under review

நப்பண்ணனார்

From Tamil Wiki

நப்பாண்னார் சங்க காலப் புலவர்களுள் ஒருவர். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் அவர் எழுதிய முருகனைப் பற்றிய பாடல் ஒன்று இடம்பெறுகிறது. இந்தப் பாடலுக்கு மருத்துவன் நல்லச்சுதனார் என்னும் இசைவாணர் இசை அமைத்துக் காந்தாரப் பண்ணில் பாடியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

நப்பண்னனாரின் இயற்பெயர் பண்ணன். சிறுகுடிகிழான் பண் திறம் அறிந்தவர் என்பதனாலோ, அன்றிப் பண்ணையும் உடையவராதலாலோ இப் பெயரினைப் பெற்றவராக இருக்கலாம். நப்பண்ணனார் பாண்டிய நாட்டில் பிறந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

நப்பண்னனார் பாடிய பாடல் பரிபாடலில் 19-ம் பாடலாக இடம் பெறுகிறது. இவர் பாடல் செவ்வேளைக் குறித்தது. கூடலின்(மதுரை) பெருமையையும், பாண்டிய மன்னனின் ஆட்சித் திறத்தையும் பாடுகிறார். திருப்பரங்குன்றத்தின் மலைவளமும், முருகனை தரிசிக்க வந்த மக்களின் காட்சியும், கோலாகலமும் கூறப்படுகின்றன. தெய்வானையுடன் மணக்கோலத்தில் முருகப்பெருமான் கோவில் கொண்ட கோலமும் கூறப்படுகிறது. அகலிகை பெற்ற சாபம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

பாடலினால் அறியவரும் செய்திகள்

  • செவ்வேள் திருப்பரங்குன்றத்தில் மணக்கோலத்தில் தெய்வானையோடு கோவில் கொண்டவன்.
  • வேதமுறையில் தெய்வானையை மணம் செய்த முருகன் களவு முறையும் சிறந்ததே என உலகம் அறியும் வண்ணம் வள்ளியைக் களவு மணம் புரிந்தான்.
  • பாண்டிய மன்னன் தன் குடும்பம் மற்றும் பரிவாரத்துடன் பரங்குன்றை வலம் வந்து வணங்குகிறான்.
  • திருப்பரங்குன்றத்தில் குரங்குகளுக்கு தின்பண்டங்களைச் சிலர் தருகிறார்கள்; யானைகளுக்குக் கரும்புகளைத் தருகிறார்கள்; சிலர் தெய்வீகமான பிரமவித்தையைப் பற்றி பேசுகிறார்கள்; சிலர் குழல் இசைக்கிறார்கள்; சிலர் யாழ் இசைக்கிறார்கள்; சிலர் வேள்வியின் பெருமைகளைச் சொல்கிறார்கள்; சிலர் முரசுகளை ஒலிக்கிறார்கள்.
  • திருப்பரங்குன்றத்தின் எழுத்து நிலை மண்டபத்தில் மன்மதன், ரதி, அகலிகை சாபம் பெற்ற காட்சி போன்ற பல ஓவியங்கள் இருந்தன.
  • பெண்கள் யானைக்குப் பூசை செய்து அது உண்ட மிச்சத்தை உண்கிறார்கள். யானையை வழிபட்டு அது உண்ட மிச்சத்தை உண்ணும் பெண்கள் தங்கள் துணைவரைப் பிரியமாட்டார் என்றும், பிரிந்தவர் கூடுவர் என்றும் அக்காலத்தில் ஓர் நம்பிக்கை நிலவியது[1].

பாடல் நடை

பரங்குன்றை நோக்கி விடியலில் யாத்திரை செய்கின்ற வழி

புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்,
கலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை,
அறம் பெரிது ஆற்றி, அதன் பயன் கொண்மார்,
சிறந்தோர் உலகம் படருநர் போல,
உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி,
புரி மாண் புரவியர், போக்கு அமை தேரர்,
தெரி மலர்த் தாரர், தெரு இருள் சீப்ப, நின்
குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு
நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய
தார் போலும், மாலைத் தலை நிறையால் தண் மணல்
ஆர் வேலை யாத்திரை செல் யாறு;

குன்றில் சுற்றத்தாரை விட்டுப் பிரிந்த சிறுமி

பிறந்த தமரின் பெயர்ந்து, ஒரு பேதை,
பிறங்கல் இடைஇடைப் புக்குப் பிறழ்ந்து, "யான்
வந்த நெறியும் மறந்தேன்; சிறந்தவர்
ஏஎ, ஓஒ!" என விளி ஏற்பிக்க,
"ஏஎ, ஓஒ!" என்று ஏலா அவ் விளி
அவ் இசை முழை ஏற்று அழைப்ப, அழைத்துழிச்
செல்குவள் ஆங்குத் தமர்க் காணாமை
மீட்சியும், கூஉக் கூஉ மேவும் மடமைத்தே
வாழ்த்து உவப்பான் குன்றின் வகை;

இள மகளிரின் மருட்சி

நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச்
சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப,
உதிர்த்த சுனையின் எடுத்த தலைய
அலர் முகிற் உற, அவை கிடப்ப,
தெரி மலர், நனை, உறுவ,
ஐந் தலை அவிர் பொறி அரவம்; மூத்த
மைந்தன்; அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு" என
ஆங்கு இள மகளிர் மருள

பெண்கள் செய்யும் பூசையில் யானையின் மிச்சிலை உண்ணுதல்

நின யானைச் சென்னி நிறம் குங்குமத்தால்
புனையா, பூ நீர் ஊட்டி, புனை கவரி சார்த்தா,
பொற் பவழப் பூங் காம்பின் பொற்குடை ஏற்றி,
மலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்,
பல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்,
கன்னிமை கனிந்த காலத்தார், நின்
கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார்
முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம்
குறுகிச் சிறப்பு உணாக்கால்;

முருகப் பெருமானை வாழ்த்துதல்

குறப் பிணாக் கொடியைக் கூடியோய்! வாழ்த்துச்
சிறப்பு உணாக் கேட்டி செவி;
உடையும் ஒலியலும் செய்யை; மற்று ஆங்கே
படையும் பவழக் கொடி நிறம் கொள்ளும்;
உருவும் உருவத் தீ ஒத்தி; முகனும்
விரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி;
எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து,
தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி,
அவ் வரை உடைத்தோய்! நீ இவ் வரை மருங்கில்
கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்;
உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம், தொழுதே

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. பரிபாடல் மூலமும் உரையும்-புலியூர் கேசிகன் (பக்: 172)


✅Finalised Page