under review

பொன். சௌரிராசன்

From Tamil Wiki
முனைவர் பொன். சௌரிராசன்

பொன். சௌரிராசன் (பொன். சௌரிராஜன்; பொன்னையா சௌரிராசன்; முனைவர் பொன். சௌரிராசன்; டாக்டர் பொன். சௌரிராசன்; பொன். சௌரிராசனார்) (ஏப்ரல் 6, 1932 – ஜனவரி 03, 2010) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆந்திர மாநில அரசின் 'நல்லாசிரியர்' விருது பெற்றார். தமிழக அரசு, 2018-ல், பொன். சௌரிராசனின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.

டாக்டர் பொன். சௌரிராசன்

பிறப்பு, கல்வி

பொன். சௌரிராசன், ஏப்ரல் 6, 1932 அன்று, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கலில், நாராயண பொன்னையா – ஜெகதாம்பாள் இணையருக்குப் பிறந்தார். ஒரு வயதுக் குழந்தையாய் இருக்கும்போதே தந்தையை இழந்தார். தாய் மற்றும் உறவினர் ஆதரவில் கல்வி கற்றார். நாகப்பட்டினம் தேசிய உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1953-ல், சிதம்பரம் கீழ மூங்கிலடி காந்தி ஆசிரமத்தில் காந்திய ஆதாரக் கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தார்.

1955 – 1960-ல், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில், பேராசிரியர், டாக்டர் மு.வ. அவர்களின் உறுதுணையால் பி.ஏ. ஆனர்ஸ், எம்.ஏ. பட்டங்களைப் பெற்றார். ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தாயுமானவர் பற்றி 'A Critical study of Saint Thayumanavar' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பொன். சௌரிராசன், சிக்கலில் உள்ள முத்துக்குமார சுவாமி ஆரம்பப் பள்ளியில் இரண்டாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க. பள்ளியில் தமிழ்த்துறை ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆந்திர மாநிலம், சித்தூர் அரசினர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். திருவேங்கடன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், துறைத் தலைவர், கல்விக் குழு உறுப்பினர் எனப் பல பொறுப்புகளில் இருபத்தோராண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: சந்திரா.

டாக்டர் பொன். சௌரிராசன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

பொன். சௌரிராசன், கல்லூரி, பல்கலைக்கழக மலர்களில், இலக்கிய இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். மாநாட்டு மலர்களில் பங்களித்தார். பல்வேறு கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் கலந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை அளித்தார். பொன். சௌரிராசனின் முதல் நூல், ’கட்டுரைமணிகள்’. இது கல்லூரிகளில் பாட நூலாக வைக்கப்பட்டது. சிறார்களுக்காக பொன். சௌரிராசன் எழுதிய ‘மழலை மலர்கள்’ நூல், தமிழகத் தொடக்கப்பள்ளிகளில் பாட நூலாக வைக்கப்பட்டது.

பொன். சௌரிராசன், பொது வாசிப்புக்குரிய சிறுகதை, நாவல், குழந்தைப் பாடல்கள், இலக்கியம், ஆராய்ச்சி, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு என 35-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். பொன். சௌரிராசனின் சிறுகதைகள் சில மொழிபெயர்க்கப்பட்டு தெலுங்கு மற்றும் கன்னட இதழ்களில் வெளியாகின. தனது ஆசான் மு.வ.வைக் கதை மாந்தராகப் படைத்து அவரது சிந்தனைகளை மையப்படுத்தி ‘சங்கமம்’ என்ற நாவலை எழுதினார்.

பொன். சௌரிராசனது வழிகாட்டலில் ஆய்வு செய்து 15 மாணவர்கள் முனைவர் பட்டமும், 15 மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றனர்.

மொழிபெயர்ப்பு

பொன். சௌரிராசன் தெலுங்கு மற்றும் ஆங்கிலத்திலிருந்து பல கட்டுரைகளை, நூல்களை மொழிபெயர்த்தார்.

