under review

அரங்க. இராமலிங்கம்

From Tamil Wiki
பேராசிரியர் முனைவர் அரங்க. இராமலிங்கம்

அரங்க. இராமலிங்கம் (மே 22, 1954) எழுத்தாளர், சொற்பொழிவாளர் உரையாசிரியர், தொகுப்பாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்மொழித் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பெரியபுராணம், தேவாரம், திருவாசகம், திருமந்திரம் குறித்து பத்து முறைக்கும் மேல், 108 வாரங்கள் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார். தமிழக அரசின் 2022-ம் ஆண்டுக்கான 'இலக்கிய மாமணி' விருது பெற்றார். சித்தர் இலக்கிய மையத்தின் நிறுவனர்.

பிறப்பு, கல்வி

அரங்க. இராமலிங்கம், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்தில் உள்ள தியாகதுருகத்தில், (இன்றைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது) மே 22, 1954 அன்று, ப. அரங்கநாதன்- பழனியம்மாள் இணையருக்குப் பிறந்தார். தியாகதுருகத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். கடலூர் அரசினர் கலைக் கல்லூரியில் பி.யூ.சி. படித்தார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று இளங்கலை தமிழ் (பி.ஏ.) பட்டத்தையும், முதுகலை தமிழ் (எம்.ஏ.) பட்டத்தையும் பெற்றார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் 'பாரதிதாசனின் படைப்புகளில் நகைச்சுவை' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு எம்.பில் பட்டம் பெற்றார். 'சங்க இலக்கியத்தில் வேந்தர்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். 1983-84-ல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், வட ஆற்காடு மாவட்ட ஊர் பெயர்கள் பற்றி ஆய்வு செய்தார்.

முனைவர் அரங்க. இராமலிங்கம்

தனி வாழ்க்கை

அரங்க. இராமலிங்கத்தின் திருமணம் 1984-ல் நிகழ்ந்தது.

கல்விப் பணிகள்

அரங்க. இராமலிங்கம், 1984-ல், சென்னைப் பல்கலைக் கழக அஞ்சல்வழிக் கல்வி நிறுவனத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1992-ல் இணைப் பேராசிரியராக உயர்ந்தார். 1997-ல் பேராசிரியராகப் பணி உயர்வு பெற்றார். 2010-ல் மொழித்துறை பேராசிரியராகவும், 2012-ல் தமிழ் மொழித்துறையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். 2014-ல் பணி ஓய்வு பெற்றார்.

அரங்க. இராமலிங்கம் தனது பணிக்காலத்தில், சென்னைப் பல்கலையில் பல இலக்கிய விழாக்களை ஒருங்கிணைத்தார். அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் பலவற்றைப் பொறுப்பேற்று நடத்தினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150-ம் ஆண்டு விழாவையொட்டி 150 நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

அரங்க. இராமலிங்கத்தின் மேற்பார்வையில் 33 ஆய்வாளர்கள் முனைவர் பட்டமும், 30 ஆய்வாளர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றனர்.

அரங்க. இராமலிங்கம் எழுதிய நூல்களில் சில...

இலக்கிய வாழ்க்கை

அரங்க. இராமலிங்கம், கல்லூரி இதழ்களிலும், மலர்களிலும், பல்வேறு இலக்கிய இதழ்களிலும் கட்டுரைகள்எழுதினார். அயல் நாடுகளிலும் இந்தியாவிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்திய கருத்தரங்குகளில் பங்குகொண்டு, இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். 30-க்கும் மேற்பட்ட முறை சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, மொரீசியஸ், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொண்டு, இலக்கியம், பக்தி இலக்கியம் குறித்துச் சொற்பொழிவாற்றினார்.

அரங்க. இராமலிங்கம், தனது எம்.பில் மற்றும் முனைவர் பட்ட ஆய்வை, நூல்களாக வெளியிட்டார். இலக்கியம், சமயம், தத்துவம், சித்தரியல் போன்ற வகைமைகளில் பல்வேறு நூல்களை எழுதினார். சில நூல்களுக்கு உரை எழுதினார். நூல்கள் சிலவற்றைப் பதிப்பித்தார். நூல்கள் சிலவற்றின் தொகுப்பாசிரியராகப் பணியாற்றினார். அரங்க. இராமலிங்கத்தின் நூல்கள் சில ஆங்கிலத்திலும் வெளியாகின.

