under review

திருவாவடுதுறை ஆதீனம்

From Tamil Wiki

To read the article in English: Thiruvaduthurai Aadheenam. ‎

திருவாவடுதுறை ஆதீனம்

திருவாவடுதுறை ஆதீனம் (துறைசை ஆதீனம்)(திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்) (பொ.யு. 14-ம் நூற்றாண்டு) சைவ மடம். தென் இந்தியாவிலுள்ள சைவ ஆதீனங்களில் முதன்மையான ஆதீனம். இந்தியாவின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று. தமிழ் மொழி, கலாச்சாரம், சைவ சமயம் ஆகியவற்றை பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சா போன்ற தமிழறிஞர்களை உருவாக்கிய ஆதீனம்.

இடம்

திருவாவடுதுறை காவிரி ஆற்றின் தென்கரையில் தேவாரம் பாடப்பட்ட சிவஸ்தலங்களுள் ஒன்று. இது கும்பகோணத்திலிருந்து மாயவரம் செல்லும் வழியில் பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஸ்ரீ மெய்கண்டாரின் வழிவழி சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்ற நமச்சிவாய தேசிக மூர்த்தியால் பொ.யு 14-ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது.

வரலாறு

பொ.யு. 14-ம் நூற்றாண்டில் தமிழகத்தின் சைவமடங்களின் தோற்றம் நிகழ்ந்தது. சைவம் சோழர்களின் ஆட்சிக்குப்பின் பன்னிரண்டு பிரிவுகளாக ஆகி சிதைவுற்றபோது ஒரு மீட்பியக்கமாக சைவ மடங்கள் உருவாயின. பொ.யு 8-ம் நூற்றாண்டுமுதல் தமிழகத்தில் ஏகான்மவாதம் என்னும் சைவதத்துவம் ஓங்கியது. அது வேதாந்தத்துக்கு நெருக்கமானது. சிவனே நான் என்னும் பொருள்படும் ‘சிவோகம்’ என்னும் கோஷம் கொண்டது. இதை மறுத்தவர் பொ.யு. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டார் என்னும் சைவஞானி. பசு–பதி –பாசம் என்னும் மும்மைத்தத்துவத்தை முன்வைத்த சிவஞானபோதம் என்னும் நூலை இவர் இயற்றினார். அவருடைய தத்துவ மரபு சைவசித்தாந்தம் என அழைக்கப்படுகிறது.

மெய்கண்டாரிடம் நாற்பத்தியொன்பது மாணவர்கள் பயின்றனர். அவர்களில் முதல்வர் அருள்நந்தி சிவாச்சாரியார். அவருடைய மாணவர் மறைஞானசம்பந்தர். அவருடைய மாணவர் உமாபதி சிவாச்சாரியார். உமாபதி சிவாச்சாரியாரின் வழிவந்த அருள்நமச்சிவாயரின் மாணவர்தான் திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய நமச்சிவாய மூர்த்திகள் என்னும் பஞ்சாக்கர தேவர். அவருக்குப்பின் அவர் மாணவர் ஆதிசிவப்பிரகாசர்தான் இந்த மடத்தை ஒரு பெரிய அமைப்பாக ஆக்கியவர். இந்த மடத்தில் இருந்து பல சைவ மடங்கள் கிளைபிரிந்து வளர்ந்தன.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு திருவாவடுதுறை ஆதீனம் ஜவகர்லால் நேருவுக்கு செங்கோல் அளித்தார். அது சென்னையின் உம்மிடி பங்காரு என்னும் நகைத்தயாரிப்பாளரால் வடிவமைக்கப்பட்டது. அந்தச் செங்கோல் இந்தியப் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டது.

கிளை மடங்கள்

திருவாவடுதுறை ஆதீனம் கைலாயப்பரம்பரையில் வந்த ஆதீனமாகக் கருதப்படுகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவெண்ணெய்நல்லூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருநள்ளாறு, இராமேசுவரம், மதுரை, திருச்செந்தூர், மற்றும் காசி, காளஹஸ்தி உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் இதன் கிளை மடங்கள் உள்ளன. திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் சிறியதும் பெரியதுமாக எழுபத்தி ஐந்து கோவில்கள் உள்ளன.

குருமகா சந்நிதானம்

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் முதல் குருமகா சந்நிதானம் திருவாவடுதுறை ஆதீனத்தைத் தோற்றுவித்த நமசிவாயமூர்த்திகள்.

  • ஸ்ரீலஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் (ஆதின நிறுவனர், குரு முதல்வர்)
  • ஸ்ரீலஸ்ரீ மறைஞான தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ உருத்திரகோடி தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ குமாரசாமி தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ குமாரசாமி தேசிகர்(1622-1625)
  • ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் (1625-1658)
  • ஸ்ரீலஸ்ரீ இராமலிங்க தேசிகர்(1658-1678)
  • ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிகர்(1678-1700)
  • ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிகர்(1700-1730)
  • ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் (1730-1770)
  • ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் (1770-1789
  • ஸ்ரீலஸ்ரீ வேளூர் சுப்பிரமணிய தேசிகர் (1789-1845)
  • ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் (1845-1869)
  • ஸ்ரீலஸ்ரீ மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் (1869- 1888)
  • ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் (ஜனவரி 1,1888 - ஏப்ரல் 15, 1920)
  • ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் (ஏப்ரல் 15, 1920- பெப்ருவரி 5,1922)
  • ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க தேசிகர் (பெப்ருவரி 5,1922 - 1937)
  • ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் (1937 - ஏப்ரல் 13, 1951)
  • ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் (ஏப்ரல் 13, 1951 - செப்டம்பர் 23, 1967)
  • ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் (செப்டம்பர் 23, 1967 - ஏப்ரல் 04, 1983)
  • ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் ( ஏப்ரல் 04, 1983- நவம்பர் 23,2012)
  • ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் (நவம்பர் 23,2012 - தற்பொழுது வரை)

தமிழ் இலக்கியப்பங்களிப்பு

திருவாவடுதுறை ஆதீனம் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்நூல்களை வெளியிட்டு, மறுபதிப்பும் செய்துள்ளது. திருக்குறளை முதன்முதலில் அடி, சீர் அமைத்து வெளியிட்டது. திருவாவடுதுறை ஆதீன சரஸ்வதி மகால் நூலகத்தில் சைவம், வைத்தியம், இலக்கணம், நாடகம், புராணம் எனப் பலதுறை சார்ந்த அரிய பழமையான ஓலைச்சுவடிகள், பழைய அச்சுப் பதிப்புகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. 23-ஆவது குருமகாசந்நிதானத்தின் ஒப்புதலின் பேரில், சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளின் மறுவடிவ பாதுகாப்பும், புகைப்படம் எடுத்தலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு கிளைமடங்களிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவாவடுதுறை ஆதீன அறிஞர்கள்

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page