under review

பூவை அமுதன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
Line 57: Line 57:
* இலக்கிய வட்ட உறுப்பினர்.
* இலக்கிய வட்ட உறுப்பினர்.
== மறைவு ==
== மறைவு ==
பூவை அமுதன், மே 20, 2017 அன்று தனது 83 ஆம் வயதில் காலமானார்.
பூவை அமுதன், மே 20, 2017 அன்று தனது 83-ம் வயதில் காலமானார்.
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
பூவை அமுதன் பொதுவாசிப்புக்குரிய துப்பறியும் நாவல்களை ஆரம்பத்தில் எழுதினார். சிறார் இலக்கியத்தின் மீது கவனம் சென்ற பின்னர் அவர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். எளிய உரை நூல்கள், திறனாய்வு நூல்கள், இலக்கியக் கட்டுரைகள் எழுதியிருக்கும் பூவை அமுதன் [[வே.தா. கோபாலகிருஷ்ணன் (பூவண்ணன்)|பூவண்ணன்]], [[ஆலந்தூர் கோ. மோகனரங்கன்|ஆலந்தூர் கோ மோகனரங்கன்]] வரிசையில் வைத்து மதிப்பிடத்தக்கவர்.  
பூவை அமுதன் பொதுவாசிப்புக்குரிய துப்பறியும் நாவல்களை ஆரம்பத்தில் எழுதினார். சிறார் இலக்கியத்தின் மீது கவனம் சென்ற பின்னர் அவர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். எளிய உரை நூல்கள், திறனாய்வு நூல்கள், இலக்கியக் கட்டுரைகள் எழுதியிருக்கும் பூவை அமுதன் [[வே.தா. கோபாலகிருஷ்ணன் (பூவண்ணன்)|பூவண்ணன்]], [[ஆலந்தூர் கோ. மோகனரங்கன்|ஆலந்தூர் கோ மோகனரங்கன்]] வரிசையில் வைத்து மதிப்பிடத்தக்கவர்.  

Latest revision as of 10:13, 24 February 2024

கவிஞர், எழுத்தாளர் பூவை அமுதன்

பூவை அமுதன் (சி.ர. கோவிந்தராசன்: சிக்கராயபுரம் ரங்கநாதன் கோவிந்தராசன்; எஸ்.ஆர்.ஜி.) (செப்டம்பர் 6, 1934 - மே 20, 2017) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், பதிப்பாளர், பாடலாசிரியர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். மரபுக் கவிதைகள் பலவற்றை எழுதினார். சிறார்களுக்கான நூல்கள் பலவற்றைப் படைத்தார். கவிமாமணி விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

சி.ர. கோவிந்தராசன் என்னும் இயற்பெயரை உடைய பூவை அமுதன், செப்டம்பர் 6, 1934 அன்று, சென்னை குன்றத்தூர்-மாங்காடு இடையே உள்ள சிக்கராயபுரத்தில், ரங்கநாதன் - காமாட்சி இணையருக்குப் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். வறுமையான சூழலில் வளர்ந்தார். தொடக்கக் கல்வியை சிக்கராயபுரத்திலும், உயர்நிலைக் கல்வியை பூவிருந்தவல்லியிலும் கற்றார். தமிழில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்வியியல் பட்டம் (B.T.) பெற்றார்.

கவிஞர் பூவை அமுதன்

தனி வாழ்க்கை

பூவை அமுதன், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். 36 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெற்றார். மனைவி: சரஸ்வதி, பள்ளி ஆசிரியை. மகன்: கலையமுதன். மகள்கள்: கீதா, நிர்மலா.

பூவை அமுதன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

பூவை அமுதன், பள்ளியில் படிக்கும்போது நண்பர்களை ஒருங்கிணைத்து கையெழுத்து இதழ் ஒன்றை நடத்தினார். பள்ளி ஆசிரியர் அரசு, பூவை அமுதனை எழுத ஊக்குவித்தார். ‘தமிழனே சற்றுத் தயவுடன் சிந்தி’ என்னும் தலைப்பில், பூவை அமுதன் எழுதிய முதல் கவிதை, பள்ளி ஆண்டு மலரில் வெளிவந்தது. தொடர்ந்து இதழ்களில் கவிதைகள் எழுதினார். ’தாய்மை’ என்னும் தலைப்பிலான முதல் சிறுகதை, பிரசண்டவிகடன் இதழில் வெளியானது. தொடர்ந்து ஆனந்தபோதினி, சுதேசமித்திரன், மாலைமணி, போர்வாள், திராவிடன், தினத்தந்தி, தென்றல், முல்லை, பகுத்தறிவு, ராணி, மங்கை, கோகுலம், பூந்தளிர், ஆயர் மன்றம், ஆயர் முரசு, தமிழ்ப்பணி, தாய்,தென்னகம், கரும்பு போன்ற இதழ்களில் எழுதினார். சரஸ்வதி அமுதன், அரசுதாசன், அரசடியான், தொண்டைமான், தராசன், எஸ்.ஆர்.ஜி. போன்ற புனை பெயர்களில் எழுதினார். சிறுகதை, நாவல், கவிதை, இசைப்பாடல்கள் என சிறார்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்தார்.