பொன். சௌரிராசனுக்குச் சிறப்பு செய்யப்படுதல் (படம் நன்றி: http://nasubbureddiar100.in/)

இதழியல்

பொன். சௌரிராசன், திருமலை திருப்பதி தேவஸ்தானத் தமிழ் மாத இதழான ‘ஸப்தகிரி’க்குப் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார்.

பொறுப்புகள்

பொன். சௌரிராசன், ஆழ்வார் திவ்வியப் பிரபந்தத் திட்டச் சிறப்பு அலுலராகப் பணியாற்றினார். அதன் மூலம் நூல்கள் பலவற்றைப் பதிப்பித்து வெளியிட்டார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் எனப் பல பல்கலைக் கழகங்களில், பல்வேறு பொறுப்புகள் வகித்தார். பல்வேறு குழுக்களில் உறுப்பினராகச் செயல்பட்டார்.

பல்கலைக்கழக நல்கைக்குழு(UGC), சாகித்திய அகாதெமி ஆகியவற்றிலும் பொறுப்பு வகித்தார்.

முனைவர் பொன். சௌரிராசனின் நூல்கள் நாட்டுடைமை

விருதுகள்

  • பொன். சௌரிராசன் எழுதிய தாயகம் நாவலுக்குத் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது கிடைத்தது. (1979)
  • 1988-ல், ஆந்திர மாநில அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்தது.

மறைவு

பொன். சௌரிராசன், ஜனவரி 3, 2010-ல் காலமானார்.

நாட்டுடைமை

தமிழக அரசு, 2018-ல், பொன். சௌரிராசனின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.

ஆவணம்

பொன். சௌரிராசனின் நூல்கள் சில தமிழ் இணையக் கல்விக் கழக நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

நினைவு

பொன். சௌரிராசனின் வாழ்க்கை வரலாற்றை சி. கோவிந்தசாமி எழுதினார். அந்நூலைக் கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து 2015-ல் வெளியிட்டது.

மதிப்பீடு

பொன். சௌரிராசன் பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை, நாவல்களை எழுதினார். தாயுமானவர் குறித்து விரிவாக ஆராய்ந்து தாயுமானவரின் தத்துவ நெறிகள் குறித்துப் பல கட்டுரைகளை எழுதினார். பொன். சௌரிராசன், பேராசிரியராகவும், காந்திய நெறியைத் தன் படைப்புகளில் முன் வைத்த காந்தியராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

சிறார் நூல்கள்
  • தங்கக் கோழிக் குஞ்சு
  • மழலை மலர்கள்
சிறுகதைத் தொகுப்பு
  • பரிசு
  • கதை மலர்கள்
நாவல்
  • கள்ளி மலர்
  • தாயகம்
  • சங்கமம்
ஆய்வு நூல்கள்
  • சித்திரச் சிலம்பு
  • திருக்குறளில் பொதுநிலை உத்திகள்
  • கட்டுரை மணிகள்
  • மு.வ.வும் தமிழியமும் காந்தியமும் ஆன்மியமும்
  • வாழ்வும் வழியும்
  • பைந்தமிழ்ச் சான்றோரை பாவேந்தர் பாராட்டிய பாங்கு
  • மு.வ. புதிங்களில் தமிழ் தமிழனம்
  • வாழ்க்கை வரலாறு
  • இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை – மு.வ (மு.வரதராசன்)
  • தாயுமானவர்
  • நம்மாழ்வார்
  • தியாகராசர் (இசை மேதை)
  • அன்னமய்யா – ஓர் அறிமுகம் (க. சர்வோத்தமனுடன் இணைந்து எழுதியது)
தொகுப்பு நூல்
  • தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம்
  • விடுதலை இயக்கத் தமிழ்ப் பாடல்கள்
மொழிபெயர்ப்பு
  • பண்டித பரமேசுவர சாஸ்திரி உயில் (தெலுங்கிலிருந்து தமிழுக்கு)
  • தியாகய்யர் (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு)
  • கண்ணன் கருத்துரைகள்
ஆங்கில நூல்
  • Critical study of Saint Thayumanavar

உசாத்துணை


✅Finalised Page