under review

பதினெண்மேற்கணக்கு நூல்கள்

From Tamil Wiki
Revision as of 09:45, 4 October 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கடைச்சங்ககால தொகை நூல்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.

நூல்கள் வரலாறு

சங்க இலக்கியங்கள் தனிப்பாடல்களின் தொகுப்புகளாக அமைந்தவை. பல்வேறு நூல்களின் தொகுப்பு என்பதால் தொகை நூல்கள் என்றழைத்தனர். குறைந்த அடிகளுடைய நூல்களுக்கு கீழ்க்கணக்கு நூல்கள் என்றும், அதிக அடிகளைக் கொண்டவை மேற்கணக்கு நூல்கள் எனவும் வகைபடுத்தப்பட்டன. மேற்கணக்கு நூல்கள் பதினெட்டு.

சங்க காலத்தில் எழுதப்பட்ட தனிச் செய்யுட்களில் கிடைக்கப்பெற்ற செய்யுட்களை மன்னர்களும் அறிஞர்களும் தொகுத்தனர். பெரும்பான்மையானவை அகவற்பாக்களும், மிகச்சில கலி, பரிபாடலும் இருந்தன. மிகப் பெரும்பான்மையானவை அகப்பாடல்களும், சில புறப்பாடல்களும் இருந்தன. இவற்றைத் தொகைப்படுத்தும்பொழுது அகத்தொகை, புறத்தொகை, இரண்டும் கலந்த தொகை என்று அறிஞர்கள் பிரித்தனர். செய்யுட்களை அடிவரையினை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகள் உருவாக்கப்பட்டன. 4-8, 9-12, 13-31 என்று அடியளவு அமைந்தவை மூன்று தொகுதிகளாயின. ஐவர் பாடிய தனித்தனி நூறு செய்யுட்கள் கொண்ட ஐநூறு அகவற்பாக்கள் ஒரு தொகையானது. கலிப்பாவால் ஆன பாடல்கள் ஒரு தொகுதியாக உருவாக்கப்பட்டது. பரிபாட்டால் ஆனது ஒரு தொகுதியானது.

புறப்பாடல்களுள் பல குடியினரையும் பல பொதுவான கருத்துக்களையும் பற்றிய அகவற்பாக்கள் ஒரு தொகுதியாக்கப்பட்டது. சேரர் பற்றி மட்டுமே கூறும் நூறு பாடல்களை இன்னொரு தொகுதியாக்கினர். நூற்றிமூன்று அடிமுதல் எழுநூற்று எண்பத்தியிரண்டு அடிவரை அமைந்த பத்து நீண்ட பாடல்கள் பத்துப்பாட்டு என்று ஒரே தொகுதியாக அமைந்தது.

இலக்கணம்

பதினென்மேற்கணக்கு நூல்களின் இலக்கணத்தை பன்னிருபாட்டியல் கூறுகிறது.

ஐம்பது முதலா ஐநூறு ஈறா
ஐவகை பாவும் பொருள்நெறி மரபின்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்
மகாபாரதம் தமிழ்ப் படுத்தும்
தொகுக்கப்படுவது மேற்கணக் காகும்

நூல் பயன்

  • சங்ககால மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, சடங்குகள் ஆகியவற்றை அறியப் பயன்படுகிறது.
  • காதல், வீரம் என்ற இரு வகைப்பட்ட வாழ்க்கைமுறை வாழ்ந்ததை அறிய முடிகிறது.
  • அரசர் முதல் பலகுடியினரும் புலவர்களாக இருந்தது தெரிகிறது.
  • புலவர்கள் இயற்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதை பாடல்கள் வழி அறியலாம்.
  • அக்கால வாழ்க்கை முறையைப் பற்றிய சித்திரம் காண்பிக்கப்படுகிறது.

எட்டுத்தொகை நூல்கள்

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம்என்று
இத்திறத்த எட்டுத்தொகை.

அகம் சார்ந்தவை
புறம் சார்ந்தவை
  • புறநானூறு
  • பதிற்றுப்பத்து
அகமும் புறமும் கலந்தமைந்தது
  • பரிபாடல்

பத்துப்பாட்டு நூல்கள்

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடுநல் வாடைகோல் குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

உசாத்துணை


✅Finalised Page