under review

தோல்பாவைக் கூத்து

From Tamil Wiki
தோல்பாவை.jpg

தோல்பாவைக் கூத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நிகழும் நாட்டார் நிகழ்த்துக் கலைகளுள் ஒன்று. தோலில் வரையப்பட்ட வண்ணப் படங்களை விளக்கின் ஒளி ஊடுருவிச் செல்லும் திரைச்சீலையில் பொருத்தி, கதையின் போக்கிற்கு ஏற்ப உரையாடி, பாடி, ஆடிக் காட்டும் கலை. தோல்பாவைக் கூத்து - ‘தோலால் ஆன பாவையைக் கொண்டு நடத்தும் கூத்து’. கணிகர் இனக்குழுவின் மண்டிகர் சாதியினர் நிகழ்த்தும் கலை இது.

பார்க்க: மண்டிகர்

தோல்பாவைக் கூத்து

தோல்பாவைக் கூத்து அரங்கு
அரங்கு

தோல்பாவைக் கூத்திற்கான அரங்கு கூத்து நிகழும் இடம், பார்வையாளர்கள் இடம் என இரண்டு பகுதிகளைக் கொண்டது. கூத்து நிகழும் இடம் ஓலைக் கூரையால் வேயப்பட்டிருக்கும். கலைஞர்கள் கூத்து நிகழ்த்தும் இடத்தை இரவில் பெண்கள் தூங்குவதற்கும், பகலில் தங்கும் இடமாகவும் பயன்படுத்தினர். கூத்தரங்கு மழைக்கு பாதுகாப்பாகப் பெரிதாக கட்டப்பட்டது.

கலைஞர்களுக்கு எல்லாம் இலவசமாகக் கிடைத்த காலகட்டத்தில் பார்வையாளர்கள் வெட்டவெளியில் அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்தனர். பார்வையாளர்களின் இடத்தை சுத்தப்படுத்துவது, சமன்படுத்துவது போன்ற வேலைகளை ஊர்க் காவலர்கள், சலவைத் தொழிலாளர்கள் மேற்கொண்டனர். கூத்துக்கு டிக்கட் வசூலிக்கும் நிலை வந்ததும் அரங்கின் அமைப்பும் மாறியது. நாடோடிக் கலைஞர்களான மண்டிகர்கள் கூத்து அரங்கு செய்ய தேவைப்படும் பொருட்களை சுமந்து செல்ல முடியாமல் ஆகினர். அதனால் ஓலைக் கூரைக்கு பதிலாக தார்ப்பாயைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

கூத்தரங்கின் நீள அகலம் நிலையாக இருந்ததில்லை. 1970 களில் கூத்தரங்கின் நீள அகலம் 2.25 முதல் 2.75 மீட்டராகவும் (கலைஞனின் கால்பாதத்திற்கு 9 முதல் 11 எண்ணிக்கை), உயரம் 3 முதல் 3.5 மீட்டராகவும் இருந்தது. அரங்கின் சுற்றுச்சுவர்கள் சாதாரணத் துணியாலும், திரைச்சீலையின் கீழ்ப்பகுதி கறுப்புத் துணியாலும் கட்டப்படும் வழக்கம் இருந்தது. அதற்கு முந்தையக் காலங்களில் ஓலைகளைப் பயன்படுத்தினர்.

தோல்பாவை2.jpg
திரைச்சீலை

ஊர்க்காரர்கள் கூத்திற்கான பொருட்களை இலவசமாகக் கொடுத்த காலத்தில் திரைச்சீலைக்குரிய வெள்ளைத் துணியையும், அதன் சுற்றுப்பகுதியை மறைக்கும் துணியையும் ஊர் சலவைக்காரரே கொடுக்கும் முறை இருந்தது. இந்தத் துணியைக் கலைஞர்கள் கூத்து முடிந்ததும் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஊர்க்காரர்கள் கூத்துக் குழுவின் தலைவருக்கு புது வேட்டியையோ, வெள்ளைத் துண்டையோ இலவசமாகக் கொடுப்பர். இவை திரைச்சீலையாகவும் மாறும். திரைச்சீலையை ஊர் சலவைக்காரர் துவைத்துக் கொடுக்கும் வழக்கமும் இருந்தது. டிக்கெட் வைத்து கூத்து நடக்க ஆரம்பித்ததும் கலைஞர்கள் நிரந்தர திரைச்சீலையைத் தயாரிக்கத் தொடங்கினர். இச்சீலை 2.70 மீட்டர் நீளமும், 90 செ.மீ அகலமும் கொண்டது. சில குழுக்கள் திரைச்சீலையைச் சுற்றிக் கறுப்பு பார்டர் வைத்துத் தைத்துக் கொண்டனர்.

தோல்பாவைக் கூத்து நிகழ்த்துபவர் (பாவையாட்டி)
விளக்கு

தோல்பாவைக் கூத்தில் விளக்கின் ஒளி பாவைகள் மேல்பட்டு ஊடுருவி திரையில் தெரிவதன் மூலம் உயிர் பெறுகின்றனர். இதனுடன் குரலும் சேர்ந்து அதற்கு நாடகத்தன்மை அமைகின்றன. பிற மாநிலக் கலைஞர்கள் போலத் தமிழகத் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களும் ஆரம்பகாலத்தில் எண்ணெய் விளக்கைப் பயன்படுத்தினர். கூத்தரங்கில் விளக்கு பாவையாட்டியின் தலைக்கு பின்புறம் இருக்க வேண்டும். அவரின் தலை நிழல் திரையில் படாதவாறு விளக்கு தொங்க வேண்டும். விளிக்கின் திரியைப் பெரிதாகக் கொண்டு திரியைத் தூண்டிவிட்டுக் கொண்டேயிருப்பர்.

தமிழகப் பாவைக் கூத்து விளக்கின் தன்மைக்கு ஏற்ப மூன்று காலகட்டங்களைக் கொண்டது. முதலில் எண்ணெய் விளக்கைப் பயன்படுத்தினர். பின் பெட்ரமாக்ஸ் விளக்கு, மின்சார விளக்கு என பரிணாமம் கண்டது. எண்ணெய் விளக்கு மண்வெட்டி கருவி போல் இருக்கும். இதன் படம் பாகத்தில் சாணி அல்லது மண் வைக்கப்படும். அதன் மீது அரை லீட்டர் கொள்ளளவு கொண்ட பரந்த சட்டி இருக்கும். அதில் சுண்டு விரல் பருமனான கதர் துணித் திரிகள் இடம்பெற்றிருக்கும். திரியின் எண்ணிக்கையில் கணக்கில்லை. கூத்து தொடங்கும் முன்னர் விளக்கை அரங்கில் தொங்கவிடுவர். அதில் ஒரு திரி மட்டும் எரிந்துக் கொண்டிருக்கும். கூத்து தொடங்கும் போது எல்லாத் திரிகளும் ஏற்றப்படும். எண்ணெய் பானையும், உதிரித் திரிகளும் கூத்தரங்கின் உள்ளேயே இருக்கும்.

