under review

மூன்றாம் திருவந்தாதி

From Tamil Wiki

மூன்றாம் திருவந்தாதி திருமாலைப் போற்றி பேயாழ்வாரால் இயற்றப்பட்டது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் காலவரிசையில் மூன்றாவதாக இயற்றப்பட்டது. மூன்றாம் ஆயிரத்தின் இயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அந்தாதி அமைப்பில் 100 பாடல்களைக் கொண்டது. பேயாழ்வாரால் திருக்கோயிலூரில் உலகளந்த பெருமாளை வணங்கி மங்களாசாசனம் செய்து பாடப்பட்ட இவ்வந்தாதி " திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் " என்னும் வரியை முதலடியாகக் கொண்டு துவங்குகிறது.

தோற்றம்

முதலாழ்வார்கள் (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்) மூவரும் திருக்கோயிலூரில் உலகளந்த பெருமாளின் ஆலயத்திற்கருகில் ஓர் இடைகழியில் மழைக்கு ஒதுங்கியபோது நான்காவது நபர் ஒருவர் தம்மை நெருக்குவதாக உணர்ந்தனர். இருட்டில் விளக்கு இல்லாமையால் பாசுரங்களால் விளக்கேற்ற எண்ணி பொய்கையாழ்வார் ' வையம் தகளியா வார்கடலே நெய்யாக' என்று தொடங்கி 100 பாசுரங்களை அந்தாதியாகப் பாடினார். இந்த நூறு பாசுரங்களும் 'முதலாம் திருவந்தாதி' எனப் பெயர் பெற்றன. தொடர்ந்து பூதத்தாழ்வார் 'அன்பே தகளியா' எனத் தொடங்கி 100 பாசுரங்களைப் பாடினார்.இவை இரண்டாம் திருவந்தாதி எனப் பெயர் பெற்றன. பேயாழ்வார் முதலிருவர் ஏற்றிய விளக்கின் ஒளியில் திருமாலைக் கண்டு, "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்" எனத் தொடங்கி அந்தாதியாய் 100 பாடல்களைப் பாடினார். பேயாழ்வார் பாடிய 100 பாடல்கள் மூன்றாம் திருவந்தாதி எனப் பெயர் பெற்றன. பார்க்க: முதலாழ்வார்கள்-திருக்கோயிலூரில் சந்திப்பு.

நூல் அமைப்பு

குருகை காவலப்பன் மூன்றாம் திருவந்தாதிக்கு இயற்றிய பாயிரம் (தனியன்).

சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு, - ஓராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,
உரைக்கண்டாய் நெஞ்சே உகந்து.

முதல் பாடல்

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.

எனத் தொடங்கி அந்தாதியாக நூறு பாடல்களைக் கொண்ட மூன்றாம் திருவந்தாதி

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,
தேனமரும் பூமேல் திரு.

என்ற பாடலோடு முடிவு பெறுகிறது.

முக்கியமான பாசுரங்கள்

பார்க்க: பேயாழ்வார்

உசாத்துணை

மூன்றாம் திருவந்தாதி-தமிழ் இணைய கல்விக் கழகம்

மூன்றாம் திருவந்தாதி-முனைவர் ஜம்புலிங்கம்


✅Finalised Page