ஆறு. அழகப்பன்
ஆறு. அழகப்பன் (முனைவர் ஆறு. அழகப்பன்; டாக்டர் ஆறு. அழகப்பன்) (பிறப்பு: ஆகஸ்ட் 10, 1937) தமிழ்ப் பேராசிரியர். எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாட்டுப்புறவியல் ஆய்வாளர். பொது வாசிப்புக்குரிய நூல்களையும், இலக்கியம் சார்ந்த நூல்களையும் எழுதினார். தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்றார்.
பிறப்பு, கல்வி
ஆறு. அழகப்பன், ஆகஸ்ட் 10, 1937 அன்று, சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடியில், ஆறுமுகம் செட்டியார் - உண்ணாமுலை ஆச்சி இணையருக்குப் பிறந்தார். ஆத்தங்குடியில் தொடக்கக்கல்வி பயின்றார். இடைநிலைக்கல்வியை கோனாபட்டு சரசுவதி உயர்நிலைப்பள்ளியில் படித்தார். உயர்நிலைக் கல்வியை சிதம்பரம் அண்ணாமலைநகர் இராமசாமி செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் கற்றார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இடைநிலை வகுப்பு பயின்றார். அதே பல்கலையில் தொடர்ந்து பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். நாட்டுப்புறப் பாடல்களை ஆராய்ந்து எம்.லிட். பட்டம் பெற்றார். நாடகம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
ஆறு. அழகப்பன், 1960-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். விரிவுரையாளர், துணைப்பேராசிரியர், இணைப்பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர், புலமுதன்மையர், பதிப்புத்துறைப் பொறுப்பாளர் என்று பல நிலைகளில் பணியாற்றி, 1998-ல், ஓய்வு பெற்றார். சென்னையில் அமைந்துள்ள தமிழ் சமஸ்கிருதம் மற்றும் பிற இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றினார். மணமானவர்.
இலக்கிய வாழ்க்கை
கல்விப்புலம்
ஆறு. அழகப்பன், தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அ. சிதம்பரநாதன் செட்டியார், தண்டபாணி தேசிகர், லால்குடி நடேச முதலியார், மு. சண்முகம் பிள்ளை, செ.வை. சண்முகம், க. வெள்ளைவாரணனார், மு. அருணாசலம் பிள்ளை போன்றோரிடம் தமிழ் பயின்றார். அவர்களால் தமிழ் இலக்கிய ஆர்வம் பெற்றார். கல்லூரி இதழ்களிலும், மலர்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதினார்.
ஆறு அழகப்பன் நாடகம், வாழ்க்கை வரலாறு, நாட்டுப்புறவியல், திறனாய்வு சார்ந்த 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். பல நூல்களைப் பதிப்பித்தார். நூல்கள், மலர்கள் சிலவற்றின் தொகுப்பாசிரியராகச் செயல்பட்டார்.
மேடையுரை
ஆறு. அழகப்பன், இரண்டாம், ஐந்தாம், ஆறாம் உலகத்தமிழ் மாநாட்டில் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். இந்தியப் பல்கலைக்கழகங்கள் நடத்திய பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அரசியல்
ஆறு அழகப்பன் தீவிரமான ஆத்திகராக இருந்தாலும் திராவிட இயக்க ஆதரவாளர். 1956 ஆம் ஆண்டு சி.என். அண்ணாத்துரை நடத்திய ஹோம்லேண்ட் ஆங்கில இதழ் நிதிச்சுமையால் நின்றபோது அண்ணாத்துரை எழுதிய சந்திரோதயம் நாடகத்தை அண்ணாமலைப் பல்கலையில் நிகழ்த்தி நிதி வசூலித்து அளித்தார். தொடர்ச்சியாக திராவிட இயக்க தொடர்பு கொண்டிருந்தார். பின்னர் எம்.ஜி. ராமச்சந்திரன் னுடன் அணுக்கமாக இருந்தார்.
அமைப்புச் செயல்பாடுகள்
ஆறு. அழகப்பன், 'தமிழ்ச் சுரங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் மூலம் "நூல்களை வாசிப்போம்" என்ற திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார். மாணவ சமுதாயம் நூல்களை வாசிக்க ஊக்குவித்தார். அதிக நூல்களைப் படித்த மாணவர்களுக்கு நூல்களைப் பரிசாக வழங்கும் திட்டத்தை கல்லூரிகள், பல்கலைகளில் முன்னெடுத்தார். தமிழ் வளர்ச்சி, தமிழாராய்ச்சி சார்ந்த கருத்தரங்குகள், நிகழ்வுகள், மாநாடுகளில் பங்களித்தார். காசியில் திருக்குறள் மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தினார். ராஜா சர். அண்ணாமலை செட்டியாருக்கு தபால் தலை வெளியிடுதல், தமிழ்த் தாய் சிலை அமைப்பு, ரிஷிகேஷில் திருவள்ளுவருக்கு சிலை அமைப்பு போன்ற பணிகளில் முன் நின்றார். சிதம்பரம் அண்ணாமலை நகரில் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தினார்.