பூவை அமுதன், 350-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதினார். பூவை ஆமுதனின் ‘நல்ல நல்ல கதைகள்’ என்னும் தொகுப்பு, முரளிதரன் அனப்புழாவால் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ‘கான்ஸ்டபிள் அங்கிள்’ என்னும் சிறுகதை இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டது. இவரது படைப்புகளில் சில தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. பூவை அமுதனின் படைப்புகளில் சில கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டன. இவரது நூல்களை ஆய்வு செய்து பல மாணவர்கள் எம்.பில். மற்றும் பிஹெச்.டி பட்டம் பெற்றனர்.

மொழிபெயர்ப்பு

பூவை அமுதன், பல்வேறு மொழிகளைச் சார்ந்த கதைகளை ஆங்கிலத்திலித்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். மாப்பசான் கதைகள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

அமைப்புச் செயல்பாடுகள்

பூவை அமுதன், பல்வேறு இலக்கியக் கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதை வாசித்தார். கடற்கரைக் கவியரங்கம் உள்பட இலக்கிய மன்றக் கூட்டங்கள், கவிதை அரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு கவிதைகள் படைத்தார். கவிதை உறவு உள்ளிட்ட பல இலக்கிய நிகழ்வுகளில் கவிதைகள் வாசித்தார். சொற்பொழிவாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பாரதி கலைக்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பல மரபுக் கவிதைகளைப் படைத்தார்.

இதழியல்

பூவை அமுதன், என்.வி. நடராசன் நடத்திய திராவிடன் இதழில் சில மாதங்கள் பணி புரிந்தார். அக்காலக்கட்டத்தில் ‘ஆரியத்தின் வைரிகள்’ என்னும் தனது முதல் கட்டுரையை அவ்விதழில் எழுதினார். மாலை மணி இதழில் சில மாதங்கள் பணியாற்றினார்.

பதிப்பு

பூவை அமுதன், 1966-ல், தனது நூல்களை வெளியிடுவதற்காக பாவேந்தர் பதிப்பகம் என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் பல நூல்களைப் பதிப்பித்தார்.

இசை

பின்னணிக் குரல் கலைஞரும், பாடகருமான மருமகன் எஸ். என். சுரேந்தர் மூலம் பூவை அமுதனுக்குத் திரைப்படங்களுக்கு, பக்திப் பாடல் ஆல்பங்களுக்குப் பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் வந்தன. பூவை அமுதன் அறுநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றினார். அவை பாலமுரளிகிருஷ்ணா, டி.எம்.சௌந்தர்ராஜன், கே.ஜே.யேசுதாஸ், ராஜ்குமார் பாரதி, எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ்.என்.சுரேந்தர், மனோ, பி.சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம், சித்ரா எனத் தமிழின் முன்னணி இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களால் பாடப்பட்டு 70-க்கும் மேற்பட்ட ஒலிநாடாக்கள் மற்றும் குறுந்தகடுகளாக வெளிவந்தன. வானொலி நிகழ்ச்சிகளில் பூவை அமுதனின் பாடல்கள் பல ஒலிபரப்பாகின.

பூவை அமுதன் பாடல்கள்

திரைப்படம்

பூவை அமுதன், ’சிங்காரச் சிட்டு’ என்னும் திரைப்படத்திற்குப் பாடல்களை எழுதினார். அத்திரைப்படம் வெளியாகவில்லை.

