under review

பழநிபாரதி

From Tamil Wiki
Revision as of 23:32, 29 January 2024 by ASN (talk | contribs) (Para Added and Edited: Images Added; Link Created: Proof Checked.)
கவிஞர், திரைப்பாடலாசிரியர் பழநிபாரதி

பழநிபாரதி (பழ. பாரதி; பழனிபாரதி)) (பிறப்பு: ஜூலை 14) கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர். இதழாளராகப் பணியாற்றினார். தமிழக அரசின் கலைமாமணி விருது, மகாகவி பாரதியார் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார். தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தகுந்த பாடலாசிரியர்களுள் ஒருவர்.

பிறப்பு, கல்வி

பழநிபாரதி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள செக்காலையில், ஜூலை 14 அன்று, சாமி. பழநியப்பன் – கமலா இணையருக்குப் பிறந்தார். இயற்பெயர் பழ. பாரதி. கவிஞர் அறிவுமதி, பழநிபாரதி என்ற பெயரைச் சூட்டினார். பழநிபாரதி, சென்னை மாநகராட்சிப் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். கோடம்பாக்கத்தில் உள்ள கணபதி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தார். இளங்கலை படிப்பில் சேர்ந்து ஓராண்டிலேயே இடை நின்றார்.

கவிஞர் பழநிபாரதி, கலைஞர் மு. கருணாநிதியுடன் (படம் நன்றி: குங்குமம் இதழ்)

தனி வாழ்க்கை

பழநிபாரதி, சுதந்திர எழுத்தாளர். கவிஞர். திரைப்படப் பாடலாசிரியர். மனைவி: கலைவாணி. மகள்: லாவண்யா.

பழநிபாரதி கவிதை நூல்கள்
பழநிபாரதி நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

பழநிபாரதி, பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞரான தந்தை சாமி பழனியப்பனால் இலக்கிய ஆர்வம் பெற்றார். வைரமுத்து, மு.மேத்தா ஆகியோரது கவிதைகள் தந்த உந்துதலால் கவிதைகள் எழுதினார். முதல் கவிதை பழநிபாரதியின் 14 ஆம் வயதில் மாணவப் பருவத்தில் வெளியானது. தந்தை மற்றும் தமிழாசிரியர்கள் கோமதிநாயகம், சலாவுதீன் போன்றோர் அளித்த ஊக்கத்தால் தொடர்ந்து கவிதைகள் எழுதினார். முல்லைச்சரம், தமிழ்த்தென்றல், தமிழரசு போன்ற இதழ்களில் கவிதைகள் வெளியாகின. முதல் கவிதைத் தொகுப்பு ‘நெருப்புப் பார்வைகள்’, பழநிபாரதியின் 18 ஆம் வயதில், 1982-ல் வெளிவந்தது.

தொடர்ந்து ஆனந்த விகடன் போன்ற பல இதழ்களில் கவிதைகள் வெளியாகின. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 60-வது பிறந்தநாளில், ’பிரபாகரன்... வழித்துணையல்ல.. வழி’ என்ற பாடலை எழுதி வெளியிட்டார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்காகப் பாடல் ஒன்றை எழுதினார். இவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன.

கவிஞர்களுடன் பழநிபாரதி

இதழியல்

பழநிபாரதி போர்வாள், நீரோட்டம், பாப்பா, மஞ்சரி, அரங்கேற்றம் போன்ற இதழ்களில் பணியாற்றினார். ‘தாய்’ இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். ‘தை’ இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர்.

திரைப்படம்

பழநிபாரதி, ’பெரும்புள்ளி’ திரைப்படத்தில் பாடல் எழுதி, பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். கோகுலம், புதிய மன்னர்கள், நான் பேச நினைப்பதெல்லாம், அன்னை வயல், உள்ளத்தை அள்ளித்தா, பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, பூவெல்லாம் கேட்டுப்பார், மாயாவி, பிதாமகன், வாத்தியார், நான் அவன் இல்லை, ரமணா போன்ற வெற்றிப் படங்களில் பாடல்கள் எழுதினார். பழநிபாரதி, 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார்.

