under review

கு. சிவஞானம்

From Tamil Wiki

கு. சிவஞானம் (பேராசிரியர் கு. சிவஞானம்) (ஜூலை 14, 1933 - ஜூலை 19, 1997) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர். தமிழ்ப் பேராசிரியர். தமிழ் வளர்ச்சித்துறையில் இயக்குநராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

கு. சிவஞானம், ஜூலை 14, 1933 அன்று, தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், காசளநாட்டு நடுவூரில் குருசாமி கீருடையார் - சின்னப்பிள்ளை இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்தபின் கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டம் பெற்றார். தெ.பொ.மீ.யின் நெறியாள்கையில், 'கம்பராமாயணத்தில் உவமைகள்' என்ற தலைப்பில் எம்.லிட். பட்டத்திற்காக ஆய்வு செய்தார். ஆனால் அதனை நிறைவு செய்யவில்லை. மொழியியலில் சான்றிதழ் பெற்றார்.

தனி வாழ்க்கை

கு. சிவஞானம், கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1995-ல் தஞ்சை சரபோஜி கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுநராகப் பணியேற்றார். 14 ஆண்டுகள் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினர். 1969-70-ல் சென்னை ஆவணக் காப்பகத்தில் பணியாற்றினார். 1970-ல் தமிழ் வளர்ச்சித் துறையில் தனி அலுவலராகப் பணியில் சேர்ந்தார். உதவி இயக்குநர், துணை இயக்குநர் என உயர்ந்து அத்துறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றார். 18.08.1989 முதல் 31.12.1991 வரை இயக்குநராகப் பணியாற்றிப் பின் பணி ஓய்வு பெற்றார்.

கு.சிவஞானம் மணமானவர். மனைவி: பக்கிரியம்மாள். மகன்: திருமாவளவன். மகள்கள்: கலைமகள், திருமகள்.

இலக்கிய வாழ்க்கை

கு. சிவஞானம், 'செந்தமிழ்', 'தென்மொழி', 'தமிழ்ப் பொழில்' போன்ற இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். பாரதிதாசனின் 'குயில்' இதழிலும், கண்ணதாசனின் 'கவிதை' இதழிலும் 'கவிஞர் மேகநாதன்', 'நடுவூர் நல்லகவி' போன்ற புனைபெயர்களில் கவிதைகள் எழுதினார். சில நூல்களை எழுதி வெளியிட்டார்.

திருக்குறளில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த கு. சிவஞானம், குறள் பற்றிப் பல ஆய்வுகளை மேற்கொண்டு கட்டுரைகளை எழுதினார்.

மொழிபெயர்ப்பு

கு. சிவஞானம், உருதுக் கவிஞர் காலிப் கவிதைகளை 'உருதுப் பாவேந்தர் காலிப் கவிதைகள்' என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்து வெளியிட்டார். மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில், வள்ளுவர் கோட்டம், இராஜராஜன் பண்பாட்டுக் கழகம் போன்ற இடங்களில் வாரந்தோறும் குறள் குறித்த பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

அமைப்புச் செயல்பாடுகள்

கு. சிவஞானம், தஞ்சாவூரில், 'பாரதிதாசன் கவிஞர் பெரு மன்றம்' என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தினார்.

பதிப்பு

கு. சிவஞானம், 'வளவன் பதிப்பகம்', 'பக்கிரியம்மாள் பதிப்பகம்' என இரு பதிப்பகங்களைத் தொடங்கி நடத்தினார். அவற்றின் மூலம் மலைபடுகடாம், அகநானூற்றில் பாலைத் திணைப் பாடல்கள், இலக்கியக் கட்டுரைகள், கம்பனின் தத்துவங்கள் போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். மாணவர்கள், ஆய்வாளர்களின் நூல்களையும் பதிப்பித்தார்.

இதழியல்

கு. சிவஞானம், 'ஓங்கு தமிழ்' என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அரசியல்

கு. சிவஞானம், தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபட்டார். பெரியார் ஈ.வெ.ரா.வின் சுய மரியாதை இயக்கத்திலும், திராவிட முன்னேற்றக் கழகத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டு செயல்பட்டார். பிற்காலத்தில் சுப்பிரமணியசாமியின் ஜனதா கட்சியில் இணைந்து அதன் இலக்கிய அணித் தலைவராகச் செயலாற்றினார்.

மறைவு

கு. சிவஞானம், ஜூலை 19, 1997 அன்று காலமானார்.

ஆவணம்

கு. சிவஞானத்தின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் இரா. மலர்விழி எழுதினார். அந்நூலை 2016-ல், கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை மற்றும் மலாயா இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து வெளியிட்டது.

மதிப்பீடு

கு. சிவஞானம் தமிழ்ப் பேராசிரியர் பணி தொடங்கி இதழியல், பதிப்பு, மொழிபெயர்ப்பு, சொற்பொழிவு எனப் பல துறைகளில் பங்களித்தவராகவும், தமிழ் வளர்ச்சிக்கான சில பணிகளை முன்னெடுத்த தமிழறிஞராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

பதிப்பு
  • மலைபடுகடாம்
  • அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்கள்
  • இலக்கியக் கட்டுரைகள்
  • கம்பனின் தத்துவங்கள்
மொழிபெயர்ப்பு
  • உருதுப் பாவேந்தர் காலிப் கவிதைகள்

உசாத்துணை

  • கு. சிவஞானம் வாழ்க்கை வரலாறு, எழுத்தாக்கம்: முனைவர் இரா. மலர்விழி, கலைஞன் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2015{


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 13:12:21 IST