Tol5.jpg

பார்வையாளர்கள் இருட்டில் இருந்தாலும் அரங்கிற்கு வெளியே தூரத்தில் உலக்கைப் போன்ற கம்பை நட்டு அதில் பரந்த சட்டியை வைத்துத் திரி போட்டு விளக்கேற்றியிருப்பர். இந்த விளக்கிற்கு எண்ணெய் ஊற்றும் பொறுப்பு ஊர் நாவிதருடையது. பொதுவாக புன்னைக்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். இவற்றை எரிப்பதால் பார்வையாளர்களின் கண்களைக் கூசச் செய்யாது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புன்னைக்காய் எண்ணெயும், பிற மாவட்டங்களில் பிற எண்ணெயும் பயன்படுத்தினர்.

இரண்டாம் காலகட்டத்தில் (1935-45) பெட்ராமாக்ஸ் விளக்கு பயன்பாட்டிற்கு வந்தது. மதுரை நாடக சபாக்களில் கியாஸ் விளக்கு என்ற பெட்ரோமாக்ஸ் விளக்கு 1918 முதல் பயன்பாட்டில் இருந்தது. இவ்விளக்கே தோல்பாவைக் கூத்திலும் பயன்படுத்தப்பட்டது. பெட்ராமாக்ஸ் விளக்கு வந்த பின்னர் பாவையாட்டிக்கு விளக்கிற்கு எண்ணெய் விடுவது, திரியைத் தூண்டுவது போன்ற வேலை குறைந்தது. ஆனால் விளக்கின் வெப்பக் காற்றுக் குறைவான கூத்தரங்கில் இருந்த பாவையாட்டியைப் பாதித்தது. பின் 1950 - 60 களில் மின்சார விளக்கு பயன்பாட்டிற்கு வந்தது.

Tholpavai.jpg
ஒலிப்பெருக்கி

ஒலிப்பெருக்கி இல்லாத காலங்களில் கலைஞர்கள் தங்களின் குரலை மட்டும் நம்பி வாழ்ந்தனர். இந்நாட்களில் கூத்து ஒரு நாள் இடைவெளியுடன் நிகழ்ந்தது. அப்போது கூத்து இரவு முழுவதும் நிகழ்ந்தது. டிக்கெட் வசூலிக்கப்பட்டு ஒலிப்பெருக்கி இல்லாமல் நிகழ்ச்சி நடந்த போது கதையின் பாடல்கள் குறைக்கப்பட்டன. நிகழும் நேரமும் கட்டுப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் மின் வினியோகம் பரவலான காலத்தில் ஒலிப்பெருக்கியை வாடகைக்கு எடுத்து நிகழ்ச்சி நடத்தினர். கிராமங்களிலும் மின்சார வசதி வந்ததும் கலைஞர்கள் ஒலிப்பெருக்கியை விலைக்கு வாங்கி பயன்படுத்தினர். மதுரையில் 1955 வாக்கிலும், திருநெல்வேலியில் கணேசராவ் 1960 - 65 வாக்கிலும், கன்னியாகுமரியில் ராமசந்திரா ராவ் 1965-லும் ஒலிப்பெருக்கியை அறிமுகம் செய்தனர்.

Tol6.jpg
இசைக்கருவிகள்

துந்தனம், பாவுரா, கால்கட்டை, கக்கர், இரட்டைக் கொட்டு போன்ற கருவிகள் முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்டன. பின்னர் ஹார்மோனியம், மிருதங்கம் சேர்ந்துக் கொண்டன. துந்தனம் இசைக்கருவியில் வெங்கல உலோக வட்டிலில் மெழுகை வைத்து அதில் நாணல்புல் அல்லது-ம்பல் குழலைப் பொருத்தி அதனை கீழிருந்து மேலாகக் கையால் உருவி விடுவர். அதிலிருந்து ம்ம்ம் என சுருதிப் பெட்டியின் தன்மையொத்த இசை கேட்கும். இது ஆரம்பகால துந்தனம்.

பின்னர் சாதாரணத் தகரடப்பாவின் நடுவிலிருந்து செல்லும் ஒற்றைக் கம்பி டப்பாவுடன் இணைப்பட்டு கழியின் முனையில் கட்டப்பட்ட பிடியுடன் முறுக்கப்பட்டிருக்கும். இதனை ஒற்றையாழ் தந்தி என்றழைத்தனர். இப்பிற்கால துந்தனத்தைப் பிச்சைக்காரர்கள் பயன்படுத்தினர். துந்தனத்தின் இடத்தை ஹார்மோனியமும், இரட்டை கொட்டின் இடத்தை மிருதங்கமும் பிடித்தன. பாவுரா மவுத் ஆர்கன் போன்று வாயால் இசைக்கப்படும் கருவி. இரண்டு ஓலை மூங்கில் துண்டின் நடுவே மெல்லிய நாணலை வைத்து இதனை தயாரிக்கின்றனர். அரக்கர்கள் சண்டையிடும் காட்சியிலும், அனுமன் ஆகாயத்தில் பறக்கும் காட்சியிலும், கதாப்பாத்திரங்களின் குரலை மாற்ற வேண்டிய நிலையிலும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

பாவையாட்டி தன் கால் பாதத்தில் கால் கட்டையைக் கட்டியிருப்பார். இதனை மரப்பலகையில் மோதி சண்டைக் காட்சிகளுக்கு பின்னணி இசைக் கொடுப்பார். கக்கர் என்ற இசைக்கருவி சிறிய மணிச் சலங்கை போன்றது. இதனைப் பாவையாட்டி கைவிரலில் அணிந்திருப்பார். கதாபாத்திரங்களின் உரையாடல் போதும், பாடும் போதும் தம் கையை ஆட்டி கக்கரை ஒலிக்கச் செய்வார். பாவைகள் அசையும் போதும் இந்த ஒலி கேட்கும். ஒலிப்பெருக்கி வரும் முன்னர் கக்கர் ஒலி அடங்கி இருந்தது. பின்னர் உரையாடலுக்கும், கதைச் சொல்லுக்கும் கக்கர் இடையூறாக ஆனதால் சிலர் அதன் பயன்பாட்டை தவிர்த்தனர்.

