standardised

க.நா.சுப்ரமணியம்

From Tamil Wiki
Revision as of 07:20, 4 March 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)
க.நா.சுப்ரமணியம்

க.நா.சுப்ரமணியம் (கந்தாடை நாராயணசாமி ஐயர் சுப்ரமணியம் (ஜனவரி 31, 1912 - ஜனவரி 18, 1988) நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான சிந்தனைப்போக்கு க.நா.சுப்ரமணியம் மரபு எனப்படுகிறது.

ஐரோப்பிய நவீனத்துவம் மீது ஈடுபாடும் பயிற்சியும் கொண்டிருந்த க.நா.சுப்ரமணியம் தமிழில் சிறுகதை, கவிதை, நாவல் ஆகியவற்றில் நவீனத்துவ அழகியலை கொண்டுவர வாழ்நாளெல்லாம் முயன்றவர். முன்னோடியான நாவல்களை எழுதினார். இலக்கியத்திற்காக வணிக இதழ்களையும் பின்னர் சிற்றிதழ்களையும் நடத்தினார். இலக்கியப் பரிந்துரைகள், பட்டியல்கள் வழியாக ரசனை சார்ந்து இலக்கியப்படைப்புகளை அடையாளம் காட்டினார். தமிழ் இலக்கிய உலகம் கவனிக்கவேண்டிய படைப்புகளை மொழியாக்கம் செய்தார். புதுக்கவிதையின் அழகியல் வடிவத்தை அறிமுகம் செய்தார். தமிழில் ஓர் தனிமனித இயக்கம் போலவே செயல்பட்டார்.

க.நா.சுப்ரமணியத்தின் அழகியல் மரபை தொடர்ந்தவர்கள் என சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் என ஒரு தலைமுறையும் ராஜமார்த்தாண்டன், எம். வேதசகாயகுமார் என அடுத்த தலைமுறையும் ஜெயமோகன், க.மோகனரங்கன், லக்ஷ்மி மணிவண்ணன் என மூன்றாம் தலைமுறையும், சுனில் கிருஷ்ணன், விஷால்ராஜா என நான்காம் தலைமுறையும் அழகியல் நோக்குள்ள விமர்சகர்கள் தமிழில் செயல்படுகின்றனர். தமிழில் கிட்டத்தட்ட நூறாண்டுகளாக நீடிக்கும் ஓர் இலக்கிய இயக்கம் என க.நா.சுப்ரமணியத்தின் அழகியல் பார்வையை குறிப்பிடமுடியும்.

க.நா.சுப்ரமணியம்

பிறப்பு, கல்வி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் நாராயணசாமி ஐயருக்கும் ஜனவரி 31, 1912-ல் பிறந்தார். தந்தை அஞ்சல்துறை அதிகாரியாக இருந்தார். இளமையிலேயே தாயை இழந்த க.நா.சுப்ரமணியம் தன் தந்தையின் அன்னையின் பராமரிப்பில் வளர்ந்தார். (அந்தப் பாட்டியின் சாயல் கொண்ட கதாபாத்திரம் அவருடைய சர்மாவின் உயில் என்னும் நாவலில் வரும் ‘அக்கா’ என அழைக்கப்படும் பாட்டி). க.நா.சுப்ரமணியத்தின் தந்தை அவர் ஓர் ஆங்கில எழுத்தாளராக வரவேண்டும் என்னும் கனவு கொண்டிருந்தார். க.நா.சுப்ரமணியம் ஆங்கில ஆசிரியர்களை சத்தம்போட்டு படிக்க தந்தை அதை கேட்டுக்கொண்டிருப்பார் என க.நா.சுப்ரமணியம் பதிவுசெய்திருக்கிறார். க.நா.சுப்ரமணியம் சுவாமிமலை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் பள்ளி இறுதி முடித்து திருச்சியில் பட்டப்படிப்பை நிறைவுசெய்தார்.

க.நா.சுப்ரமணியம்

தனிவாழ்க்கை

க.நா.சுப்ரமணியம் ராஜியை மணந்தார். (சா.கந்தசாமி அவருடைய நூல் ஒன்றை ராஜி சுப்ரமணியத்திற்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்) அவர்களுக்கு ஒரே மகள். அவருடைய மகளை மணந்தவர் பாரதி மணி என அறியப்பட்ட நடிகரும் எழுத்தாளருமான கே.எஸ்.எஸ்.மணி.

