அறிவுமதி
அறிவுமதி (மதியழகன்) (பிறப்பு: நவம்பர் 17, 1949) கவிஞர், எழுத்தாளர், இதழாளர். திரைப்படப் பாடாலாசிரியர், வசன ஆசிரியர். குறும்பட, ஆவணப்பட, திரைப்பட இயக்குநர். தமிழக அரசின் சிறந்த திரைப் பாடல் ஆசிரியர் விருது பெற்றார். தமிழுணர்வோடு பல கவிதைகளைப் படைத்தார்.
பிறப்பு, கல்வி
மதியழகன் என்னும் இயற்பெயரை உடைய அறிவுமதி, நவம்பர் 17, 1949 அன்று, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சு. கீணனூரில், கேசவன் - சின்னப்பிள்ளை இணையருக்குப் பிறந்தார். சு. கீணனூர் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். உயர்நிலைக் கல்வியை கம்மாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கற்றார். புதுமுக வகுப்பை (பி.யூ.சி.) விருத்தாசலம் திருக்கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் படித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையில், தொல்லியல் குறித்த முதுநிலைப் பட்டயப் படிப்பு பயின்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 'முருகன் நடுகல் வீரன்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார்
தனி வாழ்க்கை
அறிவுமதி தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும், சுதந்திர எழுத்தாளர் மற்றும் கவிஞராகவும் செயல்பட்டு வருகிறார். மணமானவர்.
இலக்கிய வாழ்க்கை
தொடக்கம்
அறிவுமதிக்கு, தந்தை மூலம் திராவிட இலக்கிய அறிமுகம் ஏற்பட்டது. தாய் வழித் தாத்தா வீரமுத்து மூலம் நாட்டுப்புற இலக்கியங்கள் அறிமுகமாகின. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது, வ.சுப. மாணிக்கம், எம்.எம்.தண்டபாணி தேசிகர், வெள்ளைவாரணர் போன்ற பேராசிரியர்களால் சங்க இலக்கிய ஆர்வம் பெற்றார். கவிதையின் மீது கொண்ட ஆர்வத்தால் 'அவிழரும்பு' என்ற கையெழுத்து இதழை நடத்தினார். நண்பன் அறிவழகன் பெயரையும் தனது பெயரையும் இணைத்து 'அறிவுமதி' என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். 'என் பிரிய வசந்தமே' என்பது அறிவுமதியின் முதல் கவிதை நூல்.
கவியரங்குகள்
கவிஞர் மீரா, அறிவுமதியை கவிஞர் அப்துல்ரகுமானிடம் அறிமுகப்படுத்தினார். அப்துல் ரகுமான் அறிவுமதியை ஊக்குவித்து பல கவியரங்குகளில் கலந்துகொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தார். அறிவுமதி, அப்துல் ரகுமான் மூலம் ஹைக்கூ கவிதைகள் எழுதும் நுட்பத்தைக் கற்றார்.
நூல்கள்
அறிவுமதியின் கவிதைகள் முன்னணி இதழ்கள் பலவற்றில் வெளியாகின. 'நிரந்தர மனிதர்கள்', 'அன்பான இராட்சிக்கு', 'அணுத்திமிர் அடக்கு' எனப் பல நூல்களை வெளியிட்டார். 'வெள்ளைத்தீ' என்பது அறிவுமதியின் முதல் சிறுகதைத் தொகுப்பு. நா. வானமாமலையின் 'புதுக்கவிதையின் முற்போக்கும் பிற்போக்கும்' என்ற நூலில் அறிவுமதியின் கவிதைகள் இடம்பெற்றன.
அறிவுமதி தமிழ் இலக்கியப் பணிகளுக்காக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணப்பட்டார். தமிழ்ச் சங்க நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். அறிவுமதி எழுதிய புலம் பெயர் தமிழர் குறித்த 'வலி' கவிதைத் தொகுப்பும், ஆழிப்பேரலை அவலம் சுமந்த 'கடலே கடலம்மா' இசைக் குறுவட்டும்; பெண் சிசுவின் துயர் சொல்லும், 'உயிர் விடும் மூச்சு' ஆவணப் படமும் படைப்புலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
இதழியல்
அறிவுமதி, அப்துல் ரகுமான் நடத்திய 'கவிக்கோ' இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். 'தை', 'மண்' என்னும் கவிதைகளுக்கான இதழ்களைத் தொடங்கி நடத்தினார்.
