under review

தென்மொழி (இதழ்)

From Tamil Wiki
தென்மொழி - நவம்பர், 1963 இதழ்
தென்மொழி இதழ் - மே, 2014

தென்மொழி (1959) தனித்தமிழ் இயக்கத் திங்களிதழ். ஞா. தேவநேயப் பாவாணர் இதன் சிறப்பாசிரியராகவும், பெருஞ்சித்திரனார் இதன் ஆசிரியராகவும் செயல்பட்டனர். தமிழின் சிறப்பை, பெருமையை, உயர்வை அனைவருக்கும் உணர்த்துதல், தனித் தமிழ் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உழைத்தல், தமிழ் இன உறவை மேம்படுத்துதல், தமிழ்நாட்டு விடுதலை போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தென்மொழி இதழ் வெளிவந்தது.

பிரசுரம், வெளியீடு

தனித் தமிழ் இயக்க வளர்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு, பெருஞ்சித்திரனார், நெல்லிக்குப்பத்தில், நவம்பர் 1959-ல், தென்மொழி இதழைத் தொடங்கினார். இதழுக்கு இப்பெயரைச் சூட்டிய ஞா. தேவநேயப் பாவாணர், இதழின் சிறப்பாசிரியராகச் செயல்பட்டார். பெருஞ்சித்திரனார் ஆசிரியர். ம.இலெ. தங்கப்பா, மு. சாத்தையா, செம்பியன் ஆகியோர் உறுப்பாசிரியர்களாகச் செயல்பட்டனர். தாமரை (பெருஞ்சித்திரனாரின் மனைவி) இதழின் உரிமையாளராகவும், உலகமுதல்வி வெளியீட்டாளர்களாகவும் இருந்தனர்.

ஆரம்பத்தில் நெல்லிக்குப்பம் சிறீதரன் அச்சகத்திலும், குரு அச்சகத்திலும், திருப்பாதிரிப் புலியூர் மித்திரா அச்சகத்திலும் தென்மொழி அச்சிடப்பட்டது. பின்னர் கடலூர் தென்மொழி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியானது. இதழ் சென்னைக்கு மாறிய பின் திருவல்லிக்கேணி தென்மொழி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. ஆரம்ப கால இதழின் விலை 50 காசுகள். பின்னர் கால மாற்றத்திற்கேற்ப விலையில் மாற்றம் செய்யப்பட்டது. தொடக்க காலத்தில் 38 பக்கங்களுடன் வெளிவந்த இதழ் , பின்னர் கால மாற்றத்திற்கேற்றவாறு 72 பக்கங்கள், 64, 56, 48 பக்கங்களில் வெளிவந்தது. அட்டையில் ‘தனித்தமிழ் இலக்கியத் திங்களிதழ்’ என்ற குறிப்பு இடம் பெற்றது.

தென்மொழி இதழ் - உள்ளடக்கம்

உள்ளடக்கம்

தென்மொழி இதழின் முகப்பில்,

“கெஞ்சுவதில்லை பிறர்பால் அவர் செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை எனவே தமிழர்
எஞ்சுவதில்லை. உலகில் எவரும் எதிர்நின்றே”

- என்ற பாடல் இடம் பெற்றது. இதழின் ஆண்டு எண்ணிக்கையைக் குறிக்க ஆரம்ப காலத்தில் 'இசை' என்பதையும், மாதத்தைக் குறிக்க 'இயல்' என்பதையும் தென்மொழி பயன்படுத்தியது. பின்னர் அது ‘சுவடி’ என்றும், ‘ஓலை’ என்றும் மாற்றப்பட்டது. முகப்பு அட்டையில் பெருஞ்சித்திரனாரின் பாடல்களும், சமயங்களில் அறிஞர்களின் படங்களும் இடம் பெற்றன.

‘பாட்டரங்கம்’ என்ற பகுதியில் தூய தமிழில் எழுதப்பட்ட பாடல்கள் இடம் பெற்றன. மொழியுணர்வைத் தூண்டும் பாடல்கள் அதிக அளவில் வெளியாகின. பெருஞ்சித்திரனார் கவியரங்கங்களில் தலைமையேற்றுப் பாடிய பாடல்களும் வெளியாகின. ம.இலெ. தங்கப்பாவின் 'இயற்கையாற்றுப்படை' என்னும் ஆற்றுப்படை நூலும், 'ஆந்தைப்பாட்டு' என்ற பாடல் தொகுதியும் தென்மொழியில் தொடராக வெளியானது. பெருஞ்சித்திரனார் எழுதிய 'ஐயை', 'எண்சுவை எண்பது', 'அறுபருவத்துத் திருக்கூத்து', 'நூறாசிரியம்', 'நடுகல்', 'வழக்குரைக் காதை' போன்ற படைப்புகள் தென்மொழியில் தொடராக வெளிவந்தன.

