first review completed

வல்லினம் கலை இலக்கிய விழா

From Tamil Wiki
Revision as of 19:37, 5 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
006.jpg

மலேசியாவின் வல்லினம் கலை இலக்கிய விழா வல்லினம் இலக்கியக் குழுவின் வழி தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்ட ஓர் இலக்கிய விழா. இவ்விழா மலேசிய கலை இலக்கியச் சூழலில் பெரும் கவனம் பெற்றதாகவும் புதிய வாசகர்களை உருவாக்குவதாகவும் அமைந்தது. பல புதிய எழுத்தாளர்களின் நூல்கள் பரவலான கவனத்தைப் பெறவும் இவ்விழா காரணமாக அமைந்தது. இவ்விழா எழுத்தாளர் ம. நவீன் முயற்சியில் தொடங்கியது.

விழா பட்டியல்

முதல் கலை இலக்கிய விழா

ஆகஸ்டு 29, 2009 முதல் கலை இலக்கிய விழா தான் ஶ்ரீ சோமா அரங்கில் நடைபெற்றது. வல்லினம் அகப்பக்கம் இந்த விழாவில் அறிமுகம் கண்டது. மேலும் ஓவியர் சந்துருவின் ஓவியக்கண்காட்சி, ஸ்டார் கணேசனின் நிழற்படக்கண்காட்சி, வல்லினத்தில் அதுவரை வந்த படைப்புகளை ஒட்டிய கலந்துரையாடல், பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது (மலாய் மொழிப்பெயர்ப்புக் கவிதை: பா.அ. சிவம்), மஹாத்மன் சிறுகதைகள், சர்வம் பிரமாஸ்மி (தமிழ்- ஆங்கில கவிதை: ம. நவீன்) ஆகிய மூன்று நூல்களின் வெளியீடுகளும் நடந்தன. சிங்கை இளங்கோவனின் நாடகமும் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது.

கலை இலக்கிய விழா -2
ஜெயமோகன்

செப்டம்பர் 11, 2010-ல் சோமா அரங்கில் கலை இலக்கிய விழா- 2 கொண்டாடப்பட்டது. இலக்கியகம் அமைப்பின் ஆதரவுடன் இவ்விழா நடைபெற்றது. இவ்விழாவில் 'மலேசிய சிங்கப்பூர் 2010' என்ற களஞ்சியம் வெளியீடு கண்டது. சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் ஜெயமோகன் கலந்துகொண்டார்.

கலை இலக்கிய விழா -3
004.jpg

ஜூன் 5, 2011-ல் கலை இலக்கிய விழா-3 செந்தூலில் அமைந்திருந்த தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம் மேல்தளத்தில் இருந்த மண்டபத்தில் நடைபெற்றது. செம்பருத்தி இதழுடன் இணைந்து இவ்விழா ஏற்பாடாகியிருந்தது. அ. ரெங்கசாமி, முத்தம்மாள் பழனிசாமி ஆகியோரின் நூல்கள் வெளியீடும் மா. ஜானகிராமனின் ‘மலேசியத் தமிழர்களின் இக்கட்டான நிலை’ என்ற உரையும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றது. எழுத்தாளர் அ. ரெங்கசாமியின் ‘விடிந்தது ஈழம்’ எனும் ஈழப்போர் வரலாற்று நூலும் நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

கலை இலக்கிய விழா-4

பிப்ரவரி 5, 2012-ல் கலை இலக்கிய விழா-4 நடைபெற்றது. வல்லினம் பதிப்பகம் கறுப்புப் பிரதிகள் பதிப்பகத்தோடு இணைந்து, நான்கு நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டது. இவ்விழாவில் ஆதவன் தீட்சண்யா மற்றும் அ. மார்க்ஸ் கலந்துகொண்டனர். இவ்விழா தான் ஶ்ரீ சோமா அரங்கில் நடைபெற்றது.

