under review

கே.வி. மகாதேவன்

From Tamil Wiki
கே.வி. மகாதேவன்

கே.வி. மகாதேவன் (கிருஷ்ணன் கோவில் வெங்கடாசல மகாதேவன்; மகாதேவன்; கே.வி.எம்.; மாமா) (மார்ச் 14, 1918-ஜூன் 21, 2001) நடிகர், பாடகர், இசை அமைப்பாளர். பி.யு. சின்னப்பா, எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்தார். கர்நாடக ராகங்களை அடிப்படையாகக் கொண்ட பல இசைப் பாடல்கள் திரையில் ஒலிக்கக் காரணமானார். ‘திரை இசைத் திலகம்’ என்று போற்றப்பட்டார்.

பிறப்பு, கல்வி

கிருஷ்ணன் கோவில் வெங்கடாசல மகாதேவன் என்னும் கே.வி. மகாதேவன், நாகர்கோவில் வடசேரியை அடுத்துள்ள கிருஷ்ணன் கோவிலில், மார்ச் 14, 1918 அன்று, வெங்கடாசல பாகவதர்-லட்சுமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். தந்தை, தாத்தா இருவருமே இசைக் கலைஞர்கள். அவர்கள் வழி கே.வி. மகாதேவனுக்கும் இசை ஆர்வம் ஏற்பட்டது. அடிப்படைப் பள்ளிக் கல்வி மட்டுமே பயின்றார்.

கே.வி. மகாதேவன்

தனி வாழ்க்கை

ஆரம்ப காலகட்டங்களில் நிரந்தரமான வேலை அமையாததால் ஓட்டல் ஒன்றில் சர்வராகப் பணியாற்றினார். நாடகத்தில் நடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். கே.வி. மகாதேவன், மணமானவர். மனைவி லட்சுமி.இரு மகன்கள், மூன்று மகள்கள். மகன் வி. மகாதேவன் 'மாசிலாமணி' திரைப்படத்தில் நீதிபதியாக நடித்தார்.

நாடகம்

கே.வி. மகாதேவன், நாடக ஆர்வத்தால், சிறார்களைக் கொண்டு நடத்தப்பெற்ற ’ஸ்ரீ பாலகாந்தர்வ கான சபா’வில் சேர்ந்து நடித்தார். நாடக நடிகர், பாடகர், பின் பாட்டுப் பாடுபவர், இசையமைப்பாளர் என்று பல பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றினார். அக்குழுவிலிருந்து விலகி வேறு சில நாடகக் குழுக்களில் இணைந்து சிறு சிறு வேடங்களில் நடித்தார்.

கே.வி. மகாதேவனின் பல்துறைத் திறமையை அறிந்த நாடக ஆசிரியர் சந்தானகிருஷ்ண நாயுடு, வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவிற்கு கே.வி. மகாதேவனைப் பரிந்துரைத்தார். சில ஆண்டுகாலம் அவர்கள் தயாரித்த படங்களில் துணை நடிகராக நடித்தார் மகாதேவன்.

இசை வாழ்க்கை

கே.வி. மகாதேவனின் தாத்தா ராம பாகவதர், திருவனந்தபுரம் அரசவையில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர். அவரிடம் மகாதேவன் இசை கற்றார்.பின்னர் பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடமும், அங்கரை விஸ்வநாத பாகவதரிடமும் குருகுலவாசமாக இசை பயின்றார். குருவுடன் இணைந்து பல கச்சேரிகள் செய்தார். கதா காலட்சேபத்துக்குப் பின்பாட்டுப்பாடினார். வயலின் மகாதேவன் என்ற இசை வல்லுநர் மூலம் எச்.எம்.வி. ரிக்கார்டிங் கம்பெனிக்காக வாசித்தார்.

கே.வி. மகாதேவன் - பி.சுசீலா - எஸ்.பி. பாலசுப்ரமணியம்
கே.ஜே. ஜேசுதாஸ்- டி.கே. கலா (போய் வா நதி அலையே பாடல் பதிவி)
கண்டசாலா உடன் கே.வி. மகாதேவன்

திரை வாழ்க்கை

கே.வி. மகாதேவனின் பாடல் பாடும் திறமையையும் இசை அமைக்கும் திறமையையும் அறிந்த இசையமைப்பாளர் டி. ஏ. கல்யாணம் மகாதேவனைத் தனது உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘மனோன்மணி’ படத்தில் கே.வி. மகாதேவன் உதவி இசையமைப்பாளராகப் பணியாற்றினார். அப்படத்தில் பி.யு. சின்னப்பா பாடிய, ‘மோகனாங்க வதனி’ என்ற பாடலுக்கு மகாதேவனே இசை அமைத்தார். திரைப்படத்தில் அதுவே அவரது முதல் பாடல். அப்படமே முதல் படம். சின்னப்பாவின் பரிந்துரையின் பேரில், மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி. ஆர். சுந்தரம், மகாதேவனைத் தனது குழுவில் இணைத்துக் கொண்டார்.