இலக்கியக் கட்டுரைகளும், ஆய்வுக் கட்டுரைகளும் வெளியாகின. திருக்குறள், தொல்காப்பியம், நாலடியார் போன்ற பண்டை இலக்கியங்களைப் பற்றிய கட்டுரைகள் வெளிவந்தன.'இலக்கியங்களில் புலால் உணவு',' நாலடியார் ஆசிரியர் பலரே', 'குறிஞ்சிக் கூத்து', 'வள்ளுவத்தில் தூய்மை', 'அணங்குகொல்! ஆய்மயில் கொல்லோ!', 'அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை', 'திருக்குறள் நல்லுரை ஆய்வு', 'வள்ளுவர் காட்டும் மனநிலைகள்', 'வள்ளுவர் வகுத்த துறவறம்', 'வள்ளுவர் வகுத்த மனையறம்', 'வள்ளுவர் வகுத்த அரசியல்', 'ஒரு சொல்',' வஞ்சிக் காண்டத்தின் இன்றியமையாமை' போன்றவை அவற்றில் குறிப்பிடத்தகுந்தன. 'தொல்காப்பியத்தில் தொழிற்பெயர்', 'மார் மான், மாள் ஈற்றுப் பெயர்ச்சொற்கள்', 'ஒடு-உருபு, இக்கு என்பவை சாரியை ஆகுமா'?, 'சின்-ஓர் அசைநிலையா?' -என்பது போன்ற தலைப்புகளில் பல இலக்கண ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகின. தேவநேயப் பாவாணரின் மொழியியற் கட்டுரைகள் வெளியாகின.

அறிவியல் கட்டுரைகள், மருத்துவக் கட்டுரைகள், வரலாறு, பொறியியல், வேளாண்மை, சட்டம் சார்ந்த பல கட்டுரைகள் வெளியாகின. மாநாடுகள், கருத்தரங்குகள், இலக்கியக் கூட்டங்கள் பற்றிய செய்திகளும் இதழில் இடம் பெற்றன. தமிழ்நாடு விடுதலை பெற்றால்தான் தமிழ்மொழி சிறப்படையும்; தமிழர் நலம் பெறுவர் என்பது பெருஞ்சித்திரனாரின் எண்ணமாக இருந்தது. ஆகவே அதனை மையப்படுத்தி தலையங்கக் குறிப்புகளை, கட்டுரைகளைத் தென்மொழியில் தொடர்ந்து எழுதினார். இந்தி எதிர்ப்புக் கட்டுரைகள், வடவர், வடமொழி எதிர்ப்புக் கட்டுரைகளும் இடம் பெற்றன.

வாசகர் கடிதங்கள், பிற இதழ்களில் வெளிவந்த முக்கியமான செய்திகள், நிகழ்வுகள், சிறுகதைகள், நாடகங்கள், நூல் திறனாய்வு, வினா-விடை போன்றவற்றுக்கும் தென்மொழி இடமளித்தது. ‘நூற் சுருக்கம்’ என்ற தலைப்பில், ஆசிரியர் முக்கியமனவை எனக் கருதிய நூல்களின் சுருக்கங்கள் இடம் பெற்றன. திரைப்படக் கண்ணோட்டம், துணுக்குச் செய்திகள் போன்றவையும் தென்மொழியில் அவ்வப்போது இடம் பெற்றன.

பங்களிப்பாளர்கள்

  • தேவநேயப் பாவாணர்
  • பெருஞ்சித்திரனார்
  • ம.இலெ. தங்கப்பா
  • மு. சாத்தையா (மு. தமிழ்க்குடிமகன்)
  • செம்பியன் (செ.பன்னீர்செல்வம்)
  • வி.பொ. பழனிவேலன், பி.ஓ.எல்.
  • மா. பூங்குன்றன்
  • நா. முத்துக்குமரன்
  • இல. க. இரத்தினவேல்
  • செந்தலை ந. கவுதமன்
  • பா. திருநாவுக்கரசு
  • இறைக்குருவன்
  • பாவலர் தமிழேந்தி
  • வெ தமிழ் மாணிக்கம்
  • பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி
  • பொற்கோ
  • இளஞ்சித்திரன்
  • கு.சிவஞானம், எம்.ஏ.
  • இரா. இளவரசு எம்.ஏ.
  • மா.செ. தமிழ்மணி
  • புதுவை சுப்பிரமணியன்

