1951-ல் வினோபா பாவே நடத்திய பூதான் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். வினோபா பாவே 1954 முதல் 1956 வரை தமிழகத்தில் தன் பயணத்தை மேற்கொண்டபோது தொடக்கம் முதல் உடனிருந்தார்.
மதுரை அலங்காநல்லூர் அருகேயுள்ள கள்ளஞ்சேரி என்ற இடத்தில் விவசாயம் செய்துவந்தவர்களைப் பணக்காரர்கள் விரட்டியடித்தனர். சங்கரலிங்கம் ஜெகந்நாதன் அங்கு சென்று போராடி நிலத்தை இழந்தவர்களுக்கு அதை மீட்டுக் கொடுத்தார்.
1950-1952 ஆண்டுகளுக்கிடையே சங்கரலிங்கம் ஜெகந்நாதன் உத்திரப்பிரதேசத்தில் பூதான் இயக்கத்திற்காக தங்கள் நிலத்தில் ஆறில் ஒரு பங்கினை நிலமற்றவர்களுக்கு நிலக் கொடையாக வழங்க நிலப்பிரபுக்களைக் கேட்டுக்கொண்டு வினோபா பாவேவுடன் பாத யாத்திரையாக சென்றார். புதிதாகத் திருமணமான தன் மனைவியையும் பாதயாத்திரையில் கலந்து கொள்ளச் செய்தார். அப்போது நிலங்களை தானமாகப் பெற்று ஏழைகளுக்கு தானமாக வழங்கினார்.
பின் தமிழ்நாட்டில் அவ்வியக்கத்தை தனியாக முன்னெடுத்தார். வலிவலம் கிராமத்தில் பெருநிலக்கிழார் ஒருவரால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை கிராம மக்கள் மூலமே மீட்டுக் கொடுத்தார். கோணியம்பட்டியில் கடன் கொடுத்து நிலத்தை கையகப்படுத்திக் கொண்ட நிலக்கிழாரிடமிருந்து மக்களுக்கு நிலத்தை மீட்டுக் கொடுத்தார். கீழத் தஞ்சைப் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று 10 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு அளித்தார்.
லாப்டி இயக்கம்
டிசம்பர் 25, 1968-ல் நாகைமாவட்டம் கீழ்வெண்மணியில் நாற்பத்தியிரண்டு விவசாயிகள் கொளுத்தப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு சர்வோதையா அமைப்பிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறி 'உழுபவனின் நில உரிமை இயக்கம்'(லாப்டி) (LAFTI: Land for Tillers’ Freedom) என்னும் அமைப்பை 1981-ல் தொடங்கினர். பாதிக்கப்பட்ட எழுபத்து நான்கு குடும்பங்களுக்கு எழுபத்து நான்கு ஏக்கர் நிலத்தை அரசின் மூலம் அளிக்கும் வரை போராடினார். லாப்டி மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை மீட்டு உழுபவர்களுக்குக் கொடுத்தார். தனக்கு தானமாகக் கிடைத்த பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை ஏழைகளுக்கு பிரித்துக் கொடுத்தார்.
இறால்பண்ணை ஒழிப்பு போராட்டம்
ஜெகந்நாதன் முதிய வயதில் ஈடுபட்ட போராட்டம் 1992ல் தமிழகத்தில் கீழைத்தஞ்சை பகுதி கடலோர நிலங்களை இறால்பண்ணைகள் அமைக்க பெருநிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடுவதை எதிர்த்து நடத்தியது. தங்கள் நிலங்களில் உப்புநீர் புகுந்து வீணாகிவிடும் என போராடிய விவசாயிகளை இணைத்து அப்போராட்டத்தை முன்னெடுத்தார் . இப்போராட்டத்தில் அவருடன் எம். மாரியப்பன் போன்ற சட்டநிபுணர்கள் உடனிருந்தார்கள். ஜெகந்நாதன் தனிநபர் வழக்கொன்றை உச்சநீதிமன்றத்தில் தொடுத்தார். உச்சநீதிமன்றம் NEERI என்னும் அமைப்பை ஆராய்ந்து அறிக்கையிடும்படி பணித்தது. 112 உயர்நிலை வழக்கறிஞர்கள் இறால்பண்ணை முதலாளிகளின்பொருட்டு வாதாடினர். ஆனால் 1996ல் இறால் பண்ணைகளின் அனுமதியை ரத்துசெய்து உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
விருதுகள்
- சுவாமி பிரணவானந்தா அமைதி விருது (1987)
- ஜம்னாலால் பஜாஜ் அமைதி விருது (1988)
- இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது (1989)
- பகவான் மகாவீரர் விருது (1996)
- ரைட் லைவ்லிஹூட் (Right Livelihood Award) விருது (2008)
மறைவு
சங்கரலிங்கம் ஜெகந்நாதன் பிப்ரவரி 12, 2013 அன்று திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள சேவாஸ்ரமத்தில் காலமானார்.