கே.வி. மகாதேவன், டி.ஏ. கல்யாணத்துடன் இணைந்து ‘மாயஜோதி’, ‘சிவலிங்க சாட்சி’, ‘அக்னி புராண மகிமை’ போன்ற படங்களுக்கு இசையமைத்தார். பின்னர் கல்யாணத்திடமிருந்து விலகி இசையமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமனிடம் உதவி இசையமைப்பாளராகப் பணியாற்றினார். நாளடைவில் மகாதேவனுக்குத் தனித்து இசையமைக்கும் வாய்ப்புகள் வந்தன. ’பக்த ஹனுமான்’, ‘நல்ல காலம்’, ‘மதன மோகினி’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்து, தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். 1945ல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸின் ‘பர்மா ராணி’ மகாதேவனின் பேர் சொல்லும் படமாக அமைந்தது.

மகாதேவன், இசையமைப்பாளர் ஜி. ராமநாதனைத் தனது குருஸ்தானத்தில் வைத்து மதித்தார். அவருடன் இணைந்து சில படங்களில் பணியாற்றினார். ஜி.ராமநாதனைப் போலவே கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல்களுக்கு இசை அமைத்தார். அதேசமயம் காலமாற்றத்திற்கேற்ப மெல்லிசை, துள்ளலிசைப் பாடல்களுக்கும், நாட்டுப்புறப் பாடல்களுக்கும் முக்கியத்துவமளித்தார். டி.கே. புகழேந்தி மகாதேவனின் உதவியாளராகச் சேர்ந்தது முதல் அவரது இசைப் பயணம் மேலும் புகழுடன் தொடர்ந்தது.

கே.வி. மகாதேவன் - ஜெயலலிதா - எம்.ஜி. ஆர்.
வெற்றிப் படங்கள்

மகாதேவன் இசை அமைத்த முதல் எம்.ஜி.ஆர். படம் ‘குமாரி’. தொடர்ந்து பல எம்.ஜி.ஆர். படங்களுக்கு இசையமைத்தார். சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பாத் தேவர் தயாரித்த படங்கள் பலவற்றிற்கும் இசை மகாதேவன் தான். தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், போன்ற படங்கள் தொடங்கி எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண், நல்ல நேரம் , பல்லாண்டு வாழ்க வரை ஏராளமான படங்களுக்கு இசையமைத்தார். திருவிளையாடல், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் , தில்லானா மோகனாம்பாள், குங்குமம், இருவர் உள்ளம், வசந்த மாளிகை என சிவாஜிக்கும் தனது இசையமைப்பின் மூலம் பல வெற்றிப்படங்களைத் தந்தார்.

பி.யு. சின்னப்பா, எம்.கே.டி. பாகவதர், டி.ஆர். மகாலிங்கம், டி.ஏ. பெரிய நாயகி என அந்தக் காலத்து ஜாம்பவான்கள் தொடங்கி டி.எம்.எஸ்., சுசீலாவுடன், எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.ஜே.ஏசுதாஸ் என மூன்றாம் தலைமுறைப் பாடகர்களுடனும் மகாதேவனின் இசைப்பயணம் தொடர்ந்தது. ‘ஆயிரம் நிலவே வா’ பாடலின் மூலம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை அறிமுகம் செய்தவர் மகாதேவன் தான். (படம்: அடிமைப்பெண்) லூர்து மேரி ராஜேஸ்வரியை எல்.ஆர். ஈஸ்வரியாகப் பெயர் சூட்டி முதன்முதலில் பின்னணிப் பாடகியாக தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகம் செய்தவரும் மகாதேவன் தான். (படம்: நல்ல இடத்து சம்பந்தம்) ஜெயலலிதாவை முதன்முதலாகச் சொந்தக் குரலில் ‘அம்மா என்றால் அன்பு’ என்று பாடவைத்தவரும் கே.வி. மகாதேவன் தான். (படம்: அடிமைப்பெண்) நாதஸ்வர மேதைகளான எம்.பி.என். சேதுராமன், எம்.பி.என். பொன்னுச்சாமி மற்றும் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் ஆகியோரைத் தன் இசையில் வாசிக்க வைத்தார்.

கே.வி. மகாதேவன் இசையமைத்த திரைப்படங்கள்
பாடலும் மெட்டும்

மகாதேவன், தனது அனைத்துத் திரைப்பட பாடல்களுக்கும், பெரும்பாலும் வரிகள் எழுதப்பட்ட பிறகுதான் அவற்றுக்கு ஏற்றவாறு இசையமைத்தார். ‘பாட்டுக்கு மெட்டு’ என்பதே மகாதேவனின் கொள்கை. பாடல் வரிகள் இசையமைப்புக்குப் பொருந்தி வராவிட்டால் பாடலாசிரியரை அழைத்து பாடல் வரிகளை மாற்றச் சொல்வதற்குப் பதிலாக, பாடல் வரிகளை விருத்தமாகப் பாட வைத்து விடுவார். ‘மாமா.. மாமா.. மாமா’ என்ற பாடலைத் தமிழிலும் (படம்: குமுதம்) தெலுங்கிலும்: மஞ்சி மனசுலு) தந்ததற்காக ‘மாமா’ என்று மகாதேவன் அழைக்கப்பட்டார்.