க.நா.சுப்ரமணியம் ஒரு வகையான நாடோடி வாழ்க்கையை வாழ்ந்தார். பெரும்பாலும் உணவுவிடுதிகளிகலேயே உண்டார். வெவ்வேறு ஊர்களுக்கு தன்னுடைய சிறிய ஆலிவெட்டி போர்ட்டபிள் தட்டச்சு இயந்திரத்துடன் சென்று தங்குவது அவருடைய வழக்கம். நாகர்கோயிலில் அவர் வந்து தங்கியதை சுந்தர ராமசாமி தன் நினைவோடை நூலில் சொல்றார். வேறு பல ஊர்களில் தங்கியதைக் க.நா.சுவின் முன்னுரைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்று சொல்லும் பழ.அதியமான் கீழ்க்கண்டவற்றைச் சுட்டிக்காட்டுகிறார். ஆடரங்கு முன்னுரை தாம்பரத்திலிருந்து (ஏப்ரல் 12, 1955) எழுதப்பட்டிருக்கிறது. ஆட்கொல்லி, படித்திருக்கிறீர்களா ஆகியவற்றின் முன்னுரைகள் திருவனந்தபுரத்தில் (1959) உருவாகியுள்ளன. தில்லியில் கலை நுட்பங்கள் முன்னுரையும், மைசூரில் பித்தப்பூவுக்கான முன்னுரையும் தயாராகியுள்ளன. நல்லவர் முன்னுரை மதுரையிலிருந்து எழுதப்பட்டது. சர்மாவின் உயில் தயாரானது சிதம்பரத்தில் என முன்னுரை சொல்கிறது.

க.நா.சுப்ரமணியம் மகள் திருமணத்தில்

இதழியல்

க.நா.சுப்ரமணியம் இதழியலில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். மணிக்கொடி இதழில் எழுதியது முதல் அவருடைய வாழ்க்கை தமிழ், ஆங்கில இதழ்களை நம்பியே இருந்தது. எழுத்து இதழில் அவர் தொடக்கத்தில் பங்களிப்பாற்றினார். இறுதியாக முன்றில் இதழ் வரை அவர் தொடர்புகொண்டிருந்தார்.

க.நா.சுப்ரமணியம் நடத்திய இதழ்கள் மூன்று. அவற்றில் சூறாவளி பொதுவாசிப்புக்குரிய வார இதழ். சந்திரோதயம் இடைநிலை இதழ். பொதுவாசிப்புக்குரியவையும் இலக்கியப்படைப்புகளும் அதில் வெளியாயின. இலக்கியவட்டம் எல்லாவகையிலும் சிற்றிதழ்.

இலக்கிய வாழ்க்கை

க.நா.சுப்ரமணியம்

க.நா.சுப்ரமணியம் தன் வாழ்நாளில் எங்கும் பணியாற்றியதில்லை. தன் தந்தை ஈட்டி அளித்த செல்வத்துடன் அவர் இதழ்களை தொடங்கி நடத்தியும், இலக்கியப்பணிகளில் ஈடுபட்டும் வாழ்ந்தார். எழுதியே வாழ்வது என்னும் உறுதியுடன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதாக க.நா.சுப்ரமணியம் குறிப்பிடுகிறார். ”ஜாக் லண்டனின் மார்டின் ஈடன் என்கிற நாவலைப் படித்து என் இலக்கிய வாழ்வு எந்தெந்த திசையில் எப்படி எப்படிச் செல்லவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு, கையில் ஒரு டைப்ரைட்டருடன் சென்னைக்கு வந்து 1934-ல் தங்கசாலைத் தெருவில் ஒரு ஹோட்டலில் தனி அறை எடுத்துக்கொண்டு குடியேறினேன். ஆங்கில இலக்கிய சிருஷ்டியும் வேகம் பெற்றது. 1935-1936-ல் தமிழில் எழுதத் தொடங்கியதுடன் என் இலக்கிய வாழ்வும் வளம் பெற்றது. 1936-க்குப் பிறகு 1950 வரையில் ஆங்கிலத்தில் எழுத முயலவில்லை” என்று க.நா.சுப்ரமணியம் குறிப்பிடுகிறார் (சென்னைக்கு வந்தேன் கட்டுரை)[1].

