அ.கி. ஜயராமன்
அ.கி. ஜயராமன் (1911) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர், இதழாசிரியர். காதம்பரி மாத இதழை அ.கி.கோபாலனுடன் இணைந்து நடத்தினார். ஜோதி நிலையம் பதிப்பகத்தின் நிறுவனர். இப்பதிப்பகத்தின் வழியாக வெளியான மொழிபெயர்ப்புகள் முக்கியமானவை. சரத் சந்திரரின் பெரும்பான்மையான நாவல்கள், சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்ததில் முக்கியப்பங்கு வகித்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
அ.கி. ஜயராமன் மேலக்குமாரமங்கலத்தில் 1911-ல் பிறந்தார். சிதம்பரம், குற்றாலம் ஆகிய இடங்களில் பள்ளிக்கல்வி இன்டர்மீடியட் வரை படித்தார். அப்பா இறந்தபிறகு உணவகங்களில் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தம்பி அ.கி. கோபாலன் தமிழ்ச்சுடர் நிலையம் பதிப்பகத்தின் ஆசிரியர்.
அ.கி. ஜெயராமன் ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.
இந்திய விடுதலைப்போராட்டம்
1941-ல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுக் கைதாகி மாணிக்கவாசகம், திருச்சி அருணாசலம், மோகன் குமாரமங்கலம், பி. ராமமூர்த்தி ஆகியோருடன் சென்னை செண்ட்ரல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது சரத் சந்திரரின் நாவலை மொழிபெயர்த்தார்.
இதழியல்
வ.ராமசாமி ஐயங்கார்ரின் ‘பாரத தேவி' வாரப் பத்திரிக்கையில் கு.ப.ரா., சி. சு. செல்லப்பா ஆகியோருடன் உதவி ஆசிரியராக இருந்தார். வ.ரா. ‘நவயுகம்' பத்திரிகையின் ஆசிரியரானபோது அ.கி.ஜயராமன் அவரிடம் உதவி ஆசிரியரராக இருந்தார்.
‘பாரத தேவி', ‘தினமணி', ‘நவயுகம்', ‘சோஷலிஸ்ட்' என்ற செய்தி இதழ்களின் உதவி ஆசிரியராக பணியாற்றியுள்ளார். ‘காதம்பரி', ‘சினிமா' என்ற பத்திரிகைகளை நடத்தினார். அதன் ஆசிரியராக இருந்தார்.
பதிப்பகம்
1942-ல் ‘ஜோதி நிலையம்' என்ற பதிப்பகத்தை நிறுவினார். அதன்மூலம் 120 புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டுள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
‘நவயுகம்' பத்திரிகையில் நாற்பது சிறுகதைகள் எழுதினார். ‘மணிக்கொடி' ஆரம்பித்தபோது புதுமைப்பித்தன், பி. எஸ். ராமையா, க.நா.சு., ந. சிதம்பர சுப்ரமண்யம், கு.ப.ரா ஆகியோருடன் பரிச்சயம் ஏற்பட்டது. 1936-ல் இருந்து எழுத்தையே முழு நேரத் தொழிலாகக் கொள்ள முடிவு செய்தார்.
மொழிபெயர்ப்பு
அ.கி. ஜெயராமன் கு.ப.ரா -விடமிருந்து வங்க மொழிக்கான ஆரம்பப் பாடங்களைக் கற்றார். திருச்சி நேஷனல் காலேஜில் பேராசிரியராக இருந்த ராமைய்யரிடமும் வங்க மொழி கற்றார்.
சரத் சந்திரரின் ‘மதனி' என்ற நாவலை மணிக்கொடி இதழுக்காக ஹிந்தியிலிருந்து முதன்முதலில் மொழிபெயர்த்தார். 1936-ல் மணிக்கொடி நின்றுவிட்டதால் அதை மணிக்கொடி ஆசிரியர்கள் புத்தகமாக வெளியிட்டனர். அதன்பின் சரத் சந்திரரின் 'தேவதாஸ்' நாவலை மொழிபெயர்த்தார்.
