under review

பஞ்ச கன்னிகைகள்

From Tamil Wiki
அகலிகை சாப விமோசனம்

இந்தியப் புராணங்களில் உள்ள ஐந்து பெண் கதாபாத்திரங்கள் பஞ்ச கன்னிகைகள் என்றழைக்கப்படுகின்றனர். ராமாயணம், மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களான அகலிகை, சீதை, தாரை , மண்டோதரி, திரௌபதி ஆகிய ஐவர் பஞ்ச கன்னிகைகள். இவர்களைத் தவிர குந்தியும் பஞ்ச கன்னிகைகள் பட்டியலில் இடம்பெறுவதும் உண்டு.

பஞ்ச கன்னிகைகள்

  • அகலிகை (கௌதமரின் மனைவி)
  • சீதை (ராமனின் மனைவி)
  • தாரை (வாலியின் மனைவி)
  • மண்டோதரி (ராவணன் மனைவி)
  • திரௌபதி (பஞ்ச பாண்டவர்கள் மனைவி)
  • குந்தி (பாண்டுவின் மனைவி, பஞ்ச பாண்டவர்களின் தாய்)
அகலிகை

அகலிகை புரு நாட்டின் இளவரசி. கௌதம முனிவரின் மனைவி. இந்திரன் அகலிகையுடன் கூடியதை அறிந்த கௌதமர் கொடுத்த சாபத்தால் கல்லானவள். ரகு குலத்தில் பிறந்த ராமனால் சாப விமோசனம் பெற்றவள்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கினார். அதனைக் கண்ட பிரம்மா முழுதும் தூய வடிவான அழகியை உருவாக்க விரும்பினார். தன் சித்தத்தில் அகலிகையை உருவாக்கினார்.

பிரம்மாவிலிருந்து அத்திரி பிறந்தார். அத்திரியில் இருந்து சந்திரன். சந்திரனின் மகனாக புதன். புதனிலிருந்து புரூரவஸ், அவரிலிருந்து ஆயூஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், ப்ராசின்வா, ப்ராவிரா, நமஸ்யூ, வீதபயன், சுந்து, பகுவிதன், சம்யதி, ரகோவதி, ரௌத்ரஸ்வன், மதினரன், சந்த்ரோதன், துஷ்யந்தன், பரதன், பரகத்சேத்ரன், ஹஸ்தி, அஜமிதன், நிலன், சாந்தி, சுஸாந்தி, புருஜன், அர்கன், பிரம்மாஸ்வன், பஞ்சலன், முத்கலன். முத்கலனிலிருந்து அகலிகை பிறந்தாள்.

அகலிகை வாலி, சுக்ரீவன் என்னும் வானர இனத்தின் வளர்ப்புத் தாயாகவும் புராணத்தில் வருகிறாள்.

பார்க்க: அகலிகை, தமிழிலக்கியத்தில் அகலிகை கதை

சீதை
அசோகவனத்தில் சீதை

சீதை மகாலட்சுமியின் வடிவமாக பூமியில் பிறந்தவள். சரஸ்வதியின் சாபத்தால் லட்சுமி சீதையாக பிறந்தாள். வேதவதி, துளசி, சீதை, பாஞ்சாலி (திரௌபதி) ஆகிய பெண்கள் லட்சுமியின் வடிவங்களாகப் புராணங்கள் சொல்கின்றன. சீதை மிதிலை நாட்டின் இளவரசியாக ஜனக மன்னனின் மகளாகப் பிறந்தவள். அயோத்தி இளவரசனான ராமனை மணந்து அவருடன் பதினெட்டு ஆண்டுகள் வனவாசம் சென்றாள். அங்கே ராவணன் சீதையை கவர்ந்து சென்றான். இலங்கைக்கு ராமன் சென்று ராவணனுடன் போர் புரிந்து இலங்கையை மீட்டு வருவதை ராமாயண காவியம் பாடுகிறது.

சீதை என்ற நதியும் மகாபாரதத்தின் வன பருவத்தில் குறிப்பிடப்படுகிறது. இது கங்கையின் துணை நதி. மார்க்கண்டேயன் கிருஷ்ணனின் வயிற்றில் சீதை நதியை கண்டதாக புராணம் சொல்கிறது.