’கந்தன் கருணை’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார். 1967-ல், முதன் முதலில் அமைக்கப்பட்ட அவ்விருதை, முதன் முதலில் தமிழ்த் திரையுலகில் பெற்ற இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் தான்

பின்னணிப் பாடல்கள்

கே.வி. மகாதேவன், ‘மதன மோகினி’ திரைப்படத்தில் பி.லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றைப் பாடினார். மேலும் சில படங்களிலும் பாடல்களைப் பாடினார். ‘அல்லிபெற்ற பிள்ளை’ என்ற படத்திற்காக, கே.வி. மகாதேவனின் இசையமைப்பில், அவரது குருநாதர் ஜி. ராமநாதன், ‘எஜமான் பெற்ற செல்வமே' என்ற பாடலைப் பாடினார.

இசை நிறுத்தம்

கே.வி. மகாதேவன் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளிலும் சேர்த்து 1500 படங்களுக்கு மேல் இசையமைத்தார். 1990-ல் ‘முருகனே துணை’ என்ற படத்துடன் தனது இசையமைப்புப் பணியை கே.வி. மகாதேவன் நிறுத்திக்கொண்டார்.

கே.வி. மகாதேவன் இசையமைத்த சில பாடல்கள்

  • ஏரிக்கரை மேல போறவளே பெண்மயிலே..
  • மணப்பாறை மாடுகட்டி...
  • மனுசனை மனுஷன் சாப்பிடறாண்டா...
  • சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா...
  • அசைந்தாடும் தென்றலே நீ தூது செல்லாயோ...
  • நிலவோடு வான் முகில் விளையாடுதே...
  • அமுதும் தேனும் எதற்கு...
  • சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா...
  • ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா...
  • ஆசையே அலை போலே...
  • கங்கைக் கரை தோட்டம்...
  • கலைமகள் கைப்பொருளே...
  • சின்னஞ்சிறிய வண்ணப்பறவை...
  • சங்கரா...
  • பூந்தேனில் கலந்து...
  • சொர்க்கத்தின் திறப்பு விழா...
  • பாட்டும் நானே...
  • மன்னவன் வந்தானடி...
  • ஒருநாள் போதுமா...
  • கங்கைக்கரைத் தோட்டம்...
  • பார்த்தேன் சிரித்தேன்...
  • சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா...
  • மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன...
  • ஆயிரம் நிலவே வா...
  • அம்மா என்றால் அன்பு...
  • திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்...
  • ஒன்றே குலம்என்று பாடுவோம்...
  • போய்வா நதியலையே...
  • இணைப்பு
  • கே.வி. மகாதேவன் இசையமைத்த முதல் பாடல்
  • கே.வி. மகாதேவன் தமிழ்த் திரையிசைப் பாடல்கள்

விருதுகள்

  • சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது (1967, கந்தன் கருணை)
  • சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு விருது (1969, அடிமைப் பெண்)
  • சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1980, சங்கராபரணம்)
  • சிறந்த இசையமைப்பாளருக்கான பில்ம்பேர் விருது (தெலுங்கு) (1992, சுவாதி கிரணம்)
  • கலைமாமணி விருது
  • திரை இசைத் திலகம்
  • இசைச் சக்கரவர்த்தி
  • ஸ்வரப்பிரம்மம்

மறைவு

கே. வி. மகாதேவன் 2001 ஜூன் 21 அன்று தனது 83-ம் வயதில் சென்னையில் காலமானார்.

ஆவணம்

கே.வி. மகாதேவன் வாழ்க்கை வரலாறு-வாமனன் (நன்றி: மணிவாசகர் பதிப்பகம்)

கே.வி. மகாதேவனின் வாழ்க்கை வரலாற்றை, ‘மன்னவன் வந்தானடி’ என்ற தலைப்பில் எழுத்தாளர், பத்திரிகையாளர் வாமனன் ஆவணப்படுத்தியுள்ளார். மணிவாசகர் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

வரலாற்று இடம்

கர்நாடக இசைக்கும் பக்தி இசைக்கும் முக்கியத்துவம் தந்து இசையமைத்தவர் கே.வி. மகாதேவன். நாட்டுப்புறப் பாடல் வடிவங்களையும் தனது இசையில் சிறப்பாகக் கையாண்டார். ராகங்களின் அழகைச் சிதைக்காமல், அவற்றின் பாவங்கள் வெளிப்படும் வகையில் மிகச் சிறப்பாக இசையமைத்தவராக கே.வி. மகாதேவன் மதிப்பிடப்படுகிறார்

உசாத்துணை


✅Finalised Page