விருதுகள்/பரிசுகள்

  • நல்ல உள்ளம் நூலுக்குத் தமிழக அரசின் பரிசு
  • பல்லவ நாட்டுச் சிறுவர்கள் சிறுவர் நாவலுக்கு கோவை எல்லப்பா ரெங்கம்மாள் அறக்கட்டளை பரிசு
  • முத்து நம் சொத்து சிறுவர் நாடகத்திற்கு ஆனந்தாச்சாரி அறக்கட்டளை விருது
  • கிராமத்துப் பையன் சிறுவர் நாடகத்திற்கு ஏ. வி. எம். அறக்கட்டளை விருது
  • உயிர் உறவு எயிட்ஸ் விழிப்புணர்வுக் காப்பியத்திற்கு திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு
  • விழுந்ததும் எழுந்ததும் கவிதைத் தொகுப்புக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு
  • விழுந்ததும் எழுந்ததும் கவிதைத் தொகுப்புக்கு பாரத ஸ்டேட் வங்கி விருது
  • உணர்வுகள் கவிதைத் தொகுப்புக்கு பாரத ஸ்டேட் வங்கி விருது
  • அமுத ஊற்று கவிதைத் தொகுப்புக்கு கல்லாடன் கல்வி அறக்கட்டளைப் பரிசு
  • ‘முகம்’ இதழ் அளித்த சாதனையாளர் விருது
  • வள்ளியப்பா இலக்கிய வட்டம் வழங்கிய வள்ளியப்பா இலக்கிய விருது
  • கவியரசு கண்ணதாசன் இலக்கிய மன்றம் வழங்கிய கண்ணதாசன் விருது
  • மதுரை பாரதி யுவகேந்திரா வழங்கிய பாரதி புரஸ்கார் விருது
  • பாரதி கலைக்கழகம் வழங்கிய கவிமாமணி பட்டம்
  • அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய பாரதி பணிச்செல்வர் பட்டம்
  • தாய்மண் இலக்கியக் கழகம் அளித்த கவிஞர் திலகம் பட்டம்
  • சிறுவர் இலக்கியச் சிறகம் அளித்த சிறுவர் இலக்கியச் சீர்மணி பட்டம்
  • குழந்தை எழுத்தாளர் சங்கம் வழங்கிய குழந்தை இலக்கிய மாமணி பட்டம்
  • உலகத் திருக்குறள் மையம் மையம் வழங்கிய திருக்குறள் உரைச் செம்மல் பட்டம்
  • உலகத் திருக்குறள் வாழ்வியல் நெறிச் சங்கம் அளித்த திருக்குறள் மாமணி பட்டம்

பொறுப்புகள்

  • இலக்கியப் பண்ணை அமைப்பின் பொதுச் செயலாளர்.
  • குழந்தை எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர்.
  • அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர்.
  • பாரதி கலைக்கழக உறுப்பினர்.
  • தலைநகர் தமிழ்ச் சங்க உறுப்பினர்.
  • திருவள்ளுவர் இலக்கிய மன்ற உறுப்பினர்.
  • பாவேந்தர் பாசறை அமைப்பின் உறுப்பினர்.
  • இலக்கிய வட்ட உறுப்பினர்.

மறைவு

பூவை அமுதன், மே 20, 2017 அன்று தனது 83-ம் வயதில் காலமானார்.

இலக்கிய இடம்

பூவை அமுதன் பொதுவாசிப்புக்குரிய துப்பறியும் நாவல்களை ஆரம்பத்தில் எழுதினார். சிறார் இலக்கியத்தின் மீது கவனம் சென்ற பின்னர் அவர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். எளிய உரை நூல்கள், திறனாய்வு நூல்கள், இலக்கியக் கட்டுரைகள் எழுதியிருக்கும் பூவை அமுதன் பூவண்ணன், ஆலந்தூர் கோ மோகனரங்கன் வரிசையில் வைத்து மதிப்பிடத்தக்கவர்.

பூவை அமுதனை,

பூவை அமுதன் புலமையைப் பெற்றவர்
நாவில் சரசுவதி நாட்டியம் செய்திடப்
பூவையும் மிஞ்சும் பொலிவாய்த் திகழ்ந்திடும்
காவியத்தில் ஓங்கும் கருத்து

- என்று பின்னணிப் பாடகர் பி.பி. ஸ்ரீநிவாஸ் வாழ்த்தியுள்ளார்.

