under review

திருமழிசை ஆழ்வார்

From Tamil Wiki

திருமழிசை ஆழ்வார் (பொ.யு. ஏழாம் நூற்றாண்டு) வைணவ நெறியின் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி ஆகிய பிரபந்தங்களை இயற்றினார். சந்த நயமும், சொல் நயமும் மிக்க பாடல்களை இயற்றினார்.

வாழ்க்கைக்குறிப்பு

திருமழிசை ஆழ்வார் தொண்டை நாட்டிலுள்ள திருமழிசையில் பார்க்கவ முனிவருக்கும் கனகாங்கிக்கும் தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று பிறந்தார். ஆழ்வார்களில் சிலர் திருமாலின் ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்ற வைணவக் கோட்பாட்டின்படி இவர் திருமாலின் சுதர்சன சக்கரத்தின் அம்சம் என்று கூறப்படுகிறது.

சதைப்பிண்டமாக இருந்த குழந்தையைக் கைவிட்டு அன்னை சென்றுவிட பிரப்பங்காட்டில் இருந்த இக்குழந்தையை, பிரம்பு வெட்டிச் செல்ல வந்த திருவாளன் தன் இல்லத்திற்கு எடுத்துச் சென்று வளர்த்தார். ஒரு வைணவர் இக்குழந்தைக்குக் காய்ச்சிய பாலைத் தினமும் கொடுத்து வந்தார். சிறுவனான அக்குழந்தை சிறிது பாலை மட்டும் அருந்தி விட்டு மீதியை அத்தம்பதியரைக் குடிக்கச் சொல்ல, அருந்தியவுடன் அவர்கள் முதுமை நீங்கி, இளமை பெற்றனர். அவர்களுக்குப் பிறந்த குழந்தை கனிகண்ணன் ஆழ்வாருக்குத் தோழனாகவும், சீடனாகவும் இருந்தான் என்று குருபரம்பரைக் கதைகள் கூறுகின்றன.

காலம்

திருமழிசை ஆழ்வார் முதலாழ்வார்களின் சமகாலத்தவர் எனக் கருதப்படுகிறது. அவரது காலத்தைப் பல்வேறு அறிஞர்கள் பின்வருமாறு கணித்தனர்:

ஆன்மிக வாழ்க்கை

திருமழிசை ஆழ்வார் மெய்ப்பொருளை அறிய சைவம், சமணம், பௌத்தம் என பல சமயங்களை ஆய்ந்து இறுதியில் திருமாலே முழுமுதல் தெய்வம் எனத் தெளிந்தார். இவர் சிவவாக்கியர் என்ற பெயரில் சைவத்தை முதலில் பின்பற்றி பின்னர் வைணவம் தழுவினார் என்ற வரலாறும் உண்டு. திருவல்லிக்கேணியில் முதலாழ்வார்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது. பேயாழ்வார் அவருக்கு வைணவத்தை உபதேசித்ததாகவும் கூறப்படுகிறது.

சொன்னவண்ணம் செய்த பெருமாள்-குருபரம்பரைக் கதை

ஆழ்வார் திருவெஃகாவில் கணிக்கண்ணனுடன் இருந்த பொழுது, தனக்கு சேவை புரிந்த வயது முதிர்ந்த பெண்ணுக்கு என்றும் குமரியாக இருக்க வரம் தந்தார். அவளைப் பல்லவ அரசன் மணந்தான். வருடங்கள் சென்றும் அவள் குமரியாகவே இருப்பதைக்கண்டு கனிகண்னனிடம் தனக்கும் அதே வரம் தரும்படி ஆணையிட்டான். கனிகண்ணன் மறுக்க, அவனை அவனது குருவான திருமழிசை ஆழ்வாருடன் காஞ்சியைவிட்டு வெளியேற ஆணையிட்டான்.

ஆழ்வார் காஞ்சியை விட்டு வெளியேறும்போது திருவெஃகாவில் கோவில் கொண்ட பெருமாளையும் தன்னுடன் வரும்படி ஆணையிட[1], பெருமாளும் அவர்கள் பின் சென்றதால் நகரம் சூனியமாகியது. தவறை உணர்ந்த மன்னன் ஆழ்வாரைத் திரும்பவும் காஞ்சிக்கு வரும்படி அழைக்க ஆழ்வார் பெருமாளுக்கு அவ்வாறே ஆணையிட[2],பெருமாளும் அவர்களுடன் காஞ்சிக்குத் திரும்பியதாக குருபரம்பரைக் கதை கூறுகிறது. இதனால் திருவெஃகாவில் கோவில் கொண்ட பெருமாள் 'சொன்னவண்ணம் செய்த பெருமாள்'(யதோத்காரி) என்று பெயர் பெற்றார்.