கூத்து பாவை

Tol8.jpg
பாவை தோல் பெறுதல்

ஆரம்ப காலத்தில் மரம், எலும்பைக் கொண்டு பாவைகள் செய்தனர். மரப்பட்டையையும், தகரத்தையும் கொண்டு நிழல் கூத்துக்குப் பயன்படுத்தினர். தமிழகத்தில் மான், வெள்ளாடு, செம்பிலி ஆடு ஆகியவற்றின் தோல் படம் வரையப் பயன்படுத்தப்பட்டன. மான் வேட்டை தடை செய்யப்பட்ட பின் ஆட்டுத்தோல் மட்டும் பயன்படுத்தினர். 1970 வரை பாவைக்குரிய தோலை விலை கொடுத்து வாங்கியிருக்கின்றனர். மான் வேட்டையாடுதல் வழக்கில் இருந்த போது அதன் தோலை கலைஞர்கள் இலவசமாகப் பெற்றனர். ஆட்டுத் தோலை செல்வந்தர்களிடமிருந்து நன்கொடையாகப் பெறுதல், கோவில் திருவிழாவின் போது ஊர் மக்கள் நேர்ந்து கொள்ளும் பலி கொடுத்த ஆட்டை கலைஞர்களுக்கு இலவசமாகக் கொடுத்தல், மண்டிகர் இணத்தின் திருமணத்தின் போது பலிக் கொடுக்கப்படும் ஆட்டை பயன்படுத்துதல், ஆட்டு கிடையில் விபத்து ஏற்பட்ட போது, ஆட்டுக்கிடாச் சண்டையின் போது எனக் கலைஞர்கள் தோலைப் பெற்றனர்.

Tol9.jpg
பாவை தயாரிப்பு

ஆடு, மான் ஆகியவற்றின் தோல் மூன்று பகுதிகளைக் கொண்டது. மெல்லிய மேல்தோல், தசைகளால் ஆன இடைத்தோல் கொழுப்பு தசையாலான உள்தோல். இவற்றுள் தசைகளால் ஆன இடைத் தோலைப் பதப்படுத்திப் படம் வரைகின்றனர். ஆட்டுத் தோலை இரண்டு நாள் தண்ணீரில் ஊற வைத்த பின் அதன் முடி முழுவதையும் அகற்றி தோலை மண் தரையில் விரித்து நான்கு மூலைகளிலும் ஆணி அடித்துக் காய வைக்கின்றனர். இவை மூன்றாம் நாள் தோல் தாள் போல் மாறிவிடும்.

தாள் போல் ஆன தோலை நன்கு கழுவி சுண்ணாம்பு நீரில் ஊற வைப்பர். பின் அதிலிருக்கும் முடியைக் களைவர். பின்னர் தோலை வெயிலில் முளை அடித்துக் காய வைப்பர். தோல் சூரிய ஒளியில் படாதவாறு அதன்மேல் வெள்ளைத் துணியை விரித்து வைக்கவும் செய்வர். இது பழையகால தோல் தயாரிக்கும் முறை. கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப தோல்களைப் பயன்படுத்துகின்றனர். சீதை, ராமன், தசரதன் போன்ற ஒன்றுக் கொன்று வேகமாக மோதிக் கொள்ளாத கதாபாத்திரங்களுக்கு செம்பிலி ஆட்டுத்தோலைப் பயன்படுத்துகின்றனர். அனுமன் ராவணன், தமாஷ் கதாபாத்திரங்களுக்கு வொள்ளாட்டுத் தோலைப் பயன்படுத்துகின்றனர். வெள்ளாட்டுத் தோலில் ஒளி ஊடுருவும் தன்மை குறைவானது என்றாலும் பாவைகளின் பாதுகாப்பிற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர்.

Tol10.jpg
நிறம் கொடுத்தல்

பாவைகளின் நிறம் ஒளி ஊடுருவும் வகையில் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதே கட்டாயம். பாவையின் நிறம் மங்கிய போது மீண்டும் அடர்த்தியான நிறங்களைக் கொடுக்கின்றனர். அதை தவிர கலைஞர்களிடத்தில் வேறெந்த வரைமுறையும் இல்லை. கறுப்பு, நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகியன அடிப்படை நிறங்கள். வண்ணங்களை வைத்து பாத்திரங்களைப் பகுப்பதும் கலைஞர்களிடத்தில் இல்லை. இராமனுக்கு நீலம், பச்சை நிறங்கள், பரதனுக்கு பச்சை நிறம், சீதை, இலட்சுமணன், தசரதன், ராவணன் ஆகியோர் சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டுகின்றனர்.

கலைஞர்கள் பாவையில் ஆபரணத் துளையிடுவதை விரும்புகின்றனர். துளையின் ஊடே ஒளி ஊடுருவுவதால் படங்களின் தரம் கூடும் என்னும் காரணமாக இருக்கலாம். கலைஞர்கள் இத்துளைக்காக பிரத்யேக உளிகளைப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக தோல்பாவையில் எண்ணெய் சாயம் கொடுக்கும் வழக்கம் இல்லை. எண்ணெய் சாயம் ஒளி ஊடுருவுவதை தடுக்கும் என்னும் காரணத்தால் அதனை தவிர்கின்றனர்.

முந்தைய காலங்களில் இயற்கை மற்றும் தாவர பொருட்களிலிருந்தே சாயங்கள் தயாரித்தனர். அரிக்கன் விளக்கில் உள்ள கரும்பொடியை வேப்பம்பசையோடு சேர்த்து தண்ணீருடன் குழைத்து கறுப்பு நிறத்தைத் தயாரித்தனர். அவுரி இலையிலிருந்து பச்சை வண்ணம் கொண்டு வந்தனர்.

1930 - 40 களில் ஒரு குழுவில் முந்நூறு படங்களை வரை வைத்திருந்தனர். பாத்திரங்களின் முகபாவ உணர்ச்சிகளை மாற்றுவதற்குக் கூட பாவைகளைப் பயன்படுத்தினர். ராமன், அனுமன், ராவணன் கதாபாத்திரங்களுக்கு இருபது முதல் இருபத்தைந்து படங்கள் இருந்தன. இராவணனின் ஒவ்வொரு தலையும் அறுபட்டு விழும் காட்சியைக் காட்ட பத்து பாவைகளைப் பயன்படுத்தினர். 70 களில் 150 முதல் 200 படங்கள் கொண்டிருந்தனர். நிகழ்ச்சியில் மிகக் குறைவாக வரும் கதாபாத்திரங்களுக்கு பிளாஸ்டிக் பேப்பர் அல்லது லேசான அட்டையைப் பயன்படுத்திக் கொண்டனர்.

