அ. ரெங்கசாமி
To read the article in English: A. Rengasamy.
அ. ரெங்கசாமி (1930) மலேசியாவில் வாழும் நாவலாசிரியர். இவரது நாவல்கள் மலேசிய இந்தியர்களின் இக்கட்டான வரலாற்று தருணங்களைக் கருப்பொருளாகக் கொண்டவை. 'கோலலங்காட் ரெங்கசாமி' எனும் புனைப்பெயரால் அறியப்படுகிறார்.
பிறப்பு,கல்வி
அ. ரெங்கசாமியின் பெற்றோர் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். தந்தையின் பெயர் அடைக்கன். தாயாரின் பெயர் காத்தாயி. இவர்கள் 1927-ல் மலேசியாவிற்கு குடிபெயர்ந்தனர். இருவரும் பால்மரம் சீவும் தொழிலாளிகள். இருவருக்கும் பிறந்த ஐந்து குழந்தைகளில் நான்காவது குழந்தை ரெங்கசாமி. அடைக்கன், தமிழகத்திலேயே திண்ணைப்பள்ளிக்கூடம் நடத்தியவர் என்பதால் அவரே ரெங்கசாமிக்கு ஆரம்ப கல்வி ஆசிரியராக இருந்து கற்பித்தார். மலேசியாவில் ஜப்பானிய ஆட்சிக்குப் பின்னர் ரெங்கசாமி முறையாகப் பள்ளிக்குச் சென்றபோது இவரது தமிழ் மொழி ஆளுமை பிற மாணவர்களை விட மேம்பட்டிருக்க இவரது ஆசிரியர் மு. வெங்கடாசலம் அவர்களின் உதவியுடன் ஆறாம் ஆண்டை முடித்து சான்றிதழ் பெற்றார். .
தனிவாழ்க்கை
பிப்ரவரி 10, 1960 அன்று தன் அக்காள் மகளான காத்தாயி அவர்களை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். ஆசிரியராகப் பணியாற்றி, தலைமை ஆசிரியராகி பணி ஓய்வு பெற்றார்
இலக்கியப் பங்களிப்பு
அ. ரெங்கசாமி 1960-களில் ஆசிரியராகப் பணியாற்றியபோது மாணவர்களை வைத்து மேடை நாடகங்கள் அரங்கேற்றியுள்ளார் . மேடை நாடகத் துறையில் தன் திறனை வளர்த்துக் கொண்டவர் சில பொது அமைப்புகளில் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்காகவும் பெரியவர்களைக் கொண்டு மேடை நாடகங்களை இயக்கியுள்ளார். வில்லுப்பாட்டு எழுதி இயக்குவதிலும் இவர் ஆசிரியராக இருந்தபோது ஆர்வம் காட்டியுள்ளார்.
1950-களில் தமிழ் முரசு பத்திரிகை நடத்திய கதை வகுப்பு மற்றும் ரசனை வகுப்பில் பங்கெடுத்ததன் மூலமாக இலக்கிய ஆளுமையை வளர்த்துக் கொண்டார் ரெங்கசாமி. சாண்டில்யனின் நாவல்களை வாசித்த பின்னர், வரலாற்று சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நாவல் எழுத வேண்டும் என்ற ஆவல் இவருக்குப் பிறந்தது. தமிழ் நேசன் நாளிதழ் நடத்திய நாவல் போட்டியில் ரெங்கசாமியின் 'உயிர் பெறும் உண்மைகள்’ நாவல் இரண்டாவது பரிசு பெற்றபோது நாவல் எழுதும் நம்பிக்கையைப் பெற்றார். ஆனால் அந்த நாவலை நூல் வடிவம் ஆக்கவில்லை. ஒரு நேர்காணலில் போட்டிகள்தான் தனக்கு எழுதுவதற்கான ஊக்கத்தைக் கொடுத்தன எனச் சொல்லும் அ. ரெங்கசாமி மலேசியாவில் நடத்தப்பட்ட பல இலக்கியப் போட்டிகளில் பங்கெடுத்துள்ளார். 1988-ல் 'காமாட்சி விளக்கு' என்ற சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டார்.
1990-களுக்குப் பிறகுதான் அ. ரெங்கசாமி தன் புனைவுலகினை அடையாளம் கண்டு கொண்டார். அப்போது அவர் அறுபது வயதைக் கடந்திருந்தார். இந்த இரண்டாம் காலகட்டத்தில் தொடங்கிய எழுத்துலக பயணம்தான் அ. ரெங்கசாமியை தமிழ் இலக்கியத்தில் தனித்து அடையாளம் காட்டியது.
மலேசிய இந்தியர்களின் சொல்லப்படாத வரலாற்றை நாவலாக ஆக்க வேண்டிய தேவையை உணர்ந்த அ. ரெங்கசாமி அவற்றைப் புனைவாக்கும் முயற்சியில் இறங்கினார். சிறுவனாக இருந்தபோது ஜப்பானிய ஆட்சியில் அவர் கண்ட பஞ்ச சூழலை 'புதியதோர் உலகம்' (1993) எனும் தலைப்பில் நாவலாக எழுதினார். இதுவே நூல் வடிவம் பெற்ற அவரது முதல் நாவல். தொடர்ந்து சயாம் - பர்மா தண்டவாளம் அமைத்த கொடும் வரலாற்றை 'நினைவுச்சின்னம்' (2005) எனும் தலைப்பில் எழுதி வெளியிட்டார். அதுபோல ஜப்பானியர்கள் மலேசியாவை விட்டுச் சென்ற பிறகு இரண்டு வாரங்கள் நீடித்த கம்யூனிஸ்ட் ஆட்சி தொடர்பாக 'லங்காட் நதிக்கரை' (2005) என்ற நாவலை எழுதினார்.
