செ.வை.சண்முகம்
செ.வை.சண்முகம் (நவம்பர் 23, 1932) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர், பதிப்பாளர் மற்றும் கல்வியாளர். மொழியியல் குறித்து ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார்
பிறப்பு, கல்வி
செ.வை.சண்முகம் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் செயங்கொண்டசோழபுரத்திற்கு அருகில் உள்ள செங்குந்தபுரம் என்னும் ஊரில் நவம்பர் 23, 1932-ல் பிறந்தவர்.பெற்றோர் சே.வே.வைத்திலிங்கம், தாயார் வை.அமிர்தம்மாள். உடன்பிறந்தவர்கள் ஐவர்.
செங்குந்தபுரத்தில் தொடக்கக் கல்வியையும்,உடையார்பாளையத்திலும்,செயங்கொண்டத்திலும் உயர்நிலைப்பள்ளிக் கல்வியையும் படித்தவர். பின்னர் கும்ப கோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் இண்டர்மிடியட் (1950-1952) கல்வியையும் முடித்தபின் 1952-1955 காலகட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ (ஹானர்ஸ்) முடித்தார்.
சிதம்பரநாதன் செட்டியார், தெ.பொ. மீனாட்சிசுந்தரம், மு.அண்ணாமலை, ஆ. பூவராகம் பிள்ளை, முத்துச்சண்முகம் பிள்ளை உள்ளிட்ட புகழ்பெற்ற அறிஞர்களிடம் கற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், பேராசிரியர் ச.அகத்தியலிங்கனார் ஆகியோரின் வழிகாட்டலில் எம்.லிட் பட்டத்தையும் (1959), முனைவர் பட்டத்தையும் பெற்றார் (1967).
தனிவாழ்க்கை
கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு விக்டோரியா அரசினர் கல்லூரியில் ஒரு சில மாதங்கள் பணியாற்றிய பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியேற்றார் (1955). முப்பத்தாறு ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணி செய்து 1992-ல் ஓய்வு பெற்றார்.இங்கிலாந்தில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வு மேற்கொண்டு (1972 -1973) பிரிட்டிசு அருங்காட்சியகத்தில் இருந்த என்ற ஐந்திலக்கண நூலைப் பதிப்பித்து வழங்கினார்.
இந்தோனேசியாவிலுள்ள ஜகார்த்தா பல்கலைக்கழகத்தில் இரண்டரை ஆண்டுகள் (1976-1978) வருகை தரு பேராசிரியராகப் பணி செய்தார். அப் பல்கலைக்கழகத்தில் அவர் நிகழ்த்திய ஆய்வுகள் Indonesian studies, என்ற நூலாக வெளிவந்தன. மேலும் அங்கு நடந்த எழுத்துச்சீர்திருத்தத்தை ஒட்டித் தமிழில் செய்யவேண்டிய திருத்தங்களை எழுத்துச்சீர்திருத்தம் என்ற பெயரில் நூலாக்கினார்.மலேசியா பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள இந்தியக்கல்வித்துறையில் மூன்றாண்டுகள் வெளிநாட்டு வல்லுநராகப் பணிபுரிந்தவர்.
செ.வை.சண்முகம் தனலட்சுமி அம்மையாரை மணம் செய்து கொண்டு வேலாயுதன்,உமாசண்முகம் என இரு குழந்தைகள்.
ஆய்வுப்பணிகள்
கல்வெட்டு ஆய்வின் மூலம் தம் ஆய்வுப்பரப்பை வெளிப்படுத்திய செ.வை.சண்முகம் மொழியியல், ஒப்பிலக்கணம்,அகராதியியல் எனும் பலதுறைகளில் தம் ஆய்வுகளை நிகழ்த்தியவர்.தமிழ் மரபு இலக்கணங் களை மொழியியல் நோக்கில் ஆராய்ந்து எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிலக்கணக் கோட்பாடு உள்ளிட்ட நூல்களை எழுதினார். 26 நூல்களையும் 200 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்
பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்,மைசூர் செம்மொழித்தமிழ் உயராய்வு நிறுவனம் ஆகியவற்றில் ஆய்வுகளை நிகழ்த்தினார்.
விருதுகள்
- மொழியிலுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது
- மொழிஞாயிறு என்னும் பட்டம்
வாழ்க்கைவரலாறுகள்
பவளவிழா அவர் மாணவர்களால் அண்மையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது
நூல்கள்
- சுவாமிநாதம் (உரையும் பதிப்பும்), 1975
- எழுத்துச் சீர்திருத்தம், 1978
- எழுத்திலக்கணக் கோட்பாடு, 1980
- சொல்லிலக்கணக் கோட்பாடு-1, 1984
- மொழியும் எழுத்தும், 1985
- சொல்லிலக்கணக் கோட்பாடு-2, 1986
- மொழி வளர்ச்சியும் மொழி உணர்வும் (சங்க காலம்), 1989
- மலையாளமொழியின் முதல் இலக்கணம், 1992
- சொல்லிலக்கணக் கோட்பாடு-3, 1992
- கிறித்தவ அறிஞர்களின் இலக்கணப்பணி, 1993
- அறிவியல் தமிழாக்கம், 1994
- இலக்கண உருவாக்கம் (பல்லவ-பாண்டியர் காலம்), 1994
- இலக்கியமும் மொழியமைப்பும், 1998
- கவிதைமொழி, 2000
- இக்கால எழுத்துத்தமிழ், 2001
- குறள் வாசிப்பு, 2002
- கவிதைக் கட்டமைப்பு, 2003
- தொல்காப்பியத் தொடரியல், 2004
- இலக்கண ஆய்வு, 2004
- மொழி ஆய்வு, 2005
- யாப்பும் நோக்கும் (தொல்காப்பியரின் இலக்கியக்கோட்பாடு), 2006
ஆங்கில நூல்கள்
- Naccinarkkiniyar's conception of phonology, 1967
- The language of Tamil Inscription 1250-1350 A.D (with prof.S.A)
- Dravidian Nouns(A comparative study), 1971
- Indonesian Studies, 1979
- .Aspects of Language development, 1983
உசாத்துணை
- மு.இளங்கோவன் பக்கம்
- செ.வை.சண்முகம்: மொழியியல் பெருவாழ்வு | se vai shanmugam - hindutamil.in
- இலக்கண உருவாக்கம் - செ.வை. சண்முகம் - அடையாளம் பதிப்பகம் | panuval.com
- முதுபெரும் பேராசிரியர் செ.வை. சண்முகம் அவர்களின் முக்கிய நூல்கள். ~ ந.தெய்வ சுந்தரம்
- சாமிநாதம் முழுநூலும் இணையநூலகம் - TVU-Library (tamilvu.org)
- கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தொல்காப்பிய மன்றம் கிளை தொடக்கம்! | Tamil Oneindia
- தமிழ் இணைய நூலகத்தில் செ.வை.சண்முகம் நூல்கள்
- எழுத்திலக்கணக் கோட்பாடு செ.வை.சண்முகம் இணைய நூலகம்
- மதிப்பூ: தொல்காப்பிய- நன்னூல் மரபும் புதிய இலக்கண உருவாக்கமும்
- சொல்லிலணக்கணக் கோட்பாடு செ.வை.சண்முகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:11 IST