பதிப்பு
அறிவுமதி சாரல் வெளியீடு என்னும் பதிப்பக நிறுவனம் மூலம் சில நூல்களை வெளியிட்டார்.
திரை வாழ்க்கை
திரைத்துறை மீது ஆர்வம் கொண்ட அறிவுமதி, கே. பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பாக்யராஜின் நான்கு திரைப்படங்களில் உரையாடல் மற்றும் நெறியாள்கைப் பணியை மேற்கொண்டார். தொடர்ந்து பாலுமகேந்திராவிடம் ஏழு படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். பாரதிராஜாவின் படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தார். 'உள்ளேன் அய்யா' என்ற திரைப்படத்தை இயக்கினார். படம் வெளியாகாமல் இடை நின்றது.
'சிறைச்சாலை' திரைப்படத்துக்கு உரையாடல் மற்றும் பாடல்களை எழுதினார். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், வித்யாசாகர்., எஸ்.ஏ. ராஜ்குமார் எனப் பல இசையமைப்பாளர்களின் இசையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார். திரைப்பாடல்களில் ஆங்கில வார்த்தைகளைக் கலக்காமலும், ஆபாச வார்த்தைகள் இல்லாமலும் எழுதுவதைத் தனது கொள்கையாகக் கொண்டிருந்தார்.
தாஜ்நூர் இசையில் அறிவுமதி எழுதிய 'தாய்ப்பால்' இசைத்தொகுப்பு ஈழத்தமிழர்களின் அவல வாழ்வைக் கூறியது. அறிவுமதியின் 'நீலம்' என்ற குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்முதலில் திரையிடப்பட்ட தமிழ்ப்படமாக அறியப்படுகிறது. 'நீண்ட நீண்ட காலம்' என்று அறிவுமதி எழுதிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் உலகத் தமிழர்களால் வரவேற்கப்பட்டது. தமிழக அரசின் ஆறாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது.
அறிவுமதி திரைப்படமாக்குவதற்காகத் தமிழர்களின் வாழ்வியலிலிருந்து 'தொப்புள்கொடி' என்ற திரைக்கதையை எழுதினார். பழநிபாரதி, நா. முத்துக்குமார், வாசன், யுகபாரதி, ஏகாதசி என அறிவுமதியால் திரையுலகிற்கு ஊக்குவிக்கப்பட்ட கவிஞர்கள் பலர்.
முருகன் கோட்டம்
அறிவுமதியின் முருகன் பற்றிய 'முருகன் நடுகல் வீரன்' என்ற ஆய்வை நா. வானமாமலை அறிந்து ஊக்குவித்தார். தொடர்ந்து முருகன் குறித்த ஆய்வினை மேற்கொண்டார் அறிவுமதி.
கோவிட் நோய்த் தொற்றுக் காலத்தில் அறிவுமதி, சென்னை நகர வாழ்க்கையை விடுத்து தனது சொந்த ஊருக்குச் சென்றார். அங்கு தனது வயலில் முருகனுக்குக் கோட்டம் ஒன்றையும், தமிழ் நூலகம் ஒன்றையும் அமைத்தார். தமிழர்களின் முன்னோர்களில் ஒருவனே முருகன் என்பதையும், முருகன் தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் ஒருவன்; பின்னர் கடவுளாக வழிபடப்பட்டான் என்பதையும் விளக்கி 'தமிழ் முருகன்' என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதினார்.