நூல்கள்

சிறார் பாடல் நூல்கள்
  • ஆடிடுவோம் பாடிடுவோம்
  • அறிவு விருந்து
  • அறிவியக்கப் பாடல்கள்
  • சிறுவர் பாடல்கள்
  • நிலாப் படகு
  • நல்ல நல்ல பாடல்கள்
சிறார் கதைகள்
  • சிறுவர் அமுதக் கதைகள்
  • குறள் அமுதக் கதைகள்
  • சிறுவர்க்கான படிப்பினைக் கதைகள்
  • சிறந்தோர் வாழ்க்கைக் கதைகள்
  • இளவரசிக்குச் சொன்ன இருபது கதைகள்
  • மனிதநேயக் கதைகள்
  • பண்பு காத்த பரம்பரை
  • தம்பியின் பெருமை
  • தங்கத் தங்கை
  • நளன் கதை
  • அரிச்சந்திரன்
  • மந்திரக்கோல் மாயாவி
  • புதையல் தீவு
கவிதை நூல்கள்
  • அழகுமலர்
  • உள்ளக் கடலின் உணர்வலைகள்
  • பூவை ஆமுதன் கவிதைகள்
  • கவிமுரசு
  • புலரும் பொழுது
  • உயிர் உறவு (கவிதைக் காப்பியம்)
  • முழக்கம்
  • விழுந்ததும் எழுந்ததும்
  • கனல் மணக்கும் பூக்கள்
  • உணர்வுகள்
  • அமுதவூற்று
  • விதைகள்
  • கணைகள்
கட்டுரை நூல்கள்
  • பெண்களைப் பற்றி பெரியவர்கள்
  • மாநிலம் போற்றும் பங்கையர்
  • புலவர் வழி
  • அறிவியல் கருவிகள்
  • இலக்கியப் பேழை
  • கல்வி விழுச் செல்வம்
  • குறளின் கண்கள்
  • உலகப் பொதுமறை உவமைகள்
  • அதிவீரராம பாண்டியன் பொன்மொழிகள்
  • உலகப் பழமொழிகள்
  • பள்ளிப் பிள்ளைகளுக்குப் பயனுள்ள அறிவுரைகள்
  • சாக்ரடீஸ்
  • மாவீரன் நெப்போலியன்
  • கவி காளமேகம்
  • ஔவையார்
  • புகழேந்தி
  • சொல்லித் தெரிவதில்லை
சிறுகதைத் தொகுப்புகள்
  • வெளிச்சம்
  • அருவிக்கரையோரம்
  • பாத பூஜை
நாடகம்
  • கிராமத்துப் பையன்
புதினம்/குறும்புதினம்
  • காதற்கடல்
  • இரத்த விருந்து
  • தங்க நிலையம்
  • குலக்கொடி
  • அவளும் நானும்
  • ஓடி வந்தவள்
  • படிக்கப் போனவள்
  • காதல் பரிசு
  • ஒரு பிள்ளைக்காக
  • ஆஸ்; ராஜா; ராணி
  • ஆளை மாற்றும் அழகு
  • உறவைத் தேடும் பறவை
  • மருத்துவமனை மர்மம்
  • மனைவி மாண்ட மர்மம்
  • ஓட்டலில் தங்கிய கூட்டம்
  • இரத்தக்கறை
  • ஆணாக மாறிய பெண்
  • ஒரு பெண்ணுக்கு ஆயிரம்
  • காதலித்தவள்
  • பணம், பதவி, பாவை
  • இறந்தவர் எழுதினார்
  • கொலைகாரி
  • காதல் மலர்
உரை நூல்கள்
  • திருக்குறள் எளிய தமிழ் உரை
  • அறநெறிச்சாரம்
  • ஆத்திசூடி
  • கொன்றை வேந்தன்
  • மூதுரை
  • நல்வழி
  • நறுந்தொகை
  • உலகநீதி
  • நன்னெறி
  • நீதி வெண்பா
  • நீதிநெறி விளக்கம்
  • ஆண்டாளின் திருப்பாவை
  • மாணிக்கவாசகரின் திருவெம்பாவை
  • நாலடியார்
  • திரிகடுகம்
  • ஆசாரக்கோவை
  • சிறுபஞ்சமூலம்
  • பழமொழி நானூறு
திறனாய்வு நூல்கள்
  • முத்துப்பேழை
  • இலக்கியப் பேழை
  • புதிய நோக்கில் புறநானூறு
  • புலமை வளம்
  • குறளின் கண்கள்
  • செலவழியாச் செல்வம்
  • கருத்துப் பொழில்
ஆங்கில நூல்
  • Thousand Master Piece Stories

உசாத்துணை


✅Finalised Page