under review

இரா. நாறும்பூநாதன்

From Tamil Wiki
எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன்
இரா. நாறும்பூநாதன்
எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன்
கண் முன்னே விரியும் கடல் - புத்தக வெளியீடு
ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன் - நூல் வெளியீடு
வண்ணதாசனுடன் இரா. நாறும்பூநாதன்
கவிஞர் கல்பற்றா நாராயணனுடன்

இரா. நாறும்பூநாதன் (ஆகஸ்ட் 27, 1960) எழுத்தாளர். வங்கி அதிகாரியாகப் பணியாற்றினார். தர்சனா நிஜ நாடக இயக்கம், ஸ்ருஷ்டி வீதி நாடக அமைப்புடன் இணைந்து நாடக இயக்கம் சார்ந்த பணிகளை முன்னெடுத்தார். திருநெல்வேலி மாவட்ட வரலாற்றையும், சாதனை மனிதர்களையும் எழுத்தில் பதிவு செய்தார். முற்போக்கு இலக்கியம் சார்ந்து இயங்கி வருகிறார்.

பிறப்பு, கல்வி

நாறும்பூநாதன், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுகுமலையில், ஆகஸ்ட் 27, 1960-ல், இராமகிருஷ்ணன் - சண்முகத்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். கோவில்பட்டி ஆரிய வைஸ்ய உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், கோவில்பட்டி ஜி. வேங்கடசாமிநாயுடு கல்லூரியில் கணிதத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

தனி வாழ்க்கை

நாறும்பூநாதன், வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். மனைவி, சிவகாமசுந்தரி தலைமை ஆசிரியை ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகன் தீபக் கனடாவில் பொறியாளர்.

இலக்கிய வாழ்க்கை

நாறும்பூநாதனின் தந்தை இராமகிருஷ்ணன் தமிழாசிரியர். அவர் மூலம் புத்தகங்கள் அறிமுகமாகின. ஆசிரியர் புலவர் மு. படிக்கராமு இவருக்கு தமிழார்வமும், இலக்கிய ஆர்வமும் மேம்படக் காரணமானார். லயன், முத்து காமிக்ஸ் நூல்களும் அம்புலிமாமா, அணில், கோகுலம் போன்ற இதழ்களும் வாசிப்பார்வத்தை வளர்த்தன. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் மூலம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறிமுகம் ஏற்பட்டது. செம்மலர், தாமரை, தீபம், கணையாழி, கண்ணதாசன், புதுவிசை போன்ற இதழ்களால் எழுத்தார்வம் உண்டானது. தொழில் என்ற சிறுகதையை மொட்டுக்கள் இதழில் எழுதினார். தி.க.சிவசங்கரன், வல்லிக்கண்ணன், மேலாண்மை பொன்னுச்சாமி போன்றோர் இவரை எழுத ஊக்குவித்தனர். சிறுகதைகள், கட்டுரைகள் என்று எழுதினார்.

நூல்கள்

திருநெல்வேலியைச் சுற்றி வாழ்ந்த சாதாரண மக்கள்முதல் புகழ் பெற்றவர்கள்வரை பலரைப் பற்றிய சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட இவரது கண் முன்னே விரியும் கடல் ஒரு முக்கியமான தொகுப்பு நூல். திருநெல்வெலியைப் பற்றி இவர் எழுதியிருக்கும் ‘திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள்’ மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த நூல்.இது நெல்லை டைம்ஸ் இதழில் தொடராக வெளிவந்தது.

நாறும்பூநாதனின் சிறுகதை கனவில் உதிர்ந்த பூ பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா தன்னாட்சிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. இவரது சில கட்டுரைகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

இலக்கியச் செயல்பாடுகள்

தினமணி நாளிதழில் இலக்கியம் மற்றும் வரலாறு சார்ந்த நாறும்பூநாதனின் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இந்து தமிழ் திசை நாளிதழின் நடுப்பக்கத்தில் பரணிவாசம் என்ற தலைப்பில் இலக்கியம், வரலாறு, சமூகம் சார்ந்த பல கட்டுரைகளை எழுதினார். தமிழ் மரபு அறக்கட்டளையின் யூடியூப் பக்கத்தில் கழுகுமலையும் வெட்டுவான் கோவிலும் என்ற தலைப்பிலும், நம்ப ஊர் என்ற தலைப்பில் திருநெல்வேலியை பற்றியும் பல வரலாற்றுத் தகவல்களைப் பதிவு செய்துள்ளார். கதை சொல்லி யாக தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளை முகநூலில் பதிவு செய்துள்ளார். சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரை நூல்கள் என பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