பார்க்க: சீதை

தாரை
வாலி வதையில் தாரை

தாரை ராமாயணத்தில் வரும் வானர குல வாலியின் மனைவி. வானர குலத்தின் அரசி. தாரை பாற்கடலிலிருந்து பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றன. கம்ப ராமாயணத்தின் யுத்த காண்டத்தில் ஐராவதம், உச்சைசிரவஸ், கல்பவிருக்‌ஷம், சிந்தாமணி, கௌஸ்துபம், சந்திரன், அப்சரஸ், மகாலட்சுமி, தாரை, ரூமை ஆகியோர் பாற்கடலிலிருந்து பிறந்ததாக சொல்கிறது. வான்மீகி ராமாயணத்தின் கிஷ்கிந்தை காண்டத்தில் தாரை சுசேனனின் மகளாக வருகிறாள். வாலி இறக்கும் தருவாயில், “தாரை சுசேனனின் மகளாகப் பிறந்தவள். அவள் புவிக்கு நன்மை மட்டும் செய்யும் படி இங்கே பிறந்தவள்” எனக் கூறுகிறார்.

பார்க்க: தாரை

மண்டோதரி
மண்டோதரி இராவணனுடன் (நன்றி தினமலர்)

மண்டோதரி ராவணனின் மனைவி. உத்தர ராமாயணத்தில் மண்டோதரியின் பூர்வ கதை வருகிறது. காசியப பிரஜாதிபதிக்கு தனுவின் மூலம் பிறந்தவன் மயன். மயன் தேவருலகத்தில் உள்ள ஹேமாவை மணந்து ஹேமபுரியை ஆள்கிறான். இருவருக்கும் பெண் குழந்தை இல்லாததால் சிவனை நோக்கி தவமியற்றுகின்றனர். சிவலோகத்தில் பார்வதி இல்லாத போது மதுரா என்னும் தேவகன்னிகை சிவனுக்கு பூஜை செய்ய வருகிறாள். மதுராவின் அழகை கண்ட சிவன் அவள் மீது மோகம் கொள்கிறார். அப்போது சிவலோகம் திரும்பிய பார்வதி இருவரும் கூடி இருப்பதை மதுராவின் மார்பில் சிவனுடல் கொண்ட சாம்பல் மூலம் அறிகிறாள். மதுராவை பன்னிரண்டு ஆண்டுகள் குளத்தில் தவளையாக இருக்கும் படி சாபமிடுகிறாள். பார்வதியின் சாபத்தை கண்டு கோபமுற்ற சிவன் குளத்திற்கு சென்று, “பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து பூமியில் அழகிய பெண்ணாக மீண்டும் பிறப்பாய் அப்போது புவியை ஆளும் அரசனின் மனைவியாவாய்” எனக் கூறுகிறார். மதுராவின் பன்னிரெண்டு ஆண்டு சாபம் முடிந்த போது மயனும், ஹேமாவும் தவம் கலைந்தனர். தங்கள் எதிரில் அழகிய பெண் குழந்தை இருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். அவளுக்கு மண்டோதரி எனப் பெயரிட்டனர்.

ராவணனின் ஒவ்வொரு அரசாக வென்று ஹேமபுரி வந்த போது அங்கே அழகியான மண்டோதரியை காண்கிறான். அவளை மணந்து இலங்கை மீண்டான். அனுமன் சீதையை தேடி இலங்கை வந்த போது ராவணனின் அந்தபுரத்தில் மண்டோதரியைக் காண்கிறான், அவளை சீதையென எண்ணி அணுகினான் என வால்மீகி ராமாயணம் குறிப்பிடுகிறது.

ராவணின் இறப்பிற்கு பின் ராமனின் ஆணைப்படி விபீஷணன் மண்டோதரியைத் திருமணம் செய்தான்.

