under review

அந்தாதி

From Tamil Wiki
Revision as of 14:48, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)

To read the article in English: Andhadhi. ‎

அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் (இறுதியாக) உள்ள அடியோ, சீரோ, அசையோ, எழுத்தோ அடுத்த செய்யுளின் முதலாக அமையப் பாடுவது அந்தாதியாகும். அந்தம் (இறுதி) ஆதியாக (முதலாக) வருவதால் இப்பெயர். அந்தாதி (கடைமுதலி / ஈற்றுமுதலி) என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும் குறிக்கும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது, அது அந்தாதித் தொடை (கடைமுதலி/ஈற்றுமுதலித் தொடை) எனப்படும். இதற்குரிய யாப்பு வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறை.

தோற்றமும் வளர்ச்சியும்

சங்க இலக்கியங்களில் அந்தாதி தனி இலக்கியமாக இல்லாவிட்டாலும் புறநானூற்றில் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய பாடலில் முதல் ஐந்து வரிகளில் அந்தாதி அமைப்பினைக் காண முடிகிறது.

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும்
                                                      -புறம்(2)

சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தில் அந்தாதி அமைப்பு உண்டு.

தமிழில் தோன்றிய முதல் அந்தாதி காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி. மாணிக்கவாசகரின் திருவாசகம், திருமூலரின் திருமந்திரம், நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஆகியவற்றிலும் அந்தாதி வடிவில் அமைந்த பாடல்களைக் காண முடியும். இவை தவிர சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த நான்மணிமாலை, இரட்டைமணிமாலை, அட்டமங்கலம், நவமணிமாலை, ஒருபா ஒருபது, இருபா இருபது, மும்மணிக்கோவை, மும்மணிமாலை, கலம்பகம் என்பவை அந்தாதியாக அமைகின்றன.

பக்தி இலக்கிய காலத்தில் அந்தாதி நூல்கள் பல உருவாகி வந்தன. பக்திப் பாடல்களை மனப்பாடம் செய்ய அந்தாதி இலக்கியம் ஏற்றதாக இருந்தது. சைவத்தின் 12 திருமுறைகளில் 11-ஆம் திருமுறையில் மட்டும் 8 அந்தாதி நூல்கள் அடங்கியுள்ளன. ஆழ்வார்களில் நம்மாழ்வாரும் திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களையும் அந்தாதித் தொடையில் அமைத்துள்ளார்.

அந்தாதி நூல்கள்

குறிப்பிடத்தக்க அந்தாதிகள் சில:

  • முதல் திருவந்தாதி - பொய்கை ஆழ்வார்
  • இரண்டாம் திருவந்தாதி - பூதத்தாழ்வார்
  • மூன்றாம் திருவந்தாதி - பேயாழ்வார்
  • சடகோபரந்தாதி - கம்பர்
  • திருவரங்கத்தந்தாதி - பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
  • கந்தரந்தாதி - அருணகிரிநாதர்
  • திருவருணை அந்தாதி - எல்லப்ப நாவலர்
  • அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்
  • திருக்குறள் அந்தாதி -இராசைக் கவிஞர்

11-ஆம் திருமுறையில் வரும் அந்தாதிகள்

  • அற்புதத் திருவந்தாதி - காரைக்கால் அம்மையார்
  • சிவபெருமான் திருவந்தாதி - கபிலதேவ நாயனார்,
  • சிவபெருமான் திருவந்தாதி - பரணதேவ நாயனார்
  • கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி - நக்கீர தேவ நாயனார்
  • திரு வேகம்பமுடையார் திருஅந்தாதி - பட்டினத்தடிகள்
  • திருத்தொண்டர் திருஅந்தாதி - நம்பியாண்டார் நம்பிகள்
  • ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பிகள்
  • பொன் வண்ணத்தந்தாதி - சேரமான் பெருமாள் நாயனார்

19-ஆம் நூற்றாண்டில் மிகுதியான அந்தாதி நூல்கள் தோன்றின. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் அதிக எண்ணிக்கையில் அந்தாதி நூல்கள் இயற்றியுள்ளனர்.

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page