under review

பேயாழ்வார்

From Tamil Wiki
அனுவின் தமிழ் துளிகள்

பேயாழ்வார் வைணவத்தின் பன்னிருஆழ்வார்களிலும் முதலாழ்வார் மூவரிலும் மூன்றாமவர். திவ்யப் பிரபந்தத்திலுள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர். முதலாழ்வார் மூவருள் மூன்றாமவராக விளங்குபவர். திருமழிசை ஆழ்வார் இவரை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றார்.

பிறப்பு

சித்தார்த்தி வருடம் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் மயிலாப்பூரில் (ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தின் அருகில்) ஓர் கிணற்றில் செவ்வல்லி மலரின் மேல் அவதரித்தார். ஆழ்வார்களில் சிலர் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஏதேனும் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவக் கொள்கை. இதன்படி பேயாழ்வார் நந்தகம் எனப்படும் பெருமாளின் வாளின் அம்சமாகக் கருதப்படுகிறார். பொ. யு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய இளமைப் பருவம் பற்றிய செய்திகள் அறியக் கிடைப்பதில்லை.

பெயர்க்காரணம்

திருமாலிடம் கொண்ட பக்தியினால் உன்மத்தம் பிடித்தவர் போல, தன்னை மறந்து கண்கள் சுழலும்படி விழுந்தும், சிரித்தும், தொழுதும், வந்ததால் பேயாழ்வார் என்று பெயர் பெற்றார்.

திருக்கோயிலூரில் சந்திப்பு, இரண்டாம் அந்தாதி இயற்றல்

(பார்க்க: முதலாழ்வார்கள்- திருக்கோயிலூரில் சந்திப்பு)

பூதத்தாழ்வார் திருக்கோயிலூருக்கு உலகளந்த பெருமாளை தரிசிக்கச் சென்று, மழைக்கு ஓர் இடைகழியில் ஒதுங்கியபோது அங்கு வந்த பூதத்தாழ்வாருடனும், பேயாழ்வாருடனும் சந்திப்பு எற்பட்டது. மூவருடன் நான்காவதாக ஒருவர் நெருக்கி நிற்பதையுணர்ந்து அவர் யார் எனப் பார்க்க வேண்டி, பொய்கையாழ்வார் 'வையம் தகழியா' எனத் தொடங்கி முதல் திருவந்தாதியைப் பாடினார். பூதத்தாழ்வார் அவரைத் தொடர்ந்து 'அன்பே தகளியா' அனத் தொடங்கி இரண்டாம் திருவந்தாதியைப் பாடினார். பேயாழ்வார் முதல் இரு ஆழ்வார்களின் பாடல்களால் தோன்றிய விளக்கின் ஒளியில் உலகளந்த பெருமாளைக் கண்டு, தான் கண்ட காட்சியைப் பின்வரும் பாடலாகப் பாடினார்.

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருகிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைகண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று .

என்ற பாடலில் தொடங்கி இயற்றிய 100 வெண்பாக்களைக் கொண்டது மூன்றாம் திருவந்தாதி. அந்தாதித் தொடையில் இயற்றப்பட்ட மிகப் பழைய பிரபந்தங்களுள் இதுவும் ஒன்றாகும். இரண்டாம் திருவந்தாதி நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் 'இயற்பா' தொகுப்பில் இடம்பெறுகிறது.

இச்சந்திப்புக்குப்பின் பூதத்தாழ்வார் பொய்கையாழ்வார் இருவருடன் பல தலங்களுக்கு யாத்திரை சென்று திருமால் புகழ் பாடினார்.

முக்கியமான பாசுரங்கள்

முதல் இருவர் போலவே இந்த ஆழ்வாரும் திருமாலின் பல்வேறு அவதாரச் செய்திகளைப் பல செய்யுட்களில் பாடியுள்ளார். ஆழ்வார் பாடல்களில் காணப்படும் உலகை உண்டு உமிழ்ந்த நிகழ்வைப் பேயாழ்வாரும் குறிப்பிடுகிறார்.

மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடு ஆற்றா மகன் (மூன்றாம் திருவந்தாதி-91)

திருமால் எழுந்தருளியுள்ள தலங்களில் வெஃகா, திருவேங்கடம், தென்குடந்தை, திருவரங்கம், திருக்கோட்டியூர் ஆகிய தலங்கள் ஒரு பாட்டிலேயே குறிக்கப்பட்டுள்ளன.

விண்ணகரம் வெகா விரிதிரைநீர் வேங்கடம்,
மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. (மூன்றாம் திருவந்தாதி-62)

பேயாழ்வாரின் கற்பனைத் திறத்துக்கு எடுத்துக்காட்டாக பிவரும் பாடல் அமைகிறது.

திருமாலின் உந்தியில் உள்ள தாமரை அவர் கையில் ஏந்தியுள்ள சக்கரத்தைக் காலைக் கதிரவன் என்று கருதி மலர்கிறதாம். அவர் மற்றொரு கையில் ஏந்திய வெண் சங்கினைச் சந்திரன் எனக் கருதிக் குவிகிறதாம் என்று பாடியதைக் கூறலாம்.

ஆங்கு மலரும் குவியுமாம் உந்திவாய்
ஓங்கு கமலத்தின் ஒண்போது - ஆங்கைத்
திகிரிசுடர் என்றும்; வெண் சங்கம் வானில்
பகரும் மதி என்றும் பார்த்து

(பொருள்:திருமாலின் உந்தியில் உள்ள தாமரை அவர் கையில் ஏந்தியுள்ள சக்கரத்தைக் காலைக் கதிரவன் என்று கருதி மலர்கிறது. அவர் மற்றொரு கையில் ஏந்திய வெண் சங்கினைச் சந்திரன் எனக் கருதிக் குவிகிறது.)

பேயாழ்வாரும் பொய்கையாழ்வாரைப் போலவே சைவ வைணவ நல்லிணக்கத்தை வேண்டி, சிவனையும், திருமாலையும் ஒருவராகவே காண்கின்றார்.

தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும்ஒன்றாய் இசைந்து

"தாழ்ந்த சடையும், நீண்ட முடியும், மழுவும், சக்கரமும், பாம்பும், பொன் நாணும் திரிமலையில் காட்சி தரும் எந்தையின் இரு உருவங்களின் அம்சங்கள் என்ற இப்பாடல் திருப்பதியின் பிரபலத்திற்கு முக்கிய காரணம் " என்று எழுத்தாளர் சுஜாதா குறிப்பிடுகிறார்.

மங்களாசாசனம் செய்த திருத்தலங்கள்

பெருமாளின் 108 திருப்பதிகளில் பேயாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ள திருக்கோயில்கள்:

  • அழகிய சிங்க பெருமாள் கோயில், திருவேளுக்கை[1]
  • யோக நரசிம்மர் ஆலயம்,திருக்கடிகை (சோளிங்கர்)[2]
  • பார்த்தசாரதிப் பெருமாள் கோயில், திருவல்லிக்கேணி[3]
  • திரு விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோயில்)
  • திருவெஃகா (சொன்னவண்ணம் செய்தபெருமாள் கோயில்), காஞ்சிபுரம்[4]
  • பாண்டவ தூதப் பெருமாள் கோயில்,
  • திருப்பாடகம்
  • சௌம்ய நாராயணப் பெருமாள் கோயில்,திருக்கோஷ்டியூர்
  • திருமாலிருஞ்சோலை
  • கும்பகோணம் [5]
  • திருவேங்கடம்[6]

வாழி திருநாமம்

திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்தவள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருக்கிடவேயிடைகழியில் நின்ற செல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்,
    நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், - அன்று
    கிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக்
    கடந்தானை நெஞ்சமே. காண்.

  2. பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,
    கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், - வண்டு
    வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
    இளங்குமரன் றன்விண் ணகர்.

  3. வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
    அந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை
    ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
    திருவல்லிக் கேணியான் சென்று

  4. பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து
    நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா விருப்புடைய
    வெகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,
    அகாவே தீவினைகள் ஆய்ந்து.

  5. சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம்
    நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, - வாய்ந்த
    மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி,
    இறைபாடி யாய இவை.

  6. உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்
    உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,
    விண்ணெடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்,
    மண்ணெடுங்கத் தானளந்த மன்.


✅Finalised Page