பார்க்க: மண்டோதரி

திரௌபதி
கௌரவர்கள் சபையில் துயிலுரிக்கப்படும் திரௌபதி

திரௌபதி பாஞ்சால நாட்டின் துருபதனின் மகள். பஞ்ச பாண்டவர்களின் மனைவி. பாஞ்சாலி முற்பிறவியில் சீதையாகவும், நளாயினியாகவும் பிறந்ததாகக் கருதப்படுகிறாள். திரௌபதி அக்னியிலிருந்து பிறந்ததாக கருதப்படுகிறாள். பஞ்ச பாண்டவர்களின் மூத்தவரான தர்மர் கௌரவர்களின் மாமா சகுனியிடம் சூதில் தோற்றார். அவர் தன் நாட்டையும், சகோதரர்களையும், மனைவியையும் பணயமாக வைத்து ஆடியதால் துரியோதனனின் அவையில் துகிலுரியப் படுகிறாள். அந்த அவையில் துச்சாதனன், துரியோதனன் இருவரின் குருதியைத் தலையில் பூசிய பின்பே தன் தலையை முடிவேன் என சபதம் செய்கிறாள்.

பின் பாண்டவர்களுடன் வனவாசம் செல்கிறாள். வனவாசத்திற்கு பின்பான குருஷேத்திரப் போரில் கௌரவ நூற்றுவர்களை பீமன் தன் கதையால் அழித்து பாஞ்சாலியின் கூந்தலில் அவர்களின் ரத்தத்தைப் பூசியதாக மகாபாரதம் சொல்கிறது.

பார்க்க: திரௌபதி

குந்தி

குந்தி பாண்டுவின் மனைவி, பஞ்ச பாண்டவர்களின் தாய். குந்தி கிருஷ்ணனின் தந்தையான வசுதேவரின் உடன்பிறந்தவள். யாதவ நாட்டின் அரசன் சூரசேனனின் மகள்.

சூரசேனன் தனக்கு பிறக்கும் முதல் மகளை குந்திபோஜனுக்கு சுவீகாரமாகத் தருவதாக வாக்களிக்கிறார். அதன் படி குந்தி குந்திபோஜனின் மகளாகிறாள் என மகாபாரதத்தின் ஆதிபர்வம் குறிப்பிடுகிறது. குந்தி பின் குரு வம்சத்தின் பாண்டுவின் மனைவியாகிறாள். கர்ணனை சூரியன் மூலம் பெறுகிறாள்.

குந்தி, மாத்ரி, காந்தாரி மூவரும் தேவ கன்னிகைகளான சித்தி, கீர்த்தி, புத்தி ஆகியோரின் புவி வடிவங்களாக கருதப்படுகின்றனர்.

பார்க்க: குந்தி

பஞ்ச கன்னிகையருள் ஒற்றுமை

அகலிகை, தாரை, மண்டோதரி, சீதை, திரௌபதி ஆகிய ஐவரும் தாய் வயிற்றில் பிறக்காதவர்கள். வரத்தால் பூமியில் பிறந்தவர்கள். ஐந்து கன்னிகைகளின் தாய்மையும் புராணங்களில் இல்லை. மகாரி ஆடல் கலையில் பஞ்ச கன்னிகைகளை பஞ்ச பூதங்களோடு ஒப்பிடும் நிகழ்வு உள்ளது. அகலிகை நீருடனும், திரௌபதி நெருப்புடனும், சீதை பூமியுடனும், தாரை காற்றுடனும், மண்டோதரி ஆகாயத்துடனும் ஒப்பிடப்படுகின்றனர்.

இலக்கியத்தில் பஞ்ச கன்னிகைகள்

ரவீந்திரநாத் தாகூர் தன் கவிதை தொகுப்பிற்கு ’பஞ்ச கன்யா’ எனத் தலைப்பிட்டுள்ளார். இதில் ஒவ்வொரு கவிதையும் பஞ்ச கன்னிகைகளைப் பற்றி பாடுவதாக அமைந்திருக்கும். இவை ஒடிசாவில் ஆடப்படும் மகாரி ஆடலின் அமைப்பில் இயற்றப்பட்ட கவிதைகள்.

உசாத்துணை

  • Puranic Encyclopedia, A Comprehensive work with special reference to the epic and puranic literature, Vettam Mani

வெளி இணைப்புகள்


✅Finalised Page