தோல் இலவசமாகக் கிடைக்கும் நிலை நின்றதும், கலைஞர்களின் குடும்பங்கள் தனிக்குடும்பம் ஆனதும் குழுவின் மொத்த எண்ணிக்கை குறைந்தது. இது நிகழ்ச்சியில் பாவைகளின் உபயோகத்தைப் பாதித்தது. ஒரே பாத்திரங்களின் பல்வேறு உணர்ச்சிகளைக் காட்டும் பாவைகளின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் கலைஞன் தன் குரலையும், இசைக்கருவிகளையும் நம்ப நிகழ்ச்சி நடத்தும் நிலையானது.

Tol11.jpg
பாவைகளின் தன்மை

பாவையின் தன்மைக்கு ஏற்ப அவை மதுரைப்பாணி, குமரிப்பாணி என இரண்டாகப் பிரிக்கின்றனர் ஆய்வாளர்கள். மதுரைப் பாணி படங்களில் நுட்பமான வளைவு வரிகள், ஆபரணத்துளைகள், பாவைகளின் உறுப்பு அசைவுகள் ஆகியவை இடம்பெறும். மதுரைப்பாணியில் காட்சிகள், கதைகள், நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப விளக்குகள் இருக்கும். இங்கே இராமன், லட்சுமணனோடு தமாஷ் கதாபாத்திரமும் நெற்றியில் நாமம் அணிந்திருக்கும். பின்னணி குரல் இல்லாமல் தமாஷ் கதாபாத்திரத்தின் உறுப்பசைப்பே சிரிப்பை வரவழைக்கும். சிலர் பாவைகளை வரைந்த தேதி அதன் ஓரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

குமரி நெல்லை மாவட்ட பாணியில் நுட்பங்கள் குறைவு. உறுப்புகளின் அசைவுகளும் குறைவு. இங்கே பாவைகளின் அசைவுகளை விட பின்னணி குரலுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இக்கதைப் பாணி பெரும்பாலும் கோபால்ராவ், அவரது தந்தை சாமிராவ் பாணியைப் பின்பற்றியது. 1960-65ல் வரையப்பட்ட படங்களில் நடிகர் எம்.ஜி.ஆர், நடிகை சரோஜாதேவி ஆகியோரின் முக சாயல் இருந்தது. இந்திரஜித் வாளைப் பிடித்து நிற்கும் காட்சியில் எம்.ஜி.ஆர் முகமும். சீதை அசோகவனத்தில் இருக்கும் காட்சியில் சரோஜாதேவியின் முகமும் இடம்பெற்றிருந்தது. சினிமா சுவரொட்டிகளைப் பார்த்து படம் வரைந்ததே இதற்கு காரணமென மாவடி ராமச்சந்திர ராவ் குறிப்பிடுகிறார்.

Tol12.jpg
பாவை நம்பிக்கை

தோல்பாவைக் கூத்துக் கலை கோவிலையோ, வழிபாட்டையோ சாராதது. இருந்தாலும் தோல்பாவைகள் தொடர்பான நம்பிக்கைகள் நிறைய உள்ளன. கலைஞர்கள் பாவைகளைத் தெய்வங்களாக மதிக்கின்றனர். மண்டிகர் பஞ்சாயத்துக் கூட்டத்தில் ராமன் படத்தை வைத்து சத்தியம் செய்து தன் உரிமையை நிலைநாட்டும் வழக்கம் முன்பு இருந்திருக்கிறது.

பாவை கிழிந்தால் கிழிந்த பாகத்தை ஒட்டுப் போட்டு தைப்பர் அல்லது ஆற்றில் எறிந்து விடுவர். ஆனால் இவர்கள் பாவைகளை எரிப்பதில்லை. தீட்டான பெண்கள், உடலுறவு கொண்டவர்கள், குழந்தைகள் பாவை பெட்டியின் அருகே செல்லக் கூடாது. பெண்கள் பாவைப்பெட்டியின் அருகே உறங்குவதும், அதன் அருகே உடலுறவு கொள்வதும் தீட்டாகக் கருதப்படுகிறது.

ஒருவரின் படத்தை மற்றவருக்குப் பயன்படுத்தக் கொடுத்தபோது அதனைத் தீட்டாக்குவதில்லை என்ற வாக்குறுதி கொடுத்தப்பின்பே பெறுகின்றனர். வாங்கிய படத்தை நிகழ்ச்சி நடத்தும்போது அடித்தால் அது படம் கொடுத்தவருக்கு அவமானமாகக் கருதப்படும்.முந்தைய காலங்களில் படம் வரைந்ததும் அதற்குப் பூஜை செய்திருக்கின்றனர். இராமன் வனவாசம் செல்லும் காட்சி படத்தை மற்ற நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்னும் வழக்கம் இவர்களிடம் இருந்துள்ளது. உளுவத்தலையன், உச்சிக்குடும்பன் போன்ற தமாஷ் கதாபாத்திரங்கள் இராமன், லட்சுமணன், சீதை ஆகியோரிடம் நையாண்டி/நகைச்சுவை செய்வதில்லை. அப்படி செய்தால் அந்த படங்கள் கிழிந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. பின்னாளில் இதனை மாற்றியுள்ளனர். சில கலைஞர்கள் தமாஷ் கதாபாத்திரம் இராமனிடம் கடன் பெற்று தமாஷ் செய்வது போல் நிகழ்ச்சி நடத்தியிருக்கின்றனர்.

Tol13.jpg
பாவை அசைவு

தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியில் பாவைகளை அசைத்துக் காட்டுவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தமிழக தோல்பாவைக் கூத்தில் தமாஷ் கதாபாத்திரங்களின் உறுப்புகள் மட்டும் அசையும் படி செய்யப்படுகின்றன. பிற கதாபாத்திரங்களில் ராவணின் அமைச்சர், கைகேயி, சூர்பநகை போன்ற சில கதாபாத்திரங்களின் கைகள் மட்டும் அசையும் படி செய்கின்றனர்.

பாவைகளின் இருபுறங்களிலும் சாயம் பூசப்பட்டிருக்கும். பாவைகள் நேர்முக அமைப்புக் கொண்டதாய் இருக்கும். உரையாடலில் பங்கு கொள்ளாத பாவைகளின் முகம் மட்டும் முழுதும் உடையதாய் இருக்கும். கதையின் போக்கிற்கு ஏற்ப பாவைகளின் அசைவு அமையும். கூத்து நிகழ்ச்சியில் பாவைகள் நடப்படதைக் காட்ட துள்ளித் துள்ளி நடப்பதாகக் காட்டப்படுகிறது. பாவைகள் ஓடுவதாகவும் காட்டப்படும். ஒரு பாவையை மற்றொரு பாவை அடிப்பதாகக் காட்டும் காட்சியில் இரண்டு பாவைகளின் முழு உருவங்களும் ஒன்றை ஒன்று மோதுவதாக காட்டப்படுகிறது. ஒரு பாவை மற்றொரு பாவையை வணங்குவது போல் காட்டும் காட்சியில் வணங்கும் பாவை எதிரில் உள்ள பாவையின் காலில் விழுவது போல் காட்டப்படுகிறது.