இதே காலகட்டத்தில் மலாயாவுக்கு வந்த நேதாஜியின் வருகையும் ஐ.என்.ஏ உருவாக்கமும் நிகழ்ந்தது. அந்த முக்கிய வரலாற்று நிகழ்வில் தமிழர்களின் பங்கு குறித்து பதிவிட எண்ணி 'இமயத் தியாகம்' (2006) என்ற நாவலை எழுதினார், தொடர்ந்து 1942-ல் வெள்ளைக்காரர்களை எதிர்த்து கையில் கழிகளுடன் தோட்டப் பாட்டாளிகள் சண்டையிட்ட கிள்ளான் கலகம் குறித்து 'விடியல்' (2012) என்ற நாவலில் எழுதினார். தன்னுடைய எண்பது ஆண்டுகால வாழ்வைச் சொல்வதன் மூலமாக மலேசியாவின் குறுக்கு வெட்டு வரலாற்றையும் சொல்ல முடியுமென நம்பியவர் 'சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை' (2014) என்ற தன் வரலாற்று நூலை எழுதினார். அ. ரெங்கசாமி அடுத்ததாக எழுதியது 'கருங்காணு'(2018) என்ற குறுநாவல். இது வல்லினம் இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் சிறந்த மூன்று குறுநாவல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சமூகச் செயல்பாடுகள்
1952-ல் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் கோலக்கிள்ளான் சாமி ரோடு கிளையின் உறுப்பினராக இருந்தார் அ.ரெங்கசாமி. 1964-ல் ஜலண்ட்ஸ் கிளையில் இணைந்து பொருளாளராகப் பணியாற்றினார். துன் சம்பந்தன் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தைத் தோற்றுவித்தபோது அதன் கொள்கைப்பரப்பாளராகச் செயல்பட்டார்.
1964-ல் கோலக்கிள்ளான் திருக்குறள் மன்றத்தின் உறுப்பினர் ஆகி, திருவள்ளுவர் மண்டப நிதிக்காக உண்டியல் ஏந்தினார். அந்த மன்றத்தின் தொண்டர்களைக் கொண்டே 'வழிகாட்டி' என்ற நாடகத்தை அரங்கேற்றினார். தொடர்ந்து கோலக்கிள்ளான் இளைஞர்கள் அமைத்த வழிகாட்டி நாடகக்குழுவின் ஆலோசகராகவும் ஆசிரியராகவும் செயல்பட்டு 'திருந்தியவன்' போன்ற நாடகங்களை அரங்கேற்றினார். 1989-ல் திருமகள் கலாலயம் மன்றத்தின் ஆலோசகராகவும் நாடகப்பொறுப்பாளராகவும் இருந்து நாடகங்கள், வில்லுப்பாட்டு எனத் தயாரித்துள்ளார்.
இலக்கிய இடம்
அ. ரெங்கசாமியின் பெரும்பாலான படைப்புகள் அவரது கொள்கைகளையும் கருத்துகளையும் முன்வைக்கும் பொருட்டு எழுதப்படுபவை. பெரும்பாலும் தன் நாவலில் உள்ள பாத்திரங்களைக் கருத்துப் பிரதிநிதிகளாகவே உருவாக்குகிறார் ரெங்கசாமி. எல்லா வரலாற்றுத் தருணங்களிலும் இந்தியர்கள் வஞ்சிக்கப்பட்ட முனைகளே அவரது குவிமையமாக உள்ளது. இந்த பாணியில் இருந்து விலகி 'இமயத் தியாகம்' விசாலமான அனுபவங்களை வழங்கக்கூடியது. அவர் எழுதிய நாவல்களில் முதன்மையானது. மலேசியத்தமிழர்களின் வரலாற்றின் பக்கங்களையும் வரலாற்றின் மீதான அவர்களின் எதிர்வினையையும் பதிவுசெய்தவர் என்னும் வகையில் முக்கியமானவர்.
படைப்புகள்
- 1988 - காமாட்சி விளக்கு (சிறுகதை)
- 1993 - புதியதோர் உலகம் (நாவல்)
- 2005 - நினைவுச்சின்னம் (நாவல்)
- 2005 - லங்காட் நதிக்கரை (நாவல்)
- 2006 - இமயத் தியாகம் (நாவல்)
- 2012 - விடியல் (குறுநாவல்)
- 2014 - சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை (தன் வரலாறு)
- 2018 - கருங்காணு (குறுநாவல்)
விருதுகள்
- 2005 - லங்காட் நதிக்கரை நாவலுக்கு பி. பி. நாராயணன் விருது.
- 2005 - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தங்கப் பதக்கம்
- 2010 - கெடா தியான மன்றத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது
- 2012 - விடியல் நாவலுக்கு தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் விருது
- 2014 - வல்லினம் விருது
உசாத்துணை
- சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை - அ.ரெங்கசாமியின் தன் வரலாறு
- அ.ரெங்கசாமி நேர்காணல் - வல்லினம்
- அ ரெங்கசாமி படைப்புகள், vallinam.com
- அ.ரெங்கசாமி நாவல்கள், vallinam.com
- அ.ரெங்கசாமி ஆவணப்படம், vallinam, youtube.com
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:05:30 IST