கடற்கரைக் கவியரங்கம்
To read the article in English: Kadarkarai Kaviyarangam.
கடற்கரைக் கவியரங்கம் (1971) கவிஞர் பொன்னடியான் கடற்கரையில் நடத்திவரும் கவிதையரங்கு நிகழ்ச்சி. கடற்கரையில் திறந்த வெளியில் சந்தித்து கவிதை வாசிப்பு, விவாதம் ஆகியவற்றை நடத்துவது இந்த அமைப்பின் வழக்கம்
வரலாறு
பொன்னடியான் ஜூன் 13, 1971 அன்று கடற்கரைக் கவியரங்கத்தைத் தொடங்கினார். டாக்டர் நாவேந்தன், பேராசிரியர் வான்முகில் உள்ளிட்ட நண்பர்கள் துணை நின்றார்கள். திரைப்பட பாடலாசிரியர் கு.மா.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாதம்தோறும் முதல் ஞாயிறு, மாலை 6 மணிக்கு கவியரங்கு நிகழும். மழை, புயல், வெள்ளம், வெயில் என எதற்காகவும் கவியரங்கம் நிறுத்தப்படவில்லை. பொன்னடியான் நடத்திவரும் முல்லைச்சரம் இதழில் செய்தி வெளியிடப்படும். யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். கவிதைகள் திறனாய்வு செய்யப்படும். ஆண்டின் இறுதியில் அக்கவிதைகள் தொகுத்து நூலாக்கப்படும். திருவள்ளுவர் சிலையின் பின்புறம் இந்நிகழ்வு நடைபெறுகிறது
பங்களிப்பு
கண்ணதாசன், வாலி, வைரமுத்து, பாலகுமாரன், புலமைப்பித்தன், முத்துலிங்கம், பழனிபாரதி, சுப.வீரபாண்டியன் என பல படைப்பாளிகள் கடற்கரை கவியரங்கில் பங்கெடுத்தனர். 'காற்று வாங்கப் போனேன்... ஒரு கவிதை வாங்கி வந்தேன்’ என்று கடற்கரை கவியரங்கத்தை மனதில் வைத்தே பாட்டு எழுதியதாகச் சொல்வார் வாலி என்று பொன்னடியான் ஒரு பேட்டியில் சொல்கிறார்.
உசாத்துணை
- நேர்காணல் - தீவிரத் தமிழ் என்பதில் உடன்பாடில்லை! - கவிஞர் பொன்னடியான் | Thendral Tamil Magazine (tamilonline.com)
- கடற்கரையில் ஒலிக்கும் தமிழ்க் கவிதை - Kungumam
- பொன்னடியான் பற்றி தினமணி
- பொன்னடியான் நூல்வெளியீடு
- கவிதை விக்கி - பொன்னடியான்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:11 IST