தமிழகத் தோல்பாவைக்கூத்தில் ஒருவரே நிகழ்ச்சி நடத்துகிறார். அவர் கூத்திற்கான படங்களை தன் வலது, இடதுபுறங்களில் வைத்திருப்பார். ஒரு நிகழ்ச்சிக்கு இருபத்தைந்து முதல் முப்பது வரை பாவைகள் தேவைப்படும். அவற்றை எளிதில் எடுக்கும் வண்ணம் பரப்பி வைத்திருப்பர். இதில் இரண்டிற்கும் மேற்பட்ட பாவைகளை நிகழ்த்துபவர் பிடிக்கும் நிலை வரும் போது தவறுகள் அதிகமாக ஏற்படுகிறது. நல்லத்தங்காள் கதையில் ஏழு குழந்தைகளை கிணற்றில் வீசும் காட்சியில் ஏழு குழந்தைகளையும், நல்லத்தங்காளையும் ஒரு சேர பிடிக்க வேண்டுமென்பதால் அதில் அதிக தவறுகள் நடப்பதாக அதனைப் பார்த்த ஆய்வாளர் அ.கா. பெருமாள் குறிப்பிடுகிறார்.

தோல்பாவைக் கூத்து கதைகள்

Tol14.jpg
இராமாயணக் கதை

தோல்பாவைக் கூத்து இராமாயணத்தை நிகழ்த்திக் காட்டுவதற்குரிய கலையாகக் கருதப்படுகிறது. மண்டிகர்கள் தங்களை இராமணின் அயோத்தியில் இருந்து வந்தவர்கள் என்றே கருதுகின்றனர் (பார்க்க: மண்டிகர் தொன்மம்). இராமாயணம் பத்து பகுதிகளாக நிகழ்கிறது.

  • முதல் நாள் பாலகாணடக் கதை நிகழும். இதில் இராமனின் பிறப்பு, தாடகை வதம், மிதிலைக்குப் புறப்படுதல், அகலிகை சாப விமோசனம் ஆகியவை இடம்பெறும்.
  • இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மிதிலையில் வில்லொடித்தல், சீதையை மணம் செய்தல், பரசுராமனை வெல்லுதல் ஆகியன நிகழும்.
  • மூன்றாம் நாள் நிகழ்ச்சி பரதனின் பட்டாபிஷேகம். இதில் இராமன் வனவாசம் செல்லுதல், பரதன் இராமனிடம் பாதுகைகளைப் பெற்றுச் செல்லுதல் இடம்பெறும்.
  • நான்காம் நாள் சூர்ப்பநகை கௌரவபங்கம் நிகழ்ச்சியில் சூர்ப்பநகையின் மூக்கறுத்தல், கரதூஷணப் போர் நிகழும்.
  • ஐந்தாம் நாள் நிகழ்ச்சி சீதை சிறைப்பாடல். இதில் சீதையை இராவணன் சிறையெடுத்துச் செல்லுதல், ஜடாயு போர், கவுந்தன் வதை, சபரி மோட்சம், இராமன் மூங்கப்பிதா ஆற்றில் அனுமனைச் சந்திக்கும் நிகழ்ச்சி இடம்பெறும்.
  • ஆறாம் நாள் நிகழ்ச்சி வாலிமோட்சம். இதில் வாலி சுக்கிரீவன் சண்டை, வாலியின் முந்தைய பிறவியை இராமன் அறிவித்தல், வாலியை வதம் செய்தல், சுக்கிரீவன் பட்டாபிஷேகம் இடம்பெறும்.
  • ஏழாம் நாள் நிகழ்ச்சியில் சுந்தர காண்டம் இடம்பெறும். இதில் அனுமன் சீதையைத் தேடுவதும், சீதையிடம் பேசுவதும் நிகழும்.
  • எட்டாம் நாள் நிகழ்ச்சியில் முதல் நாள் போர் நடக்கும். இதில் சேது பந்தனம், விபீஷணன் அடைக்கலம், ராமன் அனுமனுடன் போர் செய்தல், அங்கதன் தூது ஆகியன நிகழும்.
  • ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியில் கும்பகர்ணன் போர் நடைபெறும். இதில் அதிகாயன் வதை, கும்பகர்ணன் வதை, இந்திரஜித்து போர் இடம்பெறும்.
  • பத்தாம் நாள் நிகழ்ச்சி ராவணன் வதையும், ராமன் பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறும்.

இவற்றின் இடையே கும்பகர்ண யுத்த நிகழ்ச்சி முடிந்த மறுநாள் மயில் ராவணன் கதை, மச்சவல்லபன் போர் ஆகிய கதைகள் மூன்று நாட்களுக்கு நிகழும். பட்டாபிஷேகம் முடிந்த பின் அசுவமேதயாக நிகழ்ச்சி நடைபெறும். மொத்தம் இராமாயணக் கதை பதிமூன்று நிகழ்ச்சிகளாக 11 முதல் 15 நாட்கள் வரை நடைபெறும். இதில் உத்தேசமாக 189 காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

பிற புராணக் கதைகள்
ஞானசௌந்தரி கதை

இராமாயணக் கதையுடன் அரிச்சந்திரன் கதை, நல்லத்தங்காள் கதை, கட்டபொம்மன் கதை, ஞானசௌந்தரி கதை, அய்யப்பன் கதை, அல்லி கதை ஆகிய பிற கதைகளும் நிகழும். அரிச்சந்திரன் கதையை மதுரை ஸ்பெஷல் நாடகம் பார்த்து அமைத்திருக்கின்றனர். நல்லதங்காள் பெரிய எழுத்துக் கதைப்பாடலைப் படித்து கூத்தை அமைத்திருகின்றனர். ஹிட்கின்ஸ் நாடக குழு தயாரித்த நல்லதங்காள் ரிகார்டின் செல்வாக்கு தான் தோல்பாவைக் கூத்தில் அதிகம் இடம்பெற்றிருக்கிறது என்ற கருத்தும் உள்ளது.

ஞானசௌந்தரி கதையை சிட்டாடல் பிலிம்ஸ் ஞானசௌந்தரி சினிமாவை தயாரித்திருக்கின்றனர். இந்த சினிமா உரையாடலை எழுதிய நாஞ்சில் திராஜப்பா ஞானசௌந்திரி தோல்பாவைக் கூத்தைப் பாராட்டியிருக்கிறார்.