க.நா.சுப்ரமணியம்-தஞ்சை பிரகாஷ்

க.நா.சுப்ரமணியம் தொடக்கத்தில் ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் எழுதினார். ’என் முதல் கதை Fathers and Sons என்று பெயர் அதற்கு – ஆங்கிலத்திலும் (1935) பிரெஞ்சு மொழியிலும் (1936) பின்னர் 1954-ல் ஜெர்மன் மொழியிலும் வெளிவந்தது’ என்று அவர் குறிப்பிடுகிறார். அதே காலத்தில் ‘காந்தி’ என்று ஒரு இதழை கடையில் கண்டு வாங்கி பார்த்தபோது வத்தலக்குண்டு எஸ். ராமையா (பி.எஸ்.ராமையா) எழுதிய ‘வார்ப்படம்’ என்ற கதையை கண்டு அந்த வகையான கதைகள் கதைகள் தமிழில் வெளிவருமென்றால் நானும் எழுதலாமே என்று எண்ணி ‘ஆத்ம ஸமர்ப்பணம்’ என்று ஒரு கதை எழுதினார். கடைக்காரனிடமிருந்து மணிக்கொடி இதழ் பற்றி தெரிந்துகொண்டு தேடிச்சென்று அந்தக்கதையை மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ்.ராமையாவிடம் கொடுத்தார். அது முதல் கதை 1955-ல் தான் பிரசுரமாயிற்றுது. அதுதான் க.நா.சுப்ரமணியம் எழுதிய முதல் தமிழ்க்கதை.

க.நா.சுப்ரமணியம் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என எல்லா வகையிலும் எழுதியிருக்கிறார். அவர் வாழ்ந்த 76 ஆண்டுகளில் ஏறத்தாழ 60 ஆண்டுக்காலம் எழுதிக்கொண்டே இருந்தார். தினமும் எழுதவேண்டும் என்பதை ஒரு நெறியாகவே கொண்டிருந்தார். சாகித்திய அகாதமிக்காக க.நா.சுப்ரமணியம் பற்றிய நூல் ஒன்றை எழுதுவதற்காக 2000-ல் அவரது நூல்களை தொகுத்துக் கணக்கிட முயன்ற தஞ்சை பிரகாஷ் அது இயலாது கண்டுகொண்டார். க.நா.சுப்ரமணியத்தின் இலக்கியவட்டம் இதழ்களை தொகுத்த கி.அ. சச்சிதானந்தம் அம்முயற்சியை கைவிட்டார். ஏறக்குறைய 107 நூல்கள் க.நா.சுப்ரமணியம் எழுதியவையாக காணக்கிடைக்கின்றன என்று ஆய்வாளர் பழ.அதியமான் குறிப்பிடுகிறார்.

நாவல்கள்
இலக்கியச் சாதனையாளர்கள்

க.நா.சுப்ரமணியம் எழுதிய 17 நாவல்களின் பட்டியல் தஞ்சை பிரகாஷ் எழுதிய நூலில் உள்ளது. அச்சில் வராமல், உள்ள நாவல்கள் கைப்பிரதியாக திருவாலங்காடு (4 பாகம், 1000 பக்கத்துக்கு மேல்), மால்தேடி, வக்கீல் ஐயா, ஜாதிமுத்து, சாலிவாஹணன், சாத்தனூர் போன்ற பதினைந்துக்கும் மேற்பட்ட நாவல்கள் உள்ளன என்கிறார். பல கைப்பிரதிகள் தொலைந்துவிட்டன என்றும், அச்சாகிவந்த நூலின் முழுப்பிரதிகளும்கூட அழிந்துள்ளன என்றும் க.நா.சுப்ரமணியம் குறிப்பிடுகிறார்.

