under review

வள்ளியப்பா இலக்கிய வட்டம்

From Tamil Wiki
அழ. வள்ளியப்பா

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நினைவாக, கோவையில், 1994-ல் நிறுவப்பட்ட அமைப்பு, வள்ளியப்பா இலக்கிய வட்டம். டாக்டர் பூவண்ணனும், கவிஞர் செல்லக் கணபதியும் இணைந்து இந்த அமைப்பை நிறுவினர். குழந்தை இலக்கியத்தை வளர்ப்பதே இவ்வமைப்பின் முக்கிய நோக்கம். சிறார் படைப்புகளைக் கண்டறிந்து சிறார்களை எழுத ஊக்குவிப்பது, அவர்களது திறமையை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்துவது, சிறார்களது சிறந்த படைப்புகளை நூல்களாக வெளியிடுவது போன்ற பணிகளை வள்ளியப்பா இலக்கிய வட்டம் செய்து வருகிறது.

அமைப்பின் தோற்றம்

அழ. வள்ளியப்பாவின் குழந்தை இலக்கியப் பணிகளை நினைவு கூரும் வகையிலும், அவரது அடியொற்றி குழந்தை இலக்கியப் பணிகளை ஊக்குவிக்கவும், 1994-ல், கோவையில் ‘வள்ளியப்பா இலக்கிய வட்டம்’ நிறுவப்பட்டது. கோவை வானொலி இயக்குநர் கணேசன், வானொலி நிலைய நிகழ்ச்சிப் பொறுப்பாளர் கமலநாதன், தொழிலதிபர் சபா சிங்காரம் ஆகியோர் முன்னிலையில், டாக்டர் பூவண்ணன், கவிஞர் செல்லக் கணபதி இருவரும் இணைந்து ‘வள்ளியப்பா இலக்கிய வட்டம்’ அமைப்பை நிறுவினர். வள்ளியப்பாவின் மகள் தேவி நாச்சியப்பன் இவ்வமைப்பின் செயலாளர்.

வள்ளியப்பா இலக்கிய வட்டப் பரிசு பெற்ற சிறுகதைகள்

இலக்கியச் செயல்பாடுகள்

வள்ளியப்பா இலக்கிய வட்ட அமைப்பின் சார்பில், ஆண்டுதோறும் ’குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா’ தமிழ்நாட்டின் நகரம் ஏதேனும் ஒன்றில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாக்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் விதத்தில், சிறுவர்களுக்கான பாடல், ஆடல், பேச்சு, ஓவியம், கட்டுரை என ஐந்து போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியில் வெல்பவர்களுக்கு பல்வேறு பரிசுகளும் பாராட்டுகளும் அளிக்கப்படுகின்றன. சிறப்புப் பரிசாக வெள்ளிப் பதக்கங்களும் வழங்கப்படுகின்றன. சிறார்களின் நூல்களும் வெளியிடப்படுகின்றன.

சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களின் கதைகள், டாக்டர் பூவண்ணன் மற்றும் கவிஞர் செல்ல கணபதி ஆகியோரால் தொகுக்கப்பட்டு ‘தேன்கூடு என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. (பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு). அது போல, சிறுவர் பாடல் போட்டியில் பரிசு பெற்ற குழந்தைப் பாடல்கள் தொகுக்கப்பட்டு ‘பிள்ளைப் பாடல்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இதுவரை நூற்றிற்கும் மேற்பட்ட சிறார்களின் நூல்களை ‘வள்ளியப்பா இலக்கிய வட்டம்’ வெளியிட்டுள்ளது.

சிறந்த குழந்தை இலக்கிய எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வள்ளியப்பா இலக்கிய வட்ட விருது வழங்கப்படுகிறது. சிறந்த நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளருக்கு ‘வள்ளியப்பா பதிப்பாளர் விருது’ வழங்கப்படுகிறது. போட்டிகளில் அதிகப் புள்ளிகளைப் பெறும் பள்ளிக்கு ’வள்ளியப்பா கலை விருது’ வழங்கப்படுகிறது.

வள்ளியப்பா இலக்கிய வட்ட விருதுகள்

வள்ளியப்பா இலக்கிய விருதினை டாக்டர் கு. கணேசன், மா. கமலவேலன், ஆர்.வி. பதி., பூவை அமுதன், வளவ துரையன், கொ.மா. கோதண்டம், டாக்டர் ஓ.கே. குணநாதன் (இலங்கை) உள்ளிட்ட பலர் இதுவரை பெற்றுள்ளனர்

வள்ளியப்பா இலக்கிய வட்ட வெள்ளி விழா

வள்ளியப்பா இலக்கிய வட்ட வெள்ளிவிழா, 2019-ல், கோயமுத்தூரில் நடைபெற்றது. குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. வெள்ளிவிழாவினை ஒட்டி 12 சிறுவர் நூல்கள் வெளியிடப்பட்டன.

வள்ளியப்பா நூற்றாண்டு விழா

2022-ம் ஆண்டு வள்ளியப்பாவின் நூற்றாண்டு. அதையொட்டி வள்ளியப்பா இலக்கிய வட்டம் சார்பில் தமிழகமெங்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வள்ளியப்பாவின் நினைவைப் போற்றும் வகையில் வள்ளியப்பாவின் மகள் தேவி நாச்சியப்பன், எழுத்தாளர் ஆர்.வி. பதி உள்ளிட்ட பலர் பல நூல்களை வெளியிட்டனர்.

உசாத்துணை


✅Finalised Page