மராட்டிய பாடல்

முந்தைய காலங்களில் கூத்தில் மராட்டிய பாடல்கள் பாடும் வழக்கம் இருந்தது. அனுமன் விஸ்வரூபம் எடுக்கும் காட்சியில்,

ஜாரஜீலானா
ஜீல பனுகே
தனு குனு குனு முனு
பாலகரா

என்ற பாடல் பாடப்பட்டது.

இராமனும், ராட்சதர்களும் சண்டையிடும் காட்சியில்,

இராம ராகவ
ராஜித ரோஜனா
சாமித வரதா
ஜிய வரதா

என்ற பாடலையும் பாடியிருக்கின்றனர். பார்வையாளர்கள் இதனை தமாஷ் (வேடிக்கை, நகைச்சுவை) பாடலாக எடுத்துக் கொண்டு சிரித்ததும் நிகழ்ந்திருக்கிறது. இப்பாடலைப் பாடி சிறுவரகள் கேலி செய்வதும் நிகழ்ந்தது. எனவே இப்பாடல்கள் காலப்போக்கில் வழக்கொழிந்தன.

சுதந்திர போராட்ட கதை

1947க்கு முன் கோபால்ராவ் நடத்திய நிகழ்ச்சியில் இந்திய விடுதலை தொடர்பான உரையாடலும், பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன. அனுமன், சுக்கிரீவன் உரையாடலில் சுயராஜ்யம் என்ற சொல் இடம்பெற்றிருக்கிறது. சுக்கிரீவன் வாலியிடம் கிஷ்கிந்தை நாட்டிற்கு அடிமையாக இருப்பதை விட சுயராஜ்யத்துக்குப் போராடிச் சாவது மேல் என்கிறான். மதுவின் தீமை பற்றிய பாடல்களும், காந்திய கொள்கைப் பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன.

சிறுவர் கலை

கூத்துக்கு டிக்கெட் கொடுக்கும் வழக்கம் இல்லாத காலத்தில் கதைகள் பெரியவர்களை மனத்தில் கொண்டு தயாரித்தனர். தமாஷ் கதாபாத்திரங்களை உச்சிக்குடும்பனும், உளுவத்தலையனும் செய்தனர். ஆனால் நாடகங்களும், திரைப்படங்களும் வரத் தொடங்கிய பின் இந்நிகழ்ச்சி சிறுவர்களின் கலையானது. அவர்களுக்காக தமாஷ் கதாபாத்திரம் புதிதாக அறிமுகப்படுத்தினர். இதற்காக தனிப் பாவைகளும் உருவாக்கப்பட்டன.

கூத்து நம்பிக்கை

மண்டிகர்.jpg

ஊரில் மழை பெய்வதற்கு, மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் வரும் வெப்ப நோயை நீக்கவும் வேண்டி ஊர் மக்கள் கூத்து நிகழ்த்தினர். கூத்து சார்ந்த சில நம்பிக்கைகள் கலைஞர்களிடமும் இருந்தன. கூத்தை இடையில் நிறுத்தக் கூடாது. பட்டாபிஷேக நிகழ்வு வரை நடத்தி முடிக்க வேண்டும். ஏதேனும் காரணத்தால் கூத்து பாதியில் நின்று விட்டால் வேறு கலைஞர்களை வைத்து மிச்சக் கூத்தை நிகழ்த்தினர். ஒரு நாள் கூத்து நிகழ்வில் இராவணன் சீதையைச் சிறை செய்யும் காட்சி, லட்சுமணன் சூர்ப்பநகை மூக்கை அறுக்கும் காட்சி, அனுமனைக் கட்டி வைக்கும் காட்சி ஆகியன பாதியில் நிறுத்தப்படக் கூடாது. இவற்றின் கதையை ஒரே நாளில் சொல்லி அன்றைய கூத்தை முடிப்பர்.

தமாஷ்

தோல்பாவைக் கூத்து இன்று சிறுவர்களைக் கவரும் தமாஷ் உரையாடலுக்காக மட்டுமே வழக்கில் உள்ளது. தமாஷ் காட்சிகள் பார்வையாளர்கள் சிரிக்கக் கூறப்பட்டாலும் அதில் கலைஞனின் வெறுப்பும், உணர்வுகளும் கூறப்படுகின்றன. பொது அறமும் கூறப்படும். தமாஷ் காட்சிகள் ஊருக்கும், வட்டாரத்திற்கும் ஏற்ப மாறுபடும்.

கொச்சை உரையாடல்

பொதுவாக கொச்சை சொற்கள் மதுரை வட்டாரத் தோல்பாவைக் கூத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதை தவிர ஷ-ஜ-ஹ போன்ற கிரந்த எழுத்து உச்சரிக்க முடியாத பாத்திரங்களைக் கிண்டல் செய்யும் தமாஷ் காட்சிகள் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டக் கூத்துகளில் இடம்பெறும்.

கதையுடன் கலந்து வரும் தமாஷ் காட்சிகளைத் தனி தமாஷ் காட்சிகள், கதையுடன் இணைந்த தமாஷ் காட்சிகள் என இரண்டாகப் பிரிக்கலாம். தனித் தமாஷ் காட்சிகளைக் கோமாளி கதை கூறல், கதையை நிகழ்த்திக் காட்டல் என இரண்டாகப் பகுக்கலாம்.

கோமாளி கதைக் கூறலில் அடங்கும் கதைகளாக மூடன் ராமாயணம் கேட்ட கதை, நல்லா தெரியுது, மருத்துவன் பிணம் சுமந்த கதை, நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால், மாமியார் செய்த நன்மை, வரவர மாமியார் கழுதை போல் ஆனாள், வாய்கொழுப்பு சீலையில் வடியும் ஆகிய கதைகள் அடங்கும். இக்கதைகளில் உள்ள தமாஷ் தன்மைகளைவிட அவை கூறப்படும் முறை முக்கியமானது. கதை கேட்கும் உளுவத்தலையனின் அப்பாவித் தனமான வெளிப்பாடும் முக்கியமானது.

நிகழ்த்திக் காட்டப்படும் தமாஷ் கதைகளுக்கு எடுத்துக்காட்டாக கோழிக்கறியும் உளுந்தஞ்சோறும், வைகாசி கதை, உளுவத்தலையன் கல்யாணம், வெங்கடரெட்டியின் பேய், உளுவன் காக்காயை ஏமாற்றிய கதை, கூட்டாஞ்சோறு பொங்கின கதைகளைக் கூறலாம்.

தமாஷ் பாத்திரங்கள்

உலகில் பிற பகுதிகளில் நிகழும் தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியில் தமாஷ் பாத்திரங்களுக்கு முக்கிய இடம் உண்டு. பாலி மொழியில் Talam, Mredh, Sanget, Dalam என நான்கு தமாஷ் பாத்திரங்கள் உள்ளன.

