under review

வள்ளிமலை சுவாமிகள்

From Tamil Wiki
வள்ளிமலை சுவாமிகள், நன்றி: murugan.org

வள்ளிமலை சுவாமிகள் (திருப்புகழ் சுவாமிகள், வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்) நவம்பர் 25, 1870 - நவம்பர் 21, 1950) வள்ளிமலையில் வாழ்ந்த துறவி. திருப்புகழைப் பரப்பியவர். பல ஆன்மிக, சமூகப் பணிகளைச் செய்தவர். திருத்தணி திருப்புகழ் விழாவை ஏற்படுத்தினார்.

வாழ்க்கைக் குறிப்பு

வள்ளிமலை சுவாமிகள் கோவைக்கு அருகிலுள்ல பூநாச்சிபுதூர் என்ற கிராமத்தில் சிதம்பர ஐயர் - மகாலட்சுமி அம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இயற்பெயர் அர்த்தநாரி. ஐந்து வயதிலேயே தந்தையை இழந்தார். மாமன் வீட்டில் வளர்ந்தார். உபநயனம் ஆனது. பள்ளியிலும் சேர்க்கப் பட்டார். படிப்பில் நாட்டமில்லாததால் நிறுத்திவிட்டார். நல்ல குரல்வளம் இருந்ததால் ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். பாலமுருகன், பாலகிருஷ்ணன் போன்ற வேடங்களை ஏற்று பாடி ஆடி நடித்தார்.

மாமன் மகள் சுப்புலக்ஷ்மியை மணந்துகொண்டார். மைசூர் சென்று அரண்மனையில் சமையல் வேலை பார்த்தார் அர்த்தநாரி. அங்கேயே வேலைசெய்த நஞ்சம்மாவை இரண்டாம் மனைவியாக மணந்துகொண்டார். முதல் மனைவிக்குப் பிறந்த அவரின் குழந்தைகள் ஒவ்வொன்றாக இறக்க அதே ஏக்கத்தில் சுப்புலக்ஷ்மியும் இறந்தார். இரண்டாம் மனைவியான நஞ்சம்மாவின் குழந்தைகளும் இறக்க கடைசியாகப் பிறந்த நரசிம்மன் என்ற சிறுவன் மட்டும் உயிருடன் இருந்தான். வாழ்க்கை மீது வெறுப்பு கொண்ட அர்த்தநாரி தற்கொலை செய்துகொள்ள எண்ணினார். அடிக்கடி ஏற்பட்ட வயிற்று நோவும் அவரை வருத்தியது.

இந்த நிகழ்வுகளுக்குப்பின் இறை உணர்வும், உயிர் பற்றிய கேள்விகளும் அவர் மனதில் தோன்றின. பழநி சென்று முருகனைத் துதித்தால் வியாதி தீரும் எனக் கூறப்பட்டதால் மைசூர் அரண்மனை வேலையை விட்டு விட்டு மனைவியுடனும், எஞ்சி இருந்த ஒரு குழந்தையுடனும் பழநிக்கு வந்தார்.

ஆன்மிக வாழ்க்கை

வள்ளிமலை சுவாமிகள் சன்னதி, வள்ளிமலை

பழநிக்கு வந்து சில நாட்கள் முருகனை வணங்கி அபிஷேகப் பாலை உட்கொண்ட அர்த்தநாரியின் வயிற்று வலி குணமடைந்தது. துறவறம் பூணும் எண்ணம் வந்தது. பூநாச்சிபுதூர் சென்று எஞ்சி இருந்த சொத்துக்களை பிரித்துக் கொடுத்துவிட்டு பழநிக்குத் திரும்பினார். இறை சிந்தனையுடன் ஆலய மண்டபத்திலேயே தங்கி ஆலயப்பணிகள் செய்தார். 'மைசூர் ஸ்வாமிகள்' என அழைக்கப்பட்டார்.

திருப்புகழால் ஈர்க்கப்பட்டு எழுதப் படிக்கக் கற்று, திருப்புகழ் பாடல்களைக் கற்று ஆலயத்தில் பாடத் தொடங்கினார். அவர் பாடிய திருப்புகழ்ப் பாடல்கள் மக்களைக் கவர, 'திருப்புகழ் சுவாமிகள்' எனவும் பெயர் பெற்றார். தல யாத்திரைகள் செய்து சித்தர்கள், ஞானிகள் தொடர்பினால் சித்துகள் கைவரப் பெற்றார்.

