under review

வாணி ஜெயராம்

From Tamil Wiki
வாணி ஜெயராம்
வாணி ஜெயராம்
வாணி ஜெயராம் கச்சேரி

வாணி ஜெயராம் (கலைவாணி) (நவம்பர் 30, 1945-பிப்ரவரி 4, 2023) திரையிசைப் பாடகர். கர்நாடக, ஹிந்துஸ்தானி இசையில் பல பாடல்களைப் பாடினார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடினார். இந்திய அரசின் பத்மபூஷண் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

கலைவாணி என்னும் இயற்பெயரை உடைய வாணி ஜெயராம், வேலூரில், நவம்பர் 30, 1945 அன்று, துரைசாமி ஐயங்கார் - பத்மாவதி இணையருக்குப் பிறந்தார். உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்து, ராணி மேரி கல்லுாரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். கர்நாடக இசை கற்றார்.

தனி வாழ்க்கை

வாணி ஜெயராம் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றினார். 1969-ல் ஜெயராமைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின் கணவருடன் மும்பைக்குச் சென்று வசித்தார். இவர்களுக்கு வாரிசுகள் இல்லை.

வாணி ஜெயராம்

இசை வாழ்க்கை

வாணி, இளம் வயதிலேயே இசையார்வம் மிக்கவராக இருந்தார். ரங்கராமானுஜ ஐயங்கார் என்ற இசைக் கலைஞரிடம் இசை கற்றார். கர்நாடக இசையை கடலுார் ஸ்ரீனிவாச ஐயங்கார், டிஆர் பாலசுப்ரமணியம், ஆர்.எஸ்.மணி ஆகியோரிடம் கற்றார். வாணியின் எட்டாவது வயதில் இசை அரங்கேற்றம் நிகழ்ந்தது. தொடர்ந்து அகில இந்திய வானொலியில் பாடினார். சில கச்சேரிகள் செய்தார். திருமணத்திற்குப் பின் மும்பை சென்ற வாணிஜெயராம், உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கானிடம் ஹிந்துஸ்தானி இசை கற்றார். தும்ரி, காஜல், பஜன் இசை நுணுக்கங்களைப் பல்வேறு இசைக் கலைஞர்களிடம் கற்றார்.

வாணி ஜெயராமின் முதல் பாடல் இடம் பெற்ற படம்

திரை வாழ்க்கை

வாணி ஜெயராமின் கணவர் ஜெயராம், மனைவியின் திறமையை அறிந்து அவரைப் பல விதங்களிலும் ஊக்குவித்தார். வாணி ஜெயராம் பாடிய முதல்' திரைப்பாடல், 1971-ல், ‘வசந்த் தேசாய்’ இசையமைத்த ‘குட்டி’(guddi) என்ற ஹிந்திப் படத்தில் இடம் பெற்றது. ‘போலே ரே பப்பி ஹரா' என்ற அந்தப் பாடலுடன்அந்தப் படத்தில் அவர் பாடிய மற்ற நான்கு பாடல்களும் அவருக்குப் புகழைத் தேடித் தந்தன. தமிழில் வாணி ஜெயராமின் முதல் பாடல் சங்கர் கணேஷ் இசையமைத்த 'வீட்டுக்கு வந்த மருமகள்' படத்தில் இடம் பெற்றது. எம்.எஸ்.விஸ்வநாதன்இசையில் ‘தீர்க்க சுமங்கலி’படத்தில் வாணி ஜெயராம் பாடிய 'மல்லிகை என் மன்னன் மயங்கும்...' பாடலால் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றார். தொடர்ந்து தமிழிலும் ஹிந்தியிலும் பல பாடல்களைப் பாடினார்.

சங்கர்கணேஷ், எம்.எஸ். விஸ்வநாதன் தொடங்கி கே.வி.மகாதேவன், ஜி.கே. வெங்கடேஷ், வி குமார், இளையராஜா, குன்னக்குடி வைத்தியநாதன், ஏ.ஆர்.ரஹ்மான், ரமேஷ் விநாயகம் எனப் பலரது இசையில் வாணிஜெயராம் பாடினார். இளையராஜா இசையில் மிக அதிகப் பாடல்களைப் பாடினார். தமிழில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அதிக பாடல்களைப் பாடினார்.