க.நா.சுப்ரமணியம் வெவ்வேறு இலக்கியவடிவங்களை சோதனையாக எழுதிப்பார்ப்பவர். அகஓட்டம் வழியாகவே நகரும் நாவலான அசுரகணம் (1959) நான்கு தடவைகள் எழுதப்பட்டது என்று சொல்கிறார். ”ஒரு பதிமூன்று வருஷங்களுக்கும் அதிகமாக மனசில் ஊறிக்கிடந்த விஷயம் இது. பூரணமான உருத் தர நான் இதை நான்கு தடவைகள் எழுத வேண்டியதாக இருந்தது” (அசுரகணம், முன்னுரை). அதேசமயம் தன் வரலாற்றுத்தன்மை கொண்ட சர்மாவின் உயில் நாவலை 1938-ல் சேலத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி மூலபாடத்தை 15 நாட்களிலும் முழுவடிவத்தை 21 நாட்களிலும் எழுதி முடித்தேன் என்கிறார். (சர்மாவின் உயில் முன்னுரை.) 1989-ல் வெளிவந்த பித்தப்பூ க.நா.சுப்ரமணியம் எழுதி வெளியான கடைசி நாவல். அதை அவர் 1959-ல் திட்டமிட்டு நாற்பதாண்டுகளில் நான்கு தடவை எழுதி முழுமை செய்ததாகச் சொல்கிறார்.

கட்டுரைகள்

க.நா.சுப்ரமணியம் இலக்கியம் சார்ந்து குறுங்கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள், நூல் மதிப்புரைகள் ஏராளமாக எழுதியிருக்கிறார். அவர் எழுதி முதலில் வெளிவந்த நூல் தாகூர் காலமானதை ஒட்டி அல்லயன்ஸ் வெளியிட்ட டி.கே. சிதம்பரநாத முதலியார் முகவுரையுடன் கூடிய ‘கவி ரவீர்நதிரநாத தாகுர்’ (1941) என்னும் நூல். க.நா.சுவின் கடைசி நூல் கலைஞன் வெளியிட்ட ’மனித சிந்தனை வளம்’ (1988). கடைசியாக அவர் முன்னுரை எழுதியது வேள் பதிப்பகம் வெளியிட்ட ’கலை நுட்பங்கள்’. டிசம்பர் 16, 1988-ல் மறைந்த க.நா.சுப்ரமணியம் அந்த முன்னுரையை டிசம்பர் 4, 1988-ல் எழுதியுள்ளார்.

சிறுகதைத் தொகுப்புகள்

க.நா.சுப்ரமணியம் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதினார். அவை தெய்வ ஜனனம், அழகி, மணிக்கூண்டு, ஆடரங்கு, க.நா.சு. சிறு கதைத் தொகுப்பு (மூன்று தொகுதிகள்) என நூல்வடிவம் பெற்றன. க.நா.சுவின் கதைகள் எண்ணிக்கை ஏறத்தாழ நூறு இருக்கலாம் என ஆய்வாளர் பழ.அதியமான் கணக்கிடுகிறார்.

மொழிபெயர்ப்புகள்
கநாசு

க.நா,சுப்ரமணியத்தின் பங்களிப்புகளில் முதன்மையானது அவருடைய மொழிபெயர்ப்புகளே என்று சுந்தர ராமசாமி 'க.நா.சு. நட்பும் மதிப்பும்' என்னும் நூலில் குறிப்பிடுகிறார். அவர் அன்று புகழ்பெற்றிருந்த அமெரிக்கப் படைப்பாளிகளை மொழியாக்கம் செய்யவில்லை. அதிகம் அறியப்படாத ஐரோப்பியப் படைப்பாளிகளான செல்மா லாகர்லெஃப், பார்லாகர் க்விஸ்ட் போன்றவர்களை தமிழுக்கு கொண்டுவந்தார். அதன் வழியாக அவர் உருவாக்க விரும்பிய இலக்கிய அழகியல் என்ன என்று காட்டினார். க.நா.சுப்ரமணியம் மொழியாக்கங்கள் செய்தபடியே இருந்தார். நோபல் பரிசு பெற்ற நாவல்களின் மொழிபெயர்ப்புகள், ஐரோப்பிய, அமெரிக்க, உலகச் சிறுகதைகள் அவரால் மொழியாக்கம் செய்யப்பட்டன. ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் கிரேன், ஜாக் லண்டன், இப்சன் போன்ற வெவ்வேறு வகைப்பட்ட படைப்பாளிகளை அவர் மொழியாக்கம் செய்தார். ஏராளமான நாவல்களின் சுருக்கங்களை எழுதியிருக்கிறார்.