தமிழக தோல்பாவைக் கூத்தில் 10 முதல் 15 வரை தமாஷ் பாத்திரங்கள் வருகின்றன. அவை அமிர்தம், உச்சிக்குடும்பன், உளுவத்தலையன், கருப்பாயி, கரகாட்டக்காரி, டில்லி முத்தம்மா, நரிக்குறவன், நரிக்குறத்தி, போடுகா, மொளுமொளு, வைகாசி ஆகிய பாத்திரங்கள். முந்தைய காலத்தில் பச்சைக் கொப்புளான் என்ற பாத்திரமும் இருந்தது. இது மதுரைக் கலைஞர்களிடம் மட்டும் இருந்த கதாபாத்திரம். பச்சை நிறமும், நீண்ட கொப்புளும் உள்ள பாத்திரம்.

தமாஷ் கதாபாத்திரத்தில் உச்சிக்குடும்பன், உளுவத்தலையன் ஆகிய இரண்டு கதாபாத்திரமும் முக்கியமானவர்கள். உச்சிக்குடும்பன் பாவை சீனாவில் காணப்படும் பாவையின் தோற்றத்தை ஒத்துள்ளது. இதே போன்ற பாத்திரம் ஆந்திரத் தோல்பாவைக் கூத்திலும் உண்டு. உச்சிக்குடும்பன் கதாபாத்திரம் இருநூறு ஆண்டுகள் பழமையானது. உச்சிக்குடும்பன் உளுவத்தலையனின் அண்ணன். இவனது மனைவி அமிர்தம். பார்வையாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் உள்ள உறவைச் சீர்படுத்துபவன் இவனே. கூத்தில் நிகழும் தவறுகளுக்கு மன்னிப்பும் இவனே கேட்பான்.

நிகழ்ச்சி அமைப்பு

கூத்தரங்கில் விநாயகருக்கு பூஜை நிகழ்ந்த பின்னே கூத்து தொடங்கும். நிகழ்ச்சியின் அமைப்பு கூத்து ஆரம்பம், கதை நிகழ்ச்சி, முடிவு என இருக்கும்.

கூத்தின் ஆரம்பத்தில் கடவுள் வாழ்த்து, கோமாளி அறிமுகம், அவையடக்கம், நகைச்சுவை, கூத்து அறிமுகம் ஆகியன இடம்பெறும். கடவுள் வாழ்த்தின் போது விநாயகர், முருகன், சிவன், சரஸ்வதி ஆகிய தெய்வங்களின் படங்களில் ஒன்று இருக்கும். கடவுள் வாழ்த்திற்கு பின்னர் திரையில் கோமாளி தோன்றுவான். இவன் பாடிய வண்ணம் பார்வையாளர்களுக்கு வணக்கம் கூறுவான். அன்று நிகழ இருக்கும் கதைப் பற்றியும், தமாஷ் காட்சி பற்றியும் கூறுவான். பின் ஒரு நகைச்சுவை காட்சி இருக்கும் அல்லது கதை ஆரம்பமாகும்.

இறுதியில் மாமரமா என்ற பாடல் பாடப்படும். நிகழ்ச்சி முடிந்ததைக் குறிக்கும் அடையாளம் அது. பாடலின் போது திரையில் ஒரு மரத்தின் படம் இடம்பெற்றிருக்கும். இப்பாடல் முடிந்ததும் உச்சிக்குடும்பன் திரையில் தோன்றி அடுத்த நாள் நிகழப் போகும் கதை, தமாஷ் காட்சிகள் பற்றிக் கூறுவான்.

கலைநிகழ்த்துபவர்கள்

தமிழகத்தில் தோல்பாவைக்கூத்து ஒரு குடும்பக்கலை. குடும்பத்தலைவரோ வயதில் மூத்தவரோ அக்குழுவின் தலைவராக இருப்பார். அவர் சொல்வதையே குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்வர். ஒரு குழுவில் ஐந்து முதல் ஒன்பது பேர் வரை இருப்பர்.

  • பாவையாட்டி
  • சுதிப்பெட்டி அல்லது ஹார்மோனியம் இசைப்பவர்
  • மத்தளம்/மிருதங்கம் இசைப்பவர்
  • ஜால்ரா/கஞ்சிரா அடிப்பவர்
  • அனுமதிச் சீட்டு வழங்குபவர்
  • அனுமதிச் சீட்டுக்காரருக்கு காவலாக இருப்பவர்
  • அறிவிப்பாளர்
  • விளம்பரம் செய்பவர்
  • பாவையாட்டிக்குத் துணையாகக் கூத்தரங்கில் இருப்பவர்

தமிழகத்தில் பெண்கள் பாவையாட்டும் வழக்கம் இல்லை.

இதில் குழுத்தலைவரின் செயல்பாடுகளே மிகுதி. குரல்களுக்கு ஏற்ப பேசி, பாடி பாவையை அசைத்து நிகழ்ச்சி நடத்துதல். கக்கர், பாவுரா ஆகிய இசைக்கருவிகளை இயக்குதல். படத்திற்குரிய தோலை இலவசமாகப் பெற முயற்சி செய்தல். தோல்பாவைகளைத் தயாரித்தல். நிகழ்ச்சி நடத்த வேண்டிய ஊர், இடம் ஆகியவற்றைத் தேர்வு செய்தல். கூத்து நிகழும் போது அதற்கு முன்பும் ஏற்படும் சிக்கலை கூத்து வாயிலாக வெளிப்படுத்துதல். கூத்திற்குரிய எல்லாக் கதைகளையும் அறிந்திருத்தல். தனித்தமாஷ் காட்சிக்குரிய கதைகளையும், நிகழ்ச்சிகளையும் புதிதாக அமைத்துக் கொள்ளுதல். பார்வையாளர்களை அணுசரித்தல். கூத்தரங்கைக் கட்டுவதற்கு ஆலோசனை வழங்குதல் போன்றவை தலைவரின் வேலைகளாக உள்ளன. துணைக்கலைஞர்கள் மற்ற எல்லா வேலைகளையும் செய்கின்றனர்.

நிகழும் இடங்கள்

தோல்பாவைக் கூத்து தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது. இதில் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே தோல்பாவைக்கூத்து மரபு வழிக் கலைஞர்கள் வாழ்கின்றனர். இக்கலை பொ.யு. 19-ம் நூற்றாண்டு முதல் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மட்டும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. பிற மாவட்டங்களில் 1970 பின் குடியேறிய கலைஞர்களால் நிகழ்த்தப்படுகிறது.