தனது மாறுபட்ட குரல் வளத்திற்காக ‘மீரா ஆஃப் மாடர்ன் இந்தியா' என்று வாணிஜெயராம் போற்றப்பட்டார். திரையிசையில் அதிக மொழிகளில் பாடியவர் வாணிஜெயராம். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், மராத்தி, ஒடியா, குஜராத்தி, அசாமி, துளு, வங்காளம் என 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடினார். இவரது பாடல்கள் பல தனி ஆல்பங்களாக வெளியாகின. பக்திப் பாடல்கள் தனி குறுந்தகடுகளாக வெளியாகின.

சாதனையாளர் விருது

விருதுகள்

  • தமிழக அரசின் சிறந்த பாடகருக்கான மாநில விருது
  • ஆந்திர அரசின் சிறந்த பாடகருக்கான மாநில விருது
  • குஜராத் அரசின் சிறந்த பாடகருக்கான மாநில விருது
  • ஒடிசா அரசின் சிறந்த பாடகருக்கான மாநில விருது
  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • தமிழக அரசின் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது
  • சிறந்த பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (மூன்று முறை)
  • இந்திய அரசின் தேசிய விருது (மூன்று முறை: 1. ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்..’ - அபூர்வ ராகங்கள் திரைப்படம்; 2. ’மானஸ ஸஞ்சரரே...’ - சங்கராபரணம் திரைப்படம்; 3. ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம் - ஸ்வாதிகிரணம் திரைப்படம்.)
  • இந்திய அரசின் பத்மபூஷண் விருது (2023)
  • தான்சேன் விருது
  • கண்டசாலா விருது
  • வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பல விருதுகள்
கணவர் ஜெயராமுடன் வாணி
வாணி ஜெயராம்

மறைவு

2018-ல், கணவரை இழந்து சென்னையில் தனிமையில் வசித்து வந்த வாணிஜெயராம், பிப்ரவரி 4, 2023-ல், வீட்டிற்குள் விபத்தால் தலையில் அடிபட்டுக் காலமானார். தமிழக அரசின் காவல்துறை மரியாதை, அவரது உடல் நல்லடக்கத்திற்கு அளிக்கப்பட்டது.

மதிப்பீடு

தமிழ்த் திரையிசைப் பாடகர்களில் தனித்துவமிக்க குரலுக்கு உரியவர், வாணி ஜெயராம். திரையிசைப் பாடகராகப் பலரால் அறியப்பட்டிருந்தாலும் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை இரண்டிலும் வல்லவர். ஆரம்ப காலத்தில் கச்சேரிகள் செய்தார். கர்நாடக இசை, கஜல், ஹிந்துஸ்தானி, பக்தி இசை, துள்ளலோசைப் பாடல்கள் என எல்லா வகைக்கும் பொருந்திப் போகக் கூடிய குரல் வளம் கொண்டவர். அதனாலேயே இந்திய மொழிகள் பலவற்றில் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. "எல்லா மொழிகளிலும் அவற்றினுடைய த்வனி தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகி"-என்று கவியரசு கண்ணதாசன் வாணி ஜெயராமைப் பாராட்டினார்.

“வாணி பின்னணி பாடுவதை ஒரு செயல்பாடாக நிறுத்திவிடாமல் நளினமாக மாற்றியவர். உதடுகளிலிருந்து பாடாமல் உடலைத் தாண்டிய உள்ள ஆழமொன்றிலிருந்து தன் ஆன்மாவின் மாய இருளொன்றைத் துகளாக்கித் தூவினாற் போல் பாடல்முறையைக் கட்டமைத்துக்கொண்டவர்” என்று மதிப்பிடுகிறார், எழுத்தாளர் ஆத்மார்த்தி [1].

வாணி ஜெயராமின் சில பாடல்கள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page