இலக்கிய இயக்கம்

தேர்ந்தெடுத்த சிறுகதைகள். சா.கந்தசாமி

க.நா.சுப்ரமணியத்தின் புகழ்பெற்ற ‘படித்திருக்கிறீர்களா?’ என்னும் நூல்பரிந்துரைப் பட்டியல் சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் வந்த தொடர். அது க.நா.சுப்ரமணியம் முன்வைத்த அறிவியக்கத்திற்கு தொடக்கமாக அமைந்தது. அந்தப் பரிந்துரைப் பட்டியலை ஒட்டி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் ஆதரவும் எதிர்ப்புமாக விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. அந்நூல் தமிழில் ஒரு மூலநூல்தொகை (Modern Tamil Canon) ஒன்றை உருவாக்கும் முயற்சி. அப்பட்டியலை தொடர்ந்து தன் வாழ்நாள் முழுக்க க.நா.சுப்ரமணியம் விரிவாக்கிக் கொண்டே இருந்தார். அதில் அவர் புதிய படைப்பாளிகளைச் சேர்த்தார், பழையவர்கள் சிலரை தவிர்த்தார். அவர் பரிந்துரைத்தவர்களில் ஷண்முகசுப்பையா, அநுத்தமா போன்ற சிலர் பின்னாளில் அவருடைய வழிவந்த விமர்சகர்களாலும் அவரை ஏற்கும் வாசகர்களாலும்கூட ஏற்கப்படாது மறைந்தனர். அவரால் முதன்மைப்படுத்தப்பட்ட ஆர். சண்முகசுந்தரம் போன்ற சிலர் அவர் அளித்த இடத்தை அடையவில்லை. அவர் பொருட்படுத்தாத ப.சிங்காரம் போன்றவர்கள் பின்னாளில் அவருடைய வழிவந்த விமர்சகர்களாலேயே முதன்மையான இடத்தில் வைக்கப்பட்டனர். ஆனால் இந்த மாறுபாடுகளை கடந்து க.நா.சுப்ரமணியம் உருவகித்த அந்த மூலநூல்தொகையே நவீனத் தமிழிலக்கியத்தின் மையத்தொகுதி என இன்றும் மறுக்கப்படாமல் நிலைகொள்கிறது

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்’ என்னும் தலைப்பில் இலக்கிய வட்டத்தில் க.நா.சுப்ரமணியம் எழுதிய கட்டுரைகள் நவீன இலக்கியத்தைப் பற்றிய அவருடைய கனவை காட்டுகின்றன. க.நா.சுப்ரமணியம் நவீன இலக்கியம் என்பது ஒரு சமூகம் நவீனச் சிந்தனைகளை எதிர்கொள்கிறது, நவீன நுண்ணுணர்வுடன் இருக்கிறது என்பதற்கான சான்று என நினைத்தார். அது தன்னியல்பாக உருவாகாதென்றும், கல்வியும் இயல்பான நுண்ணுணர்வும் கொண்ட ஒரு சிறு வட்டத்திலேயே அது உருவாகி வரும் என்றும் நினைத்தார். அதை அவர்கள் ஓர் இயக்கமாக முன்னெடுத்து அச்சமூகத்திற்கு அளிக்கவேண்டும் என்று கருதினார். அவர் வாழ்நாள் முழுக்கச் செய்ய நினைத்தது அதுதான். அதன்பொருட்டே அவர் இதழ்கள் நடத்தினார், இலக்கியக் கடிதச்சுற்று நடத்தினார், ஊர் ஊராகச் சென்று இளம்படைப்பாளிகளைச் சந்தித்தார், மொழியாக்கங்கள் செய்தார், இலக்கியக் குறிப்புகளையும் நூல்மதிப்புரைகளையும், விமர்சனப்பட்டியல்களையும் எழுதினார். இறுதிநாள் வரை செயல்பட்டபடி இருந்தார்.

