under review

தமிழிலக்கியத்தில் அகலிகை கதை

From Tamil Wiki

தமிழிலக்கியத்தில் சங்க காலப் பாடல்கள் முதல் நவீன இலக்கியம் வரை அகலிகையின் கதை வெவ்வேறு வடிவங்களில் இடம்பெறுகிறது. பரிபாடல் அகலிகை கதையைப் பாடும் முதல் தமிழ் இலக்கியம். நவீன தமிழ் இலக்கியத்தில் புதுமைப்பித்தன் சாபவிமோசனம், அகலிகை என இரண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார்.

அகலிகையின் கதை இடம்பெறும் தமிழிலக்கியங்கள்

பரிபாடல்

பரிபாடலின் பத்தொன்பதாம் பாடலை எழுதியவர் நப்பண்ணனார். திருப்பரங்குன்றம் செவ்வேளைப் பற்றியது இப்பாடல். திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருபவர்கள் குகை ஓவியங்களைப் பார்க்கின்றனர். அதில் பூனையாய் மாறிய இந்திரன், அகலிகை, கவுதமர் ஆகியோரின் உருவங்களும், அகலிகை கல்லாய் மாறிய சித்திரமும் உள்ளது. இதனை ஆய்வு செய்த முனைவர் அ.கா. பெருமாள் பரிபாடல் காலத்தில் அகலிகை கதை பரவலாக அறியப்பட்ட கதையாக இருந்திருக்க வேண்டுமெனக் கருதுகிறார். பரவலாகத் தெரிந்த கதையையே சிற்பம் அல்லது சித்திரமாக வடிக்கும் வழக்கம் இருந்தது எனக் குறிப்பிடுகிறார்.

திருக்குறள்

அகலிகை பற்றிய செய்தி திருக்குறளில் நேரடியாகக் கூறப்படவில்லை என்றாலும் அதன் உரையாசிரியர்கள் இரண்டு பாடலுக்கு உரை எழுதும் போது அகலிகை-இந்திரன் கதையை உதாரணமாக சுட்டுகின்றனர்.

நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தில்,

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி

என்ற குறளுக்கு பரிமேலழகர் உரையில், “ஐந்து புலன்களால் உண்டாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு அகன்ற வானத்தில் உள்ள தேவர்களுக்குத் தலைவனான தேவேந்திரனே சான்று ஆவான்” என்கிறார். திருக்குறள் காலத்தால் சங்க காலத்திற்கு பிந்தையது என்பதால் குறள் இயற்றப்பட்ட காலத்தில் இந்திரன் அகலிகை கதையை சுட்டியே இப்பாடல் இயற்றப்பட்டிருக்கிறது என பிற உரையாசிரியர்களும், ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.

'இல் விழையாமை' என்னும் அதிகாரத்தில்,

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறன்இல் புகல்

என்ற குறளுக்கு பரிமேலழகர் இந்திரனையே உதாரணமாகத் தன் உரையில் குறிப்பிடுகிறார். பரிமேலழகர் ‘என்னாம்’ என்னும் சொல்லிற்கு 'இந்திரன் போல் எல்லாப் பெருமையும் இழந்து' என விளக்கம் தருகிறார். பரிமேலழகருக்குப் பின்னால் வந்தவர்களும் இதனை ஏற்றுக் கொள்கின்றனர். பரிமேலழகரின் காலம் பொ.யு. 11-ம் நூற்றாண்டு. அக்காலத்திலும் அகலிகை கதை செவ்விலக்கியங்களில் செல்வாக்குடன் இருந்திருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

கம்ப ராமாயணம்

கம்ப ராமாயணத்தின் பால காண்டத்தில் அகலிகையின் கதை வருகிறது. விசுவாமித்திரரின் யாகத்திற்குத் தடையாக வந்த தாடகையை வதம் செய்த ராமலட்சுமணர் கங்கையில் நீராடிவிட்டு விசால நகரத்திற்கு வருகின்றனர். மறுநாள் விதேக நாட்டின் தலைநகரான மிதிலைக்கு வரும் போது விசால நகரத்திற்கும், மிதிலை நகரத்திற்கும் இடையில் காட்டில் கவுதமரின் ஆசிரமம் இருக்கிறது.

