under review

செல்ல கணபதி

From Tamil Wiki
கவிஞர், எழுத்தாளர் செல்ல கணபதி

செல்ல கணபதி (பிறப்பு: பிப்ரவரி 10, 1941) தமிழக எழுத்தாளர், கவிஞர். சிறார்களுக்காகப் பல கதைகளை, பாடல்களை எழுதினார். கதை, கவிதை, கட்டுரை, புதினம், பயண நூல், திறனாய்வு எனப் பல களங்களில் செயல்பட்டார். அழ. வள்ளியப்பாவைத் தனது குருவாகக் கொண்டு இயங்கினார். செல்ல கணபதி எழுதிய ‘தேடல்வேட்டை’ என்ற நூலுக்கு 2015-ம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்தது.

அழ. வள்ளியப்பா நூற்றாண்டு விழாவில் செல்ல கணபதி

பிறப்பு, கல்வி

செல்ல கணபதி, பிப்ரவரி 10, 1941 அன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளத்தில், சுப. ராமசாமிச் செட்டியார் - கல்யாணி ஆச்சி இணையருக்குப் பிறந்தார். கண்டனூர் சோம. செல்லப்பச் செட்டியார் - மீனாட்சி ஆச்சி இணையருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். அரிமளம் கழக உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை படித்தார். தொடர்ந்து சென்னை அரசு கலைக் கல்லூரியில் பி.யூ.சி. படித்தார். லயோலா கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பச்சையப்பன் கல்லூரியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

செல்ல கணபதி கோயமுத்தூரில் பழநியப்பா பிரதர்ஸ் கிளை நிறுவனத்தையும், பழநியப்பா சீட்டு நிதி நிறுவனத்தையும் நிர்வகித்தார். ஏசியன் பேரிங் தொழிற்சாலையின் உற்பத்திப் பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தினார். மனைவி: உமையாள். மகன் சிதம்பரம். மகள்: மீனாள்.

செல்ல கணபதி நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

செல்ல கணபதியின் முதல் சிறார் பாடல், 1959-ல், அவர் கல்லூரியில் படிக்கும்போது ‘இலக்கிய உலகம்’ என்ற இதழில் வெளியானது. அழ. வள்ளியப்பா, ஐயன் பெருமாள் கோனார், டாக்டர் மு. வரதராசன், பேராசிரியர் டாக்டர் முத்துக் கண்ணப்பர், பழனியப்பா பிரதர்ஸ் பழனியப்பச் செட்டியார் போன்றோரது ஊக்குவிப்பால் தொடர்ந்து ஈழநாடு, சாட்டை, சுதேசமித்திரன், கண்ணன், தமிழ்நாடு, சௌபாக்கியம், தென்றல், அமுதசுரபி, காதல், தினமணி, கல்கி, கோகுலம் போன்ற இதழ்களில் எழுதினார். சிறார் பாடல்களின் தொகுப்பான, செல்ல கணபதியின் முதல் நூல், ‘வெள்ளை முயல்' 1960-ல் வெளியானது. தொடர்ந்து செல்ல கணபதி சிறார்களுக்கான பாடல்கள், கதைகள், புதினங்கள் என 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். சிங்கப்பூர் துபாய் உள்ளிட்ட உலகநாடுகள் பலவற்றிற்குப் பயணித்து பல கருத்தரங்குகளில் பங்கேற்றார்.

செல்ல கணபதியின் ‘பாப்பா பாட்டு பாடுவோம்’ நூலில் உள்ள பாடல்கள் இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷின் இசையமைப்பில் ஒலிப்பேழைகளாக வெளிவந்தன. செல்ல கணபதியின் பாடல்கள் தமிழக அரசு, கர்நாடக அரசு, சிங்கப்பூர் அரசின் பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றன. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருக்கும் சில தமிழ்ப் பள்ளிகளில், செல்ல கணபதியின் பாடல்கள் பாடத்திட்டத்தில் இடம் பெற்றன. செல்ல கணபதியின் படைப்புகளை அழகப்பா மற்றும் சென்னைப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்து இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்டம் பெற்றனர்.