நினைவுகள்
- ஜெகந்நாதனின் சமாதி திண்டுக்கல் காந்திகிராமம் அருகே அவர் உருவாக்கிய ஊழியரகத்தில் உள்ளது
- ஜெகந்நாதனின் பெயரால் ஆண்டுதோறும் சர்வோதய ஜெகந்நாதன் விருது அளிக்கப்படுகிறது.
- லாரா கோப்பா எழுதிய சுதந்திரத்தின் நிறம் என்னும் நூல் ஜெகந்நாதன் -கிருஷ்ணம்மாள் வாழ்க்கையை விவரிக்கிறது
வரலாற்று இடம்
ஜெகந்நாதன் காந்திய இயக்கத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர். அமைதிப்பணிகளிலும் சேவைப்பணிகளிலும் மக்கள்போராட்டங்களிலும் இறுதிவரை ஈடுபட்டிருந்தார். அவரது பங்களிப்பு மூன்று நிலைகளில் மதிப்பிடத்தக்கது.
- காந்திய அமைப்புகள்: காந்தியின் வழியில் சுதந்திரப்போராட்டத்திலும் சமூகப்பணிகளிலும் ஈடுபட்டார். சுதந்த்திரத்திற்கு பின்னர் காந்தியின் ஆணைப்படி அதிகாரத்தை நோக்கிச் செல்லாமல் காங்கிரஸில் இருந்து விலகி கிராம மறுஅமைப்புப் பணிகளில் ஈடுபட்டார். காந்திய அமைப்புக்களை உருவாக்கி கிராமியப்பொருளியல் மறுமலர்ச்சிக்கும், கல்வி மறுமலர்ச்சிக்கும் பணியாற்றினார்.
- காந்தியப் போராட்டம்: அதிகாரத்தை அடைந்தபின்னர் காங்கிரஸ் கட்சி காந்தியக்கொள்கைகளில் இருந்து விலகி நிலவுரிமையாளர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் சாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது அதை எதிர்ந்த்துப் போராடும் சக்தியாக விளங்கினார். அவ்வகையில் உண்மையான காந்தியின் தரப்பாக விளங்கினார். தன் வாழ்நாளின் இறுதிவரை போராட்டக்களத்தில் இருந்தார். தன் போராட்டங்கள் அனைத்தையும் மக்களை ஈடுபடுத்திச் செய்யும் காந்தியவழியிலான அறப்போராட்டங்களாக நிகழ்த்தினார்.
- நிலச்சீர்திருத்தம்: இந்தியாவின் பெரும்பாலான நிலம் பழைய நிலவுடைமைக்காலத்து அமைப்புகளிடம் சிக்கியிருந்தது, அது இந்தியாவின் பொருளியல் முன்னேற்றத்திற்கும் வேளாண்மைவளர்ச்சிக்கும் பெருந்தடையாக விளங்கியது. சுதந்திரத்திற்குப்பின் உண்மையான நிலச்சீர்த்திருத்தங்களை நோக்கி அரசுகள் முன்னகர்வதற்கு அஞ்சின. ஜெகந்நாதன் முன்னெடுத்த நிலவுரிமைப் போராட்டங்கள் நிலச்சீர்திருத்தம் நோக்கி அரசுகளை கட்டாயப்படுத்தும் மக்களியக்கங்களாகச் செயல்பட்டன. அவர் உருவாக்கிய அமைப்புகள் தாங்களே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பெற்று நிலமில்லாத மக்களுக்கு வழங்கின.
நூல்கள்
- 'The color of Freedom’ - இத்தாலியைச் சேர்ந்த லாரா கோப்பா கிருஷ்ணம்மாள், சங்கரலிங்கம் ஜெகந்நாதனுடன் உரையாடியதை நூலாக வெளியிட்டார்.
- ’சுதந்திரத்தின் நிறம்’ - கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு (The Color of Freedom-ன் மொழிபெயர்ப்பு: B.R.மகாதேவன்)
உசாத்துணை
- சுதந்திரத்தின் நிறம்: லாரா கோப்பா: B.R.தமிழில் மகாதேவன்
- Krishnammal and Sankaralingam Jagannathan / LAFTI: rightlivelihood
- Indian Legend: Sankaralingam Jagannathan: livesoftheplanet
- Krishnammal and Sankaralingam Jagannathan Award
- ஆளுமைச்சிற்பி- இணையப்பக்கம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
09-Mar-2023, 07:00:26 IST