'பர்மா முதலீட்டாளர் சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கி, பலரை பணிக்காக பர்மாவுக்கு அனுப்பி வைத்தார். 'தென்னாற்காடு நகரத்தார் சங்கம்' என்பதனை உருவாக்கிப் பல நற்பணிகளை மேற்கொண்டார். கோவிலூரில் நடைபெற்ற 76 ஊர் மாநாட்டில் மகளிர் மேம்பாட்டு மலர் வெளியீட்டில் பங்காற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடுகளிலும், மலர் தொகுப்பிலும் பங்களித்தார்.
ஆன்மிகம்
ஆறு. அழகப்பன், 'வள்ளி மலை நகரத்தார் வழிபாட்டு மன்றம்' என்பதனை உருவாக்கி, சித்திரை முதல் நாள் விழாவை வள்ளிமலையில் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். ஆத்தங்குடி நகரச் சிவன் கோயிலின் மூன்று குடமுழுக்கிற்கும் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டார். ஆன்மிக நூல்கள் சிலவற்றை எழுதினார்.
நாடகம்
ஆறு. அழகப்பன் பல்வேறு நாடக நூல்களை எழுதினார். 'கறிவேப்பிலை' நகரத்தார் சமூகப் பண்பாடுகளையும், மரபுகளையும் சூழலையும் பேசும் நாடகம். மன்னர் திருமலை நாயக்கரின் வரலாற்றை 'திருமலை நாயக்கர்' என்ற வரலாற்று நாடகமாக எழுதினார். திருவள்ளுவரின் வாழ்க்கையை நாடகமாக்கினார். ஆறு. அழகப்பன் எழுதிய 'தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்' ஒரு குறிப்பிடத்தகுந்த நூலாக அறியப்படுகிறது. 1977-ல் ஆறு. அழகப்பன் முனைவர் பட்டம் பெறுவதற்ககாகச் செய்யப்பட்ட ஆய்வின் தொகுப்பே இந்த நூல்.
ஆறு. அழகப்பனின் 'எள்ளல்' நாடகமும், 'திருமலை நாயக்கர்' நாடகமும் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டன. 'ஒலியாமணி', 'நல்ல முடிவு', 'கலைந்த மேகம்', 'சாமியார்கள்', 'திருமணம்', 'படைத்தவன் பண்பில்லாதவனா?', 'கங்கையில் கலந்தது', 'கறையான்கள் தின்ற சட்டம்', 'மௌனம் கலைந்தது', 'திருமலை நாயக்கர்', 'எனக்கொரு கணவன் வேண்டும்', 'திருவள்ளுவர்' முதலியவை மேடை நாடகங்களாக அரங்காற்றுகை செய்யப்பட்டன. 'திருமலை நாயக்கர்' நாடகம் 120 முறை மேடையேறியது.
வானொலி
ஆறு. அழகப்பன் வானொலியில் பல்வேறு உரைகளை நிகழ்த்தினார். ஆறு. அழகப்பனின், 'படைத்தவன் பண்பில்லாதவனா?', 'உலகம் ஏன் அழியவில்லை?', 'கலைந்த மேகம்' முதலிய நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டன.
தொலைக்காட்சி
ஆறு. அழகப்பனின் 'திருமலை நாயக்கர்' நாடகமே சென்னைத் தொலைக்காட்சியில், முதன் முதலில் வண்ணங்களில் ஒளிபரப்பான நாடகம். இதனை ஹெரான் நாடகக் குழுவினர் அரங்கேற்றினர். தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆறு. அழகப்பன் கலந்துகொண்டு பங்களிப்புச் செய்தார்.
இதழியல்
ஆறு. அழகப்பன், 'நாடகக் கலை' என்னும் பெயரில் ஓர் இதழை நடத்தினார்.