குழந்தைகளுடன் செல்ல கணபதி

அமைப்புச் செயல்பாடுகள்

செல்ல கணபதி, நண்பர் பூவண்ணனுடன் இணைந்து குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நினைவாக, கோவையில், 1994-ல் வள்ளியப்பா இலக்கிய வட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். சிறார் படைப்புகளைக் கண்டறிந்து சிறார்களை எழுத ஊக்குவிப்பது, அவர்களது திறமையை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்துவது, சிறார்களது சிறந்த படைப்புகளை நூல்களாக வெளியிடுவது போன்ற பணிகளை வள்ளியப்பா இலக்கிய வட்டம் செய்து வருகிறது.

வள்ளியப்பா இலக்கிய வட்டத்தின் மூலம் செல்ல கணபதி, ‘குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா’ என்ற நிகழ்வினை, நண்பர்களுடன் இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வருகிறார். குழந்தைகளுக்குப் போட்டிகள் நடத்திப் பரிசளிப்பதுடன், ‘வள்ளியப்பா இலக்கிய விருது’, ‘பதிப்பாளர் விருது’ போன்ற விருதுகளையும் வழங்கி வருகிறார்.

இதழியல்

செல்ல கணபதி, ‘நகரத்தார் திருமகள்’ இதழின் கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார்.

செல்ல கணபதி பாடல்கள் குறுந்தகடு

பொறுப்புகள்

  • கண்டனூர் பேரூராட்சித் தலைவர்
  • குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் புரவலர்
  • கோவை வள்ளியப்பா இலக்கியவட்டத்தின் அமைப்பாளர்
  • கோவை புத்தக வியாபாரிகள் பதிப்பாளர்கள் சங்கத் தலைவர்
  • கோவை நகரத்தார் சங்கப் பொதுச் செயலர்த் தலைவர்
  • கோவை மாவட்ட பேரிங் விற்பனையாளர் சங்கத் தலைவர்
கம்பன் அடிப்பொடி விருது

விருதுகள்

  • குழந்தை எழுத்தாளர் சங்கப் பரிசு - பாப்பா பாட்டுப் பாடுவோம் நூல்
  • திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு - பிறந்தநாள் நூல்
  • பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு - பிறந்தநாள் நூல்
  • பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு - குருவிக்கூடு நூல்
  • பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு - வளரும் பூக்கள் நூல்
  • தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு - மணக்கும் பூக்கள் நூல் (2006)
  • பால் சாகித்ய புரஸ்கார் விருது - தேடல்வேட்டை நூல்
  • தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அளித்த குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா நினைவு சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது
  • பாரதி இலக்கியப் பேரவை வழங்கிய பாரதி விருது
  • சென்னை வானொலி சிறுவர் சங்கப் பேரவை அளித்த குழந்தை இலக்கிய ரத்னா விருது
  • கோவை நன்னெறிக் கழகம் வழங்கிய தமிழ்ச் செம்மல் விருது
  • பொள்ளாச்சி தமிழ் இசைச்சங்கம் வழங்கிய பைந்தமிழ் குழந்தைப் பாவலர் பட்டம்
  • கோவை வடக்கு அரிமாசங்கம் அளித்த சிறுவர் இலக்கிய மாமணி விருது
  • அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சிவகங்கைக் கிளை வழங்கிய இலக்கிய மாமணி விருது
  • காரைக்குடி ரோட்டரி கிளப் வழங்கிய குழந்தை இலக்கியப் பணி விருது
  • காரைக்குடி மையமின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (SECRI) மற்றும் மனிதவள மேம்பாட்டு அறிவியல் அமைப்பு அளித்த குழந்தை இலக்கியச் சாதனையாளர் விருது
  • காரைக்குடி கம்பன் கழகம் வழங்கிய கம்பன் அடிப்பொடி விருது
  • சென்னை தமிழ்நூல் வெளியீடு விற்பனைக் கழகம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது

இலக்கிய இடம்

கவிஞர் செல்ல கணபதி அழ. வள்ளியப்பாவை தனது குருவாகவும், ஐயன் பெருமாள் கோனாரை தனக்கான முன்னோடியாகவும் கொண்டு செயல்பட்டார். சிறார்களுக்கான கதைகள், புதினங்கள் பல எழுதியிருந்தாலும், செல்ல கணபதி கவிமணி தேசிக வினாயம் பிள்ளை, அழ. வள்ளியப்பா வரிசையில் முன்னோடி சிறார் பாடலாசிரியராக அறியப்படுகிறார்.

“குழந்தை இலக்கியத்தில் எதைச் சொல்கிறோம் என்பதைவிட எதைச் சொல்லக் கூடாது என்பதே முக்கியம். இந்தப் பொறுப்புணர்ச்சியை உணர்ந்து எழுதுகிற கவிஞராய்ச் செல்லகணபதி திகழ்கிறார்” என்கிறார், சிலம்பொலி செல்லப்பன். “குழந்தை இலக்கியத் துறையில் ஒரு புதிய செல்நெறியை (Trend) உருவாக்கிய பெருமை செல்ல கணபதிக்கு உண்டு” என்று மதிப்பிடுகிறார், முனைவர் இரா. மோகன்.

நூல்கள்

பாடல் நூல்கள்
  • வெள்ளை முயல்
  • பாப்பா பாட்டுப் பாடுவோம் (நான்கு தொகுதிகள்)
  • பாட்டுப் பாடவா!
  • வண்டுகளே உங்களைத் தான்
  • ஆடிப்பாடுவோம்!
  • சின்னச் சின்ன பாட்டு
  • அன்புக் குழந்தைக்கு அறுபது பாடல்கள்
  • பட்டுச்சிறகு
  • அழகுமயில்
  • ஆடும் ஊஞ்சல்
  • பிறந்த நாள்
  • குருவிக் கூடு
  • ஆருயிர்த் தோழி
  • அப்பாவின் கோபம்
  • சித்திரச் சோலை
  • பொறுமையின் பரிசு
  • தேன்கூடு
  • விரிந்தவானம்
  • அம்மா அம்மா
  • நேற்று இன்று நாளை
  • தேடல் வேட்டை
  • அறுபதுக்கு அறுபது
  • பிள்ளைப் பாடல்கள்
  • வானம் வசப்படும்
  • மலரும் மொட்டுக்கள்
  • வளரும் பூக்கள்
  • மணக்கும் பூக்கள்
  • சிறார் புதினங்கள்
  • பூங்குளம் ராஜா
  • காட்டில் பிறந்த நாள்
  • ஓநாய்ப் பையன்
  • இராமு எங்கே போகிறான்?
  • ஒரு நாள் பயணம்
  • அண்ணன் அல்ல அப்பா
தொகுப்பு நூல்
  • மிளகாய்ப் பழச்சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும்
  • பிள்ளைக் கதைகள்
  • ஒரு கதை ஒரு தகவல்
கவிதை நூல்கள்
  • மனக்கோவில் வாழும் உமையே!
  • அருள்மிகு அக்கினி ஆத்தாள் திருப்பதிகம்
  • காலத்தை வென்ற கவியரசர்
  • உறவைத் தேடும் இராகங்கள்
  • நினைவில் பூத்த கவிதை மலர்
  • நெஞ்சில் பூத்த பக்தி மலர்
  • கவிதைச் சிறகுகள்
  • கவிதைக் கனவுகள்
திறனாய்வு நூல்
  • வளர்ச்சிப் பாதையில் குழந்தை இலக்கியம்

உசாத்துணை


✅Finalised Page