விருதுகள்
- சசி இயக்கத்தில் பாபி இசையில் 'சொல்லாமலே' படத்தில் அறிவுமதி எழுதிய 'சொல்லாதே சொல்லச் சொல்லாதே...' பாடலுக்கு தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது கிடைத்தது. (1999)
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய 'அம்பேத்கர் சுடர்' விருது (2010)
- சிறந்த பாடலாசிரியருக்கான ஆனந்த விகடன் சினிமா விருது. (2011)
- வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை அளித்த 'உலகத் தமிழ்ப் பீட விருது' - 2023
மதிப்பீடு
அறிவுமதியின் கவிதைகள் அழகியலுடன் சமூகச் சிந்தனைகளும், பகுத்தறிவும், சமுதாய அக்கறையும் கொண்டவையாய் அமைந்தன. நட்பு, காதல் உணர்வைக் காட்டும் கவிதைகளோடு பகுத்தறிவு, திராவிட, பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகள் கொண்ட கவிதைகளையும் எழுதினார். சங்க இலக்கியத்தின் தாக்கத்தைக் கொண்ட பல கவிதைகளை எழுதினார். சிந்திக்க வைக்கும் தன்மைகள் கொண்ட பல கவிதைகளைப் படைத்தவராக அறியப்படுகிறார்.
திரைப்படப் பாடல்களிலும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைத் தந்திருக்கும் அறிவுமதி, தனக்கென ஒரு தனிப் பாணியில் ஆங்கில மொழிச் சொற்கள், பிற மொழிச் சொற்கள் கலவாது பாடல்களை எழுதினார். தமிழின் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களுள் ஒருவராகவும், திரைப்பாடல் ஆசிரியர்களுள் ஒருவராகவும் அறிவுமதி மதிப்பிடப்படுகிறார்.
அறிவுமதியின் சில திரைப்படப் பாடல்கள்
- செம்பூவே பூவே...
- நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே...
- உன் கண்ணில் நீரானேன்...
- வா வா வெண்ணிலாவே...
- மாலை என் வேதனை கூட்டுதடி...
- எங்கே செல்லும் இந்தப் பாதை...
- தீபங்கள் பேசும்...
- கவிதையே தெரியுமா...
- பொய்சொல்லக் கூடாது காதலி...
- தோம் தோம் தோம் தித்தித்தோம்...
- கண்ணாலே மிய்யா மிய்யா...
- வாடி வாடி நாட்டுக்கட்ட...
- பூவே வண்ணப் பூவே...
- பிரிவொன்றை சந்தித்தேன் முதல்முறை நேற்று...
- அழகூரில் பூத்தவளே...
- உதயா உதயா...
- அரசியல் திருடர்கள் புகலிடமா?...
- முத்தமிழே... முத்தமிழே...
- சொல்லாதே சொல்லச் சொல்லாதே...
- பொத்திவச்ச ஆசதான்...
நூல்கள்
கவிதைத் தொகுப்பு
- அவிழரும்பு
- என் பிரிய வசந்தமே
- நிரந்தர மனிதர்கள்
- அன்பான இராட்சசிக்கு
- பாட்டறங் கவிதைகள்
- புல்லின் நுனியில் பனித்துளி
- அணுத்திமிர் அடக்கு
- ஆயுளின் அந்திவரை
- கடைசி மழைத்துளி
- நட்புக்காலம்
- மணிமுத்த ஆற்றங்கரையில்
- வலி
- அறிவுமதி கவிதைகள்
சிறுகதைத் தொகுப்பு
- வெள்ளைத் தீ
உரை நூல்
- சங்கத் தமிழுக்கு (சங்க இலக்கியப் பாடல்களுக்குத் தமிழ் உரை விளக்கம்)
ஆய்வு நூல்
- தமிழ் முருகன்
உசாத்துணை
- அறிவுமதி வலைத்தளம்
- அறிவுமதி வலைத்தளம்
- அறிவுமதி நேர்காணல்: விகடன் தளம்
- அறிவுமதி நேர்காணல்
- அறிவுமதி நேர்காணல்: தமிழ்த் தோட்டம்
- முருகன் கோட்டம், காமதேனு இதழ்
- அறிவுமதி, குங்குமம் இதழ் கட்டுரை
- அறிவுமதி நூல்கள் அமேசான் தளம்
- அறிவுமதி நூல்கள், காமன்ஃபோல்க்ஸ் தளம்
- தமிழ் முருகன் நூல்
- ஆடல் கண்ணகி: அறிவுமதி கவிதை உரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2024, 19:04:35 IST