under review

தேவி நாச்சியப்பன்

From Tamil Wiki
தேவி நாச்சியப்பன்
தேவி நாச்சியப்பன் - 2

தேவி நாச்சியப்பன் (தேவி; தெய்வானை; முனைவர் தேவி நாச்சியப்பன்; பிறப்பு: ஜீலை 8, 1961) எழுத்தாளர். ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மகள். சிறார் இலக்கியப் பங்களிப்புக்காக சாகித்ய அகாதெமி வழங்கிய ‘பால சாகித்ய புரஸ்கார் விருது' பெற்றவர். தமிழில் இந்த விருதைப் பெற்ற முதல் பெண் எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

தேவி நாச்சியப்பன், சென்னையில், ஜீலை 8, 1961-ல், அழ. வள்ளியப்பா-வள்ளியம்மை ஆச்சி இணையருக்குப் பிறந்தார். இயற்பெயர் தெய்வானை. சென்னை மயிலாப்பூரில் உள்ள 'சில்ரன் கார்டன்’ பள்ளியில் படித்தார். உயர்கல்வியை முடித்த தேவி நாச்சியப்பன், தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து கல்வியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். ‘குழந்தை இலக்கியப் பாடல்களில் உத்திகள்’ என்ற தலைப்பில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

1984-ல் நாச்சியப்பனுடன் திருமணம் நிகழ்ந்தது. நாச்சியப்பன் கவிஞர். இலக்கிய ஆர்வலர். வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றினார். கீழச்சிவல்பட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்தார் தேவி நாச்சியப்பன். ஒரு மகன், ஒரு மகள்.

தேசி நாச்சியப்பப் புத்தகங்கள் - 1

இலக்கிய வாழ்க்கை

சிறு வயதிலேயே கவிதைகள் இயற்றுவதில் தேவி நாச்சியப்பனுக்கு ஆர்வம் இருந்தது. கோகுலம் இதழில் பல கவிதைகள் வெளியாகின. கதைகளும் எழுதினார். இவருடைய முதல் கதை 1983-ம் ஆண்டு கோகுலம் மாத இதழில் வெளியானது. தந்தையின் ஆலோசனைப் படி பிற மொழிச் சிறார் கதைகளை மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டார். அவை தொகுக்கப்பட்டு, ’பல தேசத்துக் குட்டிக் கதைகள்’ என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக தேவி நாச்சியப்பனின் திருமணத்தின்போது வெளியானது. இவரது சிறார் படைப்புகள் தினமணி சிறுவர்மணி, கோகுலம், அமுதசுரபி, இந்து தமிழ் திசை போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.

1997-ல், ‘பந்தும் பாப்பாவும்’ என்ற தலைப்பில் சிறார்களுக்கான சிறுகதைத் தொகுப்பு வெளியானது. 2002-ல் ‘பசுமைப்படை’ என்ற சிறார்களுக்கான சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. தொடர்ந்து சிறார்களுக்கான பல கதை, கட்டுரை, நாவல்களை எழுதினார். தேவி நாச்சியப்பன் எழுதிய ‘குழந்தைகள் சென்ற குஷியான பயணம்' என்ற நூல், சிறார்களுக்கான பயண நூலாக மட்டுமல்லாமல், கூட்டுக் குடும்பங்களின் மேன்மையை, உறவுகளின் பெருமையைக் கூறும் நூலாகவும் அமைந்துள்ளது.

அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டான 2022-ல், ’நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர்’ என்ற நூலை தேவி நாச்சியப்பன் தொகுத்துள்ளார். இந்த நூலில் அழ. வள்ளியப்பாவுடன் பணிபுரிந்த, அவருடன் பழகிய பலர் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். ‘கல்கி’ ராஜேந்திரன், சீதா ரவி, எழுத்தாளர் பூவண்ணன், ரேவதி (ஈ.எஸ். ஹரிஹரன்), டாக்டர் கு. கணேசன், எழுத்தாளர் கமலவேலன், இயக்குநர் வசந்த் எஸ். சாய் உள்ளிட்ட பலர் அத்தொகுப்பில் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