மற்றும் பலர்

இதழின் சிறப்புகள்

நம் வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தென்மொழி இதழில், தனது படைப்புகளில் பெருஞ்சித்திரனார் பயன்படுத்தினார். அவற்றில் சில:

  • செங்கிழங்கு (காரட்)
  • இலையுருளி (முட்டைக்கோஸ்)
  • சுள்ளிக்காய் (மிளகாய்)
  • செவ்வுருளி (பீட்ரூட்)
  • மிளகுச் சாறு (ரசம்)
  • வறட்டுத் தேநீர்(பிளாக் டீ)
  • மூட்டி (லுங்கி)
  • வழலை (சோப்பு)
  • கோந்தடை (சப்பாத்தி)
  • அரத்தி (ஆப்பிள்)
  • நீர்ச்சீலை (கோவணம்)
  • துணை நோட்டகர் (சப் இன்ஸ்பெக்டர்)
  • ஊடுகதிர் படப்பிடிப்பு நிலையம் (எக்ஸ்ரே லாப்)
  • காரிக்கிழமை (சனிக்கிழமை)
  • அறிவன்கிழமை (புதன்கிழமை)

தமிழ்மொழியின் சொல்வளம் என்ற தலைப்பில் சொல் ஆய்வு குறித்து தேவநேயப் பாவாணர் தென்மொழி இதழில் எழுதினார். அவற்றிலிருந்து சில:

  • குளம் - குளிக்கும் நீர்நிலை
  • தெப்பக்குளம் - தெப்பத்தேர் ஓடும் குளம்
  • ஊரணி - ஊரால் உண்ணப்படும் நீர் நிறைந்த குளம்
  • ஏரி - ஏர்த்தொழிலுக்கு நீர்பாய்ச்சும் குளம்
  • கண்வாய் - சிறுவாய்க்கால் நீர் நிரம்பும் குளம்
  • தடாகம் - அகன்ற அல்லது பெரிய குளம்
  • குட்டை - சிறுகுளம்
  • பொய்கை - மலையடுத்த இயற்கையான குளம்
  • சுனை - நீர் சுரக்கும் மலைக்குண்டு
  • கிணறு - வெட்டிய ஆழமான சிறு நீர்நிலை
  • கேணி - மணற்கிணறு
  • துரவு - சுற்றுக்கட்டில்லாத பெருங்கிணறு
  • மடு - அருவி விழும் கிணறு

இதழ் நிறுத்தம்

பொருளாதாரச் சூழலால் தென்மொழி இதழ் செப்டம்பர் 1961 முதல் நவம்பர் 1962 வரை வெளிவரவில்லை. பின் 1963 முதல் மீண்டும் வெளிவந்தது. 1975-ல், தமிழக அரசால் தென்மொழி இதழ் தடை செய்யப்பட்டது. அதனால், தென்மொழியின் செய்திகள் பல ‘தமிழ்ச்சிட்டு’ இதழில் இடம் பெற்றன. தடை நீங்கிய பின் தென்மொழி இதழ் மீண்டும் வெளிவந்தது. பெருஞ்சித்திரனாரின் மறைவிற்குப் பின் (1995) தாமரை பெருஞ்சித்திரனாரை ஆசிரியராகக் கொண்டு தென்மொழி வெளியானது. தாமரை பெருஞ்சித்திரனாரின் மறைவுக்குப் பின் (2013) மா. பூங்குன்றனை ஆசிரியராகக் கொண்டு தென்மொழி இதழ் வெளிவருகிறது.

ஆவணம்

தமிழ் இணைய மின்னூலகத்திலும், தென்மொழி இணையதளத்திலும் ‘தென்மொழி’ இதழ்கள் சேமிக்கப்பட்டுள்ளன.

வரலாற்று இடம்

தென்மொழி தமிழ், தமிழ் இன மேம்பாட்டை கருத்தாகக் கொண்டு வெளிவந்த இதழ். நடுவில் இடை நின்றாலும் நீண்ட ஆண்டுகள் வெளிவந்தது. தமிழ் மேம்பாடு, தமிழர் உயர்வு, தமிழ்நாட்டு விடுதலை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு வெளிவரும் தனித்தமிழ் இயக்க இதழாக தென்மொழி மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page