சரத் சந்திரரின் ‘கிரஹதாகம்', ‘சாவித்திரி', ‘ஸ்ரீகாந்தன்', ‘விப்ரதாஸ்', ‘பாரதி' ஆகிய 22 நாவல்களை மொழிபெயர்த்துள்ளார். ‘ஏழையின் சொர்க்கம்' என்ற தலைப்பில் சரத் சந்திரரின் சிறுகதைகளை மொழிபெயர்த்தார். சரத் சந்திரரின் நூல்கள், சிறுகதைகள் அனைத்தும் சேர்த்து மொத்தம் 42 நூல்கள் இவர் மொழிபெயர்ப்பில் வந்துள்ளன. ‘சரித்ரஹீன்' நாவலை ‘ராணி' இதழ் ஆசிரியர் அ.மா. சாமி தன் பத்திரிகையில் 42 வாரங்கள் வெளியிட்டார். சாண்டில்யன் ஆசிரியராக இருந்தபோது சுதேசமித்திரன் இதழில் சரத் நாவல்களை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
அ.கி. ஜெயராமன் டாக்டர் பட்டாபி சீதாராமையா எழுதிய ‘இந்திய தேசிய காங்கிரஸ் வரலாறு', ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுதிய ‘காந்தீய சோஷலிஸம்', ரமேஷ் சந்திர தத்தரின் நூல்கள் சில, பங்கிம் சந்திரரின் ‘ஆனந்த மடம்' ஆகியவற்றையும் மொழிபெயர்த்தார்.
சிறப்பு
- சரத் சந்திரரின் நூற்றாண்டு விழாவின்போது கௌரவிக்கப்பட்டார்.
மறைவு
அ.கி. ஜயராமன் மறைந்த வருடம் தெரியவில்லை.
மதிப்பீடு
இந்தியாவெங்கும் நவீன இலக்கியம் உருவாகி வந்த காலகட்டத்தில் வங்கமொழி இலக்கியங்கள் முன்னுதாரணங்களாக அமைந்தன. இந்திய மொழிகள் அனைத்திலும் வங்கநூல்களை அர்ப்பணிப்புடன் பலர் மொழியாக்கம் செய்து அந்த மொழிகளில் புதிய இலக்கிய அலையை உருவாக்கினர். தமிழில் த.நா.குமாரசாமி, த. நா. சேனாபதி. ஆர். சண்முகசுந்தரம் போன்றவர்கள் வங்காளத்தில் இருந்து தொடர்ச்சியாக மொழியாக்கங்களைச் செய்தனர். அ.கி.ஜெயராமன் அவர்களில் ஒருவர். நவீன இலக்கியம் பொதுவாசகர்களிடையே செல்லத் தொடங்கியபோது பலவகையான புனைகதைகள் ஏராளமாகத் தேவைப்பட்டன. வங்க மொழியாக்கங்கள் அந்தத் தேவையை நிறைவுசெய்தன. தமிழில் முப்பதாண்டுகாலம் வங்காள இலக்கியம் முக்கியமான ஓர் இயக்கமாகத் திகழ்ந்தது. வங்க எழுத்தாளர்களில் சரத்சந்திரர் பொதுவாசகர்களும் விரும்பி வாசிக்கும் தன்மைகொண்ட எழுத்துக்களை உருவாக்கியவர். அவர் எழுதிய தேவதாஸ் திரைப்படமாகவும் வெளிவந்து பெரும்புகழ் அடைந்திருந்தது. ஆகவே சரத்சந்திரருக்கு ஏராளமான வாசகர்கள் தமிழில் இருந்தனர். ஒரு தமிழ் எழுத்தாளர் அளவுக்கே இங்கே அவர் புகழ்பெற்றிருந்தார். பிற்காலத்தில் தமிழில் எழுதிய தி.ஜானகிராமன் முதல் பாலகுமாரன் வரையிலானவர்களில் சரத்சந்திரரின் செல்வாக்கு உண்டு. சரத் சந்திரரின் நூல்களை மொழியாக்கம் செய்து தொடர்ச்சியாக வெளியிட்ட அ.கி.ஜெயராமன் அந்த அலையின் சிற்பிகளில் ஒருவர்.
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Apr-2025, 10:07:38 IST