காட்டின் வழியாக வந்த ராமன் கவுதமரின் ஆசிரமத்தைக் காண்கிறான். அதில் மனிதர்கள் யாரும் இல்லாததைக் கண்டு விசுவாமித்திரரிடம் ஆசிரமத்தின் வரலாற்றைக் கேட்கிறான். ராம லட்சுமணர்களுக்கு விசுவாமித்திரர் அகலிகையின் கதையைச் சுருக்கமாகச் சொல்கிறார்.

கம்பனின் ராமாயணத்தில் அகலிகை வந்திருப்பது தேவருக்கு அரசன் என்று தெரிந்தே உடலுறவு கொள்கிறாள். அதன் பின் இந்திரனிடம் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் படி அகலிகை சொல்கிறாள். இந்திரன் காட்டில் தன் எதிரில் செல்லும் போது கவுதமர் நடந்ததை அறிகிறார். தன் வடிவில் வந்த இந்திரனைப் பார்த்து, "செய்யதகாத காரியத்தை செய்த நீ நபும்சகனாய்ப் போவாய்" என சாபமிடுகிறார். பின் அகலிகையை பார்த்து, ‘நீ காற்றை உணவாகக் கொண்டு சாம்பல் மேல் படுத்து யார் கண்ணுக்கும் தென்படாமல் நீண்ட காலம் மறைந்து இருப்பாய். ஒரு நாள் தசரதனின் மகன் வருவான். அவன் கால் பட்டதும் நீ சாபம் தீர்ந்தவள் ஆவாய்" எனச் சொல்லி இமயமலைக்குச் செல்கிறார்.

இக்கதையை கேட்ட ராமன் கவுதமரின் ஆசிரமத்துக்குள் காலை வைத்தான். அகலிகை சாபம் தீர்ந்து மீண்டும் பேரழகுடன் எழுந்து நின்றாள். ராம, லட்சுமணர் இருவரும் அவள் பாதங்களைத் தொட்டு வணங்கினர்.

கம்ப ராமாயணத்தில் அகலிகை கதை மூன்று இடத்தில் வருகிறது. பால காண்டம் -அகலிகை படலத்தில் பதினேழு பாடல்களில் கதை வருகிறது. மாமன் மாரீசன் இராவணனிடம் சீதையை கவர்ந்து சிறைவைத்தது தவறு என அறிவுரை கூறும் போது,

அந்தர முற்றான் அகலிகை பொற்பால் அழிவுற்றார்
இந்திர னொப்பார் எத்தனையோர் தாம் இழிவுற்றார்

என்கிறார். இது மாரீசன் வதைப்படலத்தில் வரும் பாடல்.

மாயாசனக படலத்திலும் அகலிகை பற்றிய கதை வருகிறது. அசோகவனத்தில் சிறையிலிருந்த சீதையிடம் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு ராவணன் கேட்கிறான். அப்போது ராவணன்,

அந்தரம் உணரின் மேனாள் அகலிகை என்பாள் காதல்
இந்திரன் கரத்தைப் புல்லி எய்தினாள் இழுக்குற்றாளே

என்கிறான். ராவணன், அகலிகை இந்திரனைத் தழுவியதால் மாசடையவில்லை எனவே சீதையும் தன்னை ஏற்றுக் கொள்ளலாம் எனக் குறிப்பிடுகிறான்.

பத்மபுராணம்

பத்ம புராணத்தில் இந்திரன் தன்னை விரும்புவதை அறிந்த அகலிகை தன் மாய வடிவத்தை அனுப்புவதாகக் கதை வருகிறது. அகலிகை ஆசிரமத்திலேயே இருக்கிறாள். அவளின் தவத்தால் மாயை இந்திரனிடம் செல்கிறாள். வான்மீகியின் காலத்து யதார்த்தம் குறைந்து பெண்ணின் கற்பு வலியுறுத்தப்பட்ட காலத்தில் வாய் மொழி மரபில் இக்கதை தோன்றியிருக்காலம் என ஆய்வாளர் அ.கா. பெருமாள் கருதுகிறார்.