கலை இலக்கிய விழா 5

செப்டம்பர் 15, 2013-ல் கலை இலக்கிய விழா-5 நடைபெற்றது. அ. மார்க்ஸ் இவ்விழாவுக்குச் சிறப்பு வருகை புரிந்தார். எழுத்தாளர் கே. பாலமுருகனின் சிறுகதைத் தொகுப்பு (இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவு), எழுத்தாளர் பூங்குழலி வீரனின் கவிதைத் தொகுப்பு (நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்), ம.நவீனுடைய இலக்கிய விமர்சன நூல் (விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு) என மூன்று நூல்கள் இவ்விழாவில் வெளியீடு கண்டன. இவ்விழா கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

கலை இலக்கிய விழா-6
அ. ரெங்கசாமிக்கு விருது

நவம்பர் 2, 2014-ல் கலை இலக்கிய விழா- 6 நடைபெற்றது. இந்த விழாவில் 'வல்லினம் விருது' அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் வல்லினம் ஆவணப்படம் தயாரித்து ஒளிபரப்பும் பணியும் ஆறாவது விழாவில் தொடங்கப்பட்டது. இவ்விழாவில் கவிஞர் லீனா மணிமேகலை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கலை இலக்கிய விழா- 7

நவம்பர் 1, 2015-ல் கலை இலக்கிய விழா-7 நடைபெற்றது. எழுத்தாளர் இமையம், ஆதவன் தீட்சண்யா, வ. கீதா மற்றும் ஓவியர் மருது ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இவ்விழாவில் மண்டை ஓடி (சிறுகதை: ம. நவீன்), துணைக்கால் (கட்டுரை: விஜயலட்சுமி), அவர்கள் பேனாவிலிருந்து கொஞ்சம் மை (மலாய் இலக்கியம் அறிமுகம்: அ.பாண்டியன்), ஒளிப்புகா இடங்களின் ஒலி (பத்தி: தயாஜி) ஆகியோரின் 4 நூல்கள் வெளியீடு கண்டன. மேலும், ஓவியர் சந்துருவின் ஓவியமும் இவ்விழாவில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இவ்விழா மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கலை இலக்கிய விழா-8
003.jpg

நவம்பர் 13, 2016-இல் கலை இலக்கிய விழா-8 நடைபெற்றது. இவ்விழாவில் மா. சண்முகசிவா, அரு.சு. ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, மற்றும் கோ.புண்ணியவான் ஆகிய நான்கு மூத்த படைப்பாளிகளின் ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியீடு கண்டன. அதோடு அந்த நான்கு எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு சிறுகதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டன. இந்தக் கலை இலக்கிய விழாவுக்கென சிறப்பாக தேசிய அளவிலான சிறுகதை போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பரிசுகள் முறையே 3,000 ரிங்கிட், 2,000 ரிங்கிட், 1,000 ரிங்கிட், 7 படைப்புகளுக்கு ஊக்கத் தொகை என வழங்கப்படுமென அறிவிக்கப் பட்டதால் 137 சிறுகதைகள் போட்டிக்கு அனுப்பப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இப்போட்டியின் மூலம் புதிய எழுத்தாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இவ்விழாவில் கலந்துகொண்டார்.

கலை இலக்கிய விழா-9
002.jpg

செப்டம்பர் 17, 2017 அன்று கலை இலக்கிய விழா-9 நூறாவது வல்லினம் இதழ் வெளிவருவதை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி 'வல்லினம் 100' எனும் நானூறு பக்க களஞ்சியம் வெளியீடு கண்டது. இவ்விழாவில் எழுத்தாளர் கோணங்கி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இவ்விழா கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

கலை இலக்கிய விழா-10

நவம்பர் 18, 2018-ல் கலை இலக்கிய விழா-10 நடைபெற்றது. எழுத்தாளர்கள் சு. வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை இவ்விழாவில் கலந்துகொண்டனர். பத்து நூல்கள் இவ்விழாவில் வெளியீடு கண்டன. மேலும் மா. இராமையா, மா.செ.மாயதேவன், அக்கினி சுகுமார், கோ. முனியாண்டி ஆகியோரின் ஆவணப்படங்களும் இவ்விழாவில் வெளியீடு கண்டன.

விழா நிறுத்தம்

இவ்விழாவை ம. நவீன் வல்லினம் குழுவினரோடு முன்னெடுத்தார். இவ்விழாவைப் பத்து ஆண்டுகள் மட்டுமே நடத்தத் திட்டமிட்டிருந்ததால் பத்தாவது விழாவை நிறைவு விழாவாக அறிவித்தார்.

உசாத்துணை

  • வல்லினம் 100 களஞ்சியம்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.