பொறுப்புகள்

இந்திய சோவியத் கலாச்சாரக் கழகத்தில் அமைந்துள்ள புஷ்கின் இலக்கியப் பேரவையில் துணைச் செலயலாளராகப் பணியாற்றினார்.

தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது
இளையராஜாவுடன் பழநிபாரதி

விருதுகள்

மதிப்பீடு

பழநிபாரதியின் கவிதைகளில் அழகியலுடன் பாரதிதாசனின் கவிதைகளின் தாக்கமும், ஈ.வெ. ராமசாமிப் பெரியாரது கருத்துக்களின் தாக்கமும், திராவிட மற்றும் பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகளும் இடம்பெற்றன. காதல் மட்டுமல்லாது, சமூக அவலங்களும், உலகளாவிய நிகழ்வுகளும், போர்ச் சூழல்களும், பசுமைச் சூழலின் அழிவுகளும் கவிதைகளின் பாடுபொருளாய் அமைந்தன. தனது கவிதைகளை தனித்தன்மை, தனிமொழி நடை கொண்டனவாய் எழுதினார்.

”பழநிபாரதியிடம் கவிதை – காதலின் முத்தங்களாக நாணிச் சிவக்கவில்லை, மாறாக கனலின் உயிர்த்துடிப்புகளாகச் சீறிச் சிவந்துள்ளது” என்று ஈரோடு தமிழன்பன் மதிப்பிட்டார். “பழநிபாரதி தன் கவிதைகளில் கையாண்டுள்ள உவமைகள் சங்க இலக்கியத்தில் காணப்படும் உவமைகளைப் போல பிரமிப்பூட்டுகின்றன என்றார், கவிஞர் அ. முத்துலிங்கம்.

பழநிபாரதி, வைரமுத்துவுக்குப் பிறகு தனது தனி மொழியால் திரை உலகின் கவனத்தை ஈர்த்த கவிஞர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

பழநிபாரதியின் சில திரைப்படப் பாடல்கள்

  • இளமையின் விழிகளில் வளர்பிறைக் கனவுகள்...
  • அந்த வானத்திலே ஒரு ஆசைப்புறா…
  • செவ்வந்திப் பூவெடுத்தேன்..
  • ஊட்டி மலை பியூட்டி…
  • ஆனந்தம் ஆனந்தம் பாடும்...
  • சொல்லாமலே யார் பார்த்தது...
  • ஆனந்த குயிலின் பாட்டு…
  • கோடி கோடி மின்னல்கள்…
  • ரோஜா பூந்தோட்டம்
  • ஐ லவ்யூ லவ்யூ லவ்யூ சொன்னாளே..
  • அழகிய லைலா...
  • மாமா நீ மாமா...
  • நிலவுப் பாட்டு.. நிலவுப் பாட்டு
  • தென்றல் வரும் வழியை…
  • மஞ்சள் பூசி வானம் தொட்டுப் பார்த்தேன்…
  • பூவ பூவ பூவ பூவே…
  • ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்…
  • சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…
  • நீ கட்டும் சேலை மடிப்பிலே நான் கசங்கிப் போனேண்டி…
  • என்னைத் தாலாட்ட வருவாளா...
  • இளங்காத்து வீசுதே…
  • வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது…

நூல்கள்

  • நெருப்புப் பார்வைகள்
  • வெளிநடப்பு
  • காதலின் பின்கதவு
  • புறாக்கள் மறைந்த இரவு
  • முத்தங்களின் பழக்கூடை
  • தனிமையில் விளையாடும் பொம்மை
  • தண்ணீரில் விழுந்த வெயில்
  • மழைப்பெண்
  • உன்மீதமர்ந்த பறவை
  • சூரியனுக்குக் கீழ் ஒரு வெள்ளைக் காகிதம்
  • வனரஞ்சனி
  • ஒளி உன்னால் அறியப்படுகிறது
  • பூரண பொற்குடம்
  • படிமங்கள் உறங்குவதில்லை
  • காற்றின் கையெழுத்து (கட்டுரைத் தொகுப்புகள்)
  • கனவு வந்த பாதை (நேர்காணல் தொகுப்புகள்)

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.