அ.கி. ஜயராமன்
அ.கி. ஜயராமன் (1911) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர், இதழாசிரியர். காதம்பரி மாத இதழை அ.கி.கோபாலனுடன் இணைந்து நடத்தினார். ஜோதி நிலையம் பதிப்பகத்தின் நிறுவனர். இப்பதிப்பகத்தின் வழியாக வெளியான மொழிபெயர்ப்புகள் முக்கியமானவை. சரத் சந்திரரின் பெரும்பான்மையான நாவல்கள், சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்ததில் முக்கியப்பங்கு வகித்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
அ.கி. ஜயராமன் மேலக்குமாரமங்கலத்தில் 1911-ல் பிறந்தார். சிதம்பரம், குற்றாலம் ஆகிய இடங்களில் பள்ளிக்கல்வி இன்டர்மீடியட் வரை படித்தார். அப்பா இறந்தபிறகு உணவகங்களில் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தம்பி அ.கி. கோபாலன் தமிழ்ச்சுடர் நிலையம் பதிப்பகத்தின் ஆசிரியர்.
அ.கி. ஜெயராமன் ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.
இந்திய விடுதலைப்போராட்டம்
1941-ல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுக் கைதாகி மாணிக்கவாசகம், திருச்சி அருணாசலம், மோகன் குமாரமங்கலம், பி. ராமமூர்த்தி ஆகியோருடன் சென்னை செண்ட்ரல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது சரத் சந்திரரின் நாவலை மொழிபெயர்த்தார்.
இதழியல்
வ.ரா.-வின் ‘பாரத தேவி’ வாரப் பத்திரிக்கையில் கு.ப.ரா., சி. சு. செல்லப்பா ஆகியோருடன் உதவி ஆசிரியராக இருந்தார். வ.ரா. ‘நவயுகம்’ பத்திரிகையின் ஆசிரியரானபோது அ.கி.ஜயராமன் அவரிடம் உதவி ஆசிரியரராக இருந்தார்.
‘பாரத தேவி’, ‘தினமணி’, ‘நவயுகம்’, ‘சோஷலிஸ்ட்’ என்ற செய்தி இதழ்களின் உதவி ஆசிரியராக பணியாற்றியுள்ளார். ‘காதம்பரி’, ‘சினிமா’ என்ற பத்திரிகைகளை நடத்தினார். அதன் ஆசிரியராக இருந்தார்.
பதிப்பகம்
1942-ல் ‘ஜோதி நிலையம்’ என்ற பதிப்பகத்தை நிறுவினார். அதன்மூலம் 120 புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டுள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
‘நவயுகம்’ பத்திரிகையில் நாற்பது சிறுகதைகள் எழுதினார். ‘மணிக்கொடி’ ஆரம்பித்தபோது புதுமைப்பித்தன், பி. எஸ். ராமையா, க.நா.சு., ந. சிதம்பர சுப்ரமண்யம், கு.ப.ரா ஆகியோருடன் பரிச்சயம் ஏற்பட்டது. 1936-ல் இருந்து எழுத்தையே முழு நேரத் தொழிலாகக் கொள்ள முடிவு செய்தார்.
மொழிபெயர்ப்பு
அ.கி. ஜெயராமன் கு.ப.ரா -விடமிருந்து வங்க மொழிக்கான ஆரம்பப் பாடங்களைக் கற்றார். திருச்சி நேஷனல் காலேஜில் பேராசிரியராக இருந்த ராமைய்யரிடமும் வங்க மொழி கற்றார்.
சரத் சந்திரரின் ‘மதனி’ என்ற நாவலை மணிக்கொடி இதழுக்காக ஹிந்தியிலிருந்து முதன்முதலில் மொழிபெயர்த்தார். 1936-ல் மணிக்கொடி நின்றுவிட்டதால் அதை மணிக்கொடி ஆசிரியர்கள் புத்தகமாக வெளியிட்டனர். அதன்பின் சரத் சந்திரரின் 'தேவதாஸ்’ நாவலை மொழிபெயர்த்தார்.
சரத் சந்திரரின் ‘கிரஹதாகம்’, ‘சாவித்திரி’, ‘ஸ்ரீகாந்தன்’, ‘விப்ரதாஸ்’, ‘பாரதி’ ஆகிய 22 நாவல்களை மொழிபெயர்த்துள்ளார். ‘ஏழையின் சொர்க்கம்’ என்ற தலைப்பில் சரத் சந்திரரின் சிறுகதைகளை மொழிபெயர்த்தார். சரத் சந்திரரின் நூல்கள், சிறுகதைகள் அனைத்தும் சேர்த்து மொத்தம் 42 நூல்கள் இவரின் மொழிபெயர்ப்பில் வந்துள்ளன. ‘சரித்ரஹீன்’ நாவலை ‘ராணி’ இதழ் ஆசிரியர் அ.மா. சாமி தன் பத்திரிகையில் 42 வாரங்கள் வெளியிட்டார். சாண்டில்யன் ஆசிரியராக இருந்தபோது சுதேசமித்திரன் இதழில் சரத் நாவல்களை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
அ.கி. ஜெயராமன் டாக்டர் பட்டாபி சீதாராமையா எழுதிய ‘இந்திய தேசிய காங்கிரஸ் வரலாறு’, ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுதிய ‘காந்தீய சோஷலிஸம்’, ரமேஷ் சந்திர தத்தரின் நூல்கள் சில, பங்கிம் சந்திரரின் ‘ஆனந்த மடம்’ ஆகியவற்றையும் மொழிபெயர்த்தார்.
சிறப்பு
- சரத் சந்திரரின் நூற்றாண்டு விழாவின்போது கௌரவிக்கப்பட்டார்.
மறைவு
அ.கி. ஜயராமன் மறைந்த வருடம் தெரியவில்லை.
மதிப்பீடு
“என்னைவிட சரத்தின் எழுத்துக்களை நீங்களே நன்றாக மொழிபெயர்க்கிறீர்கள். இனி நீங்களே அந்தப் பணியைச் செய்யுங்கள்.” என த.நா. குமாரஸ்வாமி தன்னிடம் சொன்னதாக அ.கி.ஜெயராமன் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார். அ.கி. ஜெயராமன் மொழியாக்கம் செய்த சரத் சந்திரரின் ‘கிருஹதாகம்’ என்ற நூலை த.நா. குமாரஸ்வாமிக்கு சமர்ப்பணம் செய்தார்.
பாரதிதாசன் இவர் பதிப்பித்த புத்தகங்களை, “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் பாரதி. இப்படித்தான் தமிழை வளர்க்க வேண்டும்” என்று பாராட்டினார். ராஜாஜி, காமராஜர் முதலியோரும் இவரின் புத்தக வெளியீடுகளைப் பாராட்டியுள்ளனர்.
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Apr-2025, 10:07:38 IST