தன் இலக்கியவட்டம் போன்ற இதழ்களின் முன்னுரைகளில் பெருந்திரளோ, அதிகாரமோ, புகழோ தேவையில்லை என்றும் அர்ப்பணிப்பும் நுண்ணுணர்வும் உள்ள ஒரு சிறுவட்டம் இருந்தாலே போதும் என்றும் சொல்கிறார். அவர் தமிழில் பேருருவம் கொண்டு எழுந்துவிட்ட வணிகக்கேளிக்கை எழுத்துக்கும் அரசியல்சார்ந்த எழுத்துக்கும் எதிராக நவீன இலக்கியத்தின் அழகியலையும் நுண்ணுணர்வையும் முன்வைத்து போராடியவர்.’இந்த நூலைத் தமிழில் இன்று இருக்கிற இருநூறு முந்நூறு நல்ல வாசகர்களுக்கும் இலக்கிய தீபத்தை மங்கவிடாமல் எண்ணெய் வார்த்து, திரிபோட்டுக் காப்பாற்றிக்கொண்டிருக்கிற பத்து இருபது பெயர் சொல்லக்கூடிய இலக்கிய ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்’ என்று க.நா.சுப்ரமணியம் அவருடைய இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் நூலின் சமர்ப்பணத்தில் குறிப்பிடுகிறார். அவருடைய இலக்கியச் செயல்பாட்டின் உளநிலையை காட்டும் வரி அது.

1936-ல் க.நா.சு -சுதேசமித்திரன்

மறைவு

க.நா.சுப்ரமணியம் ஜனவரி 18, 1988-ல் டெல்லியில் மறைந்தார்.

இலக்கிய இடம்

தமிழ் நவீன இலக்கியத்தின் பார்வையை, போக்கை தீர்மானித்த ஆளுமைகள் என பட்டியலிட்டால் சி.சுப்ரமணிய பாரதியார்- ருக்கு அடுத்தபடியாக க.நா.சுப்ரமணியத்தின் பெயரைச் சொல்லமுடியும். கவிதை, கதை, இதழியல், மொழியாக்கம் என அனைத்து துறைகளிலும் எழுதி முன்னோடியாக அமைந்த சி.சுப்ரமணிய பாரதி ஒரு திருப்புமுனை. அதன்பின் உருவான நவீன இலக்கியத்தை அழகியல்நோக்கில் வரையறை செய்து, ஒரு மரபை உருவாக்கி திசைவகுத்தவர் க.நா.சுப்ரமணியம். அவருடைய பங்களிப்புகள் என இவ்வாறு வரையறை செய்யலாம்