அகலிகை வெண்பா

கம்பனுக்கு பின் வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் எழுதிய 'அகலிகை வெண்பா' என்னும் நூலில் இந்திர காண்டம், அகலிகை காண்டம், கவுதமர் காண்டம் என்னும் மூன்று காண்டங்களாக 282 வெண்பாக்கள் உள்ளன.

வெள்ளைக்கால் ப. சுப்பிரமணிய முதலியாரின் 'அகலிகை வெண்பா' ராமாயணக் கதை நிகழ்த்துபவர்களின் பேச்சுகளையும் அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது. முதலியார் அகலிகையின் வரலாற்றை அவளது பிறப்பிலிருந்து தொடங்கிப் பாடுகிறார். பாற்கடலில் பிறந்த அகலிகையை இந்திரன் தனக்கு வேண்டும் என்றான், கவுதம முனிவரும் தனக்கு வேண்டுமெனக் கோரினார். அகலிகை யாருக்கு உரியவள் எனக் கன்னியாசுல்கம் வழி முடிவு செய்யலாம் என பிரம்மா உத்தரவிடுகிறார். பிரம்மா, “கங்கை நதியின் ஆழமான பகுதியில் யார் நீண்ட நேரம் மூழ்கி இருக்கிறாரோ அவரே அகலிகைக்கு உரியவர்” என நிபந்தனை விடுத்தார்.

அதனை இந்திரன் மறுத்ததால் இரண்டு தலையுள்ள பசுவை யார் முதலில் பார்க்கிறாரோ அவரே அகலிகையை உரிமை கொண்டாட முடியும் என பிரம்மா சொன்னார். இதற்கு ஒப்புக் கொண்ட இந்திரன் மேகத்தின் மேல் ஏறி இருதலைப் பசுவைத் தேட ஆரம்பித்தான். கவுதமர் நாரதரிடம் சென்று வழி கேட்டார். நாரதர் கவுதமரை மாட்டுப் பண்ணை ஒன்றிற்கு அழைத்துச் சென்று அங்கு கன்று ஈனும் தருணத்தில் இருந்த பசுவின் முன் நிற்கச் சொன்னார். பசுவின் யோனியிலிருந்து குட்டியின் முகம் முதலில் வெளிவரும் போது பசுவை வலம் வரும்படி சொன்னார். தன் நிபந்தனையை முதலில் இயற்றிய கவுதமருக்கு அகலிகையை மணம் செய்து வைத்தார் பிரம்மா.

இந்திரன் அகலிகையைத் தனியாக சந்தித்து மணம் செய்ய விருப்பம் தெரிவித்தான். அகலிகை இந்திரனின் சொல் கேட்டு அவனைப் பழித்தாள். இருவரின் உரையாடலின் முடிவில் இந்திரன் அகலிகையுடன் வல்லுறவு கொண்டான். அகலிகையைக் காண வந்த கவுதமர் நடந்ததை அறிந்து, இந்திரனை அழைத்து சாபம் கொடுத்தார். அகலிகையிடம் , “நீ மனதால் பிறனை விழையவிலை. உன்னில் இந்த நினைவு மங்க வேண்டும். அதற்கு நினைவற்ற நிலையில் நீ இருக்க வேண்டும். அதனால் நீ கல்லாய் இரு. தசரதனின் மகன் வந்து உன்னை மீட்டெடுப்பான்” என அகலிகையிடம் கூறினார் என வெள்ளைக்கால் முதலியாரின் அகலிகை வெண்பா சொல்கிறது.

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் அகலிகையின் கதையை மையமாகக் கொண்டு ஊழியன் இதழில் 'அகலிகை' சிறுகதையும் ( ஆகஸ்ட் 24,1934) கலைமகள் இதழில் 'சாபவிமோசனம்' என்ற சிறுகதையும் (மே 1943) எழுதியுள்ளார்.

