under review

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

From Tamil Wiki

கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். பத்துப்பாட்டு தொகுதியில் உள்ள இரு நூல்களை இவர் எழுதியுள்ளார்.

பெயர்க் காரணம்

கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பெயரிலுள்ள கடியலூரை அவரது ஊர் பெயராகக் கொள்ளலாம். தமிழ்நாடு வேலூர் மாவட்டத்திலுள்ள சோளிங்கர் திருக்கடிகை எனவும் கடிகை எனவும் வழங்கப்பட்டது. தொல்காப்பிய மரபியல் 629- ஆம் சூத்திரவுரையில் இவர் அந்தணர் என்று சொல்லப்படுகிறது.

கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில் பாலை நில வழியை முதலில் காட்டியதாலும் அவரது எட்டுத்தொகைப் பாடல்களும் பாலைத் திணையையே சார்ந்தவையானதாலும், பாலை நிலத்தில் உருத்து இருக்கும் உருத்திரம் என்னும் அடைமொழி வந்திருக்கலாம். தமிழ்ப் படுத்தப்பட்ட ருத்ரக்ருஷ்ண என்ற வடமொழிப் பெயரை இவர் கொண்டிருந்தார் என்றும் இன்னொரு கருத்து உண்டு. இவர் தந்தையார் பெயர் உருத்திரன் என்றும் இவரது பெயர் கண்ணனார் என்றும் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

கடியலூர் உருத்திரங்கண்ணனார் பத்துப்பாட்டு நூல்களில் இரண்டு நூல்களையும்,எட்டுத் தொகை நூல்களில் இரண்டு பாடல்களும் இயற்றியுள்ளார். அவை;

பெரும்பாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை ஆற்றுப்படை என்னும் வகைமையைச் சேர்ந்தது. பரிசு பெற்ற பாணர் முதலியோர் தாம் பெற்ற பெரும் செல்வத்தைத் தம் இனத்தைச் சார்ந்தவர்க்குக் கூறித் தம்மைப் போல் அவர்களும் பயன் பெற, தாம் பரிசுபெற்ற வள்ளல் அல்லது அரசனிடம் வழிப்படுத்துவது ஆற்றுப்படை.

பெரும்பாணாற்றுப்படை தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. இது 500 அடிகளில் அகவல்பாவால் (ஆசிரியப்பா) ஆனது. பேரியாழ் (21 நரம்புகள்) வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனை வெல்வேல் கிள்ளி என்ற சோழ அரசனுக்கும் நாக கன்னிகை பீலிவளை என்பவளுக்கும் பிறந்த தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த புறத்திணை நூல். பெரும்பாண் - பெரிய பாண் எனப் பொருள்படும். பெரிய பாணாவது, பெரும் பண். பெரிய பண்ணைப் பாடுவதற்கெனத் தனி வகுப்பினராய்ச் சிலர் இருந்தனர். அவருள் பெரிய யாழைத் தாங்கி அதன் நரம்புகளை வலித்து அதன் இசையோடு ஒன்ற இனிது பாடுவோரே பெரும்பாணர். பெரும்பாணரை ஆற்றுப்படுத்தியதால் பெரும்பாணாற்றுப்படை எனப் பெயர் பெற்றது.

பட்டினப்பாலை

பட்டினப்பாலை கரிகால் சோழனின் காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறப்பிக்கிறது. முதலில் காவிரியாற்றின் பெருமையைக் கூறுகிறது. பிறகு சோழநாட்டின் வளத்தையும், அதன்பின் காவிரிப்பூம் பட்டினத்தின் புறநகர்ப்பகுதிகள்; காவிரித்துறையின் பெருமை; நகருக்குள் இரவிலும் பகலிலும் நடக்கும் நிகழ்ச்சிகள்; வாணிகம்; கொடிகள்; வாழும் மக்கள்; செல்வச் சிறப்பு; மன்னன் கரிகாற்சோழனுடைய ஆண்மை, வீரம், கொடை, ஆட்சி இவைகளையெல்லாம் வரிசையாக எடுத்துக் காட்டியிருக்கின்றது. பட்டினப்பாலை 301 அடிகளில் இயற்றப்பட்டுள்ளது.

பாடல் நடை

அகநானூறு- பாடல் எண் - 167

திணை : பாலை

தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.

வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின்
 பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு
வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை,
விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே
இனிது உடன் கழிந்தன்றுமன்னே; நாளைப்
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச்
சேக்குவம்கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து
அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ,
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ்,
முருங்கை மேய்ந்த பெருங் கை யானை
வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி
இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென,
மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில்,
குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க்
கூர் முகச் சிதலை வேய்ந்த
போர் மடி நல் இறைப் பொதியிலானே?
நச்சினார்கனியார் உரை;

(அவள் அல்குல் பகுதியில் (இடுப்பில்) மணியணி அணிந்திருக்கிறாள். பச்சை நிற வயிரங்களும் அந்த மணியணியில் பதிக்கப்பட்டுள்ளன. அவை ஒளி வீசுகின்றன. அவள் திருமகள் போன்ற மாமை நிறம் கொண்டவள். வேலைப்பாடு அமைந்த பூமெத்தை. வானளாவிய மாளிகை. இன்று இங்கு இதில் இவளோடு இன்பமாகப் பொழுது போகிறது. நாளை எங்கே இருப்பேன்? கண் மூடாமல் புலம்பிக்கொண்டு படுத்திருப்பேனோ? நெஞ்சே! நீதான் சொல்ல வேண்டும்.

வணிகக் கூட்டத்தைக் (சாத்து) கொன்று பங்கு போட்டுக்கொண்டு வழியில் கூடி உண்ணும் ஆடவர்கள் அங்கே இருப்பார்கள். அவர்கள் வில்லும் அம்பும் கையில் வைத்துக்கொண்டு திரிவர். அவர்கள் யானைக்கும் பகைவர். அவர்களுக்குப் பயந்து யானை ஓடும். பீர்க்கங்கொடி படர்ந்திருக்கும் பாழ் நிலத்தில் ஓடும். அங்கிருக்கும் முருங்கைத் தழைகளை மேயும். அருகில் இருக்கும் செங்கல் சுவரில் தன் முதுகைச் சொரிந்துகொள்ளும். யானை தன் முதுகைச் சொரியும்போது அந்த வீட்டின் விட்டம் கீழே விழும். அப்போது அங்கு வாழும் மணிப்புறா ஓடும். இப்படி மாடி வீடுகள் பாழ் பட்டுக் கிடக்கும். அந்த வீட்டில் கடவுள் உருவம் எழுதியிருப்பர். அந்த உருவத்தில் இருக்கும் கடவுளும் போய்விடும். கடவுள் வெளியேறிவிட்டதால் அந்த வீட்டுத் திண்ணை மெழுகப்படாமல் இருக்கும். அந்தத் திண்ணையில் நாய் தன் குட்டிகளுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருக்கும். அந்த வீட்டில் கலை வேலைப்பாடுகள் குயின்று (உளியால் தோண்டி) அமைத்த நிலைக்கால் போன்ற பொருள்கள் இருக்கும். அந்த வேலைப்பாட்டுக் கூர்மைகள் சிதையும்படி, கறையான் ஏறியிருக்கும். போரில் யாரும் தாக்காத அந்தக் கறையான் கூரை (இறை) வீடுதான் நாளை நான் தங்கும் மடமாக இருக்கும். )

குறுந்தொகை பாடல் எண் 352

திணை: பாலை

பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது;

நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன
கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை
அகல்இலைப் பலவின் சாரல் முன்னி,
பகல் உறை முது மரம் புலம்பப் போகும்
சிறு புன் மாலை உண்மை
அறிவேன்-தோழி-! அவர்க் காணா ஊங்கே.

(தோழி! ஆழமான நீரில் வளர்ந்த ஆம்பலின் இலையின் புறப்பக்கத்தைப் போன்ற, வளைந்த மெல்லிய சிறகையும், கூரிய நகங்களையும் உடைய வௌவால்கள், அகன்ற இலைகளையுடைய பலாமரங்கள் உள்ள மலைச்சாரலை நோக்கி, பகற்காலத்தில் தாம் தங்கி இருந்த பழைய மரத்தைவிட்டு விலகிப்போகும் சிறுமை நிறைந்த மாலைக்காலம் உள்ளது என்பதை, அத்தலைவரைக் காணாத காலத்தில் உணர்கிறேன்.)

உசாத்துணை


✅Finalised Page