  • தமிழில் தொல்மரபை மீட்டெடுக்கும் பெருமுயற்சி நிகழ்ந்துகொண்டிருந்த காலம் அது. அறிவியக்கத்தின் பெரும்பகுதி இறந்தகாலம் நோக்கி திரும்பியிருந்தது. மரபுவழிபாடு மனநிலை ஓங்கியிருந்தது. அச்சூழலில் எதிர்காலம் நோக்கி, உருவாகவேண்டிய புதிய அழகியலையும் கருத்துக்களையும் நோக்கி இலக்கியவாதிகளில் ஒரு சாராரின் கவனத்தை திருப்ப க.நா.சுப்ரமணியத்தால் இயன்றது.அதுவே நவீன இலக்கியம் உருவாக அடித்தளம் அமைத்தது.
  • இந்தியச் சூழலில் நவீன இலக்கியம் சமூகசீர்திருத்த நோக்கம் கொண்டதாகவே தொடங்கியது. அதற்கான தேவை இருந்தது. ஆனால் விரைவிலேயே அது அரசியல் பிரச்சாரத்தன்மை கொண்டதாக ஆகியது. இலக்கியத்தின் அடிப்படையான அழகியலை முன்வைத்து பிரச்சார எழுத்தின் ஓங்கிய குரலில் இருந்து அதை பிரித்துப்பார்க்கும் சிந்தனையை க.நா.சுப்ரமணியம் தன் தொடர் செயல்பாடு வழியாக உருவாக்கினார்.
  • அச்சுத்தொழில்நுட்பமும் அடிப்படை போதுக்கல்வியும் உருவானபோது தமிழில் வணிகக்கேளிக்கை எழுத்து பெருந்தொழிலாக ஆகியது. அது உருவாக்கி நிலைநாட்டிய மனநிலைகளுக்கு எதிராக இலக்கியவாசிப்புக்குரிய மனநிலைகளை க.நா.சுப்ரமணியம் வலியுறுத்தி நிலைநாட்டினார். இலக்கியவாசிப்பு இலக்கியப்படைப்பின் உள்ளுறையை கூர்ந்து நோக்குவதாகவும், கருத்துக்களை விட நுட்பங்களை கணக்கில்கொள்வதாகவும். ஓங்கி ஒலிக்கும் குரல்களையும் நாடகத்தன்மையையும் விலக்கி உண்மையான உணர்ச்சிகளை வாழ்க்கையுடன் இணைத்து உள்வாங்கிக்கொள்ள முயல்வதாகவும் இருக்கும் என்று வரையறைசெய்து சொல்லிச் சொல்லி நிலைநாட்டினார்.
  • நவீன இலக்கியம் பழைய இலக்கிய அளவுகோல்களால் மதிப்பிடப்பட இயல்வது அல்ல என்றும் அதற்கு நவீன அழகியல் அளவுகோல்கள் தேவை. அது அரசியல்வாதிகளாலோ கல்வித்துறையாளர்களாலோ வழிநடத்தப்படவேண்டியது அல்ல என்றும் அதற்கு தன்னிச்சையான இயக்கம் உண்டு என்றும் அதை இலக்கியப்படைப்பாளிகளே உருவாக்குகிறார்கள் என்றும் க.நா.சுப்ரமணியம் வலியுறுத்தி நிலைநாட்டினார். அந்த அடிப்படைகள் கூட்டு மனநிலைகள் சார்ந்தவை அல்ல, தனிமனித அகம் சார்ந்தவை என்றார்.

தமிழ் நவீன இலக்கியத்திற்குரிய அடிப்படையான கருத்துநிலைகள், உளநிலைகள், அழகியல்நோக்குகள் ஆகியவை க.நா.சுப்ரமணியத்தால் தொடர் விவாதம் வழியாகவும், அவரை ஏற்று தொடர்ந்து செயல்பட்ட அடுத்தடுத்த தலைமுறையினர் வழியாகவும் நிலைநாட்டப்பட்டவை

விமர்சனங்கள்

க.நா.சுப்ரமணியம் மீது இரண்டு வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

  • க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, நா.வானமாமலை போன்ற இடதுசாரிகள் அவரை தனிமனிதவாத பார்வை கொண்டவர் என்றும், அவருடைய அடிப்படையான வாழ்க்கைநோக்கு பழமையை நோக்கி ஏங்குவது என்றும் அவருடைய தத்துவப்பார்வை வேதாந்தச்சார்பு கொண்டது என்றும் குற்றம் சாட்டினர். அவர் அராஜகவாதத்தை முன்வைப்பவர், அதன் வழியாக இடதுசாரிகளுக்கு எதிரான அமெரிக்க ஆதரவுள்ள வலதுசாரி அரசியலை முன்வைப்பவர் என்று கூறினர்.
  • சி.சு. செல்லப்பா போன்ற அலசல் விமர்சகர்களும், சி.கனகசபாபதி போன்ற கல்வித்துறை சார்ந்த ஆய்வாளர்களும் க.நா.சுப்ரமணியத்தின் இலக்கிய விமர்சனம் என்பது அகவயமானது என்றும் அதற்கு புறவய அளவுகோல்கள் இல்லை என்பதனால் அதற்கு அறிவார்ந்த மதிப்பு இல்லை என்றும் கூறினார்கள்.