இதழியல்

நாறும்பூநாதன், கல்லூரியில் படிக்கும்போது நண்பர்கள் உதயசங்கர், பார்த்தசாரதி, முத்துச்சாமி போன்றவர்களுடன் இணைந்து மொட்டுகள் என்ற பெயரில் கையெழுத்து இதழ் ஒன்றை நடத்தினார். (அதில் தான் இவரது முதல் சிறுகதை வெளியானது) அவ்விதழில் ஓவியங்கள் வரைந்தார். கவிதை, கதை, கட்டுரைகள் பலவற்றை எழுதினார். நண்பர்கள் நடிகர் சார்லி, வெள்ளதுரை ஆகியோருடன் இணைந்து எண்ணங்கள் என்ற இதழை நடத்தினார். உதயசங்கர், தமிழ்ச்செல்வன் போன்றோருடன் இணைந்து த்வனி என்ற இதழை நடத்தினார். புதுவிசை ஆசிரியர் குழுவிலும் சிலகாலம் பணியாற்றினார்.

நாடகம்

நாறும்பூநாதன், நண்பர்களுடன் இணைந்து தர்சனா என்ற நாடகக் குழுவை உருவாக்கி, நிஜ நாடக இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, உதயசங்கர் உள்ளிட்ட எழுத்தாளர்கள் இணைந்து நடத்திய ‘ஸ்ருஷ்டி வீதி நாடகக் குழுவில் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை தமிழகம் முழுவதும் சென்று நடத்தினார்.

இயக்கப் பணிகள்

நாறும்பூநாதன், தமிழ்நாடு முற்போக்கு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். களப்பணியாளராக மாதந்தோறும் கூட்டங்கள், கருத்தரங்குகள் என்று இயங்கினார். தற்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராக உள்ளார்.

இலக்கிய இடம்

மண்ணின் மணத்தோடு, யதார்த்தச் சித்திரிப்புடன் எழுதுபவர் நாறும்பூநாதன். திருநெல்வேலியை மையமாக வைத்துப் பல படைப்புகளைத் தந்துள்ளார். தேவையற்ற வர்ணனைகள், குழப்ப வாசகங்கள் இல்லாமல் நேர்கோட்டில் பயணிப்பவை இவரது படைப்புகள். எழுத்தாளர் உதயசங்கர் இவரது கதைகள் பற்றி , “நாறும்பூநாதனின் பெரும்பாலான கதைகளில் வீடும் குடும்பமும் முக்கியக் களங்களாக அமைந்திருக்கின்றன. பால்யத்தின் நினைவுச் சுவடுகளைப் பின்பற்றி எழுதிப் பார்த்திருக்கிற கதைகள்” என்று குறிப்பிட்டுள்ளார். கௌரிசங்கர், ச.தமிழ்ச்செல்வன், உதயசங்கர் வரிசையில் இடம்பெறுபவர் இரா. நாறும்பூநாதன்.

எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் நூல்கள்
பால்வண்ணம் - எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன்

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
 • கனவில் உதிர்ந்த பூ
 • ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்
 • இலை உதிர்வதைப்போல
குறுநாவல்

தட்டச்சு கால கனவுகள்

கட்டுரை நூல்கள்
 • ஒரு தொழிற்சங்கப் போராளியின் டைரிக் குறிப்புகள்
 • கடன் எத்தனை வகைப்படும்?
 • வங்கி ஊழியர் டைரி
 • கண் முன்னே விரியும் கடல்
 • யானை சொப்பனம்
 • ஒரு பாடல்... ஒரு கதை
 • திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள்
 • வேணுவன மனிதர்கள்
வாழ்க்கை வரலாறு
 • பால்வண்ணம்
நேர்காணல் தொகுப்பு
 • கி.ரா.வின். கடைசி நேர்காணல்

உசாத்துணை


✅Finalised Page