சிந்து நதியில் நீராடும் அகலிகையை பார்த்த இந்திரனுக்கு அவள் மேல் ஆசை வருகிறது. அன்றிரவு இந்திரன் கவுதமரின் வடிவில் வந்து அகலிகையை புணர்ந்தான். அகலிகை வந்தது இந்திரன் என அறிந்து அவனை விரட்டினாள். தன் குடில் மீண்ட கவுதமர் இந்திரனை மன்னித்தார். மனைவியைச் சமாதானம் செய்து ஏற்றுக் கொண்டார் என புதுமைப்பித்தனின் அகலிகை கதை சொல்கிறது.

'சாபவிமோசனம்' கதையில் ராமனால் தன் சாபம் நீங்கிய அகலிகை கவுதமருடன் ஆசிரமத்தில் வசிக்கிறாள். ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. ராமன் வனவாசம் முடிந்து திரும்பி வரும்போது அவனிடம் தன் மனக்குறையை சொல்லக் காத்திருக்கிறாள். அயோத்தி திரும்பிய ராமன் சீதையை அக்கினி ப்ரவேசம் செய்யச் சொன்ன போது அகலிகையின் மனம் கல்லாகி விடுகிறது. அகலிகை மீண்டும் கல்லானதும், கவுதமர் துறவியானார் எனக் கதை முடிகிறது. ஜெயகாந்தன் தன் 'அக்கினிப் ப்ரவேசம்' கதையை எழுத புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்' கதை தூண்டுதலாக இருந்தது என எழுத்தாளர் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.

நாட்டார் வழக்காற்றில் அகலிகை

ராமாயணத்தின் கிளைக் கதையான அகலிகை கதை நாட்டார் வழக்காற்றைப் பாதித்துள்ளது. அகலிகையின் பேரழுகு, அவள் கற்பிழத்தல், இந்திரன் உடம்பெல்லாம் யோனியாகும்படி பெற்ற சாபம் போன்ற கதைகள் நாட்டார் வழக்காற்றுக்குக் கவர்ச்சியை அளித்துள்ளன.

ஆசிரமத்திலிருந்து கவுதமர் வெளியே நீராடச் செல்வதற்காக இந்திரன் கோழியாக மாறிக் கூவுவது, கவுதமரைக் கண்டதும் பூனையாக மாறிச் செல்வது போன்ற நிகழ்ச்சிகள் வாய்மொழி மரபிலிருந்து கம்பன் எடுத்தாண்டவை. இந்திரனின் உடம்பில் ஆயிரம் யோனிகள் தோன்றட்டும் என்ற கௌதமரின் சாபம் கம்ப ராமாயணத்திலேயே முதலில் வருகிறது. இது பத்ம புராணத்திலும் உள்ளது. இப்படி கவர்ச்சியாக சாபம் கொடுக்கும் வழக்கம் வாய்மொழி மரபில் உண்டு என நாட்டார் ஆய்வாளர் அ.கா. பெருமாள் குறிப்பிடுகிறார்.

தேவர்கள் சென்று இந்திரனுக்காக சாப விமோசனம் கேட்ட போது கவுதமர், “மற்றவர் கண்களுக்கு இந்திரனின் உடம்பில் உள்ள யோனிகள் மறையட்டும். இந்திரனின் கண்களுக்கு மட்டும் தெரியட்டும்” எனச் சாப விமோசனம் கூறும் வாய்மொழி மரபு தோல்பாவைக்கூத்திலும், கணியான் ஆட்டப் பாடலிலும் உள்ளது.

பிரம்மா இந்திரனுக்கும், கவுதமருக்கும் இரட்டைத் தலை பசுவைக் காணும் போட்டி நிகழ்த்துவது வான்மீகியிலும், கம்பனிலும் இல்லாதது. தோல்பாவைக் கூத்து ராமாயணத்தில் அகலிகையின் கதை வருகிறது. இதில் இந்திரன் ஆசிரமத்திலிருந்து சேவலாக வடிவெடுத்துத் தப்புகிறான். அப்போது கவுதமரிடம், “முன்பு ஒரு முறை உம்மிடம் தோற்றேன். அதற்கு பழிவாங்கவே இப்போது வந்தேன்” என்று கூறுவதாக வருகிறது.