1912-ல் திருவண்ணாமலைக்குச் சென்று ரமண மகரிஷியிடம் துறவறம் பெறும் எண்ணத்தில் அவருக்குத் தொண்டு செய்தும், திருப்புகழ் பாடியும் வந்தார். ரமணர் அவரை 'திருப்புகழ் முருகன்' என அழைத்தார். சென்னை சென்று செங்கல்வராயப் பிள்ளை என்பவர் வீட்டில் தங்கி அன்னதானம் செய்தார். அப்போது அவரிடம் முருகனே சிறுவன் வடிவில் வந்து அன்னதானம் பெற்றதாக நம்பப்படுகிறது. மீண்டும் ரமணருடன் வந்து தங்கி தனக்கு துறவறம் அளிக்க வேண்டினார். ரமணர் அவருக்கு 'கீழே போ' என உத்தரவிட வருத்தத்துடன் மலையிறங்கினார். வழியில் சேஷாத்ரி ஸ்வாமிகள் அவரைக் கண்டு அவருக்கு ஞான உபதேசம் அளித்தார். "திருப்புகழே உனது தாரக மந்திரம். இனி வாழ்நாள் முழுதும் அதையே பாடு. வள்ளிமலை சென்று முருகனை வழிபட்டிரு" என உபதேசித்தார். அதற்கிணங்கி அர்த்தநாரி இன்றைய வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள வள்ளிமலை சென்று அங்கு குகையில் தங்கி தியானம் செய்து வந்தார். 'வள்ளிமலை சுவாமிகள்' என அழைக்கப்பட்டார்.

வள்ளிமலை சுவாமிகள் வள்ளிமலைக் கோயிலைச் சீர்ப்படுத்தி, மலைப் பாதையைச் செப்பனிட்டார். 'பொங்கியம்மன்' எனவும் அழைக்கப்படும் வள்ளியம்மைக்குக் கோயில் எழுப்பினார். பல ஆன்மிக, சமூகப் பணிகளை மேற்கொண்டார்.

'வேல் மாறல்' என்ற புகழ்பெற்ற வழிபாட்டு பாடலை இயற்றினார்.

திருத்தணித் திருப்புகழ் விழா

அக்காலத்தில் ஆங்கிலப் புத்தாண்டன்று பரிசுகளுடன் ஆங்கில அரசு அதிகாரிகளை மக்கள் சென்று வணங்கும் வழக்கம் இருந்தது. வள்ளிமலை சுவாமிகள் அதை இறை வழிபாட்டுக்கான நாளாக ஆக்க வேண்டி திருத்தணியில் திருப்புகழ் விழாவை ஏற்படுத்தினார். டிசம்பர் 31 மாலை தொடங்கி ஒவ்வொரு படியிலும் ஒரு திருப்புகழ்ப் பாடலைப் பாடி, மலையேறிச் சென்று அதிகாலையில் முருகனை வணங்கும் 'திருத்தணித் திருப்புகழ் விழா' இன்றும் வழக்கத்தில் உள்ளது.

தொன்மம்

வள்ளிமலை சுவாமிகள் திருப்புகழ் ஓதியும், திருநீறு அளித்தும் பல நோய்களை குணப்படுத்தியாதாகக் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் இரு இடங்களில் காணப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

சமாதி

வள்ளிமலை சுவாமிகள் சமாதி

வள்ளிமலை சுவாமிகள் நவம்பர் 21, 1950 அன்று சென்னையில் மகாசமாதி அடைந்தார். அவரது உடல் வள்ளிமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவர் தவம் செய்த குகையில் சமாதியில் வைக்கப்பட்டு திருப்புகழ் சுவாமிகள் மண்டபம் அமைக்கப்பட்டது. இங்கு வள்ளிமலை சுவாமிகள் அரூபமாக அருள் செய்வதாக நம்பிக்கை நிலவுகிறது.

உசாத்துணை


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Jul-2025, 18:57:41 IST