விருதுகள்

நூல்கள்

கவிதைகள்
  • மயன் கவிதைகள்
  • க.நா.சு கவிதைகள்
  • புதுக்கவிதைகள்
நாவல்கள்
  • சர்மாவின் உயில்
  • பசி
  • வாழ்ந்தவர் கெட்டால்
  • அசுரகணம்
  • அவதூதர்
  • அவரவர் பாடு
  • ஆட்கொல்லி
  • இரண்டு பெண்கள்
  • ஏழு பேர்
  • ஏழுமலை
  • ஒருநாள்
  • கோதை சிரித்தாள்
  • கோபுரவாசல்
  • சக்தி விலாசம்'
  • சத்தியக்கிரஹி
  • சமூகச்சித்திரம்
  • தந்தையும் மகளும்
  • நடுத்தெரு
  • நளினி
  • பட்டணத்து வாழ்வு
  • புழுதித்தேர்
  • பெரியமனிதன்
  • பொய்த்தேவு
  • மாதவி (வரலாற்றுநாவல்)
  • மால்தேடி
  • வாழ்வும் தாழ்வும்
  • பித்தப்பூ
  • தாமஸ் வந்தார்
சிறுகதைத் தொகுப்புகள்
  • அழகி முதலிய கதைகள்
  • ஆடரங்கு
  • கருகாத மொட்டு
  • மணிக்கூண்டு
  • தெய்வ ஜனனம்
  • விசிறி
கட்டுரைத்தொகுதி
  • இந்திய இலக்கியம்
  • இந்திய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள்
  • இந்தியச் சிந்தனை மரபு
  • இலக்கியச் சிந்தனையாளர்கள்
  • இலக்கிய விசாரம்
  • இலக்கியச் சாதனையாளர்கள்
  • இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்
  • உலக இலக்கியம்
  • உலகத்து சிறந்த நாவல்கள்
  • உலக இலக்கியம்
  • ஒட்டடை
  • கலைநுட்பங்கள்
  • கலையும் வாழ்க்கையும்
  • க.நா.சு பார்வையில் இலக்கிய வளர்ச்சி
  • கவி ரவீந்திரநாத் தாகூர்
  • சிறந்த பத்து இந்திய நாவல்கள்
  • ' தமிழ் இலக்கிய விமர்சகர்கள்
  • நான்கு நாவல்கள்
  • நாவல் கலை
  • படித்திருக்கிறீர்களா
  • புகழ்பெற்ற நாவல்கள்
  • புதுமையும் பித்தமும்
  • பாரதியின் காட்சி
  • மனிதகுல சிந்தனை வளம்
  • மனித சிந்தனை வளம்
  • முதல் ஐந்து தமிழ் நாவல்கள்
  • மூன்று நாவல்கள்
  • விமர்சனக் கலை
மொழிபெயர்ப்புகள்
  • 1984 (முத்தண்ணா)
  • அடிமைப்பெண்
  • அதிசயம்
  • அந்த மரம்
  • அவள்
  • ஆல்பர்ட் ஷ்வைட்ஸரின் சுயசரிதம்
  • உடைந்த கண்ணாடி
  • கயிறு
  • காதற்கதை
  • காளி
  • கில்காமெஷ்
  • குருதிப்பூ
  • குறுகிய வழி
  • சுவர்க்கத்தில் காரி ஆஸன்
  • தபால்காரன்
  • திருட்டு
  • தேவமலர்
  • நல்லவர்கள் (சார்லஸ் டிக்கன்ஸ்)
  • நிலவளம்
  • பசி
  • பாரபாஸ்
  • பொம்மையா? மனைவியா?
  • மதகுரு
  • மனுஷ்ய நாடகம்
  • விருந்தாளி
  • விரோதி
  • விலங்குப் பண்ணை
  • ஜாலம்
  • ஐரோப்பிய சிறுகதைகள் (1987)
  • கடல்முத்து (சிறுகதைகள்)
நாடகங்கள்
  • ஊதாரி
  • ஏழு நாடகங்கள்
  • 'கல்யாணி
  • நல்லவர்
  • பேரன்பு
  • மஞ்சளும் நீலமும்
  • வாழாவெட்டி
ஆங்கில நூல்கள்
  • Contemporary Indian Short Stories (1977)
  • Contemporary Tamil Short Stories (1978)
  • Generations (Novel) - Neela Padmanaban (1972)
  • Movements of Literature
  • Sons of the Sun (Novel) - Sa.Kandasamy (2007)
  • The Anklet Story (1977)
  • The Catholic Community in India (1970)
  • Thiruvalluvar and His Thirukkural (1989)

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.