குடந்தை

திருமழிசை ஆழ்வார் தன் வாழ்நாளின் இறுதியில் குடந்தைக்குச்(கும்பகோணம்) சென்றார். காவிரியாற்றில் அவர் பாடிய பாடல்களை இட்ட போது திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி இரண்டின் சுவடிகள் மட்டும் மீண்டு வந்தன. ஆராவமுதப் பெருமாளை வழிபாட்டு, குடந்தையிலேயே தங்கி எம்பெருமான் பெயரில் மங்களசாசனம் பாடினார். குடந்தையில் 'கிடந்தவாரெழுந்து பேசு வாழி கேசனே' என்ற அவரது பாசுரத்தைக்கேட்டு பெருமாள் சயனத்திலிருந்து எழ முற்பட்டதாக குருபரம்பரைக் கதைகள் கூறுகின்றன.

பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமழிசை ஆழ்வார் பதிமூன்று திவ்விய தேசத் திருக்கோயில்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்

மங்களாசாசனம் செய்த திவ்ய தேசங்கள்

திருமழிசை ஆழ்வார் தனியாகச் சென்று மங்களாசாசனம் செய்த திவ்ய தேசங்கள்

  • கபிஸ்தலம் (அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம், தஞ்சாவூர்)
  • அன்பில் (அருள்மிகு வடிவழகிய நம்பி திருக்கோயில், அன்பில், திருச்சி)

மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து மங்களாசாசனம் செய்த தலங்கள்

  • திரு ஊரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)
  • திருவல்லிக்கேணி (அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை)
  • திருப்பேர் நகர் (அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்)
  • திருக்குறுங்குடி (அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி)
  • திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்)
  • திருப்பாடகம் (அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், காஞ்சிபுரம்)
  • திருக்கோஷ்டியூர் (அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர், சிவகங்கை)
  • கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)
  • திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
  • திருப்பாற்கடல்

இலக்கிய வாழ்க்கை

திருமழிசை ஆழ்வார் இயற்றியவை திருச்சந்த விருத்தம்(120 பாசுரங்கள்), நான்முகன் திருவந்தாதி(96 பாசுரங்கள்). திருச்சந்த விருத்தம் கம்பீரமான சந்தங்களுடைய விருத்தப்பாக்களால் ஆனது. முதலாயிரத்தில் பெருமாள் திருமொழிக்கு அடுத்து அமைந்துள்ளது. பர, வ்யூக, விபவ, அர்ச்சாவதாரங்களில் நாராயணனைக் கண்டதும், அவனே பரதெய்வம், தத்துவப் பொருள் உணர்ந்த தன்மையும் திருச்சந்த விருத்தத்தில் பாடப்பட்டுள்ளது.

நான்முகன் திருவந்தாதி மூன்றாம் ஆயிரத்தில் முதலாழ்வார்களின் அந்தாதிகளுக்குப்பின் இடம்பெறுகிறது.

திருமழிசை ஆழ்வாரின் 'மறந்தும் புறம் தொழா' தன்மையினால் சிவன் முதலிய தெய்வங்களும் க்ஷேத்ரஞர்களே, அவர்களும் ஸ்ரீமந் நாராயணனால் நியமிக்கப் படுவர்களே, நாராயணன் ஒருவனே நியமிப்பவன் என்ற உறுதியும், பிற சமய நிந்தனையும், சிவநிந்தனையும் அவரது பாடல்களில் காணப்படுகின்றன.

வாழி திருநாமம்

அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே
அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியே
எழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே
முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே
நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே
நங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியே

பாடல் நடை

திருச்சந்த விருத்தம்

உலகு தன்னை நீ படைத்து உள் ஒடுக்கி வைத்து மீண்டு
உலகு தன்னுளே பிறந்து ஓரிடத்தை அல்லையால்
உலகு நின்னோடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே

(இந்த உலகத்தை நீ படைத்து, உன்னுள்ளே ஒடுக்கி வைத்து, மீண்டும் அதை வெளியே கொண்டு வந்தாய். இந்த உலகம் உன்னோடு ஒன்றி நிற்கிறது. ஆதலால் நீ இருக்கும் இடத்தை யாரால் அறிய முடியும்? )

கிடந்தவாறெழுந்து பேசு

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-

நான்முகன் திருவந்தாதி

இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் ;
இனி அறிந்தேன் எம் பெருமான்! உன்னை - இனியறிந்தேன்
காரணன் நீ ; கற்றவை நீ ; கற்பவை நீ ; நல் கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான்.

எம்பெருமானே! உன்னைச் சிவனுக்கும் பிரமனுக்கும் தெய்வமாக இப்போது திடமாகத் தெரிந்துகொண்டேன். எல்லா உலகங்களுக்கும் காரணபூதன் நீ! இதற்கு முன்பு அறியப்பட்ட பொருள்களெல்லாம் நீ! (என்கிற இதனையும்) இனி அறிந்தேன். கரரணமற்ற முறையில் பாதுகாப்பதையே நல்ல தொழிலாக உடையவனான நாராயணன் நீ என்பதை நான் நான்றாகத் தெரிந்துகொண்டேன்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்காஞ்சி
    மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா
    செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
    பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்

  2. கனிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் காஞ்சி
    மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
    செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்;
    நீயும் உன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்


✅Finalised Page