under review

கீர்த்தனை

From Tamil Wiki

கீர்த்தனைகள் தமிழில் எழுதப்பட்ட இசை நூல்கள். கீர்த்தனை என்பது புகழ் கூறும் பாடல். இசைக்கூறு மிகுந்து காணப்படும் என்பதால் கீர்த்தனை எனப் பெயர் பெற்றது. கதைகூறல் முறையில் அமைந்த இப்பாடல் வடிவம் பின்னாளில் நாடகக் கலையாக அரங்கேற்றமும் கண்டது. தொடக்கத்தில் மேடையில் ஒரு கதாபாத்திரம் மட்டும் நடிக்கும் படி அமைந்தது. காலப்போக்கில் பலர் பங்கேற்கும் வண்ணம் வடிவம் பெற்றது.

இராம நாடகக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, பராங்குச நாடகம் ஆகியன் இந்நாடக வகையில் குறிப்பிடத்தக்கன.

தோற்றம்

கீர்த்தனைகள் பொ.யு. பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கிய வடிவம். இசைப்பாடல் மூலம் இறைவனின் புகழைப் பாடும் படி தோற்றுவிக்கப்பட்டது பின்னாளில் நாடகமாய் அரங்கேறிய போது மக்கள் பிரச்சனையையும் சொல்வதாகவும் அமைந்தது.

வடிவம்

சிந்து என்ற பாடல் வகையே கீர்த்தனைகளாக வளர்ச்சி பெற்றது. கதை கூறும் முறையிலும், பாடல்களைப் பாடிச் செல்லுதலிலும் ஒருவரால் திறம்பட நடத்திக்காட்டப்படும் பொழுது நாடகக்கூறு மிக்கதாய் விளங்குகிறது. இக்கீர்த்தனைகளின் நாடக வடிவம் தொடக்கத்தில் தனி ஒருவரால் நிகழ்த்தப்பட்டு வந்தது. பின்னர் நாடக வடிவம் பெற்று குழுக்களாயின.

கதை

கீர்த்தனை பாடல்களின் கதைகள் ஒன்றுபோல அமைவதில்லை. கீர்த்தனை என்ற இசை வடிவத்தில் எழுதப்பட்டது.

இராம நாடகக் கீர்த்தனை

இதன் ஆசிரியர் சீர்காழி அருணாசலக்கவிராயர். 18=ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் 258 இசைப்பாடல்களை எழுதி இராம நாடகத்தை உருவாக்கினார். ஸ்ரீரங்கம் அரங்கநாதன் கோவிலில் இவரது நாடகம் அரங்கேறியது. இவர் அசோமுகி நாடகம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். இவர் இராமக்கவிஞன் என்றே அறியப்பட்டார்.

இராம நாடகக் கீர்த்தனைகள்.jpg

இக்கீர்த்தனை இராமாயணத்தைத் தழுவி ஆக்கப்பட்டது. கம்ப இராமாயணத்தில் இருந்து சிறிதும் மாறுபடாமல் அமையப்பெற்றது. இராமநாடகக் கீர்த்தனை பல பதிப்புகளில் வெளியிடப்பட்டது. சங்கராபரண ராகத்தில் அமைந்த 'யாரே என்ரெண்ணாமலே நாளும்’, தோடி ராகத்தில், 'ஏன் பள்ளி கொண்டீரய்யா’, 'யாரோ இவர் யாரோ’ பைரவி ராகம், 'ராமனுக்கு மன்னன் முடிதரித்தாலே’ இந்தோள ராகப்பாடல், ஹுசேனி ராகத்தில் 'எப்படி மனம் துணிந்ததோ சுவாமி’ ஆகிய கீர்த்தனைகள் உதாரணம். இக்கீர்த்தனைகள் இன்றளவும் இசை மேடைகளிலும், நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பாடப்படுகின்றன. இராம நாடகக் கீர்த்தனைகளை எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், என்.சி. வசந்தகோகிலம், திரை நடிகை பானுமதி, மகாராஜபுரம் சந்தானம், மதுரை டி.என். சேஷகோபாலன் போன்றோர் பாடியிருக்கின்றனர்.

அருணாசலக் கவிராயர் காலத்தில் கோவில்களில் அரங்கேறிய போது அவரின் சீடர்கள் இப்பாடல்களைப் பாடி நடிப்பர். கதாபாத்திரத்திற்கு ஏற்ப இவர்கள் ஒப்பனை செய்திருந்தனரா என்ற குறிப்பு கிடைக்கவில்லை. (பார்க்க: இராமநாடகக் கீர்த்தனை)

உதாரணக் கீர்த்தனைகள்

அனுமன் இலங்கைக்குச் சென்று இராவணன் முன் நின்ற போது இராவணன் அனுமனை நோக்கி வினவுவதாக அமைந்தது.

பல்லவி
ஆரடா குரங்கே இங்கேவந்த நீ- ஆரடா குரங்கே
அனுபல்லவி
ஆரடா குரங்கே அறிவாயோ இலங்கையை
வார சிங்காசனம்போல்- வால் இட்டென்னினும் மேல் இட்டிருக்கிறாய் ( ஆரடா)
சரணம்
நிந்தனை சீச்சி நீ ஒரு பூச்சி
இந்திரசித்தன் உன்னோடே எதிர்த்தென்ன கண்காட்சி
இடிக்கவோ -கட்டி அடிக்கவோ- பல்லால்
கடிக்கவோ -ரத்தம் குடிக்கவோ- நீ (ஆரடா)

மோகன ராகத்திலமைந்த விபீஷணன் ஸ்ரீராமனைத் தரிசனம் செய்த கீர்த்தனை.

பல்லவி:
ராமனைக் கண்ணாரக் கண்டானே- விபீஷணன்கை
மாமுடிமேல் வைத்துக் கொண்டானே
அனுபல்லவி:
காமனும் செங்கமலப் பூமனும் மணிமார்
தாமனை ஆயிர நாமனைக் கோதண்ட (ராமனை)
சரணம்:
வெள்ளம் ஆனவானர வர்க்கநடுவே தம்பி
மேருமலைபோல் அருகே நிற்கப் பூணில்லா மார்பம்
புள்ளிவில் போடாதமேகம் ஒக்கத் தோள்வளை நீங்கிப்
பூட்டில்லா மந்தரம்போல் கோபிக்க மூன்றுலோகமும்
(இரண்டாம்காலத்தில் பாடவேண்டும்)
கள்ள அரக்கர் தினம் கிள்ளிகிள்ளி அருந்த
கொள்ளை கொடுத்தமரர் துள்ளித்துள்ளி வருந்த
வள்ளல் ஆதிமுறை உள்ளபடி திருந்தப்
பள்ளி அரவணையைத் தள்ளி எழுந்திருந்த (ராமனை)

நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

கோபால கிருஷ்ண பாரதியால் இயற்றப்பட்டது இக்கீர்த்தனை. நந்தனின் கதையைச் சொல்வது. பெரியபுராணத்தில் இடம்பெற்றுள்ள திருநாளைப்போவார் புராணக் கதையைத் தழுவி எழுதப்பட்டது. தாழ்ந்த குடியில் பிறந்த நந்தன் உயர்சாதியினருக்கு அடிமை வேலைப் பார்க்கிறான். உயர் குலத்தவர் வழிப்படும் சிவனை தானும் வழிப்படுவதில் உறுதியாக இருக்கிறான். தில்லை சென்று சிவனை வழிபடுவது தான் அவனது இறுதி ஆசையாக இருக்கிறது. இதை நந்தனின் பண்ணையார் எதிர்க்கிறார். இறுதியில் பண்ணை வேலைகளை முடித்துவிட்டு செல்ல அனுமதிக்கிறார். தோட்டத்தில் அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு தூங்கச் செல்கிறான். மறுநாள் கண்விழித்த போது முற்றிய விளை மணிகளுடன் வயற்காடு இருப்பதைக் கண்டான். பண்ணையார் ஓடி வந்து நந்தனின் காலில் விழுந்து பணிந்தார். நந்தனை உடனே தில்லை செல்லும் படி கூறினார். உயர் சாதி மக்கள் ஒன்று சேர்ந்து நந்தனின் தரிசனத்தை எதிர்க்கின்றனர். சிவன் நந்தனின் கனவில் தோன்றி அவனுக்கு தரிசனம் தருகிறார். நந்தன் சிவதரிசனம் காணும் போது கதை முடிகிறது. பார்க்க: நந்தனார் சரித்திரம்.

நாடக அமைப்பு முறை

முதலில் திறமைமிக்க இசைக்கலைஞர் ஒருவர் முழு நாடகத்தையும் நடத்திச் சென்றார். இதில் உரிய இசைக்கருவிகள் முழங்க, கதை வளர்ந்து செல்லும். காலப்போக்கில் கீர்த்தனைகள் பலர் சேர்ந்து நடிக்கும் நாடகமாக உருமாற்றம் பெற்றது. உதாரணமாக, கோபால கிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை பல கலைஞர்கள் பங்கேற்று நடிக்கும் படி அமையப் பெற்றுள்ளது. மேலும் பொது மக்கள் புரிந்துக் கொள்ளக் கடினமான காப்பியங்கள் இசை கலந்து எளிய நடையில் மக்களிடம் கொண்டு செல்லும் கீர்த்தனைகளாக மாறின. இராம நாடகக் கீர்த்தனை இவ்வகையில் பிரபலமானது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page