மாணவ, மாணவிகளிடம் உரையாடும் தேவி நாச்சியப்பன்

குழந்தை இலக்கியச் செயல்பாடுகள்

தேவி நாச்சியப்பன் சிறுமியாக இருக்கும்போது, ‘கவிமணி குழந்தைகள் சங்கம்' என்பதன் அமைப்பாளர் பொறுப்பை தந்தை வள்ளியப்பா அவருக்கு அளித்தார். குழந்தைகளை ஒருங்கிணைப்பது, மாதம் ஒரு முறை குழந்தைகளை அழைத்துக் கூட்டம் நடத்துவது, சென்னை வானொலி, தொலைக்காட்சிகளில் சங்கக் குழந்தைகளின் நிகழ்ச்சிகளை வழங்குவது, ஆண்டு விழா நடத்துவது எனத் தந்தையின் ஆலோசனைப் படி செயல்பட்டார். தான் வசித்து வந்த காரைக்குடியில், மணமான பின் குழந்தை இலக்கியப் பணிகளை முன்னெடுத்தார். குழந்தைகளுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றைத் தயாரித்து வழங்கினார். சாகித்ய அகாதமி நடத்திய சிறுவர் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ‘வள்ளியப்பா இலக்கிய வட்டம்' சார்பாக, ‘குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா’ என்ற நிகழ்வினை, கவிஞர் செல்லக்கணபதியுடன் இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வருகிறார். குழந்தைகளுக்குப் போட்டிகள் நடத்திப் பரிசளிப்பதுடன், ‘வள்ளியப்பா இலக்கிய விருது’, ‘பதிப்பாளர் விருது’ போன்ற விருதுகளையும் அந்த அமைப்பின் மூலம் வழங்கி வருகின்றார். சிறார் அமைப்பினர் நடத்தும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார்.

அழ. வள்ளியப்பா

சென்னை குழந்தை எழுத்தாளர் சங்கம், சென்னை வானொலி தொலைக்காட்சி சிறுவர் சங்கப் பேரவை, காரைக்குடி உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம், கோவை வள்ளியப்பா இலக்கிய வட்டம், காரைக்குடி மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பு, திருக்குறள் கழகம், காரைக்குடி புத்தகத்திருவிழா போன்ற அமைப்புகளில் உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், இணைச்செயலர் எனப் பல்வேறு பொறுப்புகளில் தேவிநாச்சியப்பன் பணியாற்றி வருகிறார்.

பணி ஓய்வுக்குப் பின் தற்போது குழந்தைகளுக்காக எழுதுதல், குழந்தைகளுக்கான சங்கம், குழந்தை எழுத்தாளர்களை ஊக்குவித்தல், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்பு என்று செயல்பட்டு வருகிறார்.

விருதுகள்

  • திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு - பேசியது கைபேசி நூலுக்காக.
  • இராஜபாளையம் மணிமேகலை மன்றப் பரிசு - பேசியது கைபேசி நூலுக்காக.
  • புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கியக் கழகப் போட்டியில் இரண்டாம் பரிசு - பசுமைப்படை நூலுக்காக.
  • அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் வழங்கிய ‘பாரதி பணிச்செல்வர்’ விருது.
  • காரைக்குடி இன்னர் வீல் சங்கம் வழங்கிய ‘சாதனைப் பெண்மணி’ விருது.
  • புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய ‘கவிஞரின் கண்மணி’ விருது.
  • தமிழக அரசு வழங்கிய சிறந்த நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (2012).
  • தமிழக அரசின் ‘தமிழ்ச்செம்மல்’ விருது (2017).
  • சாகித்ய அகாதெமி நிறுவனம் வழங்கிய ‘பால சாகித்ய புரஸ்கார் விருது' - 2019.

இலக்கிய இடம்

சிறார்களைக் கவரும் வகையில் எளிய மொழியில், சிறு சிறு வார்த்தைகளில் தனது படைப்புகளைத் தந்துள்ளார் தேவி நாச்சியப்பன். தந்தை வள்ளியப்பா வழியில், குழந்தைகளுக்குப் புரியும் வகையில் எளிமையான மொழியில் எழுத வேண்டும் என்பதைத் தனது கொள்கையாக வைத்துச் செயல்பட்டு வருகிறார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அழ. வள்ளியப்பா, வாண்டுமாமா, பெரியசாமித் தூரன், கல்வி கோபாலகிருஷ்ணன், ரேவதி, செல்லக்கணபதி போன்ற குழந்தை இலக்கியப் படைப்பாளிகளின் வரிசையில் இடம் பெறுகிறார் தேவி நாச்சியப்பன்.

தேவி நாச்சியப்பன் புத்தகங்கள்

நூல்கள்

  • பல தேசத்துக் குட்டிக் கதைகள் – பகுதி 1
  • பல தேசத்துக் குட்டிக் கதைகள் – பகுதி 2
  • பந்தும் பாப்பாவும்
  • பசுமைப்படை
  • பனிலிங்கமும் படைவீரரும்
  • தேன் சிட்டுக்கு என்னாச்சி?
  • சிறுவர்களுக்கான 10 முத்தான கதைகள்
  • பேசியது கைபேசி
  • பட்டிமன்றம்
  • கடவுளைக் கண்டவர்கள்
  • புத்தகத் திருவிழா
  • குழந்தைகள் சென்ற குஷியான பயணம்
  • குழந்தை எழுத்தாளர் சங்கம் (வரலாறு)
  • நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர் (தொகுப்பு நூல்)
  • குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா (வாழ்க்கை வரலாறு)
  • குழந்தைக் கவிஞர் செல்லகணபதி (வாழ்க்கை வரலாறு)
  • குழந்தை இலக்கியப் பாடல்களில் உத்திகள் (முனைவர் பட்ட ஆய்வின் நூல் வடிவம்)

உசாத்துணை


✅Finalised Page