பொறுப்பு
- அகில இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் துணைத் தலைவர்
- தமிழகப் புலவர் குழு இணைச் செயலர்
- சாகித்ய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர்
விருதுகள்
- எள்ளல் நாடகத்திற்குத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த நூலுக்கான முதல் பரிசு
- கலைக்காவலர்
- தமிழாகரர்
- கலை அண்ணல்
- தமிழ்த்தூதுவர்
- அருந்தமிழ்ச் செல்வர்
- தமிழக அரசின் கலைமாமணி விருது
- தமிழக அரசின் திருவள்ளுவர் விருது
நாட்டுடைமை
ஆறு. அழகப்பனின் நூல்களைத் தமிழக அரசு 2024-ல் நாட்டுடைமை ஆக்கியது.
ஆவணம்
ஆறு. அழகப்பனின் நூல்களில் சில, ஆர்கைவ் தளத்திலும், தமிழ் மின் நூலகத்திலும் சேகரிக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கை வரலாறு
ஆறு. அழகப்பனின் வாழ்க்கை வரலாற்றை, 'ஆறு. அழகப்பன் ஒரு செந்தமிழ்த்தேனி' என்ற தலைப்பில் பொன். சௌரிராசன் எழுதினார். இந்நூலை பத்மா பதிப்பகம் வெளியிட்டது.
ஆறு. அழகப்பனின் நூல்கள் குறித்து 11 பேராசிரியர்கள் இணைந்து, 'பேராசிரியர் ஆறு அழகப்பன் புலமை நலம்' என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டனர். இதனை கதிரவன் பதிப்பகம் வெளியிட்டது.
மதிப்பீடு
ஆறு. அழகப்பன் பல துறைகளில் செயல்பட்டார். வாழ்க்கை வரலாற்று நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நாடக, கட்டுரை நூல்களையும் எழுதினார். நாட்டுப்புறவியல் ஆய்வாளராகச் செயல்பட்டார். நகரத்தார் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுத் தொண்டாற்றினார். எழுத்தாளர், கல்வியாளர், நாடக ஆசிரியர், நாட்டுப்புறவியல் ஆய்வாளர், பேச்சாளர் என்ற நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
நாடகம்
- திருவள்ளுவர்
- கறிவேப்பிலை
- திருமலை நாயக்கர்
- The ascetic's wedding (Translated by C. Alexander)
- Living for life: the hundredth judgement of the justice (Translated by A. Srinivasaga Perumal)
கட்டுரை நூல்கள்
- நாடகச் செல்வம்
- மேடை நாடகங்கள்
- எள்ளல் நாடகங்கள்
- நாடக விருந்து
- தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
- பெரியார் ஈ.வே.ரா
- உ.வே.சா.சொல்லும் சுவையும்
- அரசர் அண்ணாமலையார்,
- ஈர நினைவுகள்
- முத்துச்சிப்பி
- சிரித்த மலர்
- இசையரசு எம். எம். தண்டபாணி தேசிகர் வாழ்வும் பணியும்
- அறவிளக்கு அரசர் முத்தையா
- புது நானூறு - இரண்டு தொகுதிகள்
- Glory of Tamil
நாட்டுப்புற இலக்கியம்
- நாட்டுப்புறப் பாடல்கள் திறனாய்வு
- தாலாட்டுப் பாடல்கள்
- தாலாட்டுகள் ஐநூறு
- நாட்டுப்புற இலக்கியத்திற்கு இஸ்லாமியரின் பங்களிப்பு
பதிப்பு
- இலக்கணக் கருவூலம்
- நகரத்தார் வரலாறு
- தமிழ்ப்பேழை
- நகரத்தார் அரிய செய்திகள் 100
- பிள்ளையார் நோன்பின் தோற்றமும் வரலாறும்
- தமிழ் இலக்கியங்களில் நபிகள் நாயகம்
- திருக்குறள் தீபாலங்காரம்
தொகுப்பு நூல்
- நாடக விருந்து
- வேலை வேண்டிடும் நகரத்தார் பெண்கள் ஆண்கள் பட்டியல்
- கங்கா
- 64 முருகக் கடவுள் படங்கள்
உசாத்துணை
- ஆறு. அழகப்பன் கட்டுரைகள், தினமணி இதழ்
- ஆறு. அழகப்பன் நூல்கள், காமன்ஃபோல்க்ஸ் தளம்
- ஆறு. அழகப்பன் நூல்கள், நூலகம் தளம்
- தினமலர் இதழ் கட்டுரை
- ஆறு. அழகப்பன் நூல்கள், தமிழ் மின் நூலகம்
- ஆறு. அழகப்பன் நூல்கள், ஆர்கைவ் தளம்
- முனைவர் மு. இளங்கோவன் கட்டுரை
- நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Dec-2025, 19:10:25 IST