பேராசிரியர் அரங்க. இராமலிங்கம்

அமைப்புப் பணிகள்

அரங்க. இராமலிங்கம் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் ஆகிய நூல்களை 108 வாரம் எனக் கணக்கிட்டுப் பத்துமுறை தமிழக அரசின் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் தொடர் சொற்பொழிவாற்றி, 'கின்னஸ் சாதனை'ப் பட்டியலில் இடம்பெற்றார்.

'சித்தர் இலக்கிய மையம்' ஒன்றை உருவாக்கி 20 ஆண்டுகளாக நடத்தினார். அதன் மூலம் சித்தரியல் குறித்த பல நிகழ்வுகளை, கருத்தரங்குகளை, மாநாடுகளை, சொற்பொழிவுகளை ஒருங்கிணைத்தார். திருவாசக மாநாடு, திருமந்திர மாநாடு, தேவார மாநாடு, சித்தர்கள் மாநாடு போன்றவற்றை ஆண்டுதோறும் நடத்தினார்.

அரங்க. இராமலிங்கம், பல்வேறு இலக்கிய, ஆன்மிக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார், திருமந்திரம் குறித்து பொதிகைத் தொலைக்காட்சியில் இவர் ஆற்றிவரும் சொற்பொழிவுகள் குறிப்பிடத்தகுந்தன. சென்னை அசோக்நகர் வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியில் மாதந்தோறும் முதல் புதன்கிழமை மாலை சொற்பொழிவாற்றி வருகிறார்.

பொறுப்புகள்

  • சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை இயக்குநர்.
  • சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆய்வு இருக்கைப் பொறுப்பாளர்.
  • தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் ஏழாம் வகுப்பிற்கான பாடநூல் தயாரிப்புக் குழுத் தலைவர்.

விருதுகள்

  • பசும்பொன் முத்துராமலிஙத் தேவர் விருது - 2000
  • திருமந்திரத் தமிழ்மாமணி - 2001
  • வள்ளல் பாண்டித்துரைத் தேவர் விருது - 2002
  • சித்தர் சீர் பரவுவார் - 2002
  • இலக்கியச் செம்மல் - 2003
  • திருத்தொண்டர் மாமணி - 2003
  • தமிழ்வாகைச் செம்மல் - 2004
  • மன்னர் பாஸ்கர சேதுபதி விருது - 20004
  • வைணவச் சுடர் - 2005
  • தமிழ்ப் பேரொளி - 2005
  • திருவருள் இயற்றமிழ்ப் புலவர் - 2006
  • மெய்ந்நெறி வித்தகர் - 2007
  • ஆன்மிகச் சுடர் - 2008
  • ஞான வேள்வி நாயகம் - 2010
  • இலங்கை அரசின் தமிழ் சாகித்திய விருது - 2010
  • அறநெறிச் செம்மல் - 2010
  • பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் நல்லாசிரியர் விருது - 2011
  • சென்னைப் பல்கலைக்கழகத்தின் கல்விப்புலச் சாதனை விருது - 2012
  • திருவாவடுதுறை ஆதீனம் அளித்த சிவஞானச் செம்மல் பட்டம் - 2015
  • தமிழ்ச்சுடர் விருது - 2015
  • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை விருது - 2015
  • தெய்வச் சேக்கிழார் மன்றம், குன்றத்தூர் வழங்கிய பெரிய புராணப் பேருரை மாமணி விருது - 2015
  • டாக்டர் இராஜா சர்.அண்ணாமலை செட்டியார் பிறந்தநாள் நினைவு விருது - 2016
  • செஞ்சொற்கொண்டல் விருது - 2017
  • செந்தமிழ்ச் சுடர் விருது - 2017
  • தேமொழியார் விருது - 2017
  • ஊரன் அடிகள் அளித்த சொற்கோ விருது - 2017
  • முனைவர் மு.வ. தமிழ்ச சான்றோர் விருது - 2018
  • தமிழ்ச் செல்வம் விருது - 2018
  • சித்தர் ஆய்வுச் செம்மல் – 2018
  • இலக்கிய மாமணி விருது - 2022
  • பாரதி விருது - 2023