நிகழும் எல்லை

மண்டிகர் தங்களுக்கு எனத் தனிப் பஞ்சாயத்து வைத்துள்ளனர். மண்டிகர் தங்கள் பஞ்சாயத்துக் கூட்டங்களில் தாங்கள் கலை நிகழ்த்தும் எல்லைகளை வாய்மொழியாகப் பேசி முடிவு செய்கின்றனர். சில சமயம் இவ்வெல்லைகளை மாற்றுவது பற்றி பஞ்சாயத்தில் பரிசீலிக்கவும் கூடும். பொதுவாக கலைஞர்கள் தாங்கள் பழகிய ஊரை மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை. மதுரைக் கலைஞர்கள் மதுரையின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கில் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கூத்து நிகழ்த்துகின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் தனிப் பெரும் குழுக்கள் இருந்தது. இதனால் மதுரை மரபினர், நெல்லை குமரி மரபினர் எனக் கலைஞர்கள் இரண்டாகப் பிரிந்திருந்தனர். இப்பிரிவு கலையின் வெளிப்பாடு, பாவையின் அமைப்பு, உரையாடல், கதையின் எண்ணிக்கை, உரையாடலின் மொழி என அனைத்திலும் செல்வாக்கு செலுத்தியது.

பார்வையாளர்கள்

தோல்பாவைக்கூத்தின் பார்வையாளர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபடுகின்றனர். இக்கூத்தின் கலைஞர்களும் பார்வையாளர்களை சார்ந்தே இயங்குகின்றனர். பார்வையாளர்கள் குறித்த தங்களின் வெளிப்பாடுகளைச் சூட்சுமமாகத் தமாஷ் கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தினர். உச்சிக்குடும்பன் பார்வையாளர்களை அமைதியாக இருக்கும் படி வேண்டுகோள் விடுப்பான்.

மண்டிகர்களின் சொத்து

தோல்பாவைக் கூத்து கலைஞர்களின் சொத்து அவர்களிடம் உள்ள பாவைகள். ஒரு கலைஞரின் மகன் தனிக்குழுவாக நிகழ்ச்சி நடத்த விரும்பியதும், தந்தையிடமிருந்து தன் பங்குப் பாவைகளைக் கேட்பார். தந்தையும் அதனைக் கொடுக்க வேண்டும்.

கலைஞர்களின் பிற தொழில்கள்

தோல்பாவைக்கூத்திற்குரிய எல்லாம் இலவசமாகக் கிடைத்த காலத்தில் கலைஞர்கள் கூத்தை முழு நேர தொழிலாக மேற்கொண்டனர். கூத்திற்கு டிக்கெட் வசூலிக்கும் நிலை வந்ததும் கூத்தின் மீதான கலைஞர்களின் பிடிப்பும் மாறியது. கூத்தை தவிர சிறிய விலங்குகளை வேட்டையாடி அதன் தோலைப் பதனிட்டு விலைக்கு விற்பது. திருவிழாக்களில் பொழுதுபோக்கு வித்தைகள் காட்டுவது. சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களை விற்பது போன்ற தொழில்களில் ஈடுபட்டனர்.

ஆரம்ப காலத்தில் பாவையாட்டியைத் தவிர பிற கலைஞர்கள் இத்தொழிலை செய்தனர். 1970-க்குப் பின் கூத்து பகுதி நேரக் கலையானதும் கூத்தை விட வியாபாரத்தில் அதிக வருமானம் கிடைக்கும் நிலை வந்தது. தமிழக கிராமங்களில் நடிகர்கள் சங்கம் பிரபலமான போது, தோல்பாவைக்கூத்துக் கலைஞர்கள் பாட்டுக்குத் தக்க ஆடும் ரிகார்டு டான்ஸ் நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினர்.

தோல்பாவைக்கூத்துக் கலைஞர்கள்

பழையமரபு
  • கிருஷ்ணராவ் (1800 - 1882)
  • சாமிராவ் (1830 - 1900)
  • கிருஷ்ணராவ் (1860 - 1940)
  • கோபாலராவ் (1882 - 1976)
  • சுப்பையாராவ் (1908 - 2003)
  • பரமசிவராவ் (1945)
  • முத்துச்சந்திரன் (1975)
தென் தமிழக கலைஞர்கள்
மதுரை
  • என். துரைராஜ்
  • எஸ். முருகன்
  • எஸ். லட்சுமணன்
  • எஸ். ராஜா
ராமநாதபுரம்
  • ஜீ. ஆறுமுகராவ்
  • ஏ. பெருமாள்ராவ்
  • ஏ. லட்சுமணராவ்
  • பி. கலைச்செல்வன்
ராமநாதபுரம் (தஞ்சை பகுதி)
  • எம். பேச்சிமுத்து
  • எம். கணேசன்
  • ஆர். பாண்டரா
  • எம். ராஜீ
  • என். வெள்ளச்சாமி
திருநெல்வேலி
  • ஜீ. ராமாராவ்
  • ஜீ. ஆறுமுகராவ்
  • ஜீ. கணேசன்
  • ஜீ. நாகேஸ்வர ராவ்
தென்காசி
  • பி. முத்துசாமி
  • பி. இசக்கி
கோவில்பட்டி
  • ஜீ. ராமசாமி
  • ஜீ. கோமதி
கன்னியாகுமரி
  • ஜீ. பரமசிவராவ்
  • பி. முத்துகோபால்
  • எஸ். கிருஷ்ணன்
  • எஸ். ராமாசாமி
  • ஜீ. ராஜீ
  • எம். ராமதாஸ்
  • ஜீ. ராமசந்திரன்
  • ஆர். மோகன்
  • கே. முத்துராவ்
  • கே. சங்கரன்

*(இது முழுமையான பட்டியல் அல்ல)

எதிர்காலம்

தோல்பாவைக் கூத்தின் எதிர்காலம் கேள்விக்குரியதாகவே உள்ளது. இக்கூத்துக் கலையைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர் அ.கா. பெருமாள் இக்கலை 2020- க்குள் முழுவதுமாக அழிந்துவிடும் எனத் தன் நூலில் குறிப்பிடுகிறார். கூத்திற்கு டிக்கெட் வசூலிக்கும் நிலை வந்ததும் கலைஞர்கள் வேறு தொழில்கள் செய்யத் தொடங்கினர். இன்று பாவைகளை தயார் செய்யவோ, கூத்தை நிகழ்த்தவோ புதிய தலைமுறை கலைஞர்கள் யாரும் மண்டிகர் இனத்தில் இல்லை.

உசாத்துணை

  • தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து, அ.கா. பெருமாள், காவ்யா பதிப்பகம் (2015)

வெளி இணைப்புகள்


✅Finalised Page