கவுதமர் இந்திரனுக்கு சாபம் கொடுத்த பின், “உன் யோனிகளைப் பார்த்து ஆண்கள் உன்னை நாய்போல் துரத்தட்டும்” எனக் கூறுகிறார். இந்த வாய்மொழி சாபம் களியாட்டக் கதைப் பாடலில் வருகிறது.

புதுமைப்பித்தனும் தன் கதையில் இந்திரன் கோழியாய்க் கூவியதையும், கவுதமர் ஈனும் பசுவைக் காணும் போட்டியில் வெல்வதையும் வாய்மொழி மரபிலிருந்து எடுத்தாண்டிருக்கிறார். இக்கதைகளை வெள்ளைக்கால் முதலியாரின் அகலிகை வெண்பாவிலிருந்து புதுமைப்பித்தன் அறிந்திருக்கலாம் என ஆய்வாளர் அ.கா. பெருமாள் கருதுகிறார்.

வான்மீகி ராமாயணத்தில் அகலிகை கதை

வான்மீகி ராமாயணத்தில் வரும் அகலிகை கதையே நமக்கு கிடைத்த அகலிகை கதையின் முதல் வடிவம். இதில் அகலிகை பிரம்மாவால் படைக்கப்பட்டவள். அவள் ஆசிரமத்திற்கு வந்தது இந்திரன் என்ற தெரிந்தும் தன்னை இந்திரனே விரும்பினான் என்ற கர்வத்தால் அவனிடம் உறவு கொள்கிறாள். அவன் ஆசை பூர்த்தியான பின்பு நீ போய் வா என விடையும் கொடுத்தனுப்புகிறாள்.

யோகவாஷிஸ்டம்

வான்மீகி முனிவரின் பெயரில் உள்ள யோகவாஷிஸ்டத்தில் அகலிகையின் கதை உள்ளது. ராமனுக்குத் தத்துவம் உணர்த்துவதற்காகக் கூறப்படும் ஞானவாஷிஸ்டத்தின் ஆறு பிரகரணங்களில், உற்பத்திப் பிரகரணத்தில் அகலிகை கதை வருகிறது.

மகத நாட்டை இந்திரத் துய்ம்மன் என்ற அரசன் ஆண்டான். இவனது மனைவியான அகலிகை பேரழகி. இந்திரன் என்ற இளைஞனுக்கும் அகலிகைக்கும் காதல் ஏற்படுகிறது. இந்திரத் துய்ம்மன் இருவரின் உறவு பற்றி அறிந்ததும் இருவருக்கும் தண்டனை வழங்கினான். இருவரையும் தண்டனை பாதிக்கவில்லை. இருவரும் சிரித்தபடி இருந்ததால் இந்திரத் துய்ம்மன் இருவரையும் அழைத்து, “கொடிய தண்டனையிலும் இருவரும் சிரிக்க காரணம் என்ன?” என வினவினான்.

அதற்கு அகலிகை, “மனம் ஒரு பொருளில் பற்று வைத்த பின் அதன் கண் அழுந்தி நிற்குமானால் உடல் துன்பப்படாது. அதை மனமும் உணராது” எனப் பதில் கூறினாள். அவளது பதிலைக் கேட்ட இந்திரத் துய்ம்மன் இருவரையும் தன் நாட்டை விட்டு அனுப்பினான் என்ற கதை உள்ளது.

ஐந்து கன்னிகைகள்

வான்மீகி காலத்திலேயே அகலிகையை ஐந்து கன்னிகளில் ஒருத்தியாக குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது. வான்மீகி அகலிகையை ”பஞ்சகன்யா அமரேந்நித்யம்” எனக் குறிப்பிடுகிறார். இந்த வரிசை காலப் போக்கில் மாறுபட்ட போது அகலிகைக்கு இதில் இடமிருந்துள்ளது (பார்க்க: பஞ்ச கன்னிகைகள்).

உசாத்துணை

  • காலம் தோறும் தொன்மங்கள், அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம்


✅Finalised Page