மதிப்பீடு

முனைவர் அரங்க. இராமலிங்கம் எழுத்தாளர், ஆய்வாளர், உரையாசிரியர், தொகுப்பாளர், பதிப்பாளர் எனப் பல களங்களில் செயல்பட்ட தமிழ்ப் பேராசிரியர். சமயம், தத்துவம், சித்தரியலில் ஆழ்ந்த அறிவு கொண்டவர். தகை சால் பேராசிரியராகவும், சிறந்த ஆன்மிக, இலக்கிய, பக்திச் சொற்பொழிவாளராகவும் அறியப்படுகிறார்.

ஆவணம்

முனைவர் அரங்க. இராமலிங்கத்தின் வாழ்க்கை வரலாற்றை பேராசிரியர், முனைவர் க. மங்கையர்க்கரசி எழுதினார். அந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து 2015-ல் வெளியிட்டது.

நூல்கள்

ஆய்வு/ கட்டுரை நூல்கள்
  • பாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை (எம்ஃபில்., பட்ட ஆய்வுரை)
  • சங்க இலக்கியத்தில் வேந்தர் (பிஎச்.டி, பட்ட ஆய்வுரை)
  • வஞ்சினமும் வெஞ்சினமும்
  • பெளத்தம் போற்றிய பெண் தெய்வங்கள்
  • தாடகை
  • புரட்சிக் கவிஞரும் பொதுவுடைமையும்
  • அறிவே சோதி
  • திருவடி
  • ஒழுக்கம்
  • சித்தர் நோக்கில் சைவ நெறி
  • பெரிய புராணம்
  • சித்தர் வழி 1 & 2
  • முருக பக்தி
  • தெய்வச் சேக்கிழார்
  • வ.உ.சி. கண்ட மெய்ப்பொருள்
  • திருவள்ளுவர் இறைநெறி
  • திருமந்திரம்
  • வான்கலந்த மணிவாசகர்
  • சொல்லலாமா....!
  • திருமந்திரச் சொற்பொழிவுகள்
  • ஒருங்கிணைந்த வடார்க்காடு மாவட்ட ஊர்ப்பெயராய்வு
  • மாணவர்களுக்கான திருக்குறள்
  • திருக்குறள் - எளிய உரை
  • திருக்குறள் கட்டுரைகள்
  • கற்பின் கனலி
  • மரணமிலாப் பெருவாழ்வு
  • பாரதியார்
  • புத்தர்
  • தியாகதுருகம்
  • பெரியபுராணம் சில சிந்தனைகள்
  • திருக்குறள் கவினுரை
  • திருஞானசம்பந்தரின் ஆளுமைத்திறன்
  • சித்தர் இறைநெறி
  • பயன்பாட்டுத் தமிழ்
  • மெய்ப்பொருள்
  • திருத்தொண்டர் வரலாறு
  • சித்தர் குறியீட்டுச் சொற்கள்
  • சித்தர் இரகசியம்
  • மாணிக்கவாசகர்
  • சிவபுராணம் - உரை
  • தெய்வப் புலவர் திருவாய்மொழி
  • நினைக்கத் தனக்கு
பதிப்பு நூல்கள்
  • திருவாசக ஆய்வு மாலை
  • கவிஞர் நெஞ்சில் அரங்கநாதர்
  • விடுதி மலர்கள்
  • புத்தொளிப் பயிற்சி
  • சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள்
தொகுப்பு நூல்கள்
  • திருமந்திரத்தின் பெருமை
  • தமிழர் நாகரிகமும் தமிழ்மொழி வரலாறும் (10 தொகுதிகள்)
  • திருக்குறள் களஞ்சியம் (10 தொகுதிகள்)
ஆங்கில நூல்கள்
  • Leadership Qualities of Thirugnanasambanthar
  • The Way of the